புதன், ஏப்ரல் 14, 2010

ஒரு வார இறுதியும், மூன்று சந்திப்புகளும்

சனிக்கிழமை காலையில் தொலைபேசி அழைப்பு. தமிழ் கம்பியூட்டர் இதழிலிருந்து. அன்று மாலை இணையத் தமிழ் மாநாடு குறித்து கூட்டம் தமிழ் ஊடகப் பேரவை சார்பாக நடக்கவிருக்கிறதாம். 'அனுப்பிய அழைப்பிதழ் திரும்பி வந்து விட்டது. சார் உங்களிடம் தொலைபேசி வரச் சொல்லச் சொன்னார்.' வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன்தான் ஊடகப் பேரவையின் உயிர் நாடி. எனக்கு மாதா மாதம் அழைப்பிதழ் வந்தாலும், நாம் அதில் எப்படிப் பொருந்துவோம் என்று போவதில்லை.

முனைவர் அனந்தகிருஷ்ணன் சிறப்புரை, வழக்கறிஞர் காந்தி தலைமை. அனந்தகிருஷ்ணன் பேசுவதைக் கேட்கப் போக வேண்டும். நம்மை நினைவில் வைத்து அழைத்திருக்கிறார், போக வேண்டும்.

மாலையில் ஆதம்பாக்கம் விட்டுக் கிளம்பும் போதே ஆறரை மணி ஆகியிருந்தது. பாலத்தின் பக்கவாட்டில் நடந்து, வலது புறம் படியேறினால் பயணச் சீட்டு வழங்கும் அலுவலகம். சீட்டு வாங்கிக் கொண்டு நடைமேடையில் நுழைந்தால் வந்த ரயில் தாம்பரம் நோக்கிப் போகிறது. ஓரிரு நிமிடங்களில் கடற்கரை செல்லும் வண்டி வந்து விட்டது. நடைமேடையின் ஒரு முனையில் இருந்தேன்.

எஞ்சினுக்கு அடுத்த பெட்டி. உட்கார இடம் கிடைத்தது. மாலை நேரக் கூட்டத்துக்கு எதிர் திசையில் பயணிப்பதால் இடம் தாராளமாக இருந்தது. தி நகரில் நிறைய பேர் இறங்கினார்கள். கோடம்பாக்கம் தாண்டியதும் கதவருகே வந்தால், சில பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். உள்ளே இடம் இருக்கிறதே என்று அவர்களை நகரச் சொன்னவருக்கு ஆதரவு அளித்துக் கொண்டேன். அவர்களுக்கு ரசிக்கவில்லை. நுங்கம்பாக்கத்தில் இறங்கி எப்படி வெளியில் போவது என்று தெரியவில்லை. எதிர்த் திசையில் முனை வரை நடந்து பின்னர் வழி கேட்டு உயர்த்தப்பட்ட நடை பாதையில் ஏறி இறங்கினேன்.

லயோலா கல்லூரி எப்படிப் போக வேண்டும். திசைகள் சரிவர பிடிபடவே மாட்டேன் என்கிறது. லயோலா கல்லூரிக்கு எதிரில் ஸ்டெர்லிங் ரோடில் AICUC வளாகத்தில் என்று குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தார்கள். அதிகம் அலைக்களியாமல் போய்ச் சேர்ந்து விட்டேன். பக்கவாட்டில் இருந்த அரங்கில் கூட்டம் ஆரம்பித்திருந்தது.

ஆண்டோ பீட்டர் பேசிக்கொண்டிருந்தார். இணையம், விக்கி பீடியா, இணையத்தில் தமிழ், ஒருங்குறி என்று திருத்தமாக விபரப்பிழை இல்லாமல் பேசினார். காந்தி ஏற்கனவே பேசி விட்டார் என்று தோன்றியது.

அடுத்தது எல்லோருக்கும் போர்வை போர்த்துதல், தொடர்ந்து மொழிபெயர்ப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் வந்து ஒரு மேடைப் பேச்சை அரங்கேற்றினார். கடைசியில் அனந்தகிருஷ்ணன் பேசினார்.

  • தமிழர்களை ஒருங்கிணைத்து ஒன்றை நடத்துவதில் இருக்கும் சிரமங்கள்,
  • தமிழ் கணினியில் பயன்படும் நிலை,
  • தமிழ் தாமதமாக கணினிக்குள் வந்தது, ஒருங்குறி,
  • இணையத் தமிழ் மாநாடு வரலாறு,
  • செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கவிருக்கும் இணையத் தமிழ் மாநாடு
    என்று விபரங்கள்

  • ஆய்வுக் கட்டுரைகள்,
  • மாநாட்டில் செய்யவிருப்பவை,
  • தமிழை கணினிக்குள் இயங்க வைக்க அடுத்த சவால்கள்
    என்று நிறைய பேசினார்.
எங்கும் தளர்வில்லாமல், எளிய மொழியில் அழகாக பேசினார். தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் எழுதும் போட்டி குறித்தும் சொன்னார்.

