திங்கள், ஜூலை 04, 2011

மெரீனாவில், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு


ஜூன் 26ம் தேதி ஐநாவின் சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு இலங்கை இனவெறி அரசால் கொல்லப்பட்ட  பல லட்சம் தமிழர்களுக்கும் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. 

நான் மதிப்பிட்டது 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருப்பார்கள் என்று. ஆனால், நிகழ்வை ஏற்பாடு  செய்திருந்த மே17 இயக்கத்தினர் 25,000 மெழுகுவரத்திகளை வினியோகித்ததாக தெரிவிக்கிறார்கள். அதன் மூலம்
குறைந்தது 25,000 பேர் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டார்கள் என்று கணக்கிட முடிகிறது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி தர மறுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மெரீனா கடற்கரையில் பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு ஒன்று இருக்கிறதாம். ஐநா சித்திரவதை தடுப்பு நாள் என்று வலியுறுத்தி அனுமதி
பெறப்பட்டதாம்.
  • ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது 
  • கடற்கரையை அசுத்தம் செய்யக் கூடாது
  • 500 பேருக்கு மேல் கூடக்கூடாது 
  • முழக்கங்கள் எழுப்பக் கூடாது

உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் காவல் துறையினர்

அந்த எதிர்பார்ப்பில்தான் காவல்துறையினரும் வந்திருந்தார்கள். கூடியிருந்த கூட்டத்தில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டிருந்தால் அதைக் கையாள முடியாத நிலையில்தான் காவல்துறையினர் இருந்தார்கள். 

நல்ல வேளையாக, கூட்டத்தின் நோக்கத்திலிருந்து சிறிதும் விலகாமல் அனைவரும் அமைதியாகக் கூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டுக் கலைந்து போனார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எந்த் தொல்லையும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: