புதன், ஜனவரி 23, 2008

சீனா மனிதர்கள் மூலம் (வாங் ஷிங்)

சீனாவுக்குப் போனதும் யாரையும் பீடிக்கக் கூடிய ஒரு வியாதி உடனடி படிப்பறிவின்மை. அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள், தெருப்பெயர்கள் எங்கு பார்த்தாலும் சீன மொழி எழுத்துக்கள்தான் வரவேற்கும்.

மொழி கற்றுக் கொள்ளா விட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். வேலை எப்படி பார்ப்பது?

ஆறு மாத கல்லூரி வகுப்பில் சேர்ந்து மொழி அறிவைத் தேத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தால், எங்கள் நிறுவனத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். ஓய்வு நேரத்தில் கற்றுக் கொண்டால் போதும்.

கூட வேலை பார்த்த சீன நண்பர் யாராவது வார இறுதிகளில் வந்து கற்றுத் தர ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஒரு நாள், 'நம்ம அலுவலகத்தை பெருக்கி தூய்மை செய்ய வரும் அம்மாவின் மகள் உனக்கு சீன மொழி கற்றுத் தருவாளாம்' என்று சொல்ல வேடிக்கையாக இருந்தது.

வாரா வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளைகளில் 2 மணி நேரம் வகுப்பு. முதல் முதலில் சந்தித்த போது உருண்டை முகம், ச்சின்னக் கண்கள், உப்பிய கன்னங்கள், ஒல்லியான உருவம் என்று குழந்தைப் பொம்மை போல இருந்த அந்தப் பெண்ணா நமக்கு ஆசிரியர் என்று வியப்பாக இருந்தது.

சாங்காய் நார்மல் பல்கலைக் கழகம் என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாங் ஷிங் என்று பெயர். வாங் என்பது குடும்பப் பெயர் ஷிங் என்பது கூப்பிடும் பெயர். இது போதாது என்று சீனாவின் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்றையும் சூட்டி விடுகிறார்கள்.

'நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் பேர் கொடுத்தார்' எலன் என்ற பெயர். வெளி நாட்டினருக்கு வசதியாக அந்தப் பெயராம். சீனாவின் உலகமயமாக்கலுக்கு மக்களைத் தயார் செய்யும் போக்கு. நம்ம ஊரிலாவது கால் சென்டரில் வேலை செய்யப் போகிறவர்களுக்கு மட்டும்தான் மேல் நாட்டுப் பெயர். இங்கு எல்லா குழந்தைகளுக்குமா!

எனக்கு அத்தகைய ஆங்கிலப் பெயர்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். யாரையுமே அவர்களது சீனப் பெயராலேயே கூப்பிடுவது என்று உறுதி செய்து கொண்டேன்.

வார நாட்களுக்கு அலுவலகம் வருவது போல சனி, ஞாயிறிலும் காலையில் எழுந்து குளித்து, தரையடி ரயில் பிடித்து 9 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன். 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுவேன்.

'நாங்கெல்லாம் சாங்காய்னீஸ்' என்று பெருமை. 'சீனாவில் 95% ஹான் இனத்தவர்' என்று பாடத்தில் வரும் போது 'நானும் ஹான் இனம்தான்' என்று பெருமை.

1997ல் நான் அங்கு போய்ச் சேர்ந்திருந்த போதுதான் ஆங்காங் சீன ஆட்சியின் கீழ் வரும் நாள் வந்தது. அதற்கான கொண்டாட்டமாக சாங்காயின் மக்கள் மைதானத்தில் பெருங்கூட்டம் கூடியதாம். அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது, 'கூட்டத்துக்குப் பிறகு திரட்டிய குப்பையின் அளவு 30 டன்னாம். நாங்கல்லாம் வெட்கப்படணும்.' என்று கண்களை உருட்டிக் கொண்டு சொல்கிறார்.

