செவ்வாய், ஜனவரி 31, 2012

தட்டச்சும் திறன்


10ம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையின் போது ஆங்கிலத் தட்டச்சு கற்றுக் கொள்ளப் போனோம். வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் போய் நகரத்தின் மையத்தில் இருக்கும் தட்டச்சு பயிற்றுப் பள்ளியில் படிக்க வேண்டும். asdf lkjh என்று அடிப்பதுதான் முதல் பாடம். இதை ஒரு பக்கம் முழுவதும் அடிக்க வேண்டும். இரண்டு எழுத்து வரிசைகளுக்கும் இடையே இடைவெளி, ஒரு வரி முடிந்த உடன் அடுத்த வரிக்குப் போகும் திருப்பு விசையை அழுத்துவது போன்றவற்றை சரியாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

முதல் நாள் அடித்த தாளைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், 'இது என்ன கோழி பீ கிண்டி வைத்தது போல இருக்கிறது' என்று கமென்ட் அடித்தார். புதிதாக வருபவர்களிடம் அவர் அடிக்கும் வாடிக்கையான கமென்ட் என்று இப்போது தெரிந்தாலும், அந்த தாளில் எழுத்துக்கள் அப்படித்தான் கோழி கிண்டி வைத்த பீ போல சிதறியிருந்தன.

அந்த ஒழுங்கு கை வந்த பிறகு அடுத்தடுத்த எழுத்து வரிசைகள், எழுத்துக்களின் மொழி ரீதியான சேர்க்கைகள் என்று பயிற்சி. ஒரு கட்டத்தில் abcdef என்று அடிப்பது ஆரம்பித்தது. மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களை அடிக்க இடது அல்லது வலது புறம் இருக்கும் ஒரு விசையை அழுத்திக் கொண்டு எழுத்தை அழுத்த வேண்டும். தொடர்ந்து மேல் வரிசை எழுத்துக்களை அடிக்க அதே விசையை அழுத்தி இடது புறமாக தள்ளி பூட்டி விட முடியும். அனைத்துமே இயந்திரவியல் அடிப்படையில் உருவான கருவி.

எழுத்துக்களின் இடம், விரல் பயன்பாடு மனதில் பதிந்த பிறகு முதலில் ஆரம்பித்த மெஷினிலிருந்து மாறி இன்னொரு மெஷினில் பழக ஆரம்பித்தோம். முதல் மெசின் பழசாகி விட்ட இது போன்று கத்துக்குட்டிகள் பழக்கமில்லாத விரல்களால் அழுத்தி அழுத்தி விசைகள் கெட்டித்துப் போயிருப்பது. இந்த மெஷின் பழக்கப்பட்டவர்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தியது.

சிறு சிறு உரைகள் அடிக்க ஆரம்பித்தோம். அதிலிருந்து வளர்ந்து கடிதம் எழுதுதல் வரை வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருட பயிற்சிக்குப் கீழ்நிலை தேர்வுக்குப் போகச் சொன்னார்கள். எஸ்எல்பி பள்ளியில் ஒரு கூடத்தில் தேர்வு. காலையில் முதலில் வேகத்துக்கான தேர்வு. குறிப்பிட்ட பத்தியை வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூடவே தேர்வு எழுத வந்திருந்த அண்ணன், நேரம் ஆரம்பித்த உடன் ஏற்படும் பெரு ஓசையைக் கண்டு திகைத்து விடக் கூடாது என்று எச்சரித்திருந்தான். அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் வந்த சத்தம் அது வரை கற்பனை செய்திருக்காததாக இருந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த எந்திரத்தில் ஒரு விசை சிக்குவதாக இருந்தது. பழகும் போது அதை பெரிய குறையாக புகாராக சொல்லவில்லை. தேர்வில் அந்த சிக்கிய எழுத்தில்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதை வெளியில் வந்து சொன்ன பிறகு யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு மேல்நிலை தேர்வுக்குப் படித்ததாக நினைவில்லை. கீழ்நிலை அல்லது லோயர் தேர்வில் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் அடிக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கிடைக்கும். மேல்நிலை தேர்வு எழுதினால் 45 சொற்கள் அடிக்கும் தேர்ச்சி வந்திருக்க வேண்டும்.

இது ஆங்கிலத்தில், எந்திரத் தட்டச்சுக் கருவியில். ஆங்கிலத்தில் கணினியில் இதை விட கணிசமான அளவு அதிக வேகத்தில் அடித்திருக்க முடியும். அப்படி கணிசமான அளவு அடிக்க வேண்டிய வாய்ப்பு கணினியில் ஏற்படவே இல்லை. அலுவலகத்தில் சிறு சிறு கடிதங்கள், பெரும்பாலும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி விடக் கூடியவை அடிக்க வேண்டியிருந்தது.

டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கு விற்பனைப் பிரிவில் இருந்த கணினியில் இந்த கடிதங்கள் அடிக்கும் வேலை கூட எனக்குக் கிடைக்கவில்லை. நிறுவன மென்பொருளுக்கான சர்வருக்கான முனையத்தில் தரவு உள்ளிடும் சிறு சிறு வேலைகள் செய்தேன். லோட்டஸ் 1,2,3 பயன்பாட்டைப் பயன்படுத்தவும் செய்தேன்.

கடிதங்கள் அடிப்பதற்கு முன்னாள் தட்டச்சு எழுத்தர் பெண்மணி இருந்தார். வேகமாக தரவு உள்ளிடுவதற்கு கணினி துறையிலேயே ஓரிருவர் இருந்தார்கள். விற்பனைக்குப் பொதிந்து தயாராகும் தோல்களைப் பற்றிய  அளவைகளை உள்ளிடும் போது அவர்கள் விரல்கள் நம்புவதற்கு அரிதான வேகத்தில் நடனமாடி முடித்து விடும். அவர்கள் நியூமரிக் பேட் எனப்பட்ட எண் பட்டியை மட்டும் பயன்படுத்துவார்கள். அவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தட்டுத் தடுமாறிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த தலைமுறை கணினியாக விண்டோசு 95 போட்டு ஒரு கணினி வந்தது. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் பிரிவுக்கான கையேடு தயாரிக்கும் பணி எனக்கு வந்தது. அந்தக் கணினி மிகவும் மெதுவாக இயங்கும். ஒரு பக்கம் அடிப்பதற்கு ஒரு மணி நேரம்  வரை கூட பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். மைக்ரோசாப்டு வேர்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஆன நேரம் ஒரு பக்கம், விண்டோஸ் 95க்குத் தேவையான நினைவகம், செயலகம் இல்லாததாலும் கணினி தள்ளாடியிருக்கலாம். எப்படியோ, சில நூறு பக்கங்களுக்கு வரும் அந்த மேனுவலை அடித்துத் திருத்தி மாற்றி முடிப்பதற்கு பல இரவுகள் வேலை செய்திருந்தேன். கணினியில் தட்டச்சுவதிலும், கணினி பயன்படுத்துவதிலும் சரளமான வேகம் வந்து விட்டிருந்தது.

இப்போதும் எண் பட்டியில் எண்களை உள்ளிடுவதில் தோல் பொதியும் பிரிவில் இருப்பவருடன் ஒப்பிடும் அளவு கூட தேர்ச்சி வந்ததில்லை.
(அதே போல உற்பத்தி தளத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியதேயில்லை. மேலாளர்கள் அப்படி தொழிலாளர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்க்க ஊக்குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இதற்கு முன்பு அது போன்று இயந்திரங்களை இயக்கித் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றி உயர்வாக பாராட்டியும் சொல்வார்கள்.

எளிதாக இயங்கும் எல்லா வேலைகளையும் என் கைப்பட செய்திருக்கிறேன். வேகமாக நகரும் பட்டியின் கீழ் லாவகமாக தோலை நுழைத்து மெருகூட்டும் பணியில் கடைசி வரை கை வைக்கவில்லை. கொஞ்சம் தவறு செய்தால் கை விரல்கள் நசுங்கி விடும் அபாயம், அப்படி நசுங்கா விட்டாலும் அந்த வேகமாக நகரும் கரத்தைப் பார்க்கும் போதே பயம் ஏற்பட்டு விடும். அதையும் கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. )

அதன் பிறகு ஷாங்காயில் கணினி வாங்கிய பிறகு நிறைய தட்டச்சி பழகினேன். முரசு அஞ்சல் மூலம் தமிங்கில தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டேன். தமிழ் 99 விசைப்பலகைக்கு முன்பே இதைக் கற்றுக் கொண்டதால் என்னை பிற்போக்கு வாதி என்று கருத முடியாது. தமிழ் 99 வந்த பிறகு சுமார் 8 ஆண்டுகள் அதிலேயே பழகியதை வேண்டுமானால் தாமதம் சொல்லலாம். ஆனால், கணினி நுட்பங்களில் புதிய தகுதரங்கள் நடைமுறைக்கு வருவதிலும் கணிசமான நேரம் பிடிக்கத்தான் செய்கின்றன.

தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும். எழுத்துருக்களுக்கான தகுதரம் தனி, விசைப்பலகைகளுக்கான தகுதரம் தனி. எழுத்துருக்களுக்கு டிஸ்கி, டேப், யூனிகோடு என்று தகுதரங்கள். விசைப்பலகைக்கான தகுதரங்கள் எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று வரையறுப்பவை.

கணினிக்கு முன்பே தமிழ் தட்டச்சு முறைக்கான தகுதரம் ஒன்று இருந்தது. நான் அதைக் கற்றுக் கொண்டதில்லை, அது யளனகப என்று வரும் என்று நினைவு. அதில் பழகியவர்கள் அப்படியே கணினியிலும் பயன்படுத்தும்படி மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.

அப்படி தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்காக உருவானதுதான் அஞ்சல் அல்லது phonetic முறை. இதில் தமிங்கில எழுத்துக் கூட்டல் முறையில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடலாம். ammaa என்று அடித்தால் அம்மா என்று புரிந்து கொள்ளும் விசைப் பலகை தகுதரங்கள் உருவாயின. இவற்றில் சிறு சிறு மாறுதல்களுடன் பல வகைகள் கிடைத்தன.

ந என்ற எழுத்துக்கு எந்த விசை, ண அடிப்பது எப்படி, நெடிலுக்கான முறை, ஒற்றெழுத்துக்களை உள்ளிடுதல், இரட்டை எழுத்துக்களை உள்ளிடுத்தல் என்று பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது.

இந்த தொந்தரவு எதுவும் இல்லாமல், தமிழுக்கு இயல்பான விசைப்பலகை வடிவமைப்புதான் தமிழ்99. தமிழ் 99 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒரு மனதாக எல்லோராலும் பாராட்டப்படுவது. ஆங்கில தட்டச்சு அறிமுகம் இல்லாதவர்கள்,  முதல் முறை கணினியில் தமிழ் தட்டச்சுக் கற்றுக் கொள்பவர்கள் இதைத்தான் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் வேகமாக தட்டச்சுபவர்களும் தமிழில் எழுத இதைக் கற்றுக் கொள்வது அவசியம். தமிழில் நிறைய எழுதும் போது மிக உதவியாக இருக்கும்.

நான் சுமார் 2007 வாக்கில் தமிழ் 99 எழுதப் பழகிக் கொண்டேன். சுமார் 6 மாதங்களில் தமிங்கில முறையில் இருந்த வேகத்தை எட்டிப் பிடித்து விட்டேன். தமிங்கிலத்தில் எவ்வளவு வேகமாக எடுத்தாலும் நிமிடத்துக்கு 25 சொற்கள் என்ற வேகத்தைத் தாண்ட முடிந்ததில்லை. அந்த முறையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆதாயம் இருந்தாலும், பல எழுத்துக்களுக்கு 3 விசைகளை அழுத்த  வேண்டியிருந்தது. ணி என்று அடிப்பதற்கு shift-n+i அடிக்க வேண்டும்.

தமிழ் 99 தட்டச்சு முறை தமிழின் 30 அடிப்படை எழுத்துக்களுக்கு இடம் ஒதுக்கியது. இந்த 30 எழுத்துக்களையும் ஒரே விசை அழுத்துவதன் மூலம் அடிக்கலாம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களைப் பெற 'ணி' என்று அடிக்க ண்+இ என்று இரண்டு விசைகள் அடித்தால் போதும். ஒரு சராசரி தமிழ் உரையை எடுத்துக் கொண்டால் இது வேலையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து விடும். குறைந்த முயற்சியில் வேலையை முடித்து விடலாம்.

இப்போது தமிழ் 99 முறையில் தட்டடச்சும் போது வேகம் நிமிடத்துக்கு 30 சொற்களுக்குக் குறையாமல் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து தட்டச்சுவதை இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 1800 முதல் 1900 சொற்கள் வரை அடித்து விடலாம்.

இதே போன்று ஆங்கில உரைகளையும் அடித்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளிட்டுப் பழக வேண்டும். மதுரைத் திட்டத்தின் கீழ் மனோன்மணியம் நூலை டிஸ்கி எழுத்துருவில் தமிங்கில தட்டச்சு முறையில் உள்ளிட்டுக் கொடுத்திருக்கிறேன். அது போன்ற திட்டம் ஏதாவதில் இப்போது செய்து பார்க்கலாம். அதே போன்று ஆங்கில நூல் உள்ளிடலையும் project gutenberg போன்ற தளங்களுக்காக செய்து பார்க்கலாம்.

