ஞாயிறு, மார்ச் 29, 2009

தேர்தல் - தமிழகத் தேர்வுகள்

தமிழகத்தில் அரசியல் வணிகர்களும், சந்தர்ப்பவாதிகளும், குட்டையைக் குழப்புபவர்களுமாக கட்சிகள் அணி பிரித்துக் கொண்டு விட்டன.

யாருக்கு வாக்களிக்கலாம்?

எந்தக் கட்சி வேட்பாளர் நாடாளுமன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போது கூட்டணிகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்க வேண்டாம் என்று படுகிறது. கூட்டணி சேர்ந்து கொண்டவர்களே 'இது தொகுதிப் பங்கீடுதான், எந்த விதக் கொள்கை சார்ந்த பொருளையும் பார்க்க வேண்டாம்' என்று சொல்லி விட்ட பிறகு, வாக்காளர்களும் கூட்டணி சாராமல் கட்சி சார்ந்து வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும்.

எனது தேர்வுகள்:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபடும் கட்சி. திருமாவளவன் கட்சியின் முகமாக இருந்தாலும், கட்சியால்தான் திருமாவளவன் அடையாளம் பெற்றார். இந்தக் கட்சி தொகுதியில் போட்டியிட்டால் அவர்களுக்குத்தான் வாக்கு.

2. வலது / இடது பொதுவுடமை கட்சியினர்

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் வியாபார/தொழில்துறையை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் காங்கிரசு/பாஜக அதிகார அமைப்புகளுக்கு ஒரு கடிவாளமாக இருக்கக் கூடிய இந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிட்டால் அவருக்கு வாக்கு.

3. தேசிய முற்போக்கு திராவிட கழகம்

திரைப்படத் துறையில் ஈட்டிய தனது புகழை மூலதனமாக வைத்து அரசியல் செய்ய முயல்கிறார் விஜயகாந்த். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் பணிகளிலும் தனது முத்திரையை பதிக்க முயல்கிறார். இன்று வரை இது விஜயகாந்த் கட்சியாகத்தான் இருக்கிறது. கூடவே பழைய பெருச்சாளிகளும் குடியேறி இருக்கின்றன.

தொகுதியில் முதல் இரண்டு தேர்வுகள் கிடைக்கவில்லை என்றால் தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்கு.

4. மதிமுக

ஈழத் தமிழர் நலன் என்று ஒரே நிலைப்பாட்டுக்காக வைகோவை அறிகிறேன். மேலே சொன்ன மூன்று தேர்வுகளுமே இல்லாத நிலையில் (அப்படி இருக்காது என்று நம்புகிறேன்), மதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

5. வாக்களிக்கக் கூடாத கட்சிகள்
  • அதிமுக - தமிழர் விரோத தனிநபர் அரசியல்)
  • திமுக - ஒரு குடும்பம் வளர்க்கும் தமிழர் துரோக அரசியல்
  • காங்கிரசு - பதவி வெறி பிடித்த முதலாளித்துவ அரசியல்
  • பாஜக - மதவாத பிரிவினை அரசியல்
  • பாமக - சந்ததர்ப்பவாத பச்சோந்தி அரசியல்

5 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

இந்தமுறை யாருக்கு ஓட்டுப்போடுரதுன்னே பெரும் குழப்பமா இருக்கு.
யாரு நிக்குராங்கன்னு பாத்துதான் முடிவு செய்யனும்.

பெயரில்லா சொன்னது…

Better we can go for 47 'O'

பெயரில்லா சொன்னது…

I can't agree with you on your choices. The reasons that you have given for the parties that shouldn't be voted stands good for all your selections. VCK, MDMK, Communist are also switching sides often. Vijaykant also projects his family members. He is no different from DMK and ADMK.. you will see that soon.

சதுக்க பூதம் சொன்னது…

//திமுக - ஒரு குடும்பம் வளர்க்கும் தமிழர் துரோக அரசியல்//

அனைத்து கட்சியினரிடமும் நல்ல விஷயம் மற்றும் கெட்ட விஷயம் உள்ளது. கருனானிதியின் குடும்ப அரசியல் மிகவும் கண்டிக்க தக்கது.அதில் சந்தேகமே இல்லை. ஆனால் தற்போது நடை பெரும் நல்ல விஷயங்களையும் நீங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றில் சில

