வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பேஸ்புக் கணக்கு ஒழிப்பு


பேஸ்புக் கணக்குகள் நீக்குதல்

பேஸ்புக் கணக்குகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து விட்டேன். பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடினால் இரண்டு லிங்குகள் கிடைத்தன. எல்லாமே பேஸ்புக்கின் உதவிக் குறிப்புகள்தான். (http://www.facebook.com/help/search/?q=how+do+i+delete+my+account)

முதல் குறிப்பில், கணக்கில் புகுபதிகை செய்து அமைப்புகள் போய், கணக்கை முடக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும். அலுவலக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட, குறைவான செயல்பாடுகள், நண்பர்கள் கொண்ட கணக்கில் லாகின் செய்திருந்தேன்.

அதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கத்தில் 'நண்பர்கள்' புகைப்படங்கள் வரிசையாக வைத்து, "இன்னார் உங்களை தேடுவார், அன்னார் உங்களை தேடுவார்" என்று உணர்வுரீதியான அழுத்தம் தரும் பக்கம். அதிலும் உறுதி சொன்ன பிறகு அடுத்த பக்கத்தில் "ஏன் பேஸ்புக் கணக்கை முடக்க விரும்புகிறீர்கள்?' என்ற கருத்தெடுப்பு. 'பாதுகாப்பு குறித்த கவலை' என்று தேர்ந்தெடுத்தேன். அடுத்த பக்கத்தில் கடவுச்சொல்லை உறுதி செய்து, captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும். அதற்கடுத்த பக்கத்தில் வெளியில் அனுப்பி விட்டார்கள். மின்னஞ்சலுக்கு, இப்படி "உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கணக்கை பயன்படுத்த விரும்பினால், உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்தால் போதும், உங்கள் விபரங்கள், அமைப்புகள் இப்போது இருந்தபடியே திரும்ப கிடைத்து விடும்' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

இன்னொரு கணக்கு தனிப்பட்ட மின்னஞ்சலுடன் இணைந்தது. பொதுவாக பேஸ்புக்கில் எதையும் எழுதவோ, தகவல் அறிவிக்கவோ செய்யாமல் இருந்தாலும், பேஸ்புக்கில் செயல்படும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய அழைப்பை ஏற்பது மட்டும் செய்து கொண்டிருந்தேன். அப்படி நிறைய அழைப்புகள் சேர்ந்து வாரத்துக்கு நான்கைந்து முறையாவது எட்டிப் பார்க்கும் கணக்காக அது இருந்தது. அதில் நுழைந்து கணக்கை நீக்குவது பற்றிய தேடலின் இன்னொரு சுட்டிக்குப் போனேன். 'நீங்கள் கணக்கை நிரந்தரமாக முற்றிலுமாக அழிக்க விரும்பினால்' என்ற தலைப்பில் அதன் விளைவுகளை விளக்கி விட்டு, 'அப்படி விரும்பினால் இந்தச் சுட்டியை கிளிக்கவும்' என்று ஒரு சுட்டி இருந்தது. அதை கிளிக்கியதும் கடவுச்சொல்லை உறுதி செய்து captcha உள்ளிட்டதும் 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைத்து விபரங்களும் அமைப்புகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும். அதற்குள் நீங்கள் விரும்பினால் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் மூலம் லாகின் செய்து அதைச் செய்யலாம்' என்று அறிவிப்பு. அதே விபரம் மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டிருந்தார்கள்.

பேஸ்புக் கணக்கை நீக்குவதில் அதிக மனப் போராட்டம் ஏற்பட்டு விடவில்லை. புகைப்படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள் என்று எதிலுமே பேஸ்புக்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் சேர்த்த புகைப்படங்களில் எனது படத்தில் டேக் செய்திருந்தது மட்டும் எனது டைம்லைனில் வந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்தது போய் விடுமே என்ற வருத்தம் இல்லை.

பேஸ்புக் மீதான ஆரம்ப அணுகுமுறை

ஏன் பேஸ்புக் கணக்கை நீக்க வேண்டும்? இணையத்தில் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் பெரிதும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிந்தாலும், அவற்றை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மாறவில்லை. டுவிட்டர், கூகுள்+, கூகுளின் பிற சேவைகளில் கணக்கு இருக்கிறது. அவ்வப்போது குறைந்த அளவிலான கருத்து தெரிவிப்புகளையும் செய்கிறேன். பிளாக்கர் மூலம் வலைப்பதிவுகளில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கின் மீது ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் நிறைய இருந்தது. பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க பயனர்கள் ஸ்லாஷ்டாட்டில் வைத்த விமர்சனங்களை நிறைய படித்திருந்தேன். அப்போது பேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் என்று சமூக வலைத்தளங்களின் போட்டி தணிய ஆரம்பித்து பேஸ்புக் முன்னணியில் வர ஆரம்பித்திருந்த சமயம். 'பேஸ்புக்கில் சுய தகவல்களுக்கு பாதுகாப்பு, அந்தரங்கம் இல்லை' என்பதுதான் அந்த விமர்சனங்களின் சாராம்சம்.