புத்தகத்தைப் பார்த்து அடிப்பதில் தன்னிச்சையாக அடிப்பதை விட வேகம் குறையலாம் அல்லது கூடலாம். தன்னிச்சையாக அடிக்கும் போது மனதில் தோன்றும் வாக்கியங்களை மூளைக்குள்ளாகவே எழுத்துக்கான விசைப்பலகை அழுத்துவதற்கான கட்டளையாக மாறி விடுகிறது. புத்தகத்தைப் பார்த்து அடிக்கும் போது கண்கள் எழுத்துக்களைப் படித்து மூளைக்கு அனுப்பி, அதை விசைக்கான கட்டளையாக மாற்ற வேண்டியிருக்கும். முதல் வேலையில் சிந்தனைக்கான நேரம் அதிகம், இரண்டாவது முறையில் எழுத்த பார்த்து உள்ளுணரும் நேரம் அதிகம். எழுத்து->விசை மாற்றத்துக்கான நேரம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

1. தானாக எழுதுவது = மூளையில் சொல் தோன்றுதல்+மூளைக்குள் எழுத்து + எழுத்து->விசை மாற்றம்
2. புத்தகத்தைப் பார்த்து எழுதுவது = கண்கள் உரையைப் பார்த்தல்+மூளையில் சொல் எடுத்துக் கொள்ளுதல்+எழுத்து->விசை மாற்றம்.

சிந்திப்பதை விட வாசிப்பதுதான் அதிகம் செய்திருக்கிறோம் (??). அதனால் இரண்டாவதன் வேகம்தான் அதிகமாக இருக்க வேண்டும். கண்கள் மூளைக்கு எழுத்துக்களை கடத்தும் வேகம், நாம் சிந்தித்து வாக்கியம் உருவாக்குவதை விட  பல மடங்கு அதிக வேகத்தில்தான் இருக்க வேண்டும். முயற்சித்துப் பரிசீலனை செய்து பார்த்தால்தான் தெரியும் உண்மை நிலவரம்.

புதன், ஜனவரி 18, 2012

தரும சிந்தனை


ஆலிவர் டுவிஸ்டு என்ற நாவலில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும் புகழ் பெற்ற "I want some more" என்ற காட்சி. கதை நடப்பது தொழிற்புரட்சிக்குப் பிறகான இங்கிலாந்தில். 'ஏழைகள் சட்டத்தின்' கீழ் திக்கற்றவர்கள் பராமரிக்கப்பட்ட காலம் அது.

========
அனாதையான ஆலிவர் டுவிஸ்டை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்மணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அதன் படி ஒரு குழந்தை எவ்வளவு குறைந்த அளவு உணவில் உயிர் வாழ முடியுமோ அது வரை உணவு அளவு குறைக்கப்படும்.  அதற்குள் குழந்தை பலவீனத்தாலோ, குளிரினாலோ இறந்து விடும் அல்லது கவனக்குறைவால் தீயில் விழுந்து உயிரை விட்டு விடும்.

இந்தச் சூழலில் வளர்ந்த ஆலிவர் டுவிஸ்ட் 9வது பிறந்த நாளில் வெளிறிப் போன தோலோடு குறுகிப் போன வடிவத்தில், நோஞ்சானாக இருந்தான்.

நாட்டில் அனாதைகளை பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினரான திரு பம்பிள் அன்று விடுதிக்கு வந்தார். இது போன்ற அனாதைகளுக்கான இல்லங்களை ஏழை மக்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று அந்த வாரிய உறுப்பினர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.

'காசு கொடுக்கத் தேவையில்லாத உணவு விடுதி -  பொதுச் செலவில் காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு என்று சொகுசாக வாழலாம். தூங்குவதற்கு உறுதியான ஒரு கூரை - வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.' என்று ஏழை குழந்தைகள் இந்த இல்லங்களை விரும்புவதாக மோப்பம் பிடித்து விட்ட ஆணைய உறுப்பினர்கள் "நாமதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். உடனடியாக அதைச் செய்வோம்" ஒரு விதியை ஏற்படுத்தினார்கள்.

'அனாதை இல்லத்தில் படிப்படியாக பட்டினியில் சாவது அல்லது வெளியில் போய் முழுப்பட்டினியாக உடனடியாக சாவது' இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிவு செய்தார்கள். குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கணக்கில்லாத அளவு தண்ணீரை பெறுவதற்கும், சோள தொழிற்சாலையிலிருந்து படிப்படியாக குறைவான அளவு ஓட்மீல் பெறுவதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

இவற்றை வைத்து நாளைக்கு மூன்று வேளையும் நிறைய தண்ணீர் சேர்த்த கஞ்சி ஊற்றினார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை வெங்காயம் வழங்கப்பட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் அரைத் துண்டு அப்பம் கூடுதலாக வழங்கப்பட்டது.

பையன்களுக்கு உணவு கொடுக்கப்படும் அறை கல்லால் கட்டப்பட்ட ஒரு முனையில் செம்பு பதிக்கப்பட்ட பெரிய ஹால். செம்பு பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சீருடை அணிந்த மாஸ்டர் ஓரிரு பெண் உதவியாளர்களோடு  சாப்பாட்டு வேளைகளில் கஞ்சியை அகப்பையில் எடுத்து ஊற்றுவார். இந்த விருந்துணவில் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு அகப்பை மட்டும் கிடைத்தது, முக்கியமான திருவிழா நாட்களில் மட்டும் 65 கிராம் ரொட்டியும் கிடைக்கும்.

கஞ்சி கிண்ணங்களை கழுவ வேண்டிய தேவையே வந்ததில்லை. பையன்கள் தமது கரண்டிகளால் அவை பளபளக்கும் வரை சுரண்டி சுத்தம் செய்து விடுவார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விரிந்த கண்களுடன் செம்பு பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தமது விரல்களை நக்கி அதில் தவறி சிதறியிருக்கக் கூடிய துளிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

பொதுவாக பையன்களுக்கு பசி அதிகம். ஆலிவர் டுவிஸ்டும் அவனது சேக்காளிகளும் மூன்று மாதங்கள் இந்த சிறுகக் கொல்லும் பட்டினியை அனுபவித்தார்கள். கடைசியில் அவர்கள் பசியில் வெறி பிடித்தவர்களாக ஆனார்கள். இது போன்ற பட்டினிக்குப் பழக்கம் இல்லாத ஒரு நெட்டையான பையன், 'இன்னொரு கிண்ணம் கஞ்சி கிடைக்கா விட்டால் அன்று இரவு அவனுக்குப் பக்கத்தில் தூங்கும் பையனை தின்று விட'ப் போவதாக குறிப்பால் உணர்த்தினான்.

பையன்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை யார் மாஸ்டரிடம் போய் கூடுதல் கஞ்சி கேட்பது என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பொறுப்பு ஆலிவர் டுவிஸ்டின் மீது விழுந்தது.

அன்று மாலை மாஸ்டர் சமையல்கார சீருடையில் பாத்திரத்தின் அருகில் நின்று கஞ்சியை பரிமாறினார். பிரார்த்தனை சொல்லப்பட்டது. பையன்களின் முன்பிருந்த கஞ்சி சில நிமிடங்களில் மறைந்தது. பையன்கள் ஆலிவருக்குக்  கண் சாடை காட்டினார்கள், குழந்தையாக இருந்தாலும் பசியின் களைப்பிலும், துயரத்தின் தைரியத்திலும், தனது இடத்திலிருந்து எழுந்த ஆலிவர் டுவிஸ்ட் மாஸ்டருக்கு அருகில் போய்

"சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும் சார், பிளீஸ்" என்றான்.

குண்டான ஆரோக்கியமான மாஸ்டர் வெளிறிப் போனார். அந்த சிறு போராளியை வியப்புடன் சில விநாடிகள் முறைத்துப் பார்த்தார். அதற்குப் பிறகு தாங்கலாக கஞ்சி பாத்திரத்தை பிடித்துக் கொண்டார்.

"என்ன!"

"பிளீஸ் சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்,"

கையிலிருந்த அகப்பையால் ஆலிவரின் தலையில் ஒரு அடி வைத்து விட்டு அவனது கைகளை முறுக்கி கூச்சல் இட்டார் மாஸ்டர்.
----
வாரியத்தின் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அறைக்குள் பம்பிள் பரபரப்பாக ஓடி வந்தார். உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதரைப் பார்த்து

"மிஸ்டர் லிம்ப்கின்ஸ், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், சார்!. ஆலிவர் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கிறான்!"

ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சி அலைகள் பரவி பெரும் பயம் தெரிந்தது.

"இன்னும் கொஞ்சமா! நிதானப்படுத்திக் கொண்டு தெளிவாக பதில் சொல்லுங்கள் பம்பிள். உணவு குழு ஒதுக்கிய இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவன் இன்னும் கொஞ்சம் கேட்டான் என்றா சொல்கிறீர்கள்?" என்றார் மிஸ்டர் லிம்ப்கின்ஸ்.

