பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலையில் சேர்ந்தது டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா எக்ஸ்போர்ட்ஸ் (இப்போது டாடா இன்டர்நேஷனல்) நிறுவனத்தின் தோல் பிரிவில். நான்கு ஆண்டுகள் மத்திய பிரதேசத்திலும், 2 ஆண்டுகள் சாங்காயிலும் பணி புரிந்தேன்.
'எதைச் செய்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்' என்பது அங்கு இயல்பாக பின்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக, விதிகளை வளைத்து செயல்படுவதும் வணிக நிறுவனங்களில் நடக்கிறது என்பது மற்ற நிறுவனங்களைப் பற்றிப் படித்த போது, மற்ற நிறுவனங்களுடன் உறவாடிய பிறகுதான் தெரிய வந்தது.
டாடா என்றால் நேர்மை என்ற உருவகம் பலரது மனதில் இருக்கலாம். அது பெருமளவுக்கு உண்மையும் கூட. தனிப்பட்ட அலுவர்கள் நேர்மை அற்ற செயல்களை செய்தாலும், நிறுவனத்தின் கொள்கையாக நேர்மையற்ற செயல்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.
டாடா நிறுவனத்தின் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதை நான் பெருமையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
=========================
டாடா குழுமத்தின் தலைவர் திரு ரத்தன் டாடா, 'திருமதி நீரா ராடியாவுடனான அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவது அவரது அந்தரங்க உரிமைகளுக்கு எதிரானது' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
========================
அந்தரங்க உரிமை என்பது தனிமனிதர்களுக்கானது. ஒரு வணிக நிறுவனத்துக்கு அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது. (தொழில் ரகசியங்கள் - பொருட்களின் விலை நிர்ணயித்தல், தொழில் நுட்ப அறிவு -போன்றவை) இருக்கலாம்.
டாடா போன்ற பெரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு முழுவதுமாகவும், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் - வணிக நலனுக்குத் தேவையான மறைவைத் தவிர்த்து - பெருமளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
திருமதி நீரா ராடியாவின் மீது வருமான வரித் துறையின் கண்காணிப்பு இருக்கிறது. அவருடன் திரு ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாவதில் அவருக்கு என்ன மறுப்பு இருக்க முடியும்?
தேவையில்லாத பேச்சுக்களை பொதுவில் வைத்து கிசுகிசு பாணியில் விவாதங்கள் நடப்பதை திரு ரத்தன் டாடா விரும்பாமல் இருக்கலாம். ஆனால். ஊழல் கண்காணிப்பில் இருப்பவர் ஒருவருடனான அவரது உறவாடல்களை ஏன் பொதுவில் விவாதிக்க முடியாமல் போய் விட்டது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக