திங்கள், டிசம்பர் 26, 2011

டாடாவின் புதிய தலைமை


டாடா குழுமத்தின் இப்போதைய தலைவரான ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறும்போது அவரது இடத்தில் வரப் போகிறவர் அவரது மச்சான் உறவுமுறைக்கார சைரஸ் மிஸ்திரி என்று அறிவித்திருக்கிறார்கள்.

'உலகெங்கிலுமுள்ள திறமையான தலைமை நிர்வாகிகளை பரிசீலித்து அடுத்த குழுமத் தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம்' என்று இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களில் பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தது போல பரிசீலனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

டாடா குழும நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனிப்பெரும் உரிமையாளரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி (இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்). குடும்பத்துக்கு வெளியில் கட்டுப்பாடு போய் விடக்கூடாது என்ற ஒழுக்கமும், அதிக பங்குகள் வைத்திருப்பவர்தான் சட்டாம்பிள்ளை என்ற கார்பொரேட் ஒழுங்குமுறையும் தூக்கிப்பிடிக்கப்பட்டது யாருக்கும் வியப்பைத் தந்து விடவில்லை.

இந்தியாவின் பிற தொழிலதிபர்கள் புதிய இளவரசருக்கு தமது நல்வாழ்த்துக்களை முறையாக தெரிவித்துக் கொண்டார்கள்.

'அனில் அம்பானி ஊழல் செய்திருக்கலாம், சத்யம் ராமலிங்க ராஜூ மோசடி செய்திருக்கலாம், ஆனால் ஒரு டாடாவைப் போல ஒரு இன்போசிஸ்சைப் போல எல்லா நிறுவனங்களும் செயல்படுவதுதான் சொர்க்கபுரியை உருவாக்கும் மார்க்கம்'. 2010-11 நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய டாடா குழுமம்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் ஆதர்ச பிரதிநிதியாக தூக்கிப்பிடிக்கப்படுகிறவர்கள்.

'டாடான்னா நேர்மை' என்று விளம்பரங்களில் அவர்களே பறைசாற்றிக் கொள்வது யாருக்கு நேர்மையாக இருப்பது?

1840களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து அபின் விற்பதன் மூலம் சீன மக்களை போதைக்கு அடிமையாக்கும் விரிவாக்கக் கொள்கையை பின்பற்றியது. '(creation of wealth ) நாட்டுக்கு வளம் உண்டாக்குவது என்றால் நாட்டை ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் ஒட்டி நின்று பணம் சேர்ப்பதுதான்' என்பதை 19ம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பின்பற்றியவர் இன்றைய டாடாக்களின் மூதாதையர். அபின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து பொருள் ஈட்டியவர் ஒரு டாடா.

இது தொடர்பாக ஹாங்காங் அரசு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து (http://www.legco.gov.hk/1886-87/h870325.pdf)

"கூட்டத்தின் போது 'ஹாங்காங் அபின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்' என்ற ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தகர்களின் சார்பாக டேவிட் சாசூன் & சன்ஸ் நிறுவனத்தின் ஷெல்லிம் எசகீல் ஷெல்லிமும் டாடா & கம்பெனியின் ருத்தன்ஜீ டாடாவும் அடங்கியவர்கள் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்கள்”

20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவின் தந்தைதான் ருத்தன்ஜீ தாதாபாய் டாடா. 1991லிருந்து இன்று வரை பொறுப்பில் இருக்கும் ரத்தன் டாடா ஜேஆர்டி டாடாவின் மருமகன்.

1868ல் ஜாம்ஷெட்ஜி டாடா துணித்துறை நிறுவனம் ஒன்றை மும்பையில் நிறுவி டாடா குழுமத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். 1877 ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்ட நன்னாளில் தானும் தனது நண்பர்களும் பணம் போட்டு ஆரம்பித்த நாக்பூர் ஜவுளி ஆலைக்கு 'பேரரசி ஆலை' என்று பெயர் சூட்டி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ஜாம்ஷெட்ஜி டாடா.

'தமது அரசியல் அதிகாரம் போய் விட்டாலும் இந்தியாவை தொடர்ந்து கொள்ளை அடிக்க வழி வேண்டும்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலேயர்கள் 1884ல் ஆரம்பித்து வைத்த இந்திய தேசிய காங்கிரசின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் நின்றவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

இந்தியாவின் முதல் எ்கு ஆலை, மகாராஷ்டிரத்தில் நீர்மின்நிலையம், பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தாஜ்மகால் ஐந்து நட்சத்திர விடுதி என்று எதிர்கால டாடா குழுமத்தின் பரந்து பட்ட வர்த்த பேரரசின் அடித்தளங்களை அவர் உருவாக்கினார். இவற்றுக்குத் தேவையான நிலம், இயற்களை வளங்கள், அரசாங்க மானியம், வேண்டிய அனுமதிகள் பெறுவதற்கு அப்போதைய ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு இந்த 'தேசிய' நிறுவனங்களை கட்டி அமைத்தார்.

'இந்திய தேசிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது' என்று டாடாவின் வரலாற்றாசிரியர்களால் வியக்கப்படும் டாடா ஸ்டீல் முதலாம் உலகப் போரின் போது ஆங்கிலேய போர் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தண்டவாளங்கள் அமைக்க எ்கு தயாரித்து அளித்தது.

1916ல் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், "அமோக லாபம்... ஆரம்ப வடிவமைப்பை விட 30% உற்பத்தி அதிகரிப்பு... தயாராக, வாங்க விரும்பும் சந்தைகள், ஆர்டர் பதிவேடு நிரம்பி வழிகிறது" என்று மகிழ்ச்சியுடன் நிறுவன தலைவர் அறிவிப்பதற்கு உறுதுணையாக ஏகாதிபத்திய பேரழிவு போரை பயன்படுத்திக் கொண்டது இந்த தேசபக்த குழுமம்.

1938ல் பொறுப்பேற்ற ஜேஆர்டி டாடா அடுத்தடுத்து அமைந்த காங்கிரசு 'சோசலிச' உருவாக்கிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ் இவற்றுக்கு ஏற்றபடி டாடா குழும நிறுவனங்களை வளர்த்துச் சென்று தமது முன்னோடிகளின் சீரிய பணிகளை தொடர்ந்தார்.

இப்போதைய தலைவர் ரத்தன் டாடா, நெருக்கி வந்த உலக ஏகாதிபத்தியங்களுக்குத் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட ஆண்டுகளில் நீரா ராடியா போன்ற கார்பொரேட் தரகர்கள், பன்னாட்டு நிதி சூதாட்டம், மெகா ஊழல்கள் என்று டாடா குழும நிறுவனங்களை காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்தார்.

குழும நிறுவனங்களின் தேசிய பாசாங்குகளை உடைத்து டாடா ஸ்டீலை பிரிட்டனின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விழுங்க வைத்து அதை செரிக்க கசாயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டாடா மோட்டாருக்கு பிரிட்டனின் லேண்ட்ரோவர் - ஜாகுவார் என்ற கடப்பாரையை ஊட்டி விட்டு பன்னாட்டு குழுமமாக்கியிருக்கிறார். டிசிஎஸ் என்று அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி தகவல் தொழில் நுட்ப புரட்சியிலும் தமக்குரிய கணிசமான பங்கை பிடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களாயிருந்தாலும், நேருவின் சோசலிச அரசாக இருந்தாலும், 1980களுக்குப் பிறகான உலகமயமாக்கப்பட்ட சூழலாயிருந்தாலும், காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப தாளம் போட்டு திறமையாக தமது கால் பரப்பி வளர்வதுதான் இவர்களின் சிறப்பு. நேற்று முளைத்த காளான்களாக அம்பானிகளும், மிட்டல்களும் ஊழல்களில் மாட்டி விழித்துக் கொண்டிருக்க அப்படி எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், சட்டத்தின் வரையறைக்குள் தனது கொள்ளைகளை வைத்துக் கொள்வது அல்லது தமக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற கார்பொரேட் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

'காலத்துக்கேற்ப தொழில் முனைவு செய்வதுதான் எங்கள் தர்மம், அந்தந்த கால கட்ட அமைப்புகளுக்குள் திறமையாக செயல்பட்டு நாட்டில் வளங்களை உருவாக்கினோம்' என்பதுதான் டாடா போன்றவர்களின் தத்துவம். இனிய இசையை ஓட விட்டு, நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலை போட்டு தன் கழுத்து அறுக்கப்படுவதை உணராமலேயே ஆட்டின் சங்கை அறுப்பது அவர்களது அணுகுமுறை. அறுபடும் ஆடுகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இழைக்கும் கொடூரங்களை பொருட்படுத்தாமல் வர்த்தகம் செய்யும் இவர்களுக்கும் நாசி ஜெர்மனி அரசாங்கத்துக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வழங்கி ஹோலகாஸ்டுக்கு துணை போன ஐபிஎம் நிறுவனத்துக்கும் என்ன வேறுபாடு!

