செவ்வாய், ஏப்ரல் 07, 2009

வணக்கம்

போன ஆண்டு மார்ச்சு 15ம் தேதி வாக்கில் வலைப்பதிவுகளுக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஒரு இடுகையாக வெளியிட்டேன். பின்னூட்டப் பெட்டிகள், தமிழ்மண இணைப்பு, ஸ்டாட்ஸ்கவுண்டர் இணைப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டேன். முழுமையாக ஒரு கத்தரிப்பு.

'ஒரு ஆண்டுக்கு வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. எந்த நல்ல செயலுக்கும் ஒரு இடைவெளி கொடுத்தால்தான் அதன் உண்மையான நிறைகுறைகள் தெரியும். ஒரு ஆண்டுக்குப் பிறகு இன்னும் எழுத வேண்டும், பதிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் சந்திப்போம்'.

ஓராண்டு தாண்டியே விட்டது. ஒதுங்கியிருத்தல் முழுமையாக இருந்திருக்கவில்லை. முதல் 6 மாதங்களுக்கு பதிவதையும், பின்னூட்டங்கள் இடுவதையும், பிற பதிவுகளைப் படிப்பதையும் அறவே ஒதுக்கியிருந்தாலும் அதன் பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதும், பதிவதும் ஆரம்பித்தது. முன்பு இருந்த வேகமும் பிடிப்பும் விட்டுப் போயிருந்தன.

'திரும்பவும் வலைப்பதிவுகளில் ஈடுபட ஆரம்பிக்க வேண்டுமா? தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் சமூகங்களில் பங்கேற்க வேண்டுமா? அதை விட்டு இருந்த நாட்களில் வலைப் பதிவதால் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?' என்று யோசித்துப் பார்த்தால், சாதகங்கள்தான் அதிகம்.

ஏன் வலைப்பதிவில் பதிய வேண்டும்?
  1. எழுதுவதற்கான ஊக்கம் பதிவுகளாகப் போட்டு நான்கு பேர் படித்து பின்னூட்டம் பார்த்து அதற்கு எதிர்வினை கொடுக்கும் போது நிறையவே கிடைக்கிறது. 'ஒரு மணி நேரம் உட்கார்ந்து நமக்கே நமக்காக எழுதுவோம்' என்று நினைத்தாலும் கூடவே பிறருக்குப் போய்ச் சேரும் என்ற எண்ணம் பெரிதும் துணை புரிகிறது.

  2. அப்படி தவறாமல் எழுதிக் கொண்டிருப்பது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க, மனதுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கிறது.

  3. நமது பதிவுகளை படிப்பவர்களுடன் ஏற்படும் நட்பு. பின்னூட்டங்கள் மூலம் பெயர் தெரிந்து மனதளவில் நெருக்கமாகும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள், நேரில் சந்திக்க முடியும் நண்பர்கள், முழுமையான நட்பாக பரிணமிக்கும் நண்பர்கள் என்று நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்புகள் ஏராளம்.

    அப்படி எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் என்றோ சந்திக்க நேரும் போது நெடுநாள் பழகியவர் போல உணர முடிவதும் கிடைத்தற்கரியது.

  4. நமது கருத்துகளை பதிந்து வைத்து வெளிப்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு சமூகக் கடமை என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால், இனிமேல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், பொருள் செய்ய விரும்பு, புரட்டிப் போட்ட புத்தகங்கள் மூன்றுக்குமே தொடர்ந்து எழுதி பதிய உத்தேசம். இப்படிப்பட்ட தீர்மானங்களுக்கு வழக்கமாக ஏற்படும் கதி நேர்ந்து விடாமல் நல்லபடியாக தொடரும் என்று உறுதியுடன்.

20 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

//நமது பதிவுகளை படிப்பவர்களுடன் ஏற்படும் நட்பு. பின்னூட்டங்கள் மூலம் பெயர் தெரிந்து மனதளவில் நெருக்கமாகும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள், நேரில் சந்திக்க முடியும் நண்பர்கள், முழுமையான நட்பாக பரிணமிக்கும் நண்பர்கள் என்று நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்புகள் ஏராளம்.