"அப்படித்தான் கேட்டான், சார்," என்று பதில் சொன்னார் பம்பிள்.

"அந்த பையன் தூக்கில் தொங்குவான், இந்தப் பையன் தூக்கில் தொங்கத்தான் போகிறான் என்று எனக்குத் தெரிகிறது" வெள்ளை கோட்டு போட்ட பெரிய மனிதர் சொன்னார்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012


13ம் தேதி ;

ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் (上海地建) என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.

வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.

போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.

இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.

5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.

1。 விஜயபாரதம் கடையில் ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன்.  இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.

விருபா.காம் என்று கடை இருந்தது.  கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000  புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.

'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார். கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.

நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.

பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை.  'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.

பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.

ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.

F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.

2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது கிஷன்ஜி பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.

காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.

அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.

கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.

3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் ஐடி துறை நண்பா என்ற புத்தகத்தையும் ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.

5. ஆழி பதிப்பகம்  ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள்.  ஆம்பூர் பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.

ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.

தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.

அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.

தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன். உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.

உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது.  அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார்.  'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.

அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.

அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.

சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.

சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.

6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் The New Industrial State என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.

அடுத்த நாள் - 14ம் தேதி:

புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன்.  இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம்.  இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.

'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.

'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'

'ஆமா  பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்'

'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'

'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.

7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் A History of Capitalism என்று  மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.

8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர் என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், முரண்பாடு பற்றி மாசேதுங் வாங்கினேன். போராடும் தருணங்கள் இன்னொரு பிரதி.

காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.

12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க  தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். லூர்தம்மாள் சைமன் பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.

13. பாவை பதிப்பகத்தில் Mathematics Can be fun என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.

14. கீழைக்காற்றில் அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.

15. டிஸ்கவரி கடையில் சாமியாட்டம் வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.

சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.

திங்கள், ஜனவரி 09, 2012

பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் (2)


(ஜரன் திரசன்னா பதிவிலிருந்து)

குரவிந்தன் காலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் உழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

அறிவியல் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. அறிவியலின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. விஞ்ஞானிகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.


நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டைன் என்று தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக விஞ்ஞானிகளை வேட்டையாடினார்கள்? ராபர்ட் ஹூக்கும் (Robert Hooke),  ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌசும் (George Westinghouse) என்ன ஆனார்கள்? ஸ்டீபன் ஹாகிங் உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஐன்ஸ்டைன், நியூட்டனை எப்படி எதிர்கொண்டார்? அறிவியல் உண்மையிலேயே முன்னேற்ற வழிதானா? தகவல்கள் அடிப்படையில் உண்மையைக் கண்டறிதல், சக விஞ்ஞானிகளின் கருத்துக்களை விமர்சனம் செய்தல், தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் என்பதெல்லாம் வேத காலத்துக்கு முன்பே அறிவியிலில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.


அறிவியல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் அறிவியல் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? அமெரிக்காவில் அப்துல் கலாமுக்கு என்ன ஆனது? பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.


வெறும் வாய்ப்பந்தல் போடாமல், அறிவியலின் பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் குரவிந்தன் காலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், அறிவியல் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை விஞ்ஞானி என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே அறிவியலுக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

அறிவியலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி விஞ்ஞானிகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி விஞ்ஞானிகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

குரவிந்தன் காலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் அறிவியல் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலக விஞ்ஞானிகள்.

எடிசன், வெஸ்டிங்ஹௌசுக்கு இடையே நடக்கும் போட்டி, எடிசனைப் பார்த்து வெஸ்டிங்ஹௌசே அதிர்ந்து போவது, ஏன் நியூட்டன் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

விஞ்ஞானிகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் விஞ்ஞானிகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் ஐன்ஸ்டைனின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். ஐன்ஸ்டைன் புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக விஞ்ஞானிகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக விஞ்ஞானிகள் வெஸ்டிங்ஹௌசையும், ஐன்ஸ்டைனையும் அறிஞர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் அறிவியல் மயம்.

இந்திய விஞ்ஞானிகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல அமெரிக்காவில்  அப்துல் கலாம் பற்றிய அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. ஸ்டீபன் ஹாகிங் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! ஐன்ஸ்டைனின்  அத்தியாயமோ கிளுகிளு. மூடப் பழக்கங்களுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. விஞ்ஞானிகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் அறிவியல் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. சுயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில் சுயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது குரவிந்தனின் காலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் குரவிந்தன் காலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் அறிவியல் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். அறிவியலின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (உழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

விஞ்ஞானிகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, குரவிந்தன் காலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. scientific americanல்  ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி விஞ்ஞானிகள் கீதையே கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு பிரசங்க  மேடைகளில் பேசும் சாமியார்களுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச விஞ்ஞானிகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் விஞ்ஞானியென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

அறிவியல் ஒழிக.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உழக்கு அரங்கில் கிடைக்கும்)

ஜரன் திரசன்னா

சனி, ஜனவரி 07, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு - அறிவியல்

பஞ்சம், படுகொலை, பேரழிவு : அறிவியல் என்ற புத்தகத்தில் குரவிந்தன் காலகண்டன், அறிவியல் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். சர் ஐசக் நியூட்டனில் தொடங்கி, ஐன்ஸ்டைன் வழியாக, இன்று வரை அறிவியல் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம்: ஆனாலும் ஏன் பல அறிவாளி மூளைகளை அறிவியல் வசீகரிக்கிறது. உண்மைகளை பரிசீலனை மூலம் தெரிந்து கொள்வதையும், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள்தானே அறிவியலால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால், அதன் பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் குரவிந்தன் விளக்குகிறார்.

-- கத்ரி காஷாத்ரியின் பதிவிலிருந்து

புதன், ஜனவரி 04, 2012

கண்ணில் விழுந்தவை


1. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - சர் வெங்கி ஆகிறார்.
2012 புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரச விருதுகள் பட்டியலில் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நோபல் பரிசு கிடைத்த நேரத்தில் இந்தியர் என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார்கள், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்.

2. என் ஆர் நாராயண மூர்த்தி பேட்டி

"டிசம்பர் 29 மிகவும் மோசமான நாள். முதலாவதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.9 கோடி மக்கள் தொகையுடைய நாட்டின் அணியைத் தோற்கடிக்க 11 பேர் இல்லையே என்று வேதனையாக இருந்தது."

3. லோக்பால் பில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது - காங்கிரசு.

1968லிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பேச்சு இன்று வேறு பேச்சு என்ற கெட்ட பழக்கமே கிடையாது. 2041லும் இதையே சொல்வார்கள்.

4. இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நபர்களும் முதலீடு செய்யலாம்.
பிரதமருக்கு எப்படியாவது வெளிநாட்டுப் பணம் வந்தா சரிதான். சில்லறை வணிகத்தில் முதலீடு இல்லை என்றால் பங்குச் சந்தை வழியாகவாவது வந்து நிறையட்டும்.

என்ன இருந்தாலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம்?

5. 2012ல் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நிபுணர்கள் குழு.

6. மோனோ ரயில் ஒப்பந்த புள்ளி தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.

7. வேலூர் மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை.

8. இந்திய நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வெளிநாடுகளைத் தேடுகின்றன.
இந்தியாவில் வளர்ச்சி வீதம் குறைவதால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்காது என்று வெளி வாய்ப்புகளைத் தேடுகின்றன இந்திய நிறுவனங்கள்.

9. கிரிக்கெட் நேர்முக வர்ணனையை ஒலிபரப்பாத கோவை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட  10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கண்ணில் விழுந்தவை


1. சச் கே சாம்னா என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப் போகிறார்களாம்.

இது வரை 'மாமனார் மீது ஆசை வந்ததுண்டா' போன்ற கேள்விகளை கேட்டு சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தவர்கள்  இனிமேல் 'லஞ்சம் வாங்கியதுண்டா' போன்ற கேள்விகளைக் கேட்டு சமூகத்தை தூய்மை செய்யப் போகிறார்களாம்.

செய்தி அறிக்கை

2. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் பெர்பார்மன்ஸ் காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

நிறுவனத்தின் லாப வளர்ச்சியை குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லையாம்.

பிரிட்டானியாவின் லாபம் அதிகரிக்க இருக்கிறது

3.  பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் II அரியணை ஏறி 60 ஆண்டுகள் ஆகி விட்டது.

அவரது மகன் சார்லஸ், திண்ணை எப்போ காலியாகும் என்று  காத்திருக்கிறார், கிழவி விட்டுத் தர மாட்டேன் என்கிறார். இதற்கிடையில் பேரன் வில்லியம் வேறு வரிசையில் வந்து விட்டான்.

