செவ்வாய், ஜனவரி 18, 2011

ஜெயமோகனின் இடம்

'இவங்க எல்லாம் ஒரு வித்தையைக் கைகொண்டிருக்காங்க அவ்வளவுதான். நன்றாக எழுதுவது என்பது நன்றாக களைக்கூத்தாடுவது போன்றது. பொறுமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உள்ள யாருக்கும் கைவந்து விடும். '

'அந்த வித்தையை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவர் பிரபல எழுத்தாளர் என்பதாலேயே அவரை பெரிய சிந்தனையாளராகப் போற்ற வேண்டியதில்லை'

நண்பர் கல்வெட்டு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து இது.

சுஜாதா எனக்கும் மானசீகக் கடவுள். சுஜாதா எழுதிய எதையும் படித்து விடுவேன். படிப்பவர்களுக்கு மனமகிழ்வைத் தந்தவர் என்ற முறையில் அவர் ஒரு great entertainer.

சுஜாதா அரசியல், தத்துவ விஷயங்களில் தனது ஆளுமையைப் பயன்படுத்த  முயற்சிக்கவில்லை. கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்றவற்றில் கலைத் துறை பற்றிய தனது கருத்துக்களை மட்டும் சொல்லியிருந்தார். அதைப் படிக்கும் போது 'அது ஒரு தனி மனிதரின் கருத்து, ஆராய்ந்து வெளிப்படும் தத்துவ வெளிப்பாடு இல்லை' என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

எழுத்து வித்தையைக் கைப்படுத்திக் கொண்ட ஒரு எழுத்தாளர் ஜெயமோகன்.  எழுத்துத் திறமையால் பல நூறு பக்கங்களுக்கான கதைகளை எழுதியிருக்கிறார். இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பல ஆயிரக்கணக்கான வாசகர்களையும் பெற்றிருக்கிறார்.

நான் அவரது நூல்கள் எதையும் வாங்கியதில்லை. 

1. இணையத்தில் அவர் வெளியிட்ட கதைகளில் முதல் இரண்டை ஓசியில் படித்திருக்கிறேன். மத்தகம் , ஊமைச் செந்நாய்  இரண்டையும் முழுமையாக, ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் என் வழக்கப்படி படித்தேன்.  

அவை தந்த அனுபவங்கள் என்னால் தாங்க முடியாதபடி இருந்தன. அதற்குப் பிறகு இணையத்தில் வெளியான கதைகளையோ புத்தகமாக வாங்கியோ அவரது கதைகளைப் படிக்க மனம் செல்லவில்லை. (இன்னும் வயதாகி பக்குவப்பட்ட பிறகு படிக்க முடியலாம்). 

2. நான் மிகவும் ரசிப்பது  அவர் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகள்.  வழிஅச்சுப்பிழை, வாடிக்கையாளர்கள், குஷ்பு குளித்த குளம், யாப்பு, அமிர்தாஞ்சன் கீரை மிக்சர் இன்னும் பல.

3. அவரது அரசியல் கருத்துக்கள், சமூக சிந்தனைகள், பல்வேறு மனிதர்கள் பற்றிய அவரது மதிப்பீடுகள் எல்லாம் ஜெயமோகன் என்ற தனிமனிதரின் கருத்து மட்டுமே. ஆயிரக்கணக்கான பதிவர்கள், பஸ்ஸர்கள், டுவீட்டர்கள் போன்று இன்னொரு மனிதரின் கருத்து என்று மட்டும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

அவர் வெளிப்படையாக எழுதியிருக்கும் அவரது வாழ்க்கைப் பின்னணியையும், போராட்டங்களையும், பயணங்களையும், நெறிகளையும் வைத்துப் பார்க்கும் போது அவரது கருத்துக்களுக்கு மிகக் குறைந்த மதிப்பே கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் கொள்கையாளர்கள் பாலபாரதி, ஸ்ரீராமதாஸ். அவர்கள் எழுதும்/சொல்லும் கருத்துக்கு 100 மதிப்பெண்கள் கொடுத்து உள்வாங்கிக் கொள்கிறேன்,  ஜெயமோகனின் கருத்துக்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுத்துக் கொள்கிறேன். 