1.தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் ஒரு புரட்சியே நடக்கிறது. புதிய கல்வி முறை தங்கம் தென்னரசுவால் அழகாக நிறைய ஆரம்ப பள்ளிகளில் செயல்படுத்த பட்டு நல்ல முடிவு கிடைக்கிறது.மேலும் தொடக்க பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் தற்போது இந்தியாவிலேயே முதலிடத்தில் உல்ளது.
2.தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் படிக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அதிக தொழில் நிறுவனக்கள் தொடங்க ஊக்குவித்து வேலையில்லா திண்டாட்டம் குறைக்க பட்டுள்ளது.
3. அரசு நிறைய பொறியியல் மற்றும் மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்கி ஏழை மக்களுக்கும் தரமான கல்வி கொடுக்க உதவியுள்ளது
4.வேளாண் விளைபொருளுக்கு நல்ல கொள்முதல் விலை தருகிறது.
5.முக்கியமாக தமிழகத்த்யில் பெரும்பாலான ரோடுகளை தேசிய நெடுஞ்சாலைகளாக ஆக்கியுள்ளது. பெரும்பாலான முக்கிய ரோடுகளும் அகலபடுத்த பட்டு நல்ல நிலையில் உள்ளது.
6. கடந்த மத்திய ஆட்சியில் செயல் படுத்த திட்டங்களில் 10 சதம் தமிழகத்திற்கு மட்டுமே செலவிடபட்டுள்ளது. இது மிக பெரிய சாதனை ஆகும். இது வேறெந்த ஆட்சியிலும் நடத்த முடியாது. தற்போது தேர்தல் நடப்பது மத்திய அரசுக்கு. இவ்வாறு மத்திய அரசின் திட்டத்தை எல்லாம் நம் மாநிலத்திற்கு வெற்றிகரமாக கொண்டு வந்துள்ள அரசை இப்போது தோல்வியடைய செய்தால், நாளை எந்த அரசியல்வாதியும் தமிழகத்திற்கு நல திட்டம் கொண்டு வர முயற்சி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் நலதிட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தால் மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணம் ஏற்படும்.
7.தமிழகத்துக்கு தேவையான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றி காட்டிய முனைப்பு.
8.பல்வேறு துறைமுகங்களை ஆரம்பிக்க முயற்ச்சி.
9.IIM,மத்திய பல்கலை கழகம்,கடல் சார பல்கலை கழகம்(தமிழ் நாட்டு இடது சாரகள் செய்த துரோகத்தையும் தாண்டி) போன்ற மத்திய கல்வி நிறுவனங்களை கொண்டு வந்தது
10. இப்படி பலவற்ரை அடுக்கி கொண்டு போகலாம்/

//பாமக - சந்ததர்ப்பவாத பச்சோந்தி அரசியல்
//
ரயில்வே துறையில் நடந்த புரட்சிக்கு வேலுவின் பங்கு முக்கியமானது. லலூ அமைச்சராக இருந்தாலும், அனைத்து திட்டங்களை வகுப்பது, செயல் படுத்துவது மற்றும் பார்லிமெண்டில் கேள்விக்கு பதில் அளிப்பது அனைத்தும் வேலு தான்(வேலு சிறந்த IAS நிர்வாகி).
என்வே தற்போதய MP க்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்வது முக்கியம்

மா சிவகுமார் சொன்னது…

கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சதுக்க பூதம்.

//கருனானிதியின் குடும்ப அரசியல் மிகவும் கண்டிக்க தக்கது.அதில் சந்தேகமே இல்லை. ஆனால் தற்போது நடை பெரும் நல்ல விஷயங்களையும் நீங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.//

சில அடிப்படை நடைமுறைகளில் சமரசம் செய்து கொண்டால் சமூகத்தின் ஆணி வேரே அரிக்கப்பட்டு விடும். குறுகிய கால நோக்கில் நடக்கும் நல்ல வேலைகளுக்காக அடிப்படைகளை விட்டுக் கொடுத்து விடக் கூடாது.

அரசியல் கட்சி (இயக்கம்) ஒன்றை குடும்ப வியாபரத்தின் முதலாக (capital) பாவித்து வருவது இன்றைய திமுக தலைமையின் வரலாற்று பிறளல். இதற்கான விலையை தமிழகம் இன்னும் ஒரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆரோக்கியமான அரசியல் தேட வேண்டியது நமது கடமை.

நீங்கள் சொல்லிய பட்டியலுடன் கூட இன்னும் பல நல்ல நிர்வாக நடைமுறைகளை இந்த ஆட்சியில் பார்க்க முடிந்தாலும் அடிப்படையில் சறுக்கி விட்ட இந்தக் கட்சியை புறந்தள்ளி விடுவது தேவை.

பாமகவின் கட்டுக் கோப்பும், அறிவு சார்ந்த திட்டமிடலும் கவர்ந்தாலும் கிட்டத்தட்ட பாசிசத்தை ஒட்டி நிற்கும் அதன் செயல்பாடுகள் அச்சத்தைத் தருகின்றன.

==Fascists believe that nations and races are in perpetual conflict whereby only the strong can survive by being healthy, vital, and by asserting themselves in combat against the weak==

விக்கிபீடியாவின் வரையறை மேலே. வலிமையான இனம் (சாதி) மட்டுமே தம்மை ஆரோக்கியமாகவும், உயிரோட்டமுடையதாகவும் வைத்துக் கொண்டு தம்மை விட நலிந்தவர்களை நசுக்கி விடுவதன் மூலம் வாழ முடியும் என்று நம்புவது பாசிசம். பாமகவுக்கு பொருந்துகிறதா!

அவர்கள் கையில் அதிகாரம் கிடைத்து விட்டால் மராட்டியத்தின் சிவசேனா போன்ற அரசியல்தான் தமிழகத்தில் காணக்கிடைக்கும்.

"இளைதாக முள்மரம் கொல்க"

அன்புடன்,
மா சிவகுமார்