இறுதியில் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார்.

'தமிழக பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை எழுத தமிழ் உள்ளீடு மற்றும் எழுத்துரு தொடர்பாக என்ன பயிற்சி கொடுக்கப் போகிறோம்' என்று கேட்டதற்கு அதற்கான ஏற்பாடுகளும் நடப்பதாகச் சொன்னார். ஒருங்குறியும், தமிழ்99ம்தான் பயன்படும் என்று அறிந்து மகிழ்ச்சி.

'விசைப்பலகைகளில் தமிழும் இடம் பெற வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வர முடியாதா' என்பதற்கு, 'விசைப்பலகையில் மட்டுமில்லை, தமிழ் நாடு அரசு வாங்கும் கணினிகளில் எல்லாம் தமிழ் பயன்பாடு செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நெறி கொண்டு வருவோம்' என்று சொன்னார்.
ஆனால் 'தமிழ்நாட்டில் விற்கும் எல்லா கணினிகளும் தமிழ் பயன்பாட்டுடன் விற்கப்பட வேண்டும் என்று சட்டம் போட முடியுமா என்பது கேள்விக்குரியது' என்று சொன்னார்.

'தமிழ் 1990களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை இழந்து விட்டது. இப்போது அப்படி இழந்து விடாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை அழுத்திக் கூறியிருந்தார்.

நிகழ்ச்சியின் போது கடைசியில் ஒரு தொலைபேசி அழைப்பு, மா சிவகுமாரைக் கேட்டு. யாரோ வலைப்பதிவர் என்று ஊகித்தாலும், மேலே பேச முடியவில்லை. 'நீங்கள் வேலையாக இருக்கிறீர்கள் என்றால் அப்புறம் பேசுகிறேன்' என்று வைத்து விட்டார்.

கூட்டம் முடிந்து வெளியில் வந்து ஆட்டோவில் லிபர்டி வந்து சேர்ந்தேன். அங்கிருந்து தொலைபேசினால், ஜாக்கி சேகர் என்ற பெயரில் வலைப்பதிவு செய்து வருகிறேன் என்று தன்னடக்கம் தெறிக்கச் சொன்னார்.

பதிவர் சந்திப்பில், என்னிடம் விசைப்பலகை ஒட்டிகள் இருப்பதாக அறிந்ததாகவும், அதை தர முடியுமா என்றும் கேட்டார். பதிவர் சந்திப்பு நாளைக்குத்தானே என்று ஒரு கேள்வி தோன்றினாலும், நாளைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஏற்பாடு செய்து கொண்டேன்.

பதிவர் சந்திப்பை ஒரு நாள் முன்னதாகவே நடத்தினார்கள் என்று பின்னர் தெரிந்தது. ஞாயிறு மாலையில் கேணி சந்திப்பு நடப்பதால், இதை முன் கூட்டியே நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். நான் கவனித்திருக்கவில்லை. சனிக்கிழமை இரவில் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய ஒரு தேவை. அதை முடித்து விட்டுக் கிளம்பும் போது காலை 8 மணி. வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றி மறுபடியும் அலுவலகத்துக்குப் புறப்படும் முன் ஜாக்கி சேகருக்கு அழைப்பு. 'இன்றைக்கு ஒட்டிகளை வாங்கிக் கொள்கிறீர்கள் என்றால் கையோடு எடுத்து வருவேன்.' வாங்கிக் கொள்வார்.

பையில் நிரப்பி வைத்திருந்ததை எடுத்துக் கொண்டேன். வேலை தொடர்ந்து கொண்டிருந்தது. சரியாக அடையாளம் கண்டு அலுவலகம் அருகில் வந்து தொலைபேசினார். 2ம் மாடிக்கு வர வேண்டும். அவர் வந்ததும் இரண்டு பைகளையும் ஒப்படைத்து விட்டேன்.

ஆர்வமாக நிறைய பேசினார்.
  • பதிவுகளில் எழுதுவது
  • அவரது பிரபலம்
  • எழுத ஆரம்பித்த கதை
  • அவரது அணுகுமுறைகள்
  • வாழ்க்கையில் கடந்து வந்த பாதை
    என்று ஒரு குட்டி வாழ்க்கை வரலாறே சொல்லி விட்டார்.
இடையில் கீழே போய் தேநீர் கடைக்குப் போனோம்.
  • பதிவுலக நண்பர்கள் மூலம் அவரது துணைவியார் அயர்லாந்து சென்ற போது கிடைத்த ஆதரவுகள்,
  • அவர் புதிதாக வீடு வாங்கிய போது பதிவர்கள் நீட்டிய உதவிக் கரங்கள்,
  • அவர் இந்துஸ்தான் எஞ்சினியரிங் கல்லூரியில் வேலை பார்த்தது,
  • கல்வியாக இளங்கலை பட்டம் பெற்று இப்போது முதுகலைபட்டப்படிப்பு படிப்பது,
  • கல்லூரி வேலையை விட்டு இப்போது திரைப்படத்துறையில் உதவி ஒளி ஓவியராக வேலை பார்ப்பது,
  • நிரந்தர வருமானமான சம்பளப் பணியை விட்டு விட்டு இப்போது இறங்கியிருப்பது எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
மிகவும் வெளிப்படையான, நேர்மையான, சமூக உணர்வு கொண்ட மனிதர்.

உலக திரைப்படங்களில் ஆர்வம் அதிகமாம். எதையும் குறை சொல்லி எழுதுவதில்லை என்றார்.
'பார்த்தே தீர வேண்டிய படங்கள், பார்க்க வேண்டிய படங்கள், பொழுது போக்குப் படங்கள் என்று மூன்றாக தரப் படுத்துவேன்' என்றவரிடம், பார்க்கவே கூடாத படங்கள் என்று இல்லையா என்று கேட்டதற்கு அப்படிப் பதில்.

அரசியல், ஈழ நிலைமை, சமூக நிலைமை என்று நிறைய பேசிக் கொண்டிருந்தார்.

அவர் புறப்படும் போது தொலைபேசி அழைப்பு, அதியமான். 'மதியம் கேணி கூட்டம் நடக்கவிருக்கிறதே, நீங்களும் வாங்களேன், ஒரு மாற்றமாக இருக்கும்' என்று சொன்னார்.

11Hல் ஏறி நெசப்பாக்கம் கேட்டால், விருகம்பாக்கம் சீட்டு கொடுத்தார். கிட்டத்தட்ட சரியான இடத்திலேயே இறங்கிக் கொண்டேன். லட்சுமண சாமி சாலையில், அங்கிருந்து அழகிரிசாமி சாலைக்கு வழி கேட்டு போய் எதிர் திசையில் போய் விட்டேன். எண்களை பார்த்துக் கொண்டே போய் திரும்பி இங்கு வந்தேன். அதியமானும் செல்பேசியை அணைத்து விட்டிருந்தார் என்று தோன்றியது.

3.30க்கு சரியாக போய் விட்டேன். வாசற் கதவை விரியத் திறந்து வைத்திருந்தார்கள். பாரதி கோட்டோவியம் சின்னதாக, பின்புறம் போனால் நிறைய நாற்காலிகள், அதில் மூன்றில் ஒரு பகுதி ஆட்கள். உண்மைத்தமிழன், அதியமான் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் போய் உட்கார்ந்தேன். இரண்டாம் வரிசை. முன்னால் கேணி. கேணியைச் சுற்றிய இடத்தில் பாய் விரித்திருந்தார்கள். வீட்டிலிருந்து வரும் நுழைவாயிலுக்கு அருகில் பேச்சாளருக்கான நாற்காலிகள். அந்தப் பக்கமும் பார்வையாளர்கள் உட்கார முடியும்.

ஆரம்பிக்க அரை மணி நேரம் ஆனது. அதற்குள் நாற்காலிகள் நிரம்ப ஆரம்பித்தன.

ஞானி, பாஸ்கர் சக்தி, தமிழ்ச் செல்வன் மூன்று பேரும் வந்தார்கள். ஞானி அறிமுகம் கொடுத்து விட்டு தமிழ்ச் செல்வனை களம் ஏற்றினார். தயக்கமாக ஆரம்பித்து மெலிதான நகைச்சுவையோடு, அடுத்தவர் தன்னைப் பற்றி சிரிப்பதற்கு முன்பு நாமே சிரித்து விடுவோம் என்று கவனத்தோடு, என் வாழ்க்கை என் எழுத்து குறித்து பேசினார் தமிழ்ச் செல்வன்.

ஓரிரு இடங்களைத் தவிர அவர் சிரிப்பதற்காகச் சொன்னாலும், சொன்னவை சிரிக்கக் கூடியவை இல்லை.
  • அவரது கிராம வாழ்க்கை,
  • பள்ளியில் படித்தது,
  • ஆங்கில, கணக்கு பாடங்களில் திண்டாடியது,
  • பார்த்தசாரதியின் நாவல்கள்,
  • தாத்தா தலையாரி,
  • அம்மா வழி தாத்தா எழுத்தாளர் பாஸ்கரதாஸ்,
  • அப்பா எழுத்தாளர்,
  • தம்பி கோணங்கி எழுத்தாளர்,
  • வளர்த்த அத்தை ஊட்டிய கதை சொல்லும் வித்தை,
  • கல்லூரிச் சூழல்கள்,
  • ராணுவத்தில் சேர்ந்தது,
  • இடது சாரி சிந்தனைகளில் இறங்கியது,
  • நக்சல் பாரி கிராமத்துக்குச் சென்றது
என்று ஒரு நாவலைப் படிப்பது போல பேசிக் கொண்டே போனார்.

  • ராணுவத்திலிருந்து திரும்பியதும் அஞ்சல் துறையில் வேலை.
  • அதில் தொழிற்சங்கம் அமைக்க நடத்த செய்த வேலைகள்,
  • வேலை நிறுத்த அனுபவங்கள் என்று நீண்டன அவரது அனுபவப் பார்வைகள்.
கூட்டம் முடிந்ததும் பாலபாரதியிடம் சொன்னது போல, 'நல்லா பேசினார்! நல்லா வாழ்ந்திருக்கிறார், நல்லா பேச முடிந்தது'.

அறிவொளி இயக்கம்தான் அவரை பெரிதும் பாதித்திருக்கிறது. கிராமங்களில் போய் கல்வி கற்பிக்க முயற்சித்ததில் தான் கற்றுக் கொண்டது ஏராளம் என்றார். மக்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்.

'நாற்பதாண்டுகளா எங்க போயிருந்தீங்க' என்று எதிர் கொண்ட கேள்வி.

பேய் பிசாசு குறித்து ஒரு பாட்டி விட்ட சவாலை எதிர் கொள்ளாமல் சரணடைந்ததைப் பற்றிச் சொல்லும் போது அவருக்குத் தொண்டை அடைத்து விட்டது. 'பாட்டி காலங் காலமாக தோற்கடிக்கப்பட்டுத்தான் இருக்காங்க. இப்பவாவது ஒரு தடவை ஜெயிக்கட்டும்' என்று சொன்ன போது முதல் முறையாக தண்ணீரை எடுத்துக் குடித்து தன் உணர்வு பீறலை விழுங்கிக் கொண்டார்.

அதன் பிறகு கேள்வி பதில். இடது சாரி நிலைப்பாடு குறித்து நிறைய கேள்விகள்.
1. நித்யானந்தரை மன்னித்து எழுதிய நீங்கள் ஏன் வரதராசனை மன்னிக்க முடியவில்லை?
2. அரசியல் கூட்டணிகள்?
3. cultural policing
4. அணுஉலை பற்றி கட்சியின் நிலைப்பாடு
5. தொழிற்சங்கத்தில் ஒழுக்கம்
6. முறைசாரா தொழிலாளர்களுக்கு சங்கம் வைப்பது
7. தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் வருமா?

என்று பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். கட்சி பற்றிய விவாதங்களை பொதுவில் வைத்துக் கொள்வதில்லை என்று சொல்லி விட்டார்.

5 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

பதிவு அருமை

( உங்க கூடவே வந்த மாதிரி இருக்கு )

உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்!

sriram சொன்னது…

ஜாக்கி முதல் சந்திப்பிலேயே impress செய்வதில் கைதேர்ந்தவன், உங்கள ரொம்பவே Impress பண்ணிட்டான் போல இருக்கு..

ஜாக்கி - எப்புடி இப்புடி??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீராம்,

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

Jackiesekar சொன்னது…

வணக்கம். மூன்று சந்திப்புகளையும் ரொம்ப அழகா எழுதி இருந்திங்க... இதுவரை 5 பேருக்கு தமிழ் 99 ஸ்டிக்கர் கொடுத்து இருக்கேன்,.... என்னை பற்றி அழகாக எழுதி இருந்தீர்கள்...

ஸ்ரீராம்.. சில பேருகிட்டதான் நம்மை பற்றி விரிவா பேசுவோம்... அதுதான் மேட்டர்...
அன்புடன்
ஜாக்கி

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஜாக்கி,

உங்கள் ஆர்வமும், உழைப்பும், வாழ்க்கையைப் பற்றிய பார்வைகளும் அரிதாகக் காணக் கிடைப்பவை. பெரிதாக பேசப்படும் ஒளி ஓவியராக பார்க்கும் நாளை எதிர் நோக்குகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்