13ம் தேதி ;
ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் (上海地建) என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.
வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.
போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.
இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.
5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.
1。 விஜயபாரதம் கடையில் ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன். இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.
விருபா.காம் என்று கடை இருந்தது. கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000 புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.
'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார். கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.
நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.
பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை. 'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.
பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.
ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.
F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.
2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது கிஷன்ஜி பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.
காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.
அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.
கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.
3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் ஐடி துறை நண்பா என்ற புத்தகத்தையும் ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.
5. ஆழி பதிப்பகம் ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள். ஆம்பூர் பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.
ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.
தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.
அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.
தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன். உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.
உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது. அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.
சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார். 'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.
அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.
அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.
சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.
சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.
6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் The New Industrial State என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.
அடுத்த நாள் - 14ம் தேதி:
புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன். இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம். இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.
'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.
'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'
'ஆமா பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்'
'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'
'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.
7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் A History of Capitalism என்று மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.
8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர் என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், முரண்பாடு பற்றி மாசேதுங் வாங்கினேன். போராடும் தருணங்கள் இன்னொரு பிரதி.
காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.
12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். லூர்தம்மாள் சைமன் பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.
நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.
13. பாவை பதிப்பகத்தில் Mathematics Can be fun என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.
14. கீழைக்காற்றில் அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.
15. டிஸ்கவரி கடையில் சாமியாட்டம் வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.
சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.
11 கருத்துகள்:
நாட்டுடமையாக்கபட்டு விட்டதால்.. சு. சமுத்திரத்தின் நூல்களை பலரும் பதிப்பித்திருந்ததை பார்த்தேன் அண்ணே. ஆனா.. ராயல்டி கொடுக்கத் தேவை இல்லாத இந்த மாதிரி நூல்களைக்கூட அதிக விலைக்குத்தான் வெளியிடுகிறார்கள் என்பதே வேதனை. :((
கூடுதல் தகவல்: செண்பகா பதிப்பகம்/சீதைப் பதிப்பகம் ஸ்டாலில் நாட்டுடமையாக்கப்பட்ட பலரின் நூல்களும் நல்ல சலுகையில் கிடைக்கிறது.
தகவலுக்கு நன்றி பாலா.
அந்த நண்பர், 'நாட்டுடமை ஆவது வரை சம்பாதித்த பதிப்பகங்கள் இப்போது புத்தகம் போடுவதில்லை' என்று திட்டிக் கொண்டிருந்தார். அவர் சு சமுத்திரத்தின் தீவிர ரசிகர்.
நேற்று நானும் அங்கு தான் இருந்தேன்... பதிவு 'செம' :))
மாசி,
வணக்கம், நலமா, கண்டு நாட்கள் ஆயிற்று. ஒரு தளத்தில் உங்கல் பின்னூட்டுகள் பார்த்தேன் , ஆகா மாசி இன்னும் வேதாளம் வேட்டை ஆடிக்கொண்டிருக்கிறாரே என நினைத்தேன். திரட்டிகளில் காணோமே எனப்பார்த்தேன் , இப்போ மாட்டிடுச்சு.
புத்தக சந்தை அனுபவங்களை நல்லா சொல்லி இருக்கிங்க,வாங்கிய நூல்களும் வித்தியசமாக இருக்கு.
இஸ்கோன் ஆசாமிய சரியா காலாச்சிடிங்களே. நீங்க கூட இந்த வேலை எல்லாம் பார்ப்பிங்களா? :-))
// ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.//
ஹி..ஹி யாரும் சீண்டிக்கூட பார்க்கவில்லைனு ஊம உள் குத்தாக சொல்றிங்களா?
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
ஏறக்குறைய நேரடி வர்ணனனை போலத்தான் இருக்கிறது. பெரும்பாலான புத்தகங்களின் விலைக்கும் உள்ளே உள்ள சமாச்சாரத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். சென்ற வருடம் விற்காத புத்தகங்களை ஒருவர் அடிக்கி அதன் மேல் புதிய விலைகளை ஒட்டிக் கொண்டு இருந்தார். ஒரு வருடத்தில் 75 ரூபாய் வித்தியாசம்.
பொத்திக் கொண்டு பல கடைகளை வேடிக்கை பார்க்கலாம். அவ்வளவு தான்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வணக்கம் காலப்பறவை,
பெயரைப் பார்த்து யாரோ என்று நினைத்தேன். புகைப்படத்தில்தான் தெரிகிறது :-).
தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம்.
வணக்கம் வவ்வால்,
அந்த கலாய்த்தல் சேர்ந்து போன நண்பரின் வேலை, நான் அவருக்கு பக்க வாத்தியம் மட்டும்தான் :-)
வாங்கிய புத்தகங்களை முழுதும் படிப்பதுதான் முக்கியமான வேலை. வாங்குவது சீக்கிரம் நடந்து விடுகிறது!
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!
நன்றி ஜோதிஜி,
புத்தகங்களை பண்டங்களாக கருதி விலை ஒப்பிடத் தேவையில்லை. ஆனாலும், விலைகள் கணிசமாகவே ஏறி விட்டிருக்கின்றன. 30 ரூபாய் என்ற பழைய விலையின் மீது 100 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டிய புத்தகத்தை நான் பார்த்தேன்.
சொன்னது போல வாங்கிய புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது முக்கிய வேலை :-)
நன்றி கருணாகரசு, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக