வெள்ளி, ஜனவரி 26, 2007

ஆப்பிரிக்காவில் ஆறு நாட்கள்

ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம் என்று ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் சொல்லி வைத்ததை நாமும் கிளிப்பிள்ளைகள் போல பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து, கற்றுக் கொண்டிருக்கிறோம். இருட்டு, வறுமை, பட்டினியில் சாகும் குழந்தைகள், எயிட்ஸ் நோய் பரவல், சண்டை என்று மனத் தோற்றங்கள்.

போன இடத்தில் நண்பர் இணைய உரையாடலில் இந்தியாவில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது 'ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது?' என்று கேள்வி வந்திருக்கிறது. பின்னால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர்க்காரர், 'மனிதர்களை கொன்று தின்று கொண்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள்' என பாதி கடுப்பாக பாதி நகைச்சுவையாகச் சொன்னாராம்.

ஆப்பிரிக்கா என்றால் தென்னாப்பிரிக்கா மனதுக்கு வந்து விடுகிறது, கிரிக்கெட் விளையாடும் நாடாதலால். நான் போனது, கண்டத்தின் மேற்கில் வடபகுதியில் இருக்கும் புர்கினா ஃபாஸோ. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று இது. ஸ்பெயினுக்கு அருகாக இருக்கும் அல்ஜீரியா என்ற பெரிய நாடு, அதற்குக் கீழே மாலி, நைஜர், அதற்கும் கீழே தென் மேற்காக இந்த நாடு உள்ளது. கடற்கரையைப் பிடிக்க வேண்டுமென்றால் எல்லை தாண்டி பெனின், கானா அல்லது ஐவரி கோஸ்டுக்குத்தான் போக வேண்டும்.

போகும் போது முதல் தாவலாக துபாய் வரை போய் விட்டு, அங்கிருந்து வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நம்ம கடாஃபி அண்ணனின் திரிபோலியில் இறங்கி விட்டு, அடுத்த விமானத்தில் வாகாதோகு என்ற தலைநகருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இந்த இரண்டு இடங்களுக்கு இடையேயான விமானச் சேவை ஆப்பிரிக்கியா என்ற நிறுவனத்துடையது. அதன் மீது 9999 என்று பெரிதாக எழுதியிருக்கிறார்கள். 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகள் என்று அமைத்த நாளை அது குறிக்கிறதாம். இது லிபியாவின் திட்டம். இன்னொரு ஐக்கிய நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாகும் சாத்தியங்கள் இந்தக் கண்டத்துக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதை பொருட்கள், போர் வெறி, அன்னிய தலையீடுகள் இல்லா விட்டால் நம் வாழ் நாளிலேயே கூட அப்படி ஒரு அற்புதம் நடந்து விடலாம்.

புர்கினா ஃபாஸோ என்ற நாடு தமிழ் நாட்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு பெரியது, அளவில். மக்கள் தொகையோ தமிழக மக்கள் தொகையில் பாதி. பெரிய நகரங்களில் மேல் நாட்டு உதவியுடன் போட்டுக் கொண்ட சாலைகளைத் தவிர சரியான சாலைகள் ஊர்களில் எங்கும் கிடையாதாம்.

நாங்கள் போன நிறுவனத்திலேயே வேலூர் மாவட்டத்திலிருந்து இரண்டு பேர், மைசூரைச் சேர்ந்த ஆனால் தமிழில் சரளமாகப் பேசும் ஒருவர், மும்பையைச் சேரந்த ஒருவர் என்று நான்கு இந்தியர்கள் பணி புரிகிறார்கள். மேலாண்மை பட்டம் பெற்று திட்டப் பணிகளில் அனுபவம் பெற்ற இன்னொரு தமிழர் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றிற்காக உள்ளூரிலேயே புதிய தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரையும் சந்திக்க வாய்த்தது.

தமிழ் நாட்டிலிருந்து (கிருஷ்ணகிரி, திருச்சி, சென்னை, பணகுடி - நாகர்கோவில் அருகில்) நான்கு பேர் நகருக்கு வெளியே சாலையில்லாத தெரு விளக்கு இல்லாது அத்துவானக் காட்டில் தங்கியிருந்து கிறித்துவ மத அமைப்பு ஒன்றின் சார்பில் சமூகப் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

இவர்களைத் தவிர குஜராத்திலிருந்து பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் ஓரிருவரைச் சந்தித்தோம்.

பொதுவாக 'கறுப்பன்கள்' என்று பேச்சில் கிண்டலாகக் குறிப்பிடுவது, அவன்-இவன் என்று எல்லோரையும் குறிப்பிடுவது, இந்த ஊரில் ஒன்றுமே கிடையாது, ஒழுக்கமே கிடையாது என்று ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவது என்ற பேச்சுக்களைத் தாண்டி இவர்கள் ஊரை விட்டு மொழி தெரியாத ஊரில் செய்து வரும் பணிகள் மகத்தானவை.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ஊர், அங்கிருக்கும் வளம்(!), குழந்தைகள், கல்வி இதையெல்லாம் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க.

வடுவூர் குமார் சொன்னது…

இதை படித்தவுடன் நேற்று ஒரு மெயிலில் நைஜீரியாவில் வேலை இருக்கு போகிறாயா? என்று கேட்டு வந்தது ஞாபகம் வந்தது.
இப்போதெல்லாம் நிலமை நாம் படித்தபோது இருந்ததைப்போல் இருக்காது.

மா சிவகுமார் சொன்னது…

//ஊர், அங்கிருக்கும் வளம்(!), குழந்தைகள், கல்வி இதையெல்லாம் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க.//

இருந்தது சில நாட்கள்தான். நம்ம ஊர் ஆட்கள் கூடவே நேரம் போய் விட்டது. உள்ளூர் நிலவரங்கள் கேள்விப்பட்டதுதான். புரிந்தது வரை எழுதுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இப்போதெல்லாம் நிலமை நாம் படித்தபோது இருந்ததைப்போல் இருக்காது./

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்தான் நமது கருத்துக்களை உருவாக்குகின்றன. தீர விசாரிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது பல இடங்களில் :-(

அன்புடன்,

மா சிவகுமார்