திங்கள், ஜூலை 04, 2011

இலங்கையில் இனப்படுகொலை - நாம் என்ன செய்யப் போகிறோம்!

எதுவும் நடக்காமல் இருந்து, இறுதிக் கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களும், 60 ஆண்டுகளாக நடந்து வரும்  இன அழிப்பும் உலக சமூகத்தின்/மக்களின் கவனத்திலிருந்து மறைந்து மறந்து போய் விடுவதுதான் குற்றவாளிகளான இலங்கை இனவெறி அரசும், கூட்டாளி இந்திய அதிகார அமைப்பும் வேண்டுவது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

  • பேரழிவையும் பெருங் கொலைகளையும் நடத்திய போர் முடிவடைந்தது,
  • ஐநா பொதுச்செயலாளர் குறைந்தபட்ச நடவடிக்கையாக ஒரு ஆலோசனை குழுவை நியமிக்கிறார்
  • இலங்கை அரசிடமிருந்து எந்த வகையிலும் ஒத்துழைப்பு இல்லாமல் குழு தனது ஆராய்வு அறிக்கையை சமர்ப்பிக்கிறது.


  • பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி, போர்க் காலத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை ஆவணப் படமாக வெளியிடுகிறது.
  • தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்த்லில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும், இலங்கை இனவெறி அரசு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  • ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கப்படும் வர்த்தக சலுகைகளை ரத்து செய்கின்றன.
  • பிரிட்டன், ஃபிரான்சு முதலான ஐரோப்பிய நாட்டு அரசியல் தலைவர்கள் போர்க்குற்றங்கள் பற்றி தமது கடுமையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.


சாதாரணமாக ஒரு கொலை நடக்கும் போதே கொலையாளிகள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தம்மை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள் என்று சொல்வார்கள். சர்வதேச பார்வையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் வெளியேற்றி விட்டு சாட்சிகள் இல்லாமல் இலங்கை அரசு நடத்திக் கொண்ட இறுதிக் கட்டப் போர் நிகழ்வுகளிலிருந்து தப்பிக் கசிந்து வந்துள்ள தடயங்கள் நடந்த குற்றங்களின் பிரும்மாண்டத்தின்
சில நுனிகளை மட்டும் காட்டுகின்றன.

இந்தத் தடயங்களை பொருட்படுத்தாமல் எல்லோரும் மறந்து போக வேண்டும் என்பதுதான் குற்றவாளிகளின் விருப்பம், நோக்கம்.

அந்த நோக்கத்தை முறியடிக்க நியாயம் விரும்பும் ஒவ்வொருவரும், மனித நலனில் ஆர்வமுள்ள அனைவரும் தொடர்ந்து தமது குரலை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். உலகின் கவனத்திலிருந்து இந்தப் படுகொலை
நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கச் செய்வது நமது கடமை.

அந்தக் கடமையில் வெளிப்பாடுகள்தான் ஜூன் 26ல் மெரீனாவில் நடந்த நினைவேந்தல் நிகழ்வும், ஜூலை 2ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலும், கடலூர் மாவட்டம் வடலூரிலும் நடந்த அடையாள உண்ணாவிரதப் போராட்ட்ங்களும்.

மும்பையிலும், பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், தில்லியிலும் போராட்டக் குழுவினர் இது குறித்த நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.

அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஜூலை 8ம் தேதியை இலங்கைத் தமிழர்களுடன் ஒன்றுசேர்ந்து நிற்கும் நாளாக கடைப்பிடிக்க உள்ளது (solidarity day). நாடு முழுவதும் மாநிலத்தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவிருக்கிறார்கள்.

சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்ற வந்த சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர், அந்தக் கட்சித் தலைவர் முலாயம் சிங் மூலம் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை எழுப்ப முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்) சுஷ்மா சுவராஜ், தமிழக சட்டசபைத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தன்னை உலுப்பியதாகச் சொல்லியிருக்கிறார்.

போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற பெயரில் செயல்படும் 19 இயக்கங்களின் கூட்டமைப்பு, திரட்டப்பட்ட கையெழுத்துக்களை ஐநா சபைக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளது.

சமீப காலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போல இந்த போராட்டங்கள் தம்மை தலைவராக முன்னிறுத்திக் கொள்ளாத, தலைவராக முன்னிறுத்த விரும்பாத இளைஞர் இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு வைகோவை அல்லது சீமானை தனிப்பட்ட முறையில் தாக்கி செயலிழக்கச் செய்தது போல முடக்கிப் போட்டு விட முடியாமல் பல ஆயிரக் கணக்கான உணர்வும் ஊக்கமும் நிறைந்த இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நியாயம் கோரும் இந்தப் போராட்டம் தனது நோக்கங்களை அடைந்தே தீரும்.

கருத்துகள் இல்லை: