புதன், டிசம்பர் 01, 2010

அரசியலும் தொழில் வணிகமும் - புதிய உலகம்

அரசியல், பன்னாட்டு உறவுகள், வணிக நிறுவனங்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் அனைத்திலும் மூடிமறைப்பிலேயே பணிகள் நடந்து வந்திருக்கின்றன.

'மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள், நாம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி, பேரம் பேசி முடிவுகள் எடுத்து அறிவிப்போம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'

இந்தியாவில் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் பரிமாற்றங்கள் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது இவை தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான புதிய உலகின் நிதர்சனங்கள்.

இதற்கான எதிர்வினையாக, அதிகார வட்டங்களும், வணிக நிறுவனங்களும் தமது தகவல் பரிமாற்றங்களை இன்னமும் ரகசியமாக பூட்டி வைக்க முயற்சிப்பார்கள். இணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டை முடக்கிப் போடும் சட்டங்களும் ஒப்பந்தங்களும் வர ஆரம்பிக்கலாம். இவை வெற்றி பெற்று விட்டால் ஆர்வெலின் 1984 / மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று ஆட்டி வைக்கும் சில சூத்திரதாரிகளுக்கு நாம் ஆடிக் கொண்டிருக்கும் நிலைமை தொடரும்.

இந்தத் தகவல் விடுதலையை (information wants to be free) தடுக்க முடியாவிட்டால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் நடந்து கொள்ளும் அடிப்படை முற்றிலும் மாற வேண்டியிருக்கும். நான்கு சுவர்களுக்குள் ஒன்றும், வெளியுலகுக்கு ஒன்றுமாக இரட்டை வேடங்கள் வைத்திருக்க முடியாமல் போய் விடும்.

சிக்கலான பேச்சு வார்த்தைகள், அதீத ஆதாயம் தரும் தொழில் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை: