புதன், ஜூலை 06, 2011

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமும், கோயில்களில் பொக்கிஷங்களும்

  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், விலைமதிப்பு வாய்ந்த கற்கள் நிறைந்த பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பலர் பல லட்சம் கோடி மதிப்பிலான கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டும் பொதுவான அம்சங்களைக் கொண்டவை

1. பெருமதிப்பிலான இந்த புதையல்கள் எப்படி உருவாயின?
நாட்டு மக்களிடமிருந்து சம்பாதித்த, கொள்ளையடித்த அல்லது பறித்த பணத்தை, அது அரசாங்கத்தின் மூலமாக மக்கள் நலப்பணிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் தனி மனிதர்கள் பதுக்கி வைத்ததன் விளைவுகள்தான் இவை.

இவற்றை உருவாக்கியவர்கள் இரண்டு முறை குற்றவாளிகள். மக்களையும், அரசையும் ஏமாற்றிப் பணத்தை திரட்டியது ஒரு குற்றம். திரட்டிய பணத்தை பயன்படுத்தாமல் பதுக்குவது இரண்டாவது குற்றம்.

2. இவற்றை அப்படியே விட்டு வைத்தால் என்ன?
இந்த செல்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள், பொதுவான புழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளுக்கு வெளியில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு வீட்டை வாங்கும் போது கறுப்புப் பணம் வைத்திருப்பவர், வாங்கும் மதிப்பில் 80%த்தை தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து விற்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். 20%த்துக்கு மட்டும் வரி கட்டுவார்கள்.

வெளிநாட்டில் படிக்கப் போகும் தனது மகனுக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக் கொள்வார்கள்.

கோயிலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முன்னாள் அரச குடும்பத்தினர் அல்லது மடஅதிபதிகள், அதை வைத்து மற்றவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.

3. இவற்றை அரசு கைப்பற்றி மக்கள் நலனுக்கு செலவழிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? 

'இத்தனை லட்சம் கோடி டாலர்கள் வெளியில் வந்தால் இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு மிகவும் அதிகமாகி விடும் (1 டாலருக்கு 20 ரூபாய் என்று ஆகி விடலாம்), அதனால் ஏற்றுமதி நின்று போய் விடும், நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கும்' என்று ஒரு விந்தையான வாதம் வைக்கப்பட்டது.

10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம்+ஒரு லட்சம் கோடி மதிப்பிலான கோவில் நகைகள் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

'பணப் பற்றாக்குறை அல்லது அன்னிய செலாவணி மதிப்பு குறைந்து விடக் கூடாது' என்று செய்யாமல் இருக்கின்ற பல திட்டங்களை செயல்படுத்தலாம். இது போன்ற புதிய இறக்குமதி பரிமாற்றங்களில் பணம் செலவாகும் போது பாரம்பரிய ஏற்றுமதி/இறக்குமதி செலவாணி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக்  கொள்ளலாம்.
  • பல்வேறு துறைகளில் நிபுணர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தலாம். 
  • நவீன எந்திரங்களை, தொழில் நுட்பங்களை விலைக்கு வாங்கலாம். 
  • புதிய ஆய்வு நிறுவனங்கள் ஏற்படுத்தலாம். 
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பணத்தை வைத்து பிற நாட்டவரின் உழைப்பை நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.

4. பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியர் சொல்வது ஏன்?

அடுத்த கத்தி நம்மைப் போன்ற மடங்களின் தலைக்கு மேல் என்று தோன்றுவதாலும் இருக்கலாம்.

12 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

//4. பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியர் சொல்வது ஏன்?

அடுத்த கத்தி நம்மைப் போன்ற மடங்களின் தலைக்கு மேல் என்று தோன்றுவதாலும் இருக்கலாம்.//

எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னா இதுதான் காரணம். :-)))

***

சுவிஸ் , கோவில் மட்டும் இல்லை இறந்த பாபா அறையிலும் நிறைய முதலீடுகள்.

கடவுளுக்கு எதற்கு பணம், நகை?

***

திருப்பதியும் இதில் அடக்கம் சிவா :-)

.

மா சிவகுமார் சொன்னது…

//திருப்பதியும் இதில் அடக்கம் சிவா :-)//

இல்லைன்னு நான் எங்க சொன்னேன் :-)

சீனு சொன்னது…

//நாட்டு மக்களிடமிருந்து சம்பாதித்த, கொள்ளையடித்த அல்லது பறித்த பணத்தை, அது அரசாங்கத்தின் மூலமாக மக்கள் நலப்பணிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் தனி மனிதர்கள் பதுக்கி வைத்ததன் விளைவுகள்தான் இவை.//

கோவிலில் சேர்த்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடித்து/பறித்து தான் சேர்க்கப்பட்டது என்று அப்படி நீங்களாக கற்பனை செய்துகொள்கிறீர்கள்? முகலாயர்கள்/ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க கூட ஒளித்து வைத்திருக்கலாம் இல்லையா? அரசர்கள் ஆண்ட காலத்தில் நாம் என்ன பிச்சைக்காரர்களாகவா இருந்தோம்?

பணம் இருப்பது இந்து கோவில் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நீங்கள் இப்படி பேசுகின்றீர்கள். அவ்வளவே.

//ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.//

:) அப்போ அந்த பணத்தை அப்படியே விட்டுடலாம்ங்கறீங்களா?

பேசாம இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்கள்/சர்ச்சுகள்/மசூதிகளின் சொத்துக்களையும் தேசிய சொத்தாக ஆக்கிடலாமா?

சீனு சொன்னது…

http://www.jeyamohan.in/?p=16356

மா சிவகுமார் சொன்னது…

//கோவிலில் சேர்த்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடித்து/பறித்து தான் சேர்க்கப்பட்டது என்று அப்படி நீங்களாக கற்பனை செய்துகொள்கிறீர்கள்?//

வேறு எப்படி சேர்க்கப்பட்டது? ஒரு அரசன் தேவைக்கதிகமாக வரி திரட்டி மக்களின் உழைப்பை சுரண்டினால்தான் இது போன்று தங்க நகை பொக்கிஷங்களை உருவாக்கியிருக்க முடியும்.

இல்லை என்றால் எப்படி உருவானது என்று விளக்குங்கள்.

//முகலாயர்கள்/ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க கூட ஒளித்து வைத்திருக்கலாம் இல்லையா?//

இருக்கலாம். இந்தியா குடியரசு ஆன பிறகு அதை வெளியில் கொண்டு வராமல் இருந்த காரணம் என்ன?

// அரசர்கள் ஆண்ட காலத்தில் நாம் என்ன பிச்சைக்காரர்களாகவா இருந்தோம்?//

ஆம்.

//பணம் இருப்பது இந்து கோவில் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நீங்கள் இப்படி பேசுகின்றீர்கள். அவ்வளவே.//

இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//:) அப்போ அந்த பணத்தை அப்படியே விட்டுடலாம்ங்கறீங்களா?//

அப்படிச் சொல்லவில்லையே. திரும்பிக் கொண்டு வர வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

//பேசாம இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்கள்/சர்ச்சுகள்/மசூதிகளின் சொத்துக்களையும் தேசிய சொத்தாக ஆக்கிடலாமா?//

ஆக்கிடலாம்.

மா சிவகுமார் சொன்னது…

//Sivakumar உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமும், கோயில்களில் பொக...": //

ஆங்கிலத்தில் இருந்ததால் ஸ்பாமில் மறைந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்.

//if u transfer the money to Government definitively it will be looted.. How much tax payers money is really spent to the people..//

அரசாங்கத்தில் வரும்/போகும் பணத்துக்கு கணக்கும் கட்டுப்பாடும், தணிக்கையும், நாடாளுமன்ற மேற்பார்வையும், பத்திரிகை கண்காணிப்பும் உண்டு.

சங்கர மடத்திலும், பத்மநாபசுவாமி கோயிலிலும் என்ன நடைமுறை?

அரசாங்கத்துக்கு மாற்றவில்லை என்றால் என்ன நடக்கும்? சில கொழுத்த மனிதர்கள் மட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

//Whenever the temple donation count starts, people like you jump in and tell it should go to government. If someone really trust you or government then they can directly send the money to PM welfare corpus.//

கோவிலுக்கு காணிக்கை போடுவதை தனியாக பேசலாம். காணிக்கை போடும் பணத்துக்கு வருமான வரி கணக்கு இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம்.

//If you really worried about people then why cannot you work and earn money and spend to their welfare (like BOSCH does)rather than advise on how to grab the donated wealth and loot them in steps.//

யார் செல்வத்தை யார் டொனேட் செய்கிறார்கள்? இரும்புத் தாது சுரங்கத்தில் கொள்ளை அடிப்பவன், கிரானைட் குவாரியில் கொள்ளை அடிப்பவன், வரி ஏய்ப்பவன், 2G அலைக்கற்றைக்காக ஊழல் செய்பவன் காணிக்கை போடுகிறான்.

இந்த காணிக்கைகளை விலக்கி விட்டால் சாதாரண மக்கள் போடும் காணிக்கை இந்த கோயில் சொத்துக்களில் 0.1% கூட இருக்காது.

//You interest is not on instituting a Trust which saibaba did to give completely free critical medical surgeries,Education and welfare by the donated money instead find the ways and means to grab and loot in the name of govenment.//

தமிழ்நாடு அரசு 1980களிலிருந்து முழுவதும் இலவசமாக பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. அரசாங்கம் என்றால் கொள்ளை என்று எப்படி சொல்கிறீர்கள்?

//My comments are only on newly found temple properties or any thing offered as donation not on swiss money. //

இதைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கருப்புப் பணம், ஸ்விஸ் கணக்கு என்று ஆட்டம் போடும் பலர் கோயில் சொத்துக்களும் அதே போன்று உருவானது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இன்று சமூகத்தில் பணம் சேர்க்கும் இடத்தில் இருப்பவர்கள் அதை பதுக்கி வைக்க கோயில்களைப் பயன்படுத்தாமல் ஸ்விஸ் கணக்கைப் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டும் தேசியமாக்கப்பட வேண்டியவைதான்.

சீனு சொன்னது…

//வேறு எப்படி சேர்க்கப்பட்டது? ஒரு அரசன் தேவைக்கதிகமாக வரி திரட்டி மக்களின் உழைப்பை சுரண்டினால்தான் இது போன்று தங்க நகை பொக்கிஷங்களை உருவாக்கியிருக்க முடியும்.//

சேமிப்பு என்பதே இருக்காது என்கிறீர்களா? இந்த பொக்கிஷங்கள் என்பது சேமித்து வைக்கப்பட்டதாக இருக்கலாம். உபரியாக இருந்ததை சேமித்ததாகவும் இருக்கலாம்.

//இல்லை என்றால் எப்படி உருவானது என்று விளக்குங்கள்.//

உங்களால் எப்படி இது கொள்ளை அடிக்கப்பட்டது / அதீதமான வரி விதித்து சேர்க்கப்பட்டது என்று நிரூபிக்க தெரியாதோ, அப்படித்தான் எனக்கும். அதற்காக உங்களை போன்று நான் assumption பன்னவில்லை.

//இருக்கலாம். இந்தியா குடியரசு ஆன பிறகு அதை வெளியில் கொண்டு வராமல் இருந்த காரணம் என்ன?//

இத்தனை காலம் அதனை பற்றின விஷயங்கள் தெரியாததும் காரணமாக இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் கேட்டால் என்ன சொல்வது? ஏன், நீங்கள் முயற்சி செய்து ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வெளிக்கொண்டு வந்திருக்கலாமே என்று குதர்க்கமாகவா கேட்க முடியும்?

//அரசர்கள் ஆண்ட காலத்தில் நாம் என்ன பிச்சைக்காரர்களாகவா இருந்தோம்?//

இல்லை என்பது என் பதில்.

//பணம் இருப்பது இந்து கோவில் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நீங்கள் இப்படி பேசுகின்றீர்கள். அவ்வளவே.//

ஆமாம் என்பது என் பதில்.

//ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.//

நிவாரணம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறீர்கள். கருப்பு பணத்தை பதுக்கியதற்கு கோவில் சொத்தை நாம் உபயோகப்படுத்துவது எப்படி நிவாரணம் ஆக முடியும்? அந்த பணத்தை மீட்டு வருவதும், பதுக்கியவர்களுக்கு தண்டனை தருவதும் தான் நிவாரணம். ஒருத்தன் அடி வாங்கினால், அவனை இன்னொருவனை அடிக்க சொல்வது தான் நிவாரணமா?