எலிசபத் ராணியின் மணிவிழா

4. சோனி சோரி என்ற சத்திஸ்கர் சமூக ஆர்வலர், சித்திரவதை செய்யக் கூடாது என்று நீதி மன்றங்கள் உறுதி வாங்கிக் கொண்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த முறை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்து வர முடியாமல் போலீஸ் வேனுக்குள்ளாகவே வருகை பதிவு எடுக்க வேண்டியிருந்ததாம்.

மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான சித்தரவதைகளும் பாலியல் வன்முறைகளும் அவர் மீது நிகழ்த்தப்பட்டன  என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

தெகல்கா

5. செக்ஸ் சர்வே

அவுட்லுக் போன வார இதழில் வருடாந்திர செக்ஸ் சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். வாரா வாரம் வாங்கினாலும் இப்போது பத்திரிகையை பெயர் சொல்லிக் கேட்டதும் கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்து விட்டுத்தான் தந்தார்.

புத்தகத்தில் படங்களும் கட்டுரைகளும் ஒருமாதிரி பார்க்கும் வகையில்தான் இருந்தன.

6. சபரிமலையாக மாறும் தேனி.
சபரிமலைக்கு மாலை போட்ட பல பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையிலேயே விரதம் முடித்துத் திரும்பி விடுகிறார்களாம்.

கேரள வணிகர்களுக்கு பெறும் இழப்பு.

பக்தர்கள் இப்படியே பழகி விட்டால் சபரி மலையும் இந்திய ஒருமைப்பாடும் என்ன ஆகும்? கவலையாக இருக்கிறது.

7. லட்சக்கணக்கான பேர் வட கொரியாவில் அஞ்சலி
வடகொரியாவின் 'சர்வாதிகாரி' கிம் இல் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அழுது புலம்பி அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகியிருக்கின்றன.

பைட் பைப்பர் போல மக்களை எல்லாம் மயக்கி அழ வைத்து விட்டது போல செய்திகள் சொல்லுகிறார்கள்.

8. 'கல்லூரிகளின் நன்கொடையை ஒழிக்க வேண்டும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை வேண்டும்' என்று புகழ் பெற்ற  கல்வி வியாபாரி ஜி விஸ்வநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஐடி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அவர்தான்.

9. 1.4 லட்சம் நேனோ  கார்களில் ஸ்டார்டர் மோட்டாரை மாற்றப் போகிறது டாடா நிறுவனம். 'தரம் உயர்ந்த உதிரி பாகத்தை வாடிக்கையாளருக்குக் கொடுப்பதுதான் நோக்கம்' என்று சாதிக்கிறது.

என்ன ஒரு பெருந்தன்மை!

10. தமிழ்நாட்டில் 7800 ஏரிகள் இல்லாமல் போயின. - 20 ஆண்டுகளில்

11. 2012ல் உலகம் அழியாது என்று பல சோதிடர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.

நிம்மதியாக இருக்கிறது!

12. 100 பில்லியன் (10,000 கோடி  முறை ராமநாமம் எழுதுவது) ராமநாம யக்ஞம் நடத்தியிருக்கிறார்கள்.

கலியுகத்தின் அநியாயங்களை எதிர் கொள்ள வேறு என்னதான் வழி!

13. திருமண விழாக்களுக்கு காப்பீடு செய்யும் வசதி வந்துள்ளது. மழையின் காரணமாகவோ, மணமகன்(ள்) வேறு துணைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விட்டதாலோ, பொது வேலைநிறுத்தத்தின் காரணமாகவோ திருமணம் நின்று விட்டால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு கொடுத்து விடும்.

இது வரை யாரும் ஏன் இப்படி யோசிக்கவில்லை?!


14. கட்டுப்படியாகும் மருத்துவ சேவை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு பிரதம மந்திரி கோரிக்கை விடுத்தார். - காரைக்குடி வாசன் ஐ கேர் நிகழ்ச்சியில் இப்படி பேசியிருக்கிறார்.

இப்பதான் கடமையை ஒழுங்கா செய்கிறார். சபாஷ், கீப் இட் அப்!

15. அம்பானி சகோதரர்கள் மூதாதையர் ஊருக்கு ஒரே நாளில் போனார்களாம்.

16. KG-D6 உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிந்து 2012 ஆரம்பிக்கும் போது முதலிடத்தை இழந்து விட்டது.

17. எல்ஏ ராம் - சீனா போய் வந்த அனுபவங்கள்.
அமெரிக்காவில் எத்தனை வருஷம் இருந்தாலும், சீனாவுக்கே சுற்றுலா போனாலும் தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறாரே!

கொழிக்கிறது சீனா