9 கருத்துகள்:

சாலிசம்பர் சொன்னது…

அன்புள்ள மாசி அண்ணன்,
செமோவை நிராகரிக்க உங்களுக்கு 200 சொற்கள் தேவைப்பட்டால், அவருக்கு உங்களைப் போன்றவர்களை நிராகரிக்க இரண்டே சொற்கள் போதும்.’நெம்புகோல் எழுத்தாளர்கள்’
......
”ஒருவர் பிரபல எழுத்தாளர் என்பதாலேயே அவரை பெரிய சிந்தனையாளராகப் போற்ற வேண்டியதில்லை”
பெரிய சிந்தனையாளரை விடவும் சிறிய செயலாளன் போற்றுதலுக்குரியவன். அந்த முறையில் கலைஞர் என்ற மாபெரும் ஆற்றல் சாலை, எங்களைப் போன்றவர்களின் போற்றுதலுக்குரியவராய் உள்ளார்.

மா சிவகுமார் சொன்னது…

அன்புள்ள சாலிசம்பர்,

குஷ்பு அரசியலுக்கு வரும்போது 'திரைப்படங்களில் நன்றாக நடிக்கிறார் என்று அவரை ஆதரிக்க மாட்டேன், அரசியல் நிலைப்பாடுகள், போராட்டங்களை வைத்துதான் ஆதரிப்பேன்' என்று சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வேறு துறையில் ஈட்டிய மதிப்பு எதுவும் இன்றி நான் அரசியல் பேசும் போது, அப்படி டிஸ்கி தேவைப்படாது. இயல்பாகவே என் பேச்சுக்கு மட்டும்தான் மதிப்பு கிடைக்கும்.

//பெரிய சிந்தனையாளரை விடவும் சிறிய செயலாளன் போற்றுதலுக்குரியவன். //

நிச்சயமாக. செயலாளன் என்ன செய்கிறான் என்பதையும் பார்க்க வேண்டும். செயல் என்பது பகல் கொள்ளையாகவும் இருக்கலாம், மக்கள் பணியாகவும் இருக்கலாம்.

செயல்படுவதாலேயே ஒருவரை போற்ற வேண்டியதில்லை. என்ன செய்கிறார் என்று ஆராய்ந்து போற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

Naresh Kumar சொன்னது…

//அந்த முறையில் கலைஞர் என்ற மாபெரும் ஆற்றல் சாலை, எங்களைப் போன்றவர்களின் போற்றுதலுக்குரியவராய் உள்ளார்//

ஹா ஹா ஹா

கல்வெட்டு சொன்னது…

//பாலபாரதி, ஸ்ரீராமதாஸ்//

பாலபாரதி நம்ம தல பாலாவா?
யார் ஸ்ரீராமதாஸ்? சுட்டி இருந்தால் தரவும்.

Boston Bala சொன்னது…

பாபா, ராமதாஸை சந்தித்திருப்பதால் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். ஜெயமோகனையும் முடிந்தால் சந்தித்து உரையாடுங்க

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

ஆமாச்சு என்ற ஸ்ரீராமதாஸ் - http://amachu.net/blog/

தல என்ற பாபா என்ற பாலபாரதி :-)
http://blog.balabharathi.net/

மா சிவகுமார் சொன்னது…

//பாபா, ராமதாஸை சந்தித்திருப்பதால் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். ஜெயமோகனையும் முடிந்தால் சந்தித்து உரையாடுங்க//

அப்படியா நினைக்கிறீங்க போஸ்டன் பாலா? ஜெயமோகனின் இணைய பதிவுகளில் அவர் தன்னைப் பற்றி போதுமான அளவு வெளிப்படையாகவே எழுதுகிறார் என்று நினைத்தேன்.

கல்வெட்டு சொன்னது…

சிவா,
என்ன கொடுமை இது? :-)))
நான் பாலாவுக்கு சுட்டி கேட்டேனா? தலயத் தெரியாம இருக்க முடியுமா?

**

ஆமாச்சுவின் சுட்டிக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

Hello,

Thanks for sharing this link - but unfortunately it seems to be down? Does anybody here at www.indibloggies.org have a mirror or another source?


Thanks,
William