மா சிவகுமார் சொன்னது…

//சேமிப்பு என்பதே இருக்காது என்கிறீர்களா? இந்த பொக்கிஷங்கள் என்பது சேமித்து வைக்கப்பட்டதாக இருக்கலாம். உபரியாக இருந்ததை சேமித்ததாகவும் இருக்கலாம்.//

சரி, சேமித்து வைத்தது என்று வைத்துக் கொள்ளலாம். அது மக்கள் பணம்/அரசாங்கத்தின் பணம்தானே? மக்கள் அரசு வந்த பிறகு அதற்குத்தானே போய்ச் சேர வேண்டும்!

//உங்களால் எப்படி இது கொள்ளை அடிக்கப்பட்டது / அதீதமான வரி விதித்து சேர்க்கப்பட்டது என்று நிரூபிக்க தெரியாதோ, அப்படித்தான் எனக்கும். அதற்காக உங்களை போன்று நான் assumption பன்னவில்லை.//

அரசனுக்கு வருமானம் வருவது இந்த இரண்டு வழிகளில் மட்டும்தான் இருந்திருக்க முடியும். அவர் என்ன பாடுபட்டு நிலத்தில் உழைத்தா விளைச்சல் செய்து, பணம் சேர்த்திருப்பார்?

//இத்தனை காலம் அதனை பற்றின விஷயங்கள் தெரியாததும் காரணமாக இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் கேட்டால் என்ன சொல்வது? ஏன், நீங்கள் முயற்சி செய்து ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வெளிக்கொண்டு வந்திருக்கலாமே என்று குதர்க்கமாகவா கேட்க முடியும்?//

இப்போ தெரிந்த பிறகு அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் பேச்சு.


//நிவாரணம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறீர்கள். கருப்பு பணத்தை பதுக்கியதற்கு கோவில் சொத்தை நாம் உபயோகப்படுத்துவது எப்படி நிவாரணம் ஆக முடியும்? அந்த பணத்தை மீட்டு வருவதும், பதுக்கியவர்களுக்கு தண்டனை தருவதும் தான் நிவாரணம். ஒருத்தன் அடி வாங்கினால், அவனை இன்னொருவனை அடிக்க சொல்வது தான் நிவாரணமா?//

நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். கொண்டு போனவனுக்குத் தண்டனையும், கொண்டு போனதை திரும்பி கொண்டு வருவதும்தான் நிவாரணம்.

அதே போல கோவில்களில் குவிக்கப்பட்ட கறுப்பு செல்வங்களும் திரும்பி எடுக்கப்பட வேண்டும். அதைக் குவித்தவர்கள் வரலாற்றில் மறைந்து போய் விட்டதால் அதற்கு தண்டனை என்ற பேச்சு இல்லைதான்.

சீனு சொன்னது…

//சரி, சேமித்து வைத்தது என்று வைத்துக் கொள்ளலாம். அது மக்கள் பணம்/அரசாங்கத்தின் பணம்தானே? மக்கள் அரசு வந்த பிறகு அதற்குத்தானே போய்ச் சேர வேண்டும்!//
//இப்போ தெரிந்த பிறகு அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் பேச்சு.//

சரி! ஆனால் அதற்கான சூழல் இப்போது இருக்கிறதா? இந்த பணம் மக்களுக்கு செலவழிக்கவேண்டுமென்றால் அது அரசாங்கம் மூலம் தான் நடக்க வேண்டும். இப்போது அது சாத்தியமா? சாத்தியமானால் எவ்வளவு கொள்ளை அடிக்கப்படும். இத்தாலிக்கு ஒரு பங்கு போகாதா? இல்லை, இதை முறையாக செலவு செய்ய என்ன திட்டம் இருக்கிறது?

மேலும், இவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆபரணங்கள். வெறும் 100 ஆண்டுகள் பழமையான எழும்பூர் இரயில் நிலையத்தையே Heritage என்று அறிவிக்கவில்லையா? அப்படி இருக்க நூற்றாண்டு கால நகைகள் பொக்கிஷங்கள். இவற்றை விற்று பணம் ஈட்ட வேண்டுமா? அப்படியே விற்றாலும் அது ஏதாவது பனக்காரன் வாங்கி அவன் நாட்டு museum-ல் வைப்பான்.

//அரசனுக்கு வருமானம் வருவது இந்த இரண்டு வழிகளில் மட்டும்தான் இருந்திருக்க முடியும். அவர் என்ன பாடுபட்டு நிலத்தில் உழைத்தா விளைச்சல் செய்து, பணம் சேர்த்திருப்பார்?//

வரி வசூலிப்பது என்பது அரசனின் கடமை. இப்போதைய மக்களாட்சியிலும் அது தான் நடக்கிறது. மன்னர் பாடுபட்டு உழைத்து சேர்க்க வில்லை தான். அதற்காக மன்னர் வரி விதிக்கக்கூடாது என்கிறீர்களா?

மக்களின் வருமானத்தையும் விளைச்சளையும் இனம் கண்டு தேவையான அளவு மட்டுமே வரி விதித்தால் அவன் நிச்சயம் நல்ல அரசனாக இருக்க முடியும். இந்த மன்னருக்கு எப்படி இவ்வளாவு செல்வம் சேர்ந்தது என்பது உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனால், நீங்களோ இந்த மன்னன் மக்களை வருத்தி தான் சேர்த்தான் என்று எப்படி assume செய்கிறீர்கள்?

சுருக்கமாக சொன்னால் நல்ல சர்வாதிகாரி - மன்னம். மோசமான மன்னன் - சர்வாதிகாரி.

//அதே போல கோவில்களில் குவிக்கப்பட்ட கறுப்பு செல்வங்களும் திரும்பி எடுக்கப்பட வேண்டும். அதைக் குவித்தவர்கள் வரலாற்றில் மறைந்து போய் விட்டதால் அதற்கு தண்டனை என்ற பேச்சு இல்லைதான்.//

இப்போது திருப்பதியில் போடுபவை பெரும்பாலும் கறுப்பு தான். ஆனால், (அந்த கால) கோவிலில் குவிக்கப்பட்டவை கறுப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

சீனு சொன்னது…

//மேலும், இவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆபரணங்கள். வெறும் 100 ஆண்டுகள் பழமையான எழும்பூர் இரயில் நிலையத்தையே Heritage என்று அறிவிக்கவில்லையா? அப்படி இருக்க நூற்றாண்டு கால நகைகள் பொக்கிஷங்கள். இவற்றை விற்று பணம் ஈட்ட வேண்டுமா? அப்படியே விற்றாலும் அது ஏதாவது பனக்காரன் வாங்கி அவன் நாட்டு museum-ல் வைப்பான்.//

ஒரு விளக்கம். மக்களின் பசியாற்றுவது, இவை எல்லாவற்றையும் விட மேலானது. ஆனால், இப்போது இருக்கும் அரசாங்கங்கள் ஒழுங்காக இருந்தாலேயே அதை செய்ய முடியும். இந்த செல்வத்தை உபயோகப்படுத்த தேவையில்லை.

கல்வெட்டு சொன்னது…

.

//இப்போது திருப்பதியில் போடுபவை பெரும்பாலும் கறுப்பு தான்..//

இப்படி கறுப்பை ( ஏமாற்றி , கொளையடித்து, பிச்சைக்காரத்தன, மொள்ளமாரித்தனம் செய்து வந்த பணம்) ஏற்றுக்கொள்ளும் அது எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?? அப்படியே இருந்தால் அது எப்படி நல்ல கடவுளாக இருக்க முடியும்?

இதுக்கு ஸ்பெட்ரம் கீரோக்களே தேவைலை . குறைந்தப்டசம் யாரும் அவர்களைக் கடவுள் என்று சொல்வது இல்லை.

இப்படி கறுப்புப்பணத்தை வாங்கி நகையில் ஜொலிப்பது எல்லாம் ஒரு பொழப்பு...ம்...ம்ம்.

டியர் கடவுள்ஸ் சேம் ஆன் யு

.