டாடா குழுமம் போன்ற 'நியாயமான' ஒரு நிறுவனம் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஆப்பிரிக்காவின் கடற்கரை நாடுகளிலிருந்து கருப்பு இன மக்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் விற்பனை செய்யும் அடிமை வியாபாரத்தின் மூலம் வளம் சேர்க்கத் தயங்கியிருப்பார்களா?

6 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இதைத்தனே


அப்படி இப்படி தான் இருக்கும் - விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்
மனிதர்களோடு, வெற்றி பெருபவர்களோடு அனுசரித்துப் போக வேண்டும்
அதுதான் மென் திறமை (soft skills, team management skills) என்று

இன்று மேலாண்மை பட்டப் படிப்புக்களில், பல நிறுவன பயிற்சி வகுப்புக்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.

Vetirmagal சொன்னது…

'வியாபார்ம் துரோக சிந்தனம்' என்று ஒரு பழமொழி தெலுங்கில் சொல்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லா விதங்களிலும் லாப்ம் சம்பாதிப்பவர்கள், தங்களை ஒழுக்கத் உள்ளவர்களாக காட்டிக் கொள்வதும் , அதை எல்லோரும் கொண்டாடுவதும் நம் நாட்டில் தொன்மையான பழக்கம். ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.

உண்மைத்தமிழன் சொன்னது…

படித்தேன். தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..

நன்றிகள்ண்ணே..!

மா சிவகுமார் சொன்னது…

//அப்படி இப்படி தான் இருக்கும் - விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் மனிதர்களோடு, வெற்றி பெருபவர்களோடு அனுசரித்துப் போக வேண்டும்//

'எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் நம் கண்டறியும் நேர்மையான வழியில்தான் வாழ வேண்டும்' என்ற போராட்டம் இன்றைய உலகின் நிதர்சனம். அதை ஏற்றுக் கொள்வதும் புறக்கணிப்பதும்தான் ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் கட்டளைக்கல்!

//எல்லா விதங்களிலும் லாப்ம் சம்பாதிப்பவர்கள், தங்களை ஒழுக்கத் உள்ளவர்களாக காட்டிக் கொள்வதும் , அதை எல்லோரும் கொண்டாடுவதும் நம் நாட்டில் தொன்மையான பழக்கம்.//

அதைத்தான் தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல் என்று வரையறுத்திருக்கிறார்கள் போல :-).

சுற்றுச் சூழலை சூறையாடும் எண்ணைய் நிறுவனங்கள் (ஷெல், BP) சுற்றுச் சூழல் பாதுகாப்பு விளமபரங்கள் காட்டுவதும், 50,000 பேருக்கு சாப்பாடு போட்டு உண்ணாவிரதம் நடத்துவதும் இதில் அடங்கும் :-)

//தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..//

இடுகையில் குறிப்பிடாத சம கால நிகழ்வுகள் இன்னும் பல இருக்கு சரவணன்.

டாடா நேனோ கார் தொழிற்சாலைக்காக மேற்கு வங்காள விவசாய நிலங்களை சூறையாடியது, அதன் பிறகு நவீன பாசிஸ்ட் மோடியிடம் டீல் போட்டுக் கொண்டு குஜராத்தில் இடம் பெயர்ந்தது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

'வாழ்வது எப்படி இருந்தாலும் எப்படிக் காட்டிக் கொள்கிறோம்' என்பது மட்டுமே முக்கியமாகிப் போய் விட்ட இந்த உலகில் டாடாவும் இன்போசிசும்தான் ஆதர்சங்கள்.

?!!!@#%* சொன்னது…

மா சி,

குறுகிய இடைவேளைக்கு பிறகு எழுதும் விஷயங்களில் உள்ள எண்ண ஓட்டம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

டாட்டா தலைமை இந்த நாட்டு குடிமகன் இல்லை, இதை நீங்கள் தொடாதது ஆச்சர்யம் அளிக்கிறது;
இந்தியர்கள் முட்டாள்கள் அவர்களுடைய பணமும் உழைப்பும் அரசும் தொடர்ந்து வெளி நாட்டவருக்கு அடகு வைக்கப்படுகிறது

நன்றி
சஹ்ரிதயன்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சஹ்ரிதயன்,

குறுகிய இடைவேளை இல்லை, கொஞ்சம் நீளமான இடைவேளைதான் :-).

இடைவேளையில் கற்றவையும் பெற்றவையும் எண்ண ஓட்டத்தை பெருமளவு மாற்றியிருக்கின்றன என்பதை நீங்களும் ஊகித்திருப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்துப் பேசுவோம்.

அன்புடன்,
மா சிவகுமார்