அப்படி எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் என்றோ சந்திக்க நேரும் போது நெடுநாள் பழகியவர் போல உணர முடிவதும் கிடைத்தற்கரியது.///


இவ்வரிகளில் உங்களின் எண்ணங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் !

அருமை!

வாழ்த்துக்களுடன்....!

சென்ஷி சொன்னது…

வாங்க தலைவா வாங்க.. மீண்டும் உங்களை எழுத்துலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி :)

சிங். செயகுமார். சொன்னது…

திட்டமிடல் எல்லா இடத்திலேயும் சரியா நடக்குது. சரியா ஒரு வருஷம் கழிச்சி வாரீங்கன்னு நினைக்கிறேன்.இடையில சிலபதிவுகளை பார்த்ததா ஞாபகம்............

நீங்க எழுதுங்க வாசிக்க நாங்க இருக்கோம்..........

இரா.சுகுமாரன் சொன்னது…

இன்று ஒரு திருக்குறளை தேடிய போது உங்கள் தளம் கிடைத்தது. அதில் ஒரு திருக்குறள்.

எனவே நீங்கள் என்ன நோக்கத்திற்காக எழுதினீர்களோ அது இல்லாமல் மற்றவைக்கும் பயன் படுகிறது.

எனவே உங்களுக்காக இல்லையென்றாலும் பிறருக்கு அது ஏதோ வகையில் பயன்படுகிறது எனவே எழுதுங்கள் அது நிச்சயம் யாருக்கேனும் பயன்படும்.

Cable சங்கர் சொன்னது…

வருக.. வருக..

Unknown சொன்னது…

உங்களுடைய புரட்டிப் போட்ட புத்தகங்கள் பதிவை மறுபடியும் தொடருவது மகிழ்ச்சியளிக்கிறது.

புதிய உற்சாகத்துடன் தொடருங்கள். தமிழ் புத்தகங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள். புதிய புதிய படைப்பாளிகளையும் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

தோழமையுடன்,
கிருஷ்ணப் பிரபு.

KARTHIK சொன்னது…

மிக்க மகிழ்ச்சி அண்ணா

அதிலும் பொருள் செய் தொடர்வது ரொம்ப சந்தோசம்.ஏன்னா அதபாத்துதான் நாங்க பதிவு பக்கமே வந்தோம்.
தொடர்ந்து எழுதுங்க.
வாழ்துக்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஆயில்யன்

//இவ்வரிகளில் உங்களின் எண்ணங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் !//
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பெனும் கிழமை தரும்
என்று குறளுக்கு நல்ல எடுத்துக்காட்டு வலைப்பதிவுகள் மூலம் கிடைக்கும் நட்புகள். நன்றி.

//மீண்டும் உங்களை எழுத்துலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி :)//
நன்றி சென்ஷி. நீங்கள் சென்னை பக்கம் வரும் போது உங்களை நேரிலும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இப்போ கொஞ்சம் குண்டாகியிருக்கீங்களா! :-)

வணக்கம் சிங்செயகுமார்.
//திட்டமிடல் எல்லா இடத்திலேயும் சரியா நடக்குது. சரியா ஒரு வருஷம் கழிச்சி வாரீங்கன்னு நினைக்கிறேன்//
ஒரு வருஷம் தாண்டி விட்டது. இடையிடையே இங்கொன்றும் அங்கொன்றுமாக பதிந்து கொண்டும் இருந்தேன். திட்டமிடல் 100% நடந்து விடுவதில்லை :-)

இரா சுகுமாரன்,
//எனவே நீங்கள் என்ன நோக்கத்திற்காக எழுதினீர்களோ அது இல்லாமல் மற்றவைக்கும் பயன் படுகிறது.//
ஆமாங்க. நானும் பலமுறை உணர்ந்தது அது. இணையத்தில் நாம் எழுதுவது காற்றில் விதைப்பது போல இருக்கிறது. எங்கெல்லாம் போய் எப்படி முளைக்கிறது என்று நினைத்துப் பார்க்காத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதனால் எழுத வேண்டும். ஆக்கபூர்வமாகவே எழுத வேண்டும் என்ற அவதானமும் வேண்டும்.
நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வரவேற்புக்கு நன்றி கேபிள் சங்கர்!

வணக்கம் கிருஷ்ண பிரபு
//தமிழ் புத்தகங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள். புதிய புதிய படைப்பாளிகளையும் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.//

வாரம் ஒரு புதிய நூலாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். புரட்டிப் போட்ட படைப்புகளிலும் தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.

கார்த்திக்,
//அதிலும் பொருள் செய் தொடர்வது ரொம்ப சந்தோசம்//
உங்க அன்புக்கே நிறைய எழுதத் தோணும் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

வெல்கம் பேக்!

:))

வடுவூர் குமார் சொன்னது…

வாங்க வாங்க.

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

ஆகா!வெளிநடப்பு செய்திருந்த சிங்கம் மீண்டும் வந்து விட்டதா?வாங்க,வாங்க.

வல்லிசிம்ஹன் சொன்னது…

நல்வரவு சிவக்குமார்.
உங்களைப்(எழுத்தை) பார்ப்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் உங்க்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

தேங்க்யூ பாலா! :-)
நன்றி வடுவூர் குமார்.
உங்கள் ஊக்கம் எப்போதுமே வினையூக்கி.

மாண்புமிகு பொதுஜனம்,
சிங்கமும் இல்லை, வெளிநடப்பும் இல்லை :-) கொஞ்சம் ஒதுங்கியிருந்து விட்டு மீண்டும் எட்டிப்பார்ப்பு, அவ்வளவுதான்! :-)

வல்லி அம்மா,
எழுத்தின் மூலம் உங்களை சந்திக்க முடிவதில் மிக்க மகிழ்ச்சி!

அன்புடன்,
மா சிவகுமார்

மங்கை சொன்னது…

நம்ப மாட்டீங்க..

இன்னைக்கு தான் நினச்சேன்... துறைசார்ந்த பதிவுகள் பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருந்தப்போ உங்க நினைவு வந்துச்சு...ஏன் ஆளை காணோம்னு...

மகிழ்ச்சி..வாங்க வாங்க

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மங்கை,

பார்த்தீங்களா, கொஞ்ச நாள் படிக்காமல் இருந்தும் பொருத்தமான நினைவோட்டத்தில் பெயர் நினைவில் வந்திடுச்சு. இந்த நட்பைத்தான் வலைப்பதிவுகள் நமக்குத் தந்திருக்கின்றன என்பதை நன்றாக உணர்ந்தேன் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

மீண்டும் வந்ததுக்கு நல்வரவு.

இன்னிக்கே ஆரம்பிச்சுருங்க. நாள் நல்லா இருக்கு.

இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துளசி அக்கா, உங்கள் ஆசிகளுடன் ஆரம்பித்தே விட்டேன்.

அன்புடன்,
சிவகுமார்

மடல்காரன்_MadalKaran சொன்னது…

சிவக்குமார் அவர்களே. உங்க பதிவெல்லாம் பார்த்துதான் எனக்கும் வலைபதிவு என்ன வென்று தெரிந்தது. உங்கள் வருகை நிறைய பேருக்கு நல்லது.
அன்புடன், மடல்காரன்.

மா சிவகுமார் சொன்னது…

//உங்க பதிவெல்லாம் பார்த்துதான் எனக்கும் வலைபதிவு என்ன வென்று தெரிந்தது. உங்கள் வருகை நிறைய பேருக்கு நல்லது.//

கொஞ்சம் மிகையாகத் தெரியலையா :-). அங்கீகாரத்துக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்