புதன், ஜனவரி 18, 2012

தரும சிந்தனை


ஆலிவர் டுவிஸ்டு என்ற நாவலில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும் புகழ் பெற்ற "I want some more" என்ற காட்சி. கதை நடப்பது தொழிற்புரட்சிக்குப் பிறகான இங்கிலாந்தில். 'ஏழைகள் சட்டத்தின்' கீழ் திக்கற்றவர்கள் பராமரிக்கப்பட்ட காலம் அது.

========
அனாதையான ஆலிவர் டுவிஸ்டை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்மணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அதன் படி ஒரு குழந்தை எவ்வளவு குறைந்த அளவு உணவில் உயிர் வாழ முடியுமோ அது வரை உணவு அளவு குறைக்கப்படும்.  அதற்குள் குழந்தை பலவீனத்தாலோ, குளிரினாலோ இறந்து விடும் அல்லது கவனக்குறைவால் தீயில் விழுந்து உயிரை விட்டு விடும்.

இந்தச் சூழலில் வளர்ந்த ஆலிவர் டுவிஸ்ட் 9வது பிறந்த நாளில் வெளிறிப் போன தோலோடு குறுகிப் போன வடிவத்தில், நோஞ்சானாக இருந்தான்.

நாட்டில் அனாதைகளை பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினரான திரு பம்பிள் அன்று விடுதிக்கு வந்தார். இது போன்ற அனாதைகளுக்கான இல்லங்களை ஏழை மக்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று அந்த வாரிய உறுப்பினர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.

'காசு கொடுக்கத் தேவையில்லாத உணவு விடுதி -  பொதுச் செலவில் காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு என்று சொகுசாக வாழலாம். தூங்குவதற்கு உறுதியான ஒரு கூரை - வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.' என்று ஏழை குழந்தைகள் இந்த இல்லங்களை விரும்புவதாக மோப்பம் பிடித்து விட்ட ஆணைய உறுப்பினர்கள் "நாமதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். உடனடியாக அதைச் செய்வோம்" ஒரு விதியை ஏற்படுத்தினார்கள்.

'அனாதை இல்லத்தில் படிப்படியாக பட்டினியில் சாவது அல்லது வெளியில் போய் முழுப்பட்டினியாக உடனடியாக சாவது' இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிவு செய்தார்கள். குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கணக்கில்லாத அளவு தண்ணீரை பெறுவதற்கும், சோள தொழிற்சாலையிலிருந்து படிப்படியாக குறைவான அளவு ஓட்மீல் பெறுவதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

இவற்றை வைத்து நாளைக்கு மூன்று வேளையும் நிறைய தண்ணீர் சேர்த்த கஞ்சி ஊற்றினார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை வெங்காயம் வழங்கப்பட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் அரைத் துண்டு அப்பம் கூடுதலாக வழங்கப்பட்டது.

பையன்களுக்கு உணவு கொடுக்கப்படும் அறை கல்லால் கட்டப்பட்ட ஒரு முனையில் செம்பு பதிக்கப்பட்ட பெரிய ஹால். செம்பு பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சீருடை அணிந்த மாஸ்டர் ஓரிரு பெண் உதவியாளர்களோடு  சாப்பாட்டு வேளைகளில் கஞ்சியை அகப்பையில் எடுத்து ஊற்றுவார். இந்த விருந்துணவில் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு அகப்பை மட்டும் கிடைத்தது, முக்கியமான திருவிழா நாட்களில் மட்டும் 65 கிராம் ரொட்டியும் கிடைக்கும்.

கஞ்சி கிண்ணங்களை கழுவ வேண்டிய தேவையே வந்ததில்லை. பையன்கள் தமது கரண்டிகளால் அவை பளபளக்கும் வரை சுரண்டி சுத்தம் செய்து விடுவார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விரிந்த கண்களுடன் செம்பு பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தமது விரல்களை நக்கி அதில் தவறி சிதறியிருக்கக் கூடிய துளிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

பொதுவாக பையன்களுக்கு பசி அதிகம். ஆலிவர் டுவிஸ்டும் அவனது சேக்காளிகளும் மூன்று மாதங்கள் இந்த சிறுகக் கொல்லும் பட்டினியை அனுபவித்தார்கள். கடைசியில் அவர்கள் பசியில் வெறி பிடித்தவர்களாக ஆனார்கள். இது போன்ற பட்டினிக்குப் பழக்கம் இல்லாத ஒரு நெட்டையான பையன், 'இன்னொரு கிண்ணம் கஞ்சி கிடைக்கா விட்டால் அன்று இரவு அவனுக்குப் பக்கத்தில் தூங்கும் பையனை தின்று விட'ப் போவதாக குறிப்பால் உணர்த்தினான்.

பையன்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை யார் மாஸ்டரிடம் போய் கூடுதல் கஞ்சி கேட்பது என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பொறுப்பு ஆலிவர் டுவிஸ்டின் மீது விழுந்தது.

அன்று மாலை மாஸ்டர் சமையல்கார சீருடையில் பாத்திரத்தின் அருகில் நின்று கஞ்சியை பரிமாறினார். பிரார்த்தனை சொல்லப்பட்டது. பையன்களின் முன்பிருந்த கஞ்சி சில நிமிடங்களில் மறைந்தது. பையன்கள் ஆலிவருக்குக்  கண் சாடை காட்டினார்கள், குழந்தையாக இருந்தாலும் பசியின் களைப்பிலும், துயரத்தின் தைரியத்திலும், தனது இடத்திலிருந்து எழுந்த ஆலிவர் டுவிஸ்ட் மாஸ்டருக்கு அருகில் போய்

"சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும் சார், பிளீஸ்" என்றான்.

குண்டான ஆரோக்கியமான மாஸ்டர் வெளிறிப் போனார். அந்த சிறு போராளியை வியப்புடன் சில விநாடிகள் முறைத்துப் பார்த்தார். அதற்குப் பிறகு தாங்கலாக கஞ்சி பாத்திரத்தை பிடித்துக் கொண்டார்.

"என்ன!"

"பிளீஸ் சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்,"

கையிலிருந்த அகப்பையால் ஆலிவரின் தலையில் ஒரு அடி வைத்து விட்டு அவனது கைகளை முறுக்கி கூச்சல் இட்டார் மாஸ்டர்.
----
வாரியத்தின் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அறைக்குள் பம்பிள் பரபரப்பாக ஓடி வந்தார். உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதரைப் பார்த்து

"மிஸ்டர் லிம்ப்கின்ஸ், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், சார்!. ஆலிவர் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கிறான்!"

ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சி அலைகள் பரவி பெரும் பயம் தெரிந்தது.

"இன்னும் கொஞ்சமா! நிதானப்படுத்திக் கொண்டு தெளிவாக பதில் சொல்லுங்கள் பம்பிள். உணவு குழு ஒதுக்கிய இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவன் இன்னும் கொஞ்சம் கேட்டான் என்றா சொல்கிறீர்கள்?" என்றார் மிஸ்டர் லிம்ப்கின்ஸ்.

"அப்படித்தான் கேட்டான், சார்," என்று பதில் சொன்னார் பம்பிள்.

"அந்த பையன் தூக்கில் தொங்குவான், இந்தப் பையன் தூக்கில் தொங்கத்தான் போகிறான் என்று எனக்குத் தெரிகிறது" வெள்ளை கோட்டு போட்ட பெரிய மனிதர் சொன்னார்.