வியாழன், மார்ச் 18, 2010

சுவாமி பரமஹம்ச நித்யானந்தர்

ஆனந்த விகடனில் ஜக்கி வாசுதேவின் கட்டுரைகள் வரும் போது குமுதத்தில் பரமஹம்ச நித்யானந்தரின் கட்டுரைகள் வெளியாகி வந்தன.

ஜக்கி வாசுதேவ் எங்கோ உயரத்தில் உட்கார்ந்து கொண்டு படிப்பவர்களை கீழ் நோக்கி தேவ மொழிகளை உதிர்ப்பது போன்ற தொனியில் ஒலிக்கிறார். பரமஹம்ச நித்யானந்தர் நமக்கு அருகில் உட்கார்ந்து நம்மை மதித்து பேசுவது போன்ற உணர்வு.

(பிற்பாடு குமுதத்தில் பணி புரிந்த ஒரு நண்பர் மூலம் அந்த கட்டுரைகளை எழுதுவது குமுதம் எழுத்தாளர்கள்தான். சுவாமிகளுக்கு காண்பித்து விட்டு வெளியிடுவார்கள் என்று தெரிய வந்தது). எப்படியானாலும், இந்த சாமியார் இருப்பவர்களுக்குள் அணுக எளிமையானவர் என்ற எண்ணம் இருந்தது.

அவரது தொலைக்காட்சி பேச்சுக்களையோ புத்தகங்களையோ சந்தித்ததில்லை. அவரை நேரிலும் பார்த்ததில்லை. 'ஆபாச வீடியோ' என்று தமிழகத்தின் தலைத் தொலைக்காட்சி வெளியிட்ட போது பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

மனிதனுக்கு மட்டும்தான் சிந்திக்கும் மனம் வாய்த்திருக்கிறது. தினந்தோறும் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலாக அவற்றைத் தாண்டி இன்னும் இன்னும் யோசிக்க வேண்டிய உந்துதல் இருக்கிறது. அந்த உந்துதலை எல்லாம் சக மனிதர் மீது செலுத்தி, அடிப்படை பொறுப்பை இறக்கி வைத்து விடுவது நிம்மதியான ஒரு தேர்வு.

'நம்ம வேலையை நாம் செய்து கொண்டே போகலாம். மேல் வழிகாட்டலுக்கு சாமியாரிடம் பொறுப்பை விட்டாகி விட்டது'. அந்த பொறுப்பை விடுவதற்கான மனிதரிடம் சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும் என்று நாமே வகுத்துக் கொள்கிறோம்.

அவ்வளவு நம்பிக்கை வைத்த ஒரு சாமியாரோ அல்லது இன்னொரு மனிதரோ, நாம் கற்பித்துக் கொண்ட பண்புகளில் தவறும் போது, அவரை மையமாக வைத்து கட்டிய கோட்டைகள் எல்லாம் உடைந்து சிதறி விடுகின்றன.

இன்னொருவர் மீது கோட்டை கட்டவும் வேண்டாம், அது இடிந்து விழும் போது கோபப்படவும் வேண்டாம். நம்முடைய பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தி விடும் சோம்பேறிகளாக இருந்து விட்டு, "அப்படி சுமத்துவது சாத்தியமே இல்லை, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று உணரும் போது ஏமாற்றம் வருகிறது.

நம்முடைய மனதின் பறத்தலுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. வேறு யார் மீதும் சுமத்தினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்கையில் அவரவர் நிலைக்கு அவரவர் தான் காரணம் என்பதை மக்கள் உணருவதில்லை. சௌகரியமாக பிறரை பொறுப்பாளி ஆக்குவதும், அவர்கள் மீது எதார்த்தம் சாராத கற்பிதங்களைஎட்படுதிகொல்வதும் தான் நம் மக்களின் பண்பு.

உண்மை தெரியும்போது அவன் மோசம் , இவன் மோசம் என்று கூச்சல் போடுகின்றனர். உண்மையில் நம் மக்களும், மக்களின் பலவீனங்களை பணமாக்கும் ஊடகங்களும் தான் நித்தியானந்த போன்றவர்கள் வளர காரணமாக உள்ளனர்.

வினையூக்கி சொன்னது…

அருமை !!!

கல்வெட்டு சொன்னது…

//இன்னொருவர் மீது கோட்டை கட்டவும் வேண்டாம், அது இடிந்து விழும் போது கோபப்படவும் வேண்டாம். நம்முடைய பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தி விடும் சோம்பேறிகளாக இருந்து விட்டு, "அப்படி சுமத்துவது சாத்தியமே இல்லை, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று உணரும் போது ஏமாற்றம் வருகிறது.//

சிவா,
ஒகே சாமி-யார்கள் பற்றி தெளிவாக உள்ளது.

சாமி-களைப்பற்றி?

அங்கே போகும் மனிதர்களும் ( சமீபத்தில் திருப்பதி போனவர்களைப் பற்றிச் சொல்லவில்லை :-))))) ) ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தானே செல்கிறார்கள்? அவர்களை என்ன செய்ய?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அவரை இன்னும் "சுவாமி பரமஹம்ச நித்தியானந்தர்" எனக் குறிப்பிட்ட உங்கள் பெருந்தன்மை எனக்கில்லை.
துயரால் வாடும் மக்கள் எல்லோரும் உங்களைப் போல் தெளிவு மிக்கவர்களாக இல்லாதது;
இந்த ஏமாற்றுக்காரருக்கு கொண்டாட்டமே!
இவன் மனிதன் இவனுக்கு ஆசாபாசம் அத்தனையும் உண்டு; இவனும் நம்மைப் போல் தான்
என ஒரு சிலர் சிந்தித்தாலும்; அவன் தன் வாய்சாதுரியத்தால்(லிங்கம் வர வைப்பது உட்பட) அத்தனையையும் புரட்டுகிறான்.அவர்கள் துன்பத்தையும்; துயரையும் தனக்கு நலமாக அறுவடை
செய்கிறான்.அதற்கு ஒரு பிரச்சாரக் கூட்டத்தையே உருவாக்குகிறான்...செய்திச் சாதனம் துணை போகிறது.
கற்றோர் எனும் கூட்டம் கூட இவன் காலடியில் கிடக்கிறது.
அதாவது "தவித்த முயல் அடிக்கிறான்".
இந்த அவலம் மிகுந்த மக்களோ ஆற்றில் விழுந்தவன் கதியில் ; எதையாவது பற்ற முற்படுகிறார்கள்.
நாம் அவர்களைக் கேலி செய்கிறோம்.
இவனை தண்டிக்க ஆள் இல்லை.
இவர் பெண்ணுடன் சல்லாபித்தது பிரச்சனையில்லை. ஆனால் தன்னால் முடியாததை முடியுமென அடுத்தவருக்கும் போதிக்க முற்பட்டதே; தவறு.
அத்துடன் தலைமறைவாகி அறிக்கை (அலம்பல்) விடுவதே தவறு.
மேலும் நான் சாமியையே நம்புவதில்லை. அதனால் இந்த ஆசாமிகளை நம்பியதேயில்லை.

மா சிவகுமார் சொன்னது…

யோகன் பாரிஸ்,

சுவாமி, பரமஹம்சர், நித்யானந்தர் என்ற சொற்களுக்கு பெரிய சிறப்பு கற்பிக்கத் தேவையில்லை. அவர் தன்னைத் தானே அப்படி அழைத்துக் கொள்கிறார். அதை மதித்து அப்படியே குறிப்பிடுவதுதானே மரியாதை!

ஆன்மீகம் ஒரு மனதை விட்டு வெளியில் வந்து இரண்டு மனப் பரிமாற்றத்தை தாண்டிய உடனேயே வியாபரமாகி விடுகிறது.

கல்வெட்டு,

சாமியிடம் பாரத்தைப் போட்டால் ஏமாற்றம் வர வாய்ப்பு இல்லையே! மாற்றம் என்பது மனிதர்களுக்குத்தான் பொருந்தும். மாறாமல் இருக்கும் உருவகமாகத்தான் கடவுளைப் பார்க்க வேண்டும். (பார்க்க ஆரம்பிங்க சீக்கிரம் :-)

கல்வெட்டு சொன்னது…

.

//மாறாமல் இருக்கும் உருவகமாகத்தான் கடவுளைப் பார்க்க வேண்டும். (பார்க்க ஆரம்பிங்க சீக்கிரம் :‍-)//


:-))))

சிவா,
என்ன இப்படி சொல்லீட்டீக‌?

1. குல தெய்வம் என்ற ஒன்று இருக்கும்.

2.அதுவால் முடியாமல் போய் (அதன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்து அல்லது பிரயோசனம் இல்லை என்று தெரிந்து) அடுத்து இஷ்டதெய்வம் என்று ஒன்று வரும்.

3.அதுக்கு அப்புறம், குழு மனப்பான்மையில் ஏதாவது ஒரு சாமி பிடித்துப்போய் அணி மாறிவிடுவார்கள்.

பங்காரு தலைமையில் இயங்கும் ஆதிபராசக்தி அல்லது சாய்பாபா தலிமையில் இயங்கும் சாய்பாபா அல்லது காஞ்சி காமகோடிகள் தலைமையில் இயங்கும் காமாட்சி அல்லது கேரள தேவஸ்தான தலைமையில் அருள் கொடுக்கும் அய்யப்பன் அல்லது திருமல தேவஸ்தான தலிமையில் அருள் கொடுக்கும் திருப்பதி... என்று விரியும் இந்த நம்பிக்கை மாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்கள்...



4. எதுவுமே சரிவரவில்லை என்றால் மதம் மாறி வெளிநாட்டில் தோன்றிய சாமிகளை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

**
நம்பிக்கை சார்ந்தது சாமி.
மனிதர்கள் அதை மாற்றுவதில் இருந்தே தெரிகிறது ஏதோ ஒரு நம்பிக்கை பழைய ஆளிடம் பொய்த்துவிட்டது என்று.

இதற்கு என்ன சொல்கிறீர்கள்? :-))

.

Thekkikattan|தெகா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thekkikattan|தெகா சொன்னது…

மா. சி, நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு உங்க இடுகையைக் காண்கிறேன். ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?

//ஆபாச வீடியோ' என்று தமிழகத்தின் தலைத் தொலைக்காட்சி வெளியிட்ட போது பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.//

அப்படியாகத்தான் எனக்கும் தோன்றியது. ஒன்றும் பெரிதான திடுக்கோ, ஆச்சரியமோ இல்லை.

//அந்த உந்துதலை எல்லாம் சக மனிதர் மீது செலுத்தி, அடிப்படை பொறுப்பை இறக்கி வைத்து விடுவது நிம்மதியான ஒரு தேர்வு.// :))

உங்க சிந்தனையை ஒத்தே எனது புரிதலும் இருந்தாக இங்கே பதிந்து வைத்திருக்கிறேன்... உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு,

நான் சாமியைப் பற்றிப் பேசினால், நீங்க சாமியார்களை விட்டு நகர மாட்டேங்கறீங்க!

கூட்டம் சேர்த்து கோவிலுக்குப் போவது சுற்றுலா! அதையும் கடவுளையும் குழப்பாதீங்க! கொஞ்சம் உள்ளே கால் வைத்துப் பார்த்தால்தானே தெரியும் என்ன ஏது என்று!

கதவை மூடியே வைத்துக் கொண்டால் எப்படி காற்று உள்ளே வரும் :-)

தெகா,

அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதுகிறேன். உங்கள் கருத்துக்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழ் சமூகம் பாலியல் அடக்குமுறையில் இயங்கியது. அதன் வெளிப்பாடுகள்தான் இதெல்லாம். இப்போதைய இளைஞர்கள் கொஞ்சம் தெளிவாக இருப்பதாகப் படுகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

.

சிவா,
நான் சாமியார்களைச் சொல்லவில்லை.

1.குல தெய்வம் என்ற சாமி இருக்கும்.

2.அதுவால் முடியாமல் போய் (அதன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்து அல்லது பிரயோசனம் இல்லை என்று தெரிந்து) அடுத்து இஷ்டதெய்வம் என்று சாமி ஒன்று வரும்.

3.அதுக்கு அப்புறம், குழு மனப்பான்மையில் ஏதாவது ஒரு சாமி பிடித்துப்போய் அணி மாறிவிடுவார்கள்.

ஆதிபராசக்தி சாமி
காமாட்சி சாமி
அய்யப்பன் சாமி
திருப்பதி சாமி ...

என்று விரியும் இந்த நம்பிக்கை மாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்கள்...


4. எதுவுமே சரிவரவில்லை என்றால் மதம் மாறி வெளிநாட்டில் தோன்றிய சாமி களை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

.

ஒரு மனிதன் ஏன் அவன் கும்பிடும் சாமியையே மாற்றுகிறான்? என்பதுதான் கேள்வி


.

மா சிவகுமார் சொன்னது…

//ஒரு மனிதன் ஏன் அவன் கும்பிடும் சாமியையே மாற்றுகிறான்? என்பதுதான் கேள்வி//

ஏன் மாற்றக்கூடாது என்பதுதான் கேள்வி? வயது ஏற ஏற அனுபவங்களும் பாடங்களும் அதிகமாக அதிமாக நகர்ந்து கொண்டேதானே இருக்க வேண்டும்.

'கடவுள் இல்லை' என்று விடாப்பிடியாக நிற்பது, மதவெறிக்கு இணையான சிந்தனை மறுப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம், மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வோம்.

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

.

:-)))

//ஏன் மாற்றக்கூடாது என்பதுதான் கேள்வி? வயது ஏற ஏற அனுபவங்களும் //

சிவா , இதை அப்படியே சாமியார்களை நம்புபவர்களுக்கும் போடுங்கள்.

அவர்கள் ஏன் சாமியார்களை நம்பக்கூடாது? நீங்கள் ஏன் விமர்சிக்கிறீர்கள்? அவர்கள் அளவில் அதுவும் ஒரு மாற்றம்தான்.

********

//கடவுள் இல்லை' என்று விடாப்பிடியாக நிற்பது, மதவெறிக்கு இணையான சிந்தனை மறுப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம், மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வோம். ///

சிவா,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பேச்சிற்கே நான் வரவில்லை.
"இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?, அதைத் தாண்டி பயணிக்கவே விரும்புகிறேன்".


**

இங்கே நான் சொல்லவருவது.... "இருக்கும் என்று நம்புவர்கள், ஒன்றைவிட்டு மற்ற ஒன்றுக்கு மாறுவது என்பது ,ஏதோ ஒரு எதிர்பார்ப்பு‍‍ ஏமாற்றம் சார்ந்த தூண்டுதல்" என்று மட்டுமே. .

அதுவும் நீங்கள் "கடவுளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை" என்று சொன்னதற்காக, "இல்லை பலர் எதிர் பார்த்தே இருக்கிறார்கள்" என்று சொல்லவே.

**
கடவுள் என்பதில் விடாப்பிடி எல்லாம் இல்லை. ஏன் என்றால் அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் அக்கறை இல்லை என்பதே உண்மை.

**

மா சிவகுமார் சொன்னது…

//கடவுள் என்பதில் விடாப்பிடி எல்லாம் இல்லை. ஏன் என்றால் அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் அக்கறை இல்லை என்பதே உண்மை. //

ஆனால், நடைமுறையில் கடவுளைப் பற்றி நிறைய பேசுகிறீர்கள் :-)

அன்புடன்,
மா சிவகுமார்