சில மாதங்கள் வகுப்புக்குப் பிறகு ஒரு நாள், 'எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று ஆசிரியையும் அவர் அம்மாவும் சொன்னார்கள். 'சரி, போகலாமே' என்று தயார் செய்து கொண்டோம். அலுவலகம் இருக்கும் 20 மாடிக் கட்டிடப் பகுதிக்கு அருகில்தான், ஷான்ஷி தெற்கு தெருவில்தான் வீடு.

வாய்ஹாய் சாலை என்ற பணம் புரளும் சாலையை வெட்டிச் செல்லும் தெரு ஷான்ஷி தெற்குத் தெரு.

(தொடரலாம்)

12 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.

//
(தொடரலாம்)
//
இப்பிடினா ???

அவ்வ்வ்வ்

சின்னப் பையன் சொன்னது…

மாசி சார் - நீ ஹாவ்...

ஒரு நல்ல தொடரின் ஆரம்பம்...
சீனர்களைப் பற்றி - அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றி இன்னும் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நான் இப்போதுதான் காரில் போகும்போது மாண்டரின் மொழி CD வழியாக கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். எழுதுவதுதான் கஷ்டமாகத் தெரியும் போல...

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மங்களூர் சிவா. இரண்டு பகுதிகள்தான் எழுதி வைத்திருக்கிறேன். அவையும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சி இல்லாமல் இருக்கின்றன. எழுத மிகவும் விரும்பும் ஒரு பொருள்.

சின்னப்பையன்,

நீ ஹாவ்!

மாண்டரின் எழுதுவதும் சேர்த்தே கற்றுக் கொள்வதுதான் நல்லது. இல்லையென்றால் குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு போக முடியாமல் நின்று விடுவோம். பேசுவதோடு எழுத்து முறைகளையும் மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

முகவை மைந்தன் சொன்னது…

நீ ஹாவ்!

என் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களஉடன் உரையாடி அறிமுக சொற்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். சீனர்கள் தங்கள் (இத்துணூண்டு) கண்கள் மறையும் படி சிரிக்கும் அழகே அழகு! பிபிசியின் வலை தளமும் உதவியாக உள்ளது.

பிற நாடு, மொழி குறித்து அறிந்து கொள்ள உதவும் இது போன்ற கட்டுரைகள் தமிழில் அதிகம் வர வேண்டும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

முகவை மைந்தன் சொன்னது…

நீ ஹாவ்!

என் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களஉடன் உரையாடி அறிமுக சொற்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். சீனர்கள் தங்கள் (இத்துணூண்டு) கண்கள் மறையும் படி சிரிக்கும் அழகே அழகு! பிபிசியின் வலை தளமும் உதவியாக உள்ளது.

பிற நாடு, மொழி குறித்து அறிந்து கொள்ள உதவும் இது போன்ற கட்டுரைகள் தமிழில் அதிகம் வர வேண்டும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி முகவை மைந்தன்.

நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க? சீன மொழி வளம் செறிந்த மொழி. வாய்ப்பு கிடைத்தால் கற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Both in Tamil and in Mandarin Nee means you and please try to find out the relation / other words as well.

Arun

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒப்பீட்டு மொழியியல் என்று பலர் இதை படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது எனக்குத் தெரிந்த வரை எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK சொன்னது…

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள் இடைவெளி இல்லாமல்

மா சிவகுமார் சொன்னது…

//தொடர்ந்து எழுதுங்கள் இடைவெளி இல்லாமல//
எழுதுகிறேன் கார்த்தி :-) நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

முகவை மைந்தன் சொன்னது…

சிங்கப்பூரில் இருக்கிறேன். சீன மொழி என் மகனுடன் சேர்ந்து கற்றுக்கொண்டால் தான் உண்டு ;-)

மா சிவகுமார் சொன்னது…

முகவை மைந்தன்,

சிங்கப்பூரில் இருந்தால் சீனமொழி கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்தானே. தவறாமல் கற்றுக் கொள்ளுங்கள். தமிழுக்கு இணையான தொன்மை உடைய மொழி என்கிறார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்