ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சுவரும் ஒரு கற்பாறையும் - ஆஷிஷ் குமார் சென்


The Wall And A Hard Place ‘Careful what you wish for’: 
Warnings for Pandora’s new haunt 
ASHISH KUMAR SEN

லாஸ்ஏஞ்சலீசுக்கு அருகில் உள்ள பர்பாங்க் பகுதி குடிமக்கள் வரவிருக்கின்ற புதிய பக்கத்து வீட்டுக்காரரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஊழியர்களுக்கு அடிமாட்டு கூலி கொடுப்பது, குறைபாடுள்ள நலத்திட்டங்கள் செயல்படுத்துவது, பக்கத்து வீட்டுக்காரர்களை வேலையிழக்க வைப்பது போன்றவை குறித்து அதன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் கோபத்தின் இலக்கு : பெரிய-பெட்டி சில்லறை வணிகர் வால்மார்ட் “வால்மார்ட் இந்த நாட்டில் சில்லறை வணிகமும் உற்பத்தியும் நடைபெறுவதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் கேட் நிக்சா.

யாருடைய ஊரிலெல்லாம் வால்மார்ட் கடை திறக்கப்படவிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் அவரிடம் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. “கடுமையாக போராடுங்கள், அல்லது ஊரை விட்டு தொலைந்து போய் விடுங்கள். ஏனென்றால் வால்மார்ட் உங்கள் ஊரையே பாழாக்கி விடப் போகிறது. ”

அமெரிக்காவில் வால்மார்ட் புதிய ஒரு கடை திறக்கத் திட்டமிடும் ஒவ்வொரு சமயமும் இந்த எச்சரிக்கை எழுகிறது. இந்த பெரு வணிக சங்கிலி தொடர் சிறு வணிகர்கள் மீது செலுத்தும் அழிவு பூர்வமான தாக்குதல் எல்லாவற்றையும் விட பெரிய கவலையாக இருக்கிறது. கிராமப்புற சமூகங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்த சில்லறை வணிகர்களை வால்மார்ட் அழித்தொழித்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வால்மார்ட்டைப் போல் இல்லாமல், குடும்பங்களால் நடத்தப்படும் கடைகள், தமது வருமானத்தை சமூகத்துக்குள்ளேயே செலவழிக்கிறார்கள். அவர்கள் மூடப்பட நேரிடும் போது மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. “பொதுவாக, (பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள்) சில்லறை விற்பனையை அதிகரிக்கிறார்கள், ஆனால் அது போட்டியிடும் சிறு சில்லறை வணிகர்களை அழிப்பது மூலமாகத்தான் நடக்கிறது,” என்று 'வால்மார்ட் இயக்கம்' பற்றி ஆய்வு செய்த அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் கென்னத் ஈ ஸ்டோன் சொல்கிறார்.

அவுட்லுக் கருத்து கேட்டதற்கு வால் மார்ட் பதில் சொல்லவில்லை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரு சில்லறை வணிகர்கள் உதவுவார்கள் என்று தம்பட்டம் அடிக்கப்படுவது கேள்விக்குரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சிகாகோவின் மேற்கு பக்கத்தில் வால்மார்ட்டின் தாக்கம் குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேவிட் மெர்ரிமேன் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார். விற்பனை அல்லது வேலை வாய்ப்பில் எந்த அதிகரிப்பையும் அவர் காணவில்லை. “சமூகத்துக்கு பொருளாதார முன்னேற்ற ஆதாயம் எதுவும் கிடைப்பதை நாங்கள் பார்க்க முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் தன்மையையும் விமர்சிப்பவர்கள் கேள்விக்குரியதாக்குகிறார்கள். “வால்மார்ட், டெஸ்கோ, கேரபோர் போன்ற கார்பொரேட்டுகள் இந்தியாவுக்கு வருவது பற்றிய பரபரப்புகளுக்கிடையே, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகக் கீழ் நிலை வேலை வாய்ப்புகளைத்தான வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்” என்று இந்தியா ரிசோர்ஸ் மையத்தின் உலக எதிர்ப்பு இயக்குனரான அமித் ஸ்ரீவத்சவா சொல்கிறார்.

வழங்கும் தொடர் சங்கிலியின் எல்லா கண்ணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள் தமது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். வால்மார்ட் தனது பெரிய அளவையும் வாங்கும் திறனையும் பயன்படுத்தி தான் வாங்கும் விவசாய பொருட்களுக்கும் தொழிற்சாலை பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கிறது ” என்கிறார் ஸ்ரீவத்சவா. இதன் விளைவாகத்தான் வாங்கும் உற்பத்தியாளர்களை “நசுக்குவதில் " வால்மார்ட் புகழ் பெற்றது. சிறு விவசாயிகள்தான் இழப்புகளை சந்திக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால், பல உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டின் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்கிறார் ஸ்டோன். பெரும் பெட்டி சில்லறை வணிகர்கள் அளிக்கும் குறைந்த விலைதான் நுகர்வோருக்கு கிடைக்கும் ஆதாயங்களில் முதல் இடம் பிடிக்கிறது. வேட்டையாடும் விலை குறித்த வால்மார்ட்டின் புகழ் பெரிதுபடுத்தப்பட்டது என்று சில பொருளியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். “நுகர்வோர் தாமாகவேதான் ஏற்கனவே இருக்கும் கடைகளை விட்டு வால்மார்ட்டுக்குப் போகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏதோ ஆதாயம் கிடைக்கிறது என்பது தெளிவு” என்று சொல்கிறார் மெர்ரிமேன்.

அமெரிக்காவின் வால்மார்ட் அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்? “பெரும்-பெட்டி கடை திறந்ததும் உலகே அழிந்து விடப் போவதில்லை என்று இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்டோன். காலணி அல்லது ஹார்ட்வேர் போன்ற தனிப்பட்ட கவனம் தேவைப்படும் கடைகள் பெரிய கடைகளுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டு தாக்குப் பிடிப்பதோடு செழித்து வளரக் கூட முடியும்.

ஐக்கிய உணவு மற்றும் வணிக தொழிலாளர்கள் பன்னாட்டு தொழிற்சங்கத்தின் ஆதரவில் செயல்படும் 'வால்மார்ட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது' அமைப்பின் பேச்சாளர் பென் வேக்ஸ்மேனின் கண்ணோட்டம் இவ்வளவு உற்சாகமாக இல்லை. “வாங்குபவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கான பாடம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொல்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத் துறையை திறந்து விட்டே தீருவோம் என்று இந்திய அரசாங்கம் அடம் பிடிக்க விரும்பினால், குறைந்தபட்சம் ஊழியர்களின் ஊதியமும் நலத்திட்டங்களும் மாற்ற முடியாத கல்லில் பொறிக்கப்பட்டதாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். “இந்தியாவின் சில்லறை வணிகத்தில் எந்த மாதிரியான தரத்தை அமைக்க வேண்டுகிறீர்கள் என்பதற்குத்தான் நாம் வந்து சேருகிறோம்" என்று அவர் சொல்கிறார். “அந்த தரங்களை ஏற்படுத்துவதை வால்மார்ட் கையில் விட்டு விட்டால், அதல பாதாளத்தில்தான் அவை போய் நிற்கும்”

கருத்துகள் இல்லை: