செவ்வாய், ஜூலை 11, 2006

சுகாதாரம்

பொது இடங்களில் அசுத்தம் செய்வது பற்றி காந்தி 1910, 1920 களில் எழுதியவை இன்றும் நமக்குப் பொருந்துகிறது. நாமெல்லாம் வீட்டுக்குள் மிகச் சுத்தமானவர்கள். உடலை தினமும் இரண்டு முறை குளித்து தூய்மையாக வைத்துக் கொள்வோம். ஆனால் வீட்டில் பெருக்கும் குப்பையை அழுகும் பொருட்களை வீட்டு மதிலுக்கு வெளியே தெருவில் கொட்டி விடத் தயங்க மாட்டோம்.

வலைப்பதிவில் இதைப் பற்றி எழுதுவதில் அதிகம் பொருளில்லை. வலைப்பதிவு எழுதும் வண்ணம் படித்துள்ள சிந்திக்கும் மக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் போடக் கூடாது, வாய்க்கு வந்த இடத்தில் எச்சில் துப்பும் வேலைகளைச் செய்வதில்லை என்று பார்த்திருக்கிறேன். ஆனால் இது மிகச் சிறிய ஒரு கூட்டம். பெரும்பான்மை மக்கள் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் சமூகக் கடமையை உணராமலிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தக் கடமைகளைப் புரிய வைக்க பிரச்சாரம் செய்வதால் நடந்து விடாது.

தனிமனித நடத்தையால் முன் மாதிரிகளை உருவாக்க வேண்டும். என்னளவில் சரியாக இருந்து கொள்வேன் என்று போய் விட்டால், குவியும் குப்பைகளுக்கிடையில் பெருகும் ஒழுக்கக் கேடுகளுக்கிடையே நம்முடைய ் நடத்தை் பயனற்றுப் போய் விடும்.

நகர சபை, அல்லது பஞ்சாயத்துதான் பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், என்று பரவலாக ஒரு எண்ணம் இருக்கிறது. டாடா நிறுவனத்தில் சுற்றுப் புறங்களையும் தொழிற்சாலையையும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஒரு மேலாளர், அவருக்குக் கீழ் வேலை செய்ய பத்துப் பதினைந்து வேலையாட்கள் இருந்தார்கள். அவர் சொல்வது போல "ஆயிரம் பேர் போடும் குப்பை போட்டுக் கொண்டே இருக்க பதினைந்து பேர் அதைப் பொறுக்கிக் கொண்டு இருந்தால் நம் நிறுவனம் எப்போதுமே அழுக்காகத்தான் இருக்கும்".

சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தன்னளவில் ஒரு துப்புரவுப் பணியாளராக இருக்க வேண்டும். குப்பைகளையும், கழிவுகளையும் திரட்டிச் சென்று அதைப் பதப்படுத்துவது மட்டுமே உள்ளூர் அரசுகளின் பணியாக இருக்க முடியும்.

வீட்டுக் குப்பைகளை இன வாரியாகப் பிரித்தல், குப்பை எடுத்துச் செல்லும் வண்டி வரும் வரை குப்பையை சிதறி விடாமல் வைக்க ஒரு குப்பைத் தொட்டி அல்லது வகைக்கு ஒன்றாக தொட்டிகள் இவை இரண்டுமே தனி நபர்களின், வீடுகளின் குடியிருப்புகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஒரு குப்பைத் தொட்டிக் கட்ட நகராட்சி திட்டம் போட்டு அதற்கு டெண்டர் விட்டு பணம் செலவளிக்கும் நிலை இருக்கக் கூடாது.

நமக்கு நேரடியாகப் பயன்படும் ஒன்றை நாம் எல்லோரும் சேர்ந்து ஏன் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. உண்மையான மக்களாட்சி உண்மையான தனிமனித சுதந்திரம் வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தன் கைக்கு எட்டிய வேலைகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பொது இடங்களில் துப்புவது. காரிலிருந்து துப்புகிறார்கள், நடப்பவர்களும் துப்பிக் கொள்கிறார்கள். பேருந்துக்குக் காத்திருப்பவர்களும் தாம் நிற்கும் இடத்திலேயே துப்பி விட்டு அதே இடத்தில் இன்னும் பத்து நிமிடங்களை செலவளிக்கிறார்கள். காலில் செருப்பில்லாமல் ஒரு குழந்தையைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் ஒரு தாயும் நின்று தரையில் துப்பிக் கொள்கிறார். தன் குழந்தையின் பாதங்களில் இது போல பலர் துப்பிய எச்சில் படுகிறது என்ற உணர்வு இருந்தால் அந்தத் தாய் கண்டிப்பாகத் துப்ப மாட்டார்.

மாடிப்படிகளில் சுவரில் வெற்றிலை உமிழல்கள். இந்த நிலை மாற மிகப் பெரிய மன மாற்றம் தண்ட சட்டங்கள் வர வேண்டும்.

மூன்றாவதாகக் கழிவு நீரை சாலைகளில் விடும் சிறு உணவகங்கள். பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும், கடைத்தெருக்களில் இருக்கும் சாப்பாட்டுக் கடைகளில் சரியான சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீரை வாளிகளில் சேகரித்து அவ்வபோது கடைக்கு எதிரிலியே சாலையில் கொட்டி விடுகிறார்கள். கல்லூரியில் படிக்கும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் முருகன் கடையிலும், போரூரில் இருக்கும் கணபதி ஸ்வீட்சும். கணபதி ஸ்வீட்சில் ஓடை அமைத்து கழிவு நீரை பேருந்துக்குக் காத்திருக்கும் இடத்தில் விட்டிருக்கிறார்கள். இது மிகப் பெரியக் கடை.

இந்தப் பிரச்சினைக்கு காவல் துறையும் சுகாதார துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் மீதி. பொது மக்களின் ஆதரவும் சட்டத்தின் பின்னணியும் ஏற்கனவே இருக்கின்றன. கையில் பணம் வாங்கிக் கொண்டு இத்தகைய அடாவடித்தனங்களைத் திருத்தாமல் இருக்கும் காவல் துறையும், சுகாதாரத் துறையும் கண்டிப்புக்குரியவை.

இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரத்தை அடைந்து விட வேண்டுமானால் பூமியின் சுற்றுச்சூழல் எப்படி அதன் மீது போடப்படும் சுமையைத் தாங்கும். சுற்றுச் சூழல் என்ற போர்வையில் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள் என்ற வாதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, எவ்வளவு அமெரிக்கப் பாணி முன்னேற்றம் என்ன விலையில் வர வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

6 கருத்துகள்:

VSK சொன்னது…

நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோயின்மை வேண்டுபவர். [320]

தாம் செய்த துன்பங்களெல்லாம் தம்மையே வந்து சேருமாயினின்,
துன்பம் வேண்டாதவர் எப்போதும் துன்பம் தரும் செயல்களைச் செய்ய மாட்டார்.

நல்ல நேரத்தில் நல்ல கருத்து.

இது குப்பை போடுபவர்களுக்கு மட்டுமல்ல;

குண்டு வைப்பவர்களுக்கும் பொருந்தும்!

இலவசக்கொத்தனார் சொன்னது…

பள்ளிகளில் இதனை தீவிரமாகச் சொல்லித்தர வேண்டும். ஆனால் சொல்லித் தரும் வாத்தியார் வெளியில் சென்று குப்பையை தரையில் போடுவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர் கற்றுக் கொடுப்பது விரயம்தான்.

சிறு வயதிலேயே வர வேண்டிய பழக்கமிது. ஐந்தில் விளையாதது.....

மா சிவகுமார் சொன்னது…

நன்றி எஸ் கே ஐயா,

தன் வினை சுடும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று பயங்காரவாதம் முதல் பொது இடங்கள் அசுத்தப்படுத்துவது வரை விதைத்தவர்கள் கண்டிப்பாக அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க இலவசக் கொத்தனார்,

அதேதான். படிப்பும், எழுத்தும், பிரச்சாரமும் பயன் தரப் போவதில்லை. ஒவ்வொருவடும் நடந்து காட்டுவதுடன் கொஞ்சம் கூடுதல் முயற்சியும் செய்தால்தான் இந்தப் பிணிகள் நம்மை விட்டுப் போகும்.

அன்புடன்,

மா சிவகுமார்

aaradhana சொன்னது…

இந்தப் பிரச்சினைக்கு காவல் துறையும் சுகாதார துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் மீதி. பொது மக்களின் ஆதரவும் சட்டத்தின் பின்னணியும் ஏற்கனவே இருக்கின்றன. கையில் பணம் வாங்கிக் கொண்டு இத்தகைய அடாவடித்தனங்களைத் திருத்தாமல் இருக்கும் காவல் துறையும், சுகாதாரத் துறையும் கண்டிப்புக்குரியவை.////////
நன்றாக சொன்னீர்கள் அய்யா!
ஆனால் பாவம் காவல் துறை என்ன செய்யும். அவர்களுக்கு குண்டு வெடிப்பதை பார்க்கும் பொழுது, தங்கள் தலை உருளுவது போல் ஆகிரது.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஆரதனா,

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்