புதன், பிப்ரவரி 01, 2012

பொருளாதார பாடம் கசப்பது ஏன்?


இப்போதைய வாசிப்பு

இப்போது 3 புத்தகங்கள் வாசிக்கும் மேசையில் இருக்கின்றன.

  • முதலாவது அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற அ.அனிக்கின் எழுதிய சோவியத் வெளியீடு. 
  • இரண்டாவது A History of Capitalism (1500-2000) என்ற Michael Beud எழுதிய புத்தகம். பிரெஞ்சு பொருளாதார பேராசிரியரான அவர் 1980ல் ஆரம்பித்து 1999 பதிப்பில் நூற்றாண்டின் இறுதி வரைக்குமான வரலாற்றையும் சேர்த்து பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. 
  • மூன்றாவதாக கம்யூனிஸம் என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம். 

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற புத்தகம் மனித சமூகத்தில் பொருளாதார சிந்தனைகளின் வரலாற்றை விவரிக்கிறது. அரிஸ்டாட்டில் அரசியல் பொருளாதாரம் பற்றி கொண்டிருந்த கருத்துக்களில் ஆரம்பித்து 16ம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்திலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், ஹாலந்திலும் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த, பொருளாதார கோட்பாடுகளில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பற்றி விளக்குகிறது.

கேபிடலிசத்தின் வரலாறு என்ற புத்தகம் 18ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்தான வளர்ச்சிகள், 18ம் நூற்றாண்டின் புரட்சிகள், தொழில் மயமான வளர்ச்சி, காலனி ஆட்சி, உலகப் போர்கள், 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்து நிகழ்வுகள் என்று புள்ளிவிபரங்களுடனும் தகவலுடனும் பேசுகிறது.

அரவிந்தன் நீலகண்டனின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸிலிருந்து துவங்குகிறது. மார்க்சியம் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கம்யூனிசம் என்பது ஒரு வில்லத்தனமான கோட்பாடு என்பதை நிறுவுவது அந்த புத்தகத்தின் நோக்கம். மார்க்ஸ், எங்கெல்ஸ், அதன் பிறகு ரஷ்ய தலைவர்கள், சீனா, கம்போடியா, கியூபா என்று சோசலிச நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தனது பார்வையில் வண்ணம் அடித்து விளக்குகிறர். கம்யூனிசம் என்பது பஞ்சம், படுகொலை , பேரழிவுக்கு வழி வகுக்கும் என்பது புத்தகத்தின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை சொல்லப்படுகிறது.

பொருளாதாரம் வாசிப்பு அனுபவங்கள்

நான் முதலில் பொருளாதாரம் பற்றி படிக்க ஆரம்பித்தது கல்லூரியில். தோல் தொழில்நுட்பம் படித்தாலும், கல்லூரியின் இறுதி ஆண்டில் 7வது பருவத்தில் ஒரு மேலாண்மை பாடமாக பொருளாதாரம் இருந்தது.  அந்த வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பிடித்திருந்தன. அதிலிருந்து தேடிப்பிடித்து சில அமெரிக்க பொருளாதார பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அமெரிக்க தகவல் மையத்தின் நூலகத்தில் உறுப்பினராக இருந்ததால் Economics  என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து புத்தகங்களை படிக்க முடிந்தது.

டிமாண்ட், சப்ளையிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி, சந்தைகள், நுகர்வோர், போட்டி, போட்டியின்மை, ஏகபோகம், குடும்பங்களின் வருமானம், தனிநபரின் நிறைவு, உற்பத்தியில் செலவுகள், தேசிய வருமானம், வேலை வாய்ப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், வரி விதிப்பு, அரசின் அவசியம், அரசின் பணிகள், உலக வர்த்தகம் என்று எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான தலைப்புகள் இருந்தன.

இவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருந்தது பால் சாமுவேல்சன் எழுதிய புத்தகம். அதுதான் பல பல்கலைக் கழங்களில் பாடநூலாக பின்பற்றப்பட்டது. 1980களிலேயே 12வது பதிப்பு வந்து விட்டதாக நினைவு. இப்போது 20வது பதிப்புக்கு அருகில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிந்தைய பதிப்புகளில் நார்ட்ஹவுஸ் என்பவருடன் இணைந்து நூலை எழுதி வெளியிட்டார்.

பொருளாதார பாடத்தில் இரண்டு பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, எப்படி முடிவுகள் எடுக்கின்றன என்பதைப் பற்றியது, மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, நாடுகள், சமூங்கள் எப்படி செயல்படுகின்றன, முடிவுகள் எடுக்கின்றன, பிற நாடுகளுடன் உறவாடுகின்றன என்பதைப் பற்றியது.

மைக்ரோ எகனாமிக்ஸ் கொஞ்சம் விறைப்பாக செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். மேக்ரோ எகனாமிக்ஸ் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் நமது வாழ்க்கைக்கு மைக்ரோ எகனாமிக்ஸ்தானே தேவையானது என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் நாம் எப்படி முடிவு எடுக்கிறோம், எப்படி பொருட்களை நுகர்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி பேரம் பேசுகிறோம் என்பதை விளக்குகிறது.

பொருளாதார பாடப்புத்தகங்களை தவிர 20ம் நூற்றாண்டின் மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் எழுதிய பொதுவான புத்தகங்களையும் படித்தேன். குறிப்பாக கேல்பிரித் என்பவர் எழுதிய affluent society முதலான புத்தகங்கள். ஆல்வின் டோப்ளர் எழுதிய future shockIn search of excellence என்ற ஆய்வு நூல். முந்தையதில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித வாழ்க்கை எப்படி மாறும் என்று பக்கம் பக்கமாக விளக்கியிருப்பார். இரண்டாவது நூலில் அமெரிக்காவின் தலை சிறந்த நிறுவனங்கள் எப்படி தரத்தையும், வாடிக்கையாளர் சேவையையும் சாதிக்கின்றன என்று பல நிறுவனங்களை ஆய்வு செய்த நூல். Small is beautiful என்ற நூல் சூமாகர் எழுதியது. 20ம் நூற்றாண்டின் பெரும் நிறுவனங்கள், பெருமளவிலான உற்பத்தி என்பது மாறி சிறு அளவிலான உற்பத்தியாக உருமாறும் என்பது அவரது கோட்பாடு.

கல்லூரியில் படித்த மற்ற எந்த பாடத்தையும் விட இந்த பொருளாதாரம் தொடர்பான வாசிப்பு மிகவும் பொருள் பொதிந்ததாக தோன்றியது.

நடைமுறை பொருளாதார வாசிப்பு

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் இத்தகைய புத்தகங்களை படிப்பதை தொடர்ந்தேன். கையில் காசு கிடைத்ததால் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகம் வாங்கிக் கொண்டேன். இந்தூரின் நடைபாதைக் கடைகளில் வாங்கி குவித்தவை தனி. அந்தக் கட்டத்தில் சுமார் 1994 வாக்கில் தினமும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். மன்மோகன் சிங்/நரசிம்ம ராவ் சந்தைப் பொருளாதாரத்தை அவிழ்த்து விட்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த கால கட்டம். சுமார் 2 ஆண்டுகள் அந்த நாளிதழை படித்துக் கொண்டிருந்தேன்.

எகனாமிக் டைம்ஸ் இந்தூருக்கு பம்பாயிலிருந்து வரும். மாலையில்தான் வீட்டுக்குக் கொண்டு போடுவார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்து பயணத்தில் அதைப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவும், எகனாமிக் டைம்சும் குப்பை பத்திரிகைகளாக மாறுவதற்கு முந்தைய கட்டம். இந்திய பொருளாதாரம், வணிக நிறுவனங்கள், அரசு கொள்கைகள், பங்குச் சந்தை, விலை வாசி என்று பொருளாதாரம் சார்ந்த விபரங்களை அதில் படிக்க முடிந்தது.

படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமில்லாத தலைப்புகள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவை செய்திகளுக்கு துணையாக அணிவகுக்க ஆரம்பித்திராத காலகட்டம் அது.

இந்த நாளிதழிலும் மைக்ரோ எகனாமிக்ஸ் குறைந்த அளவிலேயே வந்தது. முதலீட்டு ஆலோசனைகள், வரி விதிப்பு தொடர்பான கேள்வி பதில் என்று ஓரிரு பக்கங்களோடு அது நின்று விட்டிருந்தது. எந்த ஒரு செய்தி அலசலையும் எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டின் அரசியல், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி. உலக பொருளாதார நிலைமை இவை மூன்றுமே தலை காட்டி விடும்.

டாடா ஸ்டீல் பற்றி அலசல் இருந்தால் அதில் இந்த மூன்று முக்கிய காரணிகளையும் பற்றி பேசியிருப்பார்கள். நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, மொத்த வருமானம், லாபம், எதிர் கால திட்டங்கள் இவற்றின் பின்னணியிலேயே பேசப்பட முடியும்.

மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது செயற்கையானது என்று தோன்றினாலும், நமக்கென்ன தெரியும், மெத்தப்படித்த பொருளாதார ஆசிரியர்கள் அப்படிப் பிரித்து விளக்கினால் ஏதாவது பொருள் இருக்கத்தான் செய்யும் என்று அதை மனதுக்குள்ளேயே அழுத்திக் கொள்வேன். மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது இளங்களை பொருளாதார வகுப்புகளில் மார்ஷல் என்ற இங்கிலாந்து பேராசிரியர் எழுதிய மைக்ரோ எகனாமிக்ஸ் பாட புத்தகங்கள்தான் முதன்மையாக போதிக்கப்படுகின்றன என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். எகனாமிக்ஸ் படிக்க யாரும் ஆர்வமாக முன் வராதது புரிந்தது போல இருந்தது.

2006ல் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆன பிறகு சாமுவேல்சனின் புத்தகத்தில் தரப்படுள்ள கோட்பாடுகளை சிறு சிறு பதிவுகளாக எழுதலாம் என்று முயற்சித்து கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளையும் எழுதினேன். அப்போது எகனாமிக் டைம்ஸ் படிக்க முடியாதபடி (எனக்கு) ஆகி விட்டிருந்தது.

பொருளாதார வரலாற்று நாயகர்கள்

சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகத்தில் பொருளாதாரவியலின் வரலாறுஆதம் ஸ்மித்திடமிருந்து ஆரம்பிக்கும். அவர்தான் நவீன பொருளாதாரவியலின் தந்தை. நாடுகளின் செல்வத்துக்கு காரணங்களைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர்.

அடுத்ததாக டேவிட் ரிக்கார்டோ என்பவர்.

மூன்றாவதாக காரல் மார்க்சின் மூலதனம் என்ற ஆய்வு நூல், அதன் விளைவுகள்.

1930களில் கீன்ஸ் என்ற இங்கிலாந்து பிரபு எழுதிய நாட்டின் வேலை வாய்ப்பு, வளர்ச்சி பற்றிய புத்தகம்.

1960களில் மில்டன் பிரீட்மேன், கால்பிரித் போன்றவர்களுடன் முடியும்.

முந்தைய பதிப்புகளில் காரல் மார்க்சுக்கு நான்கைந்து பக்கங்கள் ஒதுக்கி அவர் கணித்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள், அது எப்படி தவிர்க்கப்பட்டு வருகிறது என்று விளக்கியிருப்பார்கள். சமீபத்திய பதிப்புகளில் அது ஒரு பெட்டிக் குறிப்பு அளவுக்குச் சுருங்கியிருந்தது.

பொருளாதாரவியலில் முரண்நிலைகள்

பொருளாதார துறையில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே எதிரெதிர் கோட்பாட்டு முகாம்கள் செயல்பட்டே வந்திருக்கின்றன. ஆதம் ஸ்மித், கீன்ஸ், பிரீட்மேன் போன்றவர்கள் ஒரு முகாம் என்று வைத்துக் கொண்டால் ரிகார்டோ, மார்க்ஸ், கேல்பிரித் போன்றவர்களை எதிர் முகாமில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த கோட்பாட்டு முரண்பாடுகளைப் பற்றி அந்த பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை.

தண்ணீர்

சாமுவேல்சனின் புத்தகத்தில் ஒரு முக்கியமான கேள்வி.

'பொருளின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது' என்பது ஒரு கோட்பாடு. 'அப்படியென்றால் மிகவும் பலனளிக்கும் தண்ணீரின் விலை குறைவாகவும், பயன் மதிப்பு இல்லாத வைரத்தின் விலை மிக அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன?' என்பது கேள்வி.

அதாவது புத்தகம் சொல்லித் தரும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் முரண்பாடு காட்டும் கேள்வி. வைரத்துக்கும் தண்ணீருக்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக வெளிப்படையாக தெரிந்தாலும் இதை மாதிரி மற்ற பொருட்களிலும் இதே முரண்பாடுகள் இருக்கின்றன.

அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். 'பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (marginal utility)' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.

ஒரு பொருளாதார மனிதனுக்கு முதல் 1 லிட்டர் தண்ணீரின் பயன்பாடு வைரத்தை விட உயர்ந்தது. தண்ணீரே கிடைக்கா விட்டால் வைரத்தைக் கூட கொடுத்து குடிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீர் வாங்கத் தயாராக இருப்பார். அடுத்தடுத்து 1000 லிட்டர், 10000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் போது அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது, ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிடச் சாப்பிட திகட்டுவதைப் போல. வைரத்தின் உயர்ந்த விலைக்குக் காரணம் அது குறைவாக கிடைப்பது, அதனால் இறுதி அலகின் பயன்பாடு அதிகம். தண்ணீரின் அதிக விலைக்கு காரணம் அது அதிகமாக கிடைப்பது.

இது பாடப் புத்தகம் நிறைய கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று படித்து விட்டு நகர்ந்து விடுவோம். அதை நம்பி நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அலசலில் மிகப்பெரிய ஓட்டை இது கேள்வியை அதற்கு தொடர்புள்ள முக்கியமான பகுதியை விட்டு விட்டு பரிசீலிக்கிறது என்பதே. தண்ணீர் அதிகமாக கிடைப்பதற்கு காரணம் என்ன? வைரம் குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் கிடைப்பதை நிர்ணயிப்பது எது?


இந்த கேள்விக்குள் எங்கு வருவோம் என்றால், தொழிற்சாலையின் உற்பத்தி செலவுகள் பற்றி பேசும் போது. ஒரு தொழிலாளர் அல்லது இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி கூடுதல் அலகைப் பொறுத்தது என்று இன்னும் ஒரு சிக்கலான கோட்பாட்டை அறிமுகம் செய்வார்கள். அதனால்தான் மைக்ரோ எகனாமிக்ஸ் வறட்சியாக பட்டது என்று நினைக்கிறேன்.


நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தருணம்

ஒருவருக்கு வயிற்று வலி என்றால் அதற்கு பல காரணங்கள்  இருக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எல்லா உறுப்புகளுக்கும் அதில் பங்கு அல்லது அதன் விளைவில் பங்கு உண்டு. வயிற்று வலி காரணமாக சரியாக சாப்பிடா விட்டால் உடம்பில் எந்த உறுப்புக்கும் சக்தி கிடைக்காத நிலை ஏற்படும். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் யாராவது வயிற்று வலியைப் பற்றி பேசவோ, ஆய்வு செய்யவோ, மருந்து கொடுக்கவோ முயற்சிக்கிறார்கள் என்றால் நமக்கு சிரிக்கத் தோன்றும்.

அதே முயற்சிதான் பொருளாதார பாடத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார பாடத்திலிருந்து விரிவடைந்து முழு பொருளாதாரத்துக்கும் உலக சமூகத்துக்கும் அப்படித்தான் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார்கள். ஆதம் ஸ்மித்தின் பொருளாதார மனிதனின் சுயநலத்தில் ஆரம்பித்து, கீன்ஸின் முழு வேலை வாய்ப்புடனான சமூகத்தை உருவாக்க அரசின் பங்கு என்பது வரை முழுமையை புறக்கணித்து விட்டு பகுதிக்கு மட்டும் களிம்பு போடும் வேலையை செய்கிறார்கள்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி செய்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?

சார்புக் கொள்கையை உருவாக்கிய 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு குவாண்டம் அறிவியலை ஏற்றுக் கொள்வதில் மறுப்பு இருந்தது. 'கடவுள் பகடையாடுவதில்லை' என்று சொல்லி அதை நிராகரித்தார். குவாண்டம் கோட்பாடுகளின்படி ஒரு துகளின் இடம் அல்லது வேகம் இரண்டையும் முற்றிலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அது கடவுளால் கூட முடியாது என்பது அதன் நீட்சி. கடவுளை நம்பும் ஐன்ஸ்டைனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் குவாண்டம் அறிவியலுக்குள் அவர் வேலை செய்யவில்லை.

இயற்கை அறிவியலிலேயே அறிவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் போது சமூக அறிவியலான பொருளாதாரவியலில் இந்த தாக்கம் இரண்டற கலந்து இருந்தது.

அறிவியல் அணுகுமுறை தரும் முடிவுகள்

பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்ந்து, பொருளின் விலையின் இரண்டு பக்கத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சி தரும்படி இருந்தன. ரிக்கார்டோதான் பொருளின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் ஆராய்ச்சி செய்து முழுமையாக வெளிப்படுத்தியவர். அதன் விளைவுகளை விளக்கிச் சொல்ல அவரது வளர்ப்பும் சூழ்நிலையும் வழி தரவில்லை. அவர் காலத்திய மற்ற அறிஞர்கள் அவரை நிராகரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

காரல் மார்க்ஸ் அந்த விளைவுகளை அவற்றின் இயல்பான இறுதி நிலை வரை விளக்கி மூலதனம் எழுதினார். அதற்கான நேர்மையான பதில் இன்று வரை முதலாளித்துவ பொருளாதாரவியலில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேக்ரோ, மைக்ரோ எகனாமிக்ஸ், இறுதி அலகின் கூடுதல் பயன்பாடு,  என்று செயற்கையாக கோட்பாடுகளை உருவாக்கி மழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த கோட்பாடுகள் தலை சிறந்த அறிஞர்களால் வளர்த்து நிறுவப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

விளைவுகளை நான் காலனி படையெடுப்புகளாக, உலகப் போர்களாக, கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளாக, போபால் விபத்தாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக, 2G ஊழலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்கள். காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள். இஸ்லாமிய ஜிகாத், நாடு பிடிக்கும் ஆசை, இன வெறி, சர்வாதிகாரி என்று பல காரணங்கள் பல வழிகளில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் எந்த பிரச்சனையும் இது வரை தீர்ந்ததாக வரலாறு இல்லை. பிரச்சனைகள் மறக்கப்பட்டு விடுகின்றன, அல்லது அடுத்து வரும் இன்னொரு பிரச்சனையால் மறைக்கப்பட்டு விடுகின்றன.

பொருளின் மதிப்பு

பொருளின் விலை அல்லது மதிப்பு குறித்த கேள்விதான் இதற்கு அடிப்படை. பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது எது?

பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.

இங்கு இரண்டாவதாக புரிந்து கொள்வதற்கு சிரமமான கடைசி அலகின் கூடுதல் மதிப்பு என்ற கோட்பாடு தேவையே இல்லை. ஒரு பொருள் எவ்வளவு பயன் மதிப்பு உடையதாக இருந்தாலும் அதன் உற்பத்தி உழைப்புதான் அதன் விலையை தீர்மானிக்கிறது. பயன் மதிப்பு இல்லாத பொருளுக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டாலும் விலை அந்த அளவு கிடைக்காமல் போய் விடலாம். உதாரணமாக ஒருவர் பல நாட்கள் உழைத்து ஒரு ஓவியம் வரைகிறார், யாரும் அதை வாங்க முன்வரவில்லை (பயன் மதிப்பு இல்லை) என்றால் அதற்கு விலை இல்லை, அல்லது விலை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பயன் மதிப்பினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை உற்பத்தி செலவுதான் என்பதை கவனிக்க வேண்டும். அந்த உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் அதன் உற்பத்தி நின்று விடும்.

பயன் மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு செயற்கையானது. அதை தாங்கிப் பிடிக்க செயற்கையான பல நடவடிக்கைகள் தேவை, கீன்சின் முழு வேலை பொருளாதார கோட்பாட்டிலிருந்து பிரீட்மேனின் பணக் கொள்கை வரை பல வழியில் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.

6 கருத்துகள்:

சதுக்க பூதம் சொன்னது…

நல்ல பதிவு. Ludwig von Mises(ஆஸ்திரிய பொருளாதார கொள்கை) உடைய The Theory of Money and Credit கூட நல்ல புத்தகம் என்று நினைக்கிறேன்

வவ்வால் சொன்னது…

மாசி,

வணக்கம், எக்க சக்கமாக படிச்சு இருக்கிங்க, அதுவும் பொருளாதாரத்துல. ஆச்சர்யமும், பிரமிப்பும் தருது.

ஹி..ஹி முன்னர் நான் போட்டித்தேர்வுக்கு பொருளாதாரத்தை விருப்ப பாடமா எடுத்து அப்ஜெக்டிவ் டைப்புல படிச்சேன்.பல்பும் வாங்கினேன். எனக்கு பேருங்க, போல ஒரு வரி சமாச்சாரம் தான் கொஞ்சம் தெரியும்.

உங்கக்கிட்டே பொருளாதாரம் பற்றி பேச தயக்கமா இருக்கு ஆனால் கேட்காம போக முடியலை.:-))

//பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.//

இப்போ நிலக்கரியை ஆழமா சுரங்கத்தில் இருந்து தோண்டுறாங்க, அதை பட்டை தீட்டி விற்றால் வைரம் அளவு விலை போகுமா? வைரத்தின் அரிய தன்மைக்கு தான் அதிக மதிப்பு.

ரோல்ஸ் ராய்ஸ் கார் விட வேகமாக போகும் சொகுசு கார்கள் இருக்கு ஆனால் ரோல்ஸ்ராய்ச் கார் ஏன் விலை அதிகமா இருக்கு. அதுக்குனு ஒரு பிராண்ட் வேல்யு, அது கொடுக்கும் ஸ்டேட்டஸ் சிம்பல் என பலதும் இருக்கு.இப்படி உற்பத்தி செலவை விடபன்மடங்கு விலை அதிகம் வைப்பதும் உண்டு.அதை வாங்குபவர்களும் உண்டு. அவங்களை கான்ஸ்பைகியஸ் கன்சூயுமர் என்கிறார்கள். அடுத்தவரை கவரும் வண்ணம் வாங்குபவர்கள். அப்படிப்பட்ட பொருள்களுக்கு வெப்லென் பொருள் என்று பெயர். விலை அதிகமாக ஆக டிமாண்ட் ஏறும். ஆப்பிளின் ஐப்பாட் இந்த அடிப்படையிலே அதிக விலை வைக்கப்படுகிரது. அதன் உற்பத்தி செலவின் அடிப்படையில் அல்ல.


//அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். 'பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (marginal utility)' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.//

மார்ஜினல் யுடிலிடி வைத்து விலை மதிப்புக்கு சொல்வதை விட நுகர்வுக்கு சொல்வதே சரியா இருக்கும். டிம்னிஷிங் ரேட் ஆப் மார்ஜினல் யுடிலிட்டி -குறையும் நுகர்வு தேவை எனலாம். இதுக்கு ஐஸ்கிரிம் உதாரணம் சொல்லி இருப்பாங்களே :-)) தேவை நிறைவடையும் புள்ளியை மார்ஜினல் யுடிலிட்டி காட்டும்.

மா சிவகுமார் சொன்னது…

//வணக்கம், எக்க சக்கமாக படிச்சு இருக்கிங்க, அதுவும் பொருளாதாரத்துல. ஆச்சர்யமும், பிரமிப்பும் தருது.//

பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஆழமாக மூளைக்கு வேலை கொடுக்கும் படிப்பு நின்று போயிருந்தது. நான் குறிப்பிட்ட புத்தகங்களை எல்லாம் மேலோட்டமான வாசிப்புகளாகவே கதை புத்தகம் படிப்பது போல படித்திருந்தேன். சிலவற்றை திரும்பத் திரும்ப படித்ததால் கோட்பாடுகள் மூளையில் பதிந்தன. பொதுவாக, பாடப் புத்தகம் படிக்கும் உழைப்புடன் இந்த புத்தகங்களை அப்போது படித்ததில்லை.

//இப்போ நிலக்கரியை ஆழமா சுரங்கத்தில் இருந்து தோண்டுறாங்க, அதை பட்டை தீட்டி விற்றால் வைரம் அளவு விலை போகுமா? வைரத்தின் அரிய தன்மைக்கு தான் அதிக மதிப்பு.//

நிலக்கரி ஆழமாக சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டாலும், ஈடுபடுத்தப்படும் உழைப்புக்கு கிடைக்கும் அளவு அதே அளவு உழைப்புக்கு சுரங்கத்திலிருந்து கிடைக்கும் வைரத்தை விட பல ஆயிரம் மடங்கு அதிகம்.

இப்படிப் பாருங்கள்.

1. மண்ணில் புதைந்து கிடக்கும் வைரம் அல்லது நிலக்கரி - மதிப்பு=0 (உழைப்பு அளவில்)
2. சுரங்கம் தோண்டி எடுக்கும் உழைப்பின் அளவு இரண்டுக்கும் = x (1 லட்ச ரூபாய்) என்று வைத்துக் கொள்வோம்.
3. x உழைப்பில் கிடைக்கும் வைரத்தின் எடை - 100 கிராம்
4. x உழைப்பில் கிடைக்கும் நிலக்கரியின் எடை - 1000 டன்

இப்போது
பட்டை தீட்டாத வைரத்தின் மதிப்பு (கிலோவுக்கு)=10 லட்ச ரூபாய்
நிலக்கரியின் மதிப்பு (கிலோவுக்கு) = 1,00,000/10,00,000=0.1 ரூபாய்

தகவல் (விக்கிபீடியாவிலிருந்து) -
நிலக்கரி ஆண்டு உற்பத்தி= சுமார் 7 பில்லியன் டன்
வைரம் ஆண்டு உற்பத்தி = சுமார் 26 டன்.

//ரோல்ஸ் ராய்ஸ் கார் விட வேகமாக போகும் சொகுசு கார்கள் இருக்கு ஆனால் ரோல்ஸ்ராய்ச் கார் ஏன் விலை அதிகமா இருக்கு. அதுக்குனு ஒரு பிராண்ட் வேல்யு, அது கொடுக்கும் ஸ்டேட்டஸ் சிம்பல் என பலதும் இருக்கு.இப்படி உற்பத்தி செலவை விடபன்மடங்கு விலை அதிகம் வைப்பதும் உண்டு.அதை வாங்குபவர்களும் உண்டு. அவங்களை கான்ஸ்பைகியஸ் கன்சூயுமர் என்கிறார்கள். அடுத்தவரை கவரும் வண்ணம் வாங்குபவர்கள். அப்படிப்பட்ட பொருள்களுக்கு வெப்லென் பொருள் என்று பெயர். விலை அதிகமாக ஆக டிமாண்ட் ஏறும். ஆப்பிளின் ஐப்பாட் இந்த அடிப்படையிலே அதிக விலை வைக்கப்படுகிரது. அதன் உற்பத்தி செலவின் அடிப்படையில் அல்ல.//

காரணத்தை விளைவோடு குழப்பக் கூடாது :-). நீங்கள் சொல்வது எல்லாம், மதிப்பு மார்ஜினல் பயன்பாட்டிலிருந்து ஏற்படுகிறது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும் பணிகளின் விளைவுகள்.

சிகப்பழகு கிரீம் உற்பத்தி குழந்தை ஊட்டச் சத்து உணவு உற்பத்தியை விட அதிகம் நடப்பதும் இந்த மார்ஜினல் யூட்டிலிட்டிக்குப் பின்னால் வணிக நிறுவனங்களை செலுத்தும் கோட்பாட்டின் காரணத்தால்தான்.

//மார்ஜினல் யுடிலிடி வைத்து விலை மதிப்புக்கு சொல்வதை விட நுகர்வுக்கு சொல்வதே சரியா இருக்கும். டிம்னிஷிங் ரேட் ஆப் மார்ஜினல் யுடிலிட்டி -குறையும் நுகர்வு தேவை எனலாம். இதுக்கு ஐஸ்கிரிம் உதாரணம் சொல்லி இருப்பாங்களே :-)) தேவை நிறைவடையும் புள்ளியை மார்ஜினல் யுடிலிட்டி காட்டும்.//

அதாவது சந்தையில் பரிமாற்றத்துக்கு இரண்டு பக்கங்கள் = தேவை (demand), வழங்கல் (supply).

பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவது எதை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் கேள்வி. வழங்கலில் செலுத்தப்பட்ட உழைப்புதான் மதிப்பின் அடிப்படை.

தேவை அளவு பொருளின் மதிப்பை தீர்மானிப்பதில்லை, அந்த பொருள் வாங்கப்படுமா என்பதையும் அதைப் பொறுத்து எதிர்காலத்தில் அதை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு செலுத்தப்படுமா என்று மட்டும்தான் தீர்மானிக்கிறது.

இதை தலைகீழாக திருப்பிப் போட்டதன் விளைவுகள் நாம் பார்க்கும்/நீங்கள் குறிப்பிட்ட பிராண்ட் வேல்யூ, ஸ்டேடஸ் சிம்பல் போன்றவற்றுக்கு செலவிடப்படும் முயற்சிகள். அவற்றினால் சமூகத்துக்கு எந்த பலனும் இல்லை,

ஒரு பெண் தனது இயல்பான தோல் நிறத்துடன் இருப்பது அழகற்றது என்று அவரை நம்ப வைத்து, அதற்கு ஒரு கிரீமை விற்பதில் என்ன பயன் மதிப்பு கிடைக்கிறது?

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சதுக்கபூதம்.

லுட்விக் வான் மிசசின் புத்தகத்தையும் குறித்துக் கொள்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் படிப்பதற்கு.

இவர்கள் வரிசையில் 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் முக்கியமான பொருளாதார பணிகளை செய்த பெஞ்சமின் பிராங்கிளினையும் சேர்க்க வேண்டும்.

parithy360 சொன்னது…

I have read all your posts and never put my feedback till now.

But this time I really want to put some feedback because of your different thinking on economics.

I have the same frequency with you regarding the economic concepts which you have insisted in some of your old posts. I really appreciate your effort for the posts and kindly keep on doing this great job.

Regards,
Parithy
Malaysia.

மா சிவகுமார் சொன்னது…

Parithi,

The concepts discussed in this post have a long history. Traces of these are found even in Aristotle's economic philosophy.

In modern economics, Ricardo arrived at theory of value. Karl Marx developed it and gave a full scientific basis to it.

The point is, it is nothing new we discuss here. We have been denied the opportunity to learn this in school or in other popular reading material.

Thanks.