திங்கள், ஜூலை 10, 2006

இந்துவைப் போல் இனிதாவது ....

1. தினமலர்
நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் வாங்குவது தினமலர் நாளிதழ்தான். பக்கத்து வீடுகளில் எல்லாம் ஆங்கிலப் பத்திரிகை இந்து வாங்கினாலும் அம்மாவுக்கு தினமலர் படித்த திருப்தி வராது. அதில் நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளூர் செய்திகள் நிறைய வரும். யாராவது கொஞ்சம் வசதியுள்ளவர்கள் இறந்து விட்டால், விளம்பரங்கள் வெளியிடுவார்கள். என்னவோ அம்மாவுக்கு இன்று வரை தினமலரும் கூட வரும் இணைப்புகளும் பிடித்தம்.

தினமலரும் அதன் இணைப்புகளும் ஆரம்பம் முதலே தமது எண்ணத்தை திணிக்கும் பாணியிலேயே இருக்கின்றன. ஆரம்ப கால வாரமலர் பற்றி நினைக்கும் போது எப்படி அதைப் படித்தோம் என்று தோன்றுகிறது. எதையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை படித்து விட வேண்டும் என்ற நமது கொள்கையின் படி வாரமலரையும் கரைத்து குடித்து விடுவது வழக்கம். அதன் அபத்தக் களஞ்சியங்கள் என்னுடைய கருத்துக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் இருக்கலாம்.


2. தினத்தந்தி
நாங்கள் சின்ன வயதில் தினமலரில் டார்ஜான் என்றப் படக்கதையைப் படிக்க போட்டி போடுவோம். தினத்தந்தியில், கன்னித்தீவு, ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார், சாணக்கியன் சொல் போன்ற துணுக்குப் படங்களும், முதல் பக்கத்தில் ஒரு நடிகையில் புகைப்படம் போட்டு "இவர் இப்படிப் பார்க்கிறாரோ" என்ற குறிப்பும் இருக்கும். முடி வெட்டப் போகும் போது கடையில் மாதம் ஒரு முறை அது படிக்கக் கிடைக்கும். நம்ம வீட்டிலும் இதை வாங்கினால் நல்லா இருக்குமே என்று தோன்றும்.

அப்புறம் தினமலர் ஆட்ட விதிகளை மாற்ற ஆரம்பித்தது. ஞாயிறு தோறும் வாரமலர் என்று பத்திரிகை வடிவில் இணைப்பு ஒன்றைக் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படியே வளர்ந்து தினமும் ஒரு இணைப்பு என்று சில ஆண்டுகளிலேயே வளர்ந்து விட்டது. மற்ற எல்லா நாளிதழ்களும் அதைப் பின்பற்ற வேண்டி வந்து விட்டது. இன்றைக்கும் தினத்தந்தியின் இணைப்புகளில் நாளிதழின் எளிமையும், சத்தும் நேர்மையும் உள்ளன. தினத்தந்தியில் முனைந்து திணிக்கப்படும் ஆபாசங்களும், வக்கிரமான கதை கட்டுரைகளும் படித்த அனுபவமே இல்லை.

3. தினகரன்
தினகரன் என்பது திமுக சார்பு பத்திரிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்ததால் நூலகங்களில் மட்டுமே அதைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். மிக ஒரு சார்பாகவே செய்திகள் வெளி வரும். இப்போது கலாநிதி மாறனால் வாங்கப்பட்டு தன் விலையைக் குறைத்து மனத் தோற்றங்களை மேம்படுத்த முனைந்துள்ள முயற்சியின் போதுதான் அதைக் காசு கொடுத்து வாங்கும் எண்ணம் வந்தது. ஓரிரு முறைக்குப் பிறகு வாங்கவில்லை.

4. தினமணி
தினமணியின் ஆங்கிலச் சகோதரி இந்தியன் எக்ஸ்பிரஸின் தரத்துடன் ஒப்பிடும்போது ஒரு உயர் தர இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிகமாகப் படிக்காவிட்டாலும், எப்போதாவது பேருந்தில் போகும் போது படிக்க வேண்டும் என்று வாங்கினால் நிறைவான கட்டுரைகளுக்கு வாங்கியிருக்கிறேன். தினமணியும் தனது தினமணிக்கதிரை ஞாயிறு இணைப்பாக மாற்றியிருந்தது.

5. இந்து
இந்து நாளிதழ் வாங்கும் பக்கத்து வீட்டுக் காரர்கள் தினமலரை இரவல் வாங்கிச் செல்வார்கள். காலை பதினொரு மணிக்கு மேல் வீட்டில் தினமலரைப் பார்க்க முடியாது. இரண்டு மூன்று வீடுகள் சுற்றி மாலையில்தான் திரும்பி வரும். அக்கா சென்னைக்குப் படிக்கப் போய் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது அவளுக்காக இந்து போடச் சொல்வார்கள் அப்பா. நான் இந்துவில் விளையாட்டுப் பக்கம் மட்டும்தான் பார்ப்பேன். கிரிக்கெட் படங்கள், நிர்மல் சேகர் எழுதும் டென்னிஸ் கட்டுரைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொள்வேன்.

ஸ்டெபி கிராஃபை மோனிகா செலஸ் முதல் முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி ஒன்றில் வென்று விட (ஃபிரெஞ்சு ஓப்பன் என்று நினைக்கிறேன்), நிர்மல் சேகர் கவிதையாகப் பொழிந்திருந்தார். இன்று வரை விளையாட்டுப் பற்றியக் கட்டுரைகளில் கட்டிப் போட்டு விடும் மாயாவி அவர்தான்.

6. கல்லூரியில் இந்து

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜூனியர் ஹாஸ்டலில் கீழ்த் தளத்தில் இந்து பேப்பர் வரும். மெஸ்ஸுக்கு மேலே தொலைக்காட்சி அறையில் எல்லா நாளிதழ்களும் கிடக்கும்.

"காலங்காத்தால பேப்பர் படிக்க என்றெல்லாம் வந்து நின்னுடக் கூடாது" என்று புதியவர்களை மிரட்டும் இரண்டாம் ஆண்டு மாணவரின் எச்சரிக்கைக்குப் பணிந்து பல மாதங்கள் நாளிதழ் பக்கமே போகவில்லை. அதன் பிறகும் ஒரு சில நிமிடங்களே படிக்கக் கிடைக்கும் அதில் அவ்வளவு ஆர்வம் வளரவில்லை.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் அப்போது கூடுவாஞ்சேரியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்த அக்காவுடன் சேர்ந்து தாம்பரத்தில் தங்கி கல்லூரி வரலானேன். தாம்பரத்திலிருந்து மின் தொடர் வண்டியில் கிண்டி அல்லது சைதாப்பேட்டை வந்து இன்னொரு பேருந்து பிடித்து காந்தி மண்டபம் வரலாம். அல்லது 21B பிடித்து நேரடியாக கல்லூரி வாசலில் இறங்கிக் கொள்ளலாம்.

பல விவாதங்கள், முயற்சிகளுக்குப் பிறகு 21Bதான் நம்ம தடம் என்று அமைந்து விட்டது. 7.05, 7.20, 7.50, 8.20 என்று காலையில் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள். பின் இரண்டு வண்டிகளில் தாம்பரத்திலேயே நிறைந்து பல்லாவரம் தாண்டும் போது படிக்கட்டுகளில் தொங்குபவர்கள் பிதுங்கிக் கொண்டிருப்பார்கள். இருக்கை கிடைக்கும் வண்டியில்தான் ஏறுவேன்.

ஏறும் முன் கடையில் இந்து நாளிதழ் வாங்கிக் கொள்வேன். சீட்டுக் கொடுக்க நிறுத்தி சுமையை இழுத்துக் கொண்டு போய்ச் சேர பேருந்து எடுத்துக் கொள்ளும் நேரம் நாற்பது நிமிடங்கள், அதன் பிறகும் மதியம் உணவு இடைவேளை, மாலையில் திரும்பும்போது பேருந்துப் பயணம் என்று இந்து நாளிதழுடனான என்னுடைய காதல் தொடங்கியது. இங்கும் எல்லாவற்றையும் படித்து விட வேண்டும் என்ற வெறிதான்.

ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் படிப்பதில் பழக்கம் இல்லாததால், முதல் பக்கம், விளையாட்டுப் பக்கம் முடிக்கவே நாள் கழிந்து விடும். நாட்கள் போகப் போக இரண்டாவது முக்கியப் பக்கம், உலகச் செய்திகள் என்று முன்னேறினேன். தலையங்கப் பக்கங்களையும் வணிகப் பக்கங்களையும் தொட்டு விட ஓரிரு ஆண்டுகள் பிடித்தன. இறுதி ஆண்டு படிக்கும் போது குறுக்கெழுத்துப் போடக் கூட ஆரம்பித்து விட்டேன். தமிழ் கதைகளில் 'அவர் இந்து நாளிதழில் வரி விளம்பரங்கள் கூட விடாமல் எல்லா வரிகளையும் படிப்பார்' என்று பாத்திரங்களைப் பற்றி இது மனிதனால் முடிகிற காரியமா என்று நினைத்த நான் அந்த நிலைக்கு வந்து விட்டேன்.

அக்காவுக்குக் கல்யாணம் ஆகி அத்தானும் இந்துப் பிரியராகவே இருந்தார். அந்த ஆண்டுகளில் அக்காதான் பாவம், வீட்டிலேயே இந்து போட ஆரம்பித்த பிறகு கூட நான் கல்லூரிக்குக் கிளம்பும் போது கையில் எடுத்துக் கொண்டு போய் விடுவேன். திரும்ப இரவில்தான் அவளுக்கு அதைப் பார்க்கக் கிடைக்கும். அதை மாற்ற முயன்றதற்காக அவளிடம் கோபித்துக் கொண்டேன்.

8. இந்தூரில் ...

அப்புறம் வேலை கிடைத்து நான்கு ஆண்டுகள் இந்தூரில் வாசம். இந்தூரில் வெளியாகும் ஒரே ஆங்கில நாளிதழ் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற ஒன்று. இந்துப் பத்திரிகையும் அல்லது எக்ஸ்பிரஸ் கூட இல்லாத ஒரு நகரமா என்று துக்கமாக இருந்தது. மும்பையிலிருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா அல்லது தில்லியிலிருந்து இந்துஸ்தான் டைம்ஸ் மாலையில் கிடைக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்பது ஏதோ கொம்பு முளைத்த நாளிதழ் என்ற எண்னம் அப்போதெல்லாம். மும்பையிலிருந்து வெளி வருகிறது, பெயரும் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது என்று அதை பக்தியுடன் படிப்பேன்.

போகப் போக அந்த பக்திக்கு பங்கம் வந்தது. செய்திகளும், கட்டுரைகளும் இந்துவுடன் ஒப்பிடும்போது மலிவாகத் தோன்றின. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் சொந்தமாக நாளிதழ் போடச் சொன்ன போது எக்னாமிக் டைம்ஸை தேர்ந்தெடுத்தேன். அப்போது எகானிமிக் டைம்ஸ் இந்து போல செறிவான பத்திரிகை. மாலையில்தான் பத்திரிகை போடுவார்கள். அதை அப்படியே எடுத்துக் கொண்டு அதிகாலை தேவாஸ் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்தில் படிப்பேன். பங்குச் சந்தை, வணிக நிறுவனங்கள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்று பரபரப்பான அந்த நாட்களில் எகனாமிக் டைம்ஸை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன்.

பிற்பாடு வாடிக்கையாளர் சேவை துறைக்கு உயர் பொறுப்புகளுடன் நான் மாற்றப்பட்ட போது அதுவரை பேசியே இராத ஒரு பொது மேலாளர், "அவனைப் பற்றி எனக்கு வேறு விபரங்கள் தெரியாது. ஆனால் தினமும் காலையில் எகனாமிக் டைம்ஸை கரைத்துக் குடிக்கிறான்" என்று சொன்னபோது நம்மையும் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று புரிந்தது.

ஆண்டுக்கு ஓரிரு முறை ஊருக்கு வரும் போது போபால் வந்து தில்லியிலிருந்து வரும் ரயில்களிப் பிடிப்போம். அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் கிடைக்கும். சீனாவுக்குப் புறப்படும் முன் மும்பை, கொல்கத்தா, தில்லி என்று ஒரு சுற்று சுற்றும் போது அங்கு கிடைக்கும் நாளிதழ்களை படித்துப் பார்த்துக் கொண்டேன்.

9 ஆங்காங்கில் தி சௌத் சைனா மானிங் போஸ்ட், ஆங்காங் ஸ்டாண்டர்டு
ஆங்காங்கில் சௌத் சைனா மாணிங் போஸ்ட் என்று ஒரு நாளிதழ் கிடைக்கும். மிகக் கனமாக கருத்து செறிவும் நன்றாக இருக்கும். விலை 7 ஆங்காங் டாலர். அதே நாளிதழ் ஷாங்காயில் விமானம் மூலம் தருவிக்கப்பட்டு 18 யுவானுக்கு (கிட்டத்தட்ட 15 ஆங்காங் டாலர்) கிடைக்கும். ஷாங்காயில் இருக்கும் போது ஆங்காங் போவதின் ஒரு முக்கிய கவர்ச்சி குறைந்த விலையில் வாங்கி விட முடியும் இந்த நாளிதழ். வண்ண மயமாக பிரிடிஷ், சீன தரப்புக் கட்டுரைகளுடன் வெளி வரும்.

ஷாங்காயில் இருக்கும் போது வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டும் வாங்கிப் படித்துக் கொள்வதுண்டு. ஆங்காங்கின் சீனாவுடனான தனி உறவு முறை, அதில் வரும் சிக்கல்கள் அரசியல்கள் என்று விவாதங்கள் போகும்.

10. ஷாங்காயில்
ஷாங்காயில் ஆரம்ப ஆண்டுகளில் சைனா டெயிலி என்று ஒரு நாளிதழ் மட்டுமே கிடைக்கும். அரசால் வெளியிடப்படும் இந்த ஒன்றுதான் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைப்பது. விலை ஒரு யுவான் தான். கம்யூனிஸ்டு கட்சியின் விசுவாச பேச்சாளனாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும். இதே பதிப்பகத்திலிருந்து சாங்காயைக் குறித்து சாங்காய் ஸ்டார் என்றும் இரண்டு யுவானுக்கு அவ்வப்போது வெளி வரும்.

கொஞ்சம் கட்டுப்பாடுகள் தளர்ந்த காலத்தில் ஷாங்காய் டெயிலி என்று ஒரு போட்டி நாளிதழ் தினசரி வர ஆரம்பித்தது. கொஞ்சம் தைரியமாக சமூகச் சிக்கலகளை அலசவும், ஆங்கிலம் படிக்கும் வெளி நாட்டாருக்கு ரசித்து விடும் வண்ணம் அது அமைந்திருக்கும்.

11. இங்கிலாந்தில் தி டைம்ஸ், கார்டியன், ஸ்பெக்டேடர
அந்த நான்கு ஆண்டுகளும் இணையத் தளங்களில் இந்திய, ஆங்காங், அமெரிக்க செய்தித் தளங்களைப் படித்து திருப்தி பட்டுக் கொண்டதுதான். அதிலும் சிஎன்என், பிபிசி போன்றவற்றை சீன தீச்சுவரால் தடுத்து விட்டிருந்தனர்.

ஆங்கில நிறுவனத்தில் சேர்ந்து இங்கிலாந்தில் கழித்த சில மாதங்களில் டைம்ஸ், கார்டியன் என்ற ஆங்கில நாளிதழ்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்திருக்கக் கூடியவை கையில் கிடைத்தன. வழக்கமான் பிரிடிஷ் குறும்பும் சுயநகைப்பும் ததும்பும் கட்டுரைகள் நன்றாகவே இருந்தன. கூடவே டேப்ளாய்டு வடிவில் நிறைய நாளிதழ்கள். விலைகள் இந்தியக் கணக்கில் தலை சுற்றினாலும், கொடுத்தக் காசுக்கு மதிப்பு கிடைக்கிறது என்ற திருப்தி ஏற்பட்டது.

சீனாவில் உள்நாட்டு, ஆங்காங், தாய்வான், இங்கிலாந்து விமானப் பயணங்களில் பன்னாட்டு நாளிதழ்கள் பார்க்கக் கிடைத்து விடும். ஹெரால்டு டிரிப்யூன் என்பது நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டின் கட்டுரைகளை நிரப்பி வெளிவரும். இணையத்தில் நியூயார்க் டைம்ஸின் இணையப் பதிப்பில் கட்டுரைகள் படிப்பதுண்டு்.

12. இந்துவின் மீது வெறுப்பு - ஈழத் தமிழர் விவகாரம்.
ஷாங்காயில் இருக்கும் போது ஈழப் போராட்டத்துககு் எதிரான இந்துவின் அநியாய நிலைப்பாட்டைக் குறித்து மனம் வெம்பி தமிழ் டாட் நெட் மடற்குழுவில் எழுதியிருந்தார் ஒரு நண்பர். உடனே ரத்தம் கொதித்து, "இனிமேல் உங்கள் இணையப் பதிப்பை நான் படிக்கவே மாட்டேன். சென்னை போனாலும் உங்கள் நாளிதழை காசு கொடுத்து வாங்க மாட்டேன்" என்று இந்துவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அதன் நகலை தமிழ் டாட் நெட் மடற்குழுவுக்கும் அனுப்பினேன். அதற்குப் பதிலாக ஒரே ஒரு நண்பர் தானும் அதையே செய்யப் போவதாக் கூறி பதிலளித்தார்.

இன்றைக்கும் இந்துவின் ஆசிரியரின் கொள்கைகள் கருத்துகள் செய்திப் பக்கங்களுக்கும் வந்து விடுவதைப் பற்றி எனக்கு பெரிய வருத்தும் இருக்கிறது. ஈழப் பிரச்சனையாகட்டும், இந்துத்துவா பற்றிய விவாதங்களாகட்டும், பொருளாதாரக் கொள்கைகளாகட்டும், தான் ஆசிரியர் பக்கங்களில் எடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டிய கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும், செய்தி அறிக்கைகள் கூட அதற்குத் தகுந்த வாறு மாற்றப்பட்டு விடும் என்ற போக்கு அருவெருப்பாக உள்ளது.

மேற்சொன்ன முடிவு எடுத்த பிறகு பல மாதங்கள் இந்து படிப்பதைத் தவிர்த்து விட்டேன். இந்தியா வந்த பிறகும் பல நாட்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள் என்று மாற்றுகளை படித்துப் பார்த்து வந்தேன். ஆனால், இடையிடையே இந்துவின் கவர்ச்சி வென்று என் சபதம் தோற்று விட்டது. அலுவலகத்தில் நண்பர் இந்து நாளிதழ் போடச் சொல்லியிருந்தார். அப்படியே டெக்கான் குரோனிக்கிளின் அபத்தமான உள்ளடக்கங்களைக் கண்டு கடுப்பாகி இந்துவுக்கு மீண்டும் அடிமையாகி விட்டேன்.

13. எகனாமிக் டைம்ஸின் புது வடிவமைப்பு
பழைய காதல்களில் மற்றொன்றான எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தன் பழைய வடிவை மாற்றிக் கொண்டு பரவலான வாசகர்களுக்காக படங்களையும், எள்ளல் ததும்பும் தலைப்புகளையும் போட்டு வரும் மாற்றம் என்னைக் கவரவில்லை. வணிக நிறுவனங்களிடம் ஆதரவு பெற்றுக் கொண்டு அவர்கள் சார்பு செய்தி, அலசல்களை வெளியிடுவது போல ஒரு ஐயமும் தட்ட ஆரம்பித்தது. அவ்வப்போது யாராவது வாங்கி வந்தால் தவிர காசு கொடுத்து எகானாமிக் டைம்ஸ் வாங்குவது அறவே நின்று விட்டது. ஆழமான அலசல்களே அதிலிருந்து மறைந்து போய் விட்டதாக ஒரு உணர்வு.

14. யாமறிந்த நாளிதழ்களிலே இந்துவைப் போல....
மொத்தத்தில் சொல்லப் போனால் நான் படித்த இத்தனை நாளிதழ்களில் இந்து நாளிதழ் போல எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர் கருத்துகளை ஒட்டிச் செல்லும் செய்திப் போக்கைத் தவிர ஆங்கில மொழித் தரம், வியாபரத்துக்காக மட்டமான விளம்பரம்/கட்டுரைகளை வெளியிடாமை, எழுதுபவர்களின்் தனிப் பாணிகள் என்று பழக்க விருப்பத்தால் இந்துவைப் போல் இனிதாவது எங்கும் காணேன் என்றுதான் நான் சொல்வேன்.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல ஆய்வு சிவகுமார்.

நாங்களும் சிறுவயதுமுதலே 'ஹிந்து'தான் படித்தோம். ஏன்னா அதுதானே வீட்டுலே வாங்குனாங்க.
அதுவுமில்லாமல், ஹிந்து படிச்சா இங்கிலிஷ் நல்லா வரும் என்ற ஒரு (அசட்டு) நம்பிக்கைவேற.

வாரப்பத்திரிக்கைன்னா கல்கி, ஆனந்த விகடன்.

'குமுதம், தினத்தந்தி எல்லாம் ஏதோ படிக்கக்கூடாதவை' என்ற அளவுலே வீட்டுலே விதிமுறைகள்
இருந்துச்சு.
இப்ப என்னன்னா குமுதம் & ஆ.வி ரெண்டுமே ஒரேமாதிரிதான். அட்டையைக் கிழிச்சுட்டா வித்தியாசம் ஒண்ணுமே இல்லை.
சினிமா & அரசியல் 95%.பாக்கி...? விளம்பரம்தான்:-))))

இப்ப எப்படின்னா.... சனிக்கிழமை மட்டும் ' த ப்ரெஸ்' காசு கொடுத்து வாங்கறோம்.

அப்ப மத்த நாட்கள்?

அதான் தினம் எதாவது உள்ளூர் ஓஸிப் பேப்பர்கள் வந்து குவியுதே.

போதாக்குறைக்கு இணையம் இருக்குல்லே!

கோபால் பார்க்கறது சமாச்சார்.காம்( அதுலெ வர்ற எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும்)

நானோ? தின மலர்/கரன்/தந்தி வகையறாதான்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி துளசி அக்கா.

விகடனில் பழைய மதன் ஜோக்ஸ், துணுக்குகள், தொடர்கதை, சிறுகதைகள் எல்லாம் மறைந்து போய் விட்டது வருத்தம்தான். ஆனாலும் காலத்துக்கேற்ப, குடும்பத் தலைவிகள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களுக்கு கட்சி மாறி விட்ட பிறகு அவர்களும் மாற வேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.

மற்றபடி, வலையில் நாளிதழ் படிப்பது, கையில் விரித்து வைத்துக் கொண்டு படிக்கும் சுகத்துக்கு ஈடாகாது என்று என்னுடைய மேலாளர் ஒருவர் கூறுவார். நானும் ஷாங்காயில் இருக்கும் போது வலை மனைகள்தான் சரணம்.

நியூசியில் என்ன மாதிரி நாளிதழ்கள். த பிரஸ் எந்த மாதிரியான பத்திரிகை?

அன்புடன்,

மா சிவகுமார்