என்னைப் பொறுத்த வரை 'அந்தரங்கமாக தகவல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வலைப்பதிவில் கூட  நாட்குறிப்பு என்ற பெயரில் முடிந்த வரை மற்றவர்களை குறிப்பிடாமல் எனது தினசரி வாழ்க்கையை பதிவு செய்து வந்தேன். ஆனால் 'பேஸ்புக்கின் கவர்ச்சியில் சிக்கி தம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது' என்பது லாஜிக்கான வாதமாக இருந்தது. அந்த வாதத்தை நிரூபிப்பது போல நடைமுறையில் பல செய்திகள், நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

பேஸ்புக்கின் வெற்றி அடிப்படை

பேஸ்புக்கின் அடிப்படை கோட்பாடு, 'யாருக்கும் அந்தரங்கம் இல்லை' என்பதுதான். 'பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதுதான்' பேஸ்புக்கின் வணிக அடிப்படை. அடிப்படையில் பேஸ்புக்கின் வடிவமைப்பு, பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பொதுவில் வெளியிடும் வகையில் இருந்தது/இருக்கிறது. அந்தரங்க பாதுகாப்பு ஆர்வலர்களின் தொடர்ந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேஸ்புக் கூடுதல் பாதுகாப்புகளை அடிப்படை வடிவமைப்பின் மீது ஏற்படுத்திக் கொண்டது.

அதன் மூலம், இப்போது ஒருவர் 'விரும்பினால்', தனது விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், அப்படி எத்தனை பேர் 'விரும்பு'வார்கள்? அப்படிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்த பேஸ்புக் என்ன செய்கிறது? என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை.

'பயனர்களின் தனித் தகவல்களை சரக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தனது பயன்பாட்டை வடிவமைப்பது' என்றுதான் பேஸ்புக் செயல்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அரை மனதோடு, குறை சொல்பவர்களின் வாயை மூட செயல்படுத்தப்பட்டவைதான்.

பேஸ்புக்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை

விண்டோஸ் (3.1, 95, 98, Me) தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதை நெட்வொர்க் சூழலில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்க வைக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதே சுமைதான் NT அடிப்படையிலான XP முதலான இயங்குதளங்களுக்கும் இருக்கிறது. ஆரம்ப வடிவமைப்பில் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த மென்பொருள் பயன்பாட்டையும் அதன் பிறகு வெளிச்சேர்க்கைகள் மூலம் பாதுகாப்பானதாக மாற்ற முடியாது. இதே பிரச்சனை பேஸ்புக்குக்கும் இருக்கிறது.

பேஸ்புக்கில் சேருபவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உணர்வு, 'நாம் நமது நண்பர்களின் மத்தியில் இருக்கிறோம்' என்பது. நண்பர்கள் ஏற்பாடு செய்யும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உணர்வுதான் பேஸ்புக்குக்குள் ஏற்படுகிறது. பார்ட்டியில் சந்திக்கும் போது ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு, தெரியாதவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு சமூக வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்கிறோம். அதே போன்ற தோற்றமும் உணர்வும் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது.

நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், நண்பர் கோரிக்கைகளை அனுப்புவதும் இயல்பான ஒன்றாக படுகிறது. முகத்துக்கு நேர் பேசுவதில் தயங்கும் இளைஞர்கள் கூட கணினியின் முன்பு கிடைக்கும் முகமிலி வசதியில் நண்பர்கள் ஊடே சகஜமாக பேச, எழுத, எதிர்வினை புரிய முடிகிறது. நண்பர்களை கோரிக்கை அனுப்புவதற்கு பேஸ்புக் தொடர்ச்சியாக பரிந்துரைகளை செய்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல பார்ட்டி ஒருங்கிணைப்பாளராக விருந்தில் கலந்து கொண்டிருக்கும் எல்லோரையும் மகிழ்ச்சியாக பிறருடன் சேர்ந்து நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து தருகிறது.

விருந்தில் ஏற்படும் தொடர்புகள் வளர்ந்து சிலருடன் தனிப்பட்ட ஆழமான உறவாக வளர்வதற்கும் பேஸ்புக்கில் வசதி கிடைக்கிறது. அது காதல், திருமணம் என்று கூட வளர்ந்து போகலாம்.

80 கோடி பேர் கலந்து கொள்ளும் விருந்து

இதுதான் பேஸ்புக்கின் அடிப்படை. அது ஒரு மிகப்பெரிய பார்ட்டி, அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உள்ளே நுழைவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை (மின்னஞ்சல், பெயர்) காண்பித்தால் போதும். உள்ளே நுழைந்த பிறகு நீங்கள் அதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவரிடமும் உறவாடும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவில் உருவானதால் பேஸ்புக் நடத்தும் இந்த பார்ட்டி/விருந்து என்பது மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அது செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான, வசதியான சூழலில் என்ன நடக்கிறது என்பதன் விளைவுகள்தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் செய்திகளில் படிக்கும் கேள்விப்படும் நிகழ்வுகள்.

இந்த அடிப்படையின் மிகப்பெரிய சிக்கல், அந்த பார்ட்டி ஒரே ஹாலின் கீழ், சுமார் 80 கோடி பயனர்களும் ஒரே குழுவாக புழங்குவதாக இருப்பதுதான். சுமார் 80 கோடி பேர் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத பார்ட்டியாக இருந்தாலும் நிகர்நிலை உலகில் அது சுமார் 30 முதல் 40 பேர் வரை புழங்கும் பார்ட்டியைப் போல  எளிமையாக இருக்கிறது. அதில் நண்பர்களுடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளலாம். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், பார்ட்டிக்குள் வந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் நம்பத் தகுந்தவர்தான் என்ற அடிப்படையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கையான குழுவின் மத்தியில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், புகைப்படங்களை காட்டலாம். 'இவற்றை செய்யும் போது நமக்கும் இருக்கும் உணர்வு 30 முதல் 40 பேர் வரை கலந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் குழுவில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால், உண்மையில் 80 கோடி பேர் அதே அறையில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்'.

1. அவர்களை அழைத்த பேஸ்புக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறது.
2. அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள்.
3. நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் 80 கோடி பேரில் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது.

செயற்கையான பாதுகாப்பு உணர்வுடனான, உண்மையில் அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சூழலில் இயங்குவதுதான் பேஸ்புக்கின் பிரச்சனையே. தேவைப்படும் சமூக பாதுகாப்புகளை உண்மையாகவே செயல்படுத்தி விட்டால், பேஸ்புக்கின் வணிக மாதிரியே இல்லாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான்

1. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் அவரது உறவு நிலையை மாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். அந்த இளைஞரைப் பொறுத்த வரை அவர் தனிப்பட்ட முறையில் தனது புரொபைலில் ஒரு மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலியோ 'அது உலகின் முன்பு பகிரங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது' என்பதை உணர்ந்து மனம் உடைந்து தனது உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. தயக்கத்துடனும் கூச்சத்துடனும் பார்ட்டிக்குள் நுழைந்து ஓரமாக ஆரஞ்சு ஜூசை சிப்பிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை குறிபார்த்து, அவரது அழகைப் புகழ்ந்து, அவரது உடையை பாராட்டி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, தனியறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்முறை செய்யும் காமக் கொடூரர்களுக்கான களம் இது. அத்தகைய காமக் கொடூரர்கள் பேஸ்புக்கின் அடிப்படையையும் அதில் கலந்து கொள்ள வரும் பலதரப்பட்ட பயனர்களின் மன உணர்வுகளையும் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய புரிதலும், நண்பர்களின் ஆதரவும் இல்லாத மதுரைப் பொண்ணுகள் எண்ணெய்க் காகிதத்தில் மோதி மாட்டிக் கொள்ளும் பூச்சிகளாக மாட்டிக் கொள்கிறார்கள்.

3. சிலர் பேஸ்புக் மூலமாக, பார்ட்டியில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானதா என்று கூட சரிபார்க்க  முடியாது. ஒரு பெண் பயனரிடம் அவரது பேஸ்புக் நணபர் புரபோஸ் செய்ய அவரும் அதை ஏற்றுக் கொள்ள, அந்த காதலர் 'நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, உன் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வை' என்று கேட்க இவரும் அனுப்பி வைத்திருக்கிறார். அதை அவன் இணையத்தில் பரவலாக போஸ்ட் செய்து விட்டிருக்கிறான்.

இவை எதுவும் பேஸ்புக்கின் தவறு இல்லை என்பது உண்மை. பேஸ்புக் ஒரு களம் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிஜ உலகில் மனிதர்களிடம் என்னென்ன சிக்கல் இருக்கிறதோ அந்த சிக்கல்கள்தான் பேஸ்புக்கில் வெளிப்படுகின்றன. அந்த சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்கும்படியான களத்தை உருவாக்கி, அத்தகைய சிக்கல்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வு ஏற்படாதவாறு போலியான சூழலை ஏற்படுத்தி, பயனர்களை சிக்க வைப்பதுதான் ஏற்படுத்துவதுதான் பேஸ்புக் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சிக்கல்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பேஸ்புக்கில் உங்களுக்கு நண்பர் கோரிக்கை விடுப்பவர் தெருவில் சந்திக்கும் முன்பின் தெரியாத நபர். பார்ட்டியில் சந்திக்கும் நண்பர் வட்டத்துக்குள் உள்ள நபர் இல்லை.

2. பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும், நாற்சந்தியில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர் போன்றது. நண்பர்கள் குழுவுக்குள் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் பார்க்கும் படியான வெளிப்பாடு இல்லை.

3. யாரும் பார்க்கவில்லை என்று பார்ட்டி ஹாலின் பக்கவாட்டு அறைக்குள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வில் செய்யும் செயல்களும் உலகுக்கே தெரிகின்றன. தனி அறையைச் சுற்றி பல காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்ளே நடப்பவை சக நண்பரால் பொதுவில் வெளியிடுப்படும் என்ற எண்ணத்துடனேயே எதையும் செய்ய வேண்டும்.

3. பேஸ்புக் மூலம் ஏற்படும் எந்த நட்பு அல்லது உறவு, ரயில் பயணத்தில் பேச்சு கொடுத்து ஏற்படும் நட்பு/உறவு போன்றது மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த சமூக ஆதாரமும் நம்பகமும் அதில் இல்லை. நிஜ உலகில் எப்படி உறவுகளை எச்சரிக்கையுடன் சரி பார்க்கிறோமோ அப்படி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூடுதலாக, தமிழ் பயனர்களைப் பொறுத்த வரை பேஸ்புக் இடைமுகம் மட்டும்தான் தமிழில் இருக்கிறது, அதன் செயல்பாடுகள் அனைத்துமே மேற்கத்திய பார்ட்டியின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதனால் தனியாக  பாதிப்பு இல்லை என்றாலும் சின்னச் சின்ன வழிகளில் மேற்கத்திய பார்ட்டிகளுக்கு பரிச்சயமானவர்கள் சமாளித்துக் கொள்ளும் சிக்கல்கள் அவற்றிற்கு அறிமுகம் இல்லாதவர்களை வீழ்த்தி விடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும்  முற்றிலும் விரோதமானது.

23 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

உங்களுக்கு மட்டும் பொருத்தமான கருத்துக்கள் இவை என எண்ணுகிறேன்

பொதுவான கருத்துக்கள் /எல்லோருக்கும் பொருந்துபவை அல்ல என்று எண்ணுகிறேன்

மா சிவகுமார் சொன்னது…

ராம்ஜி யாஹூ,

எனக்கு இந்தக் கருத்துக்களும் கட்டுரையும் தேவையே இல்லை என்று இதைப் படிக்கும் போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் ஆரம்பம் முதலே பேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்த்து வந்திருக்கிறேன்.

மற்றவர்கள் பயன்படுத்துவதை கவனித்து மட்டும் வந்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் செய்திகளில் படித்த நிகழ்வுகளும் சில மாதங்களாக உறவுகளிலும், நட்புகளிலும் சிறு குழந்தைகள் முதல் பேஸ்புக்கில் செயல்படும் முறையை பார்த்ததும் இந்த பதிவை எழுதத் தூண்டின.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

//சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு //

இது தேவையா? உமக்கு பிடிக்கிலனா மூடிட்டு போக வேண்டியதுதானே? அவரை ஏன்யா வம்புக்கு இழுக்குற?

மா சிவகுமார் சொன்னது…

பெயரில்லா,

//இது தேவையா? உமக்கு பிடிக்கிலனா மூடிட்டு போக வேண்டியதுதானே? அவரை ஏன்யா வம்புக்கு இழுக்குற?//

இந்த பதிவில் பேசப்படும் விஷயத்துக்கு பொருத்தமான உதாரணமாக சாரு நிவேதிதா நடந்து கொண்டதால் அவரது பெயரை சேர்த்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

உங்கள் கருத்துகள் சரியே. நல்ல முடிவு.

துளசி கோபால் சொன்னது…

விவரங்களுக்கு நன்றி மா.சி.

நல்ல முடிவுதான்.

நானும் ஃபேஸ்புக்கில் இருக்கேன் என்றாலும் அங்கே போய்ப்பார்ப்பது குறைவு. நோடிஃபிகேஷன் வந்துருக்கேன்னு மெயில் வரும். போனால் நம்ம இடத்தில் நமக்குத் தெரியாத பலரும் கூடிக் கும்மி அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. ஜேஜேன்னு கூட்டம் அம்மும்:-)

தேவையான்னு கூட பலசமயம் நினைச்சுருக்கேன். இப்ப இந்த கூகுள் ப்ளஸ் இன்னொரு வகையில் கூட்டம் சேர்த்துவிடுது:(

ராம்ஜி_யாஹூ சொன்னது…

machநான் சொல்லும் கருத்து
அப்போதைய ஹாட்மெயில், யாஹூ, ஆர்குட், ரீடிப் சாட் ரூம்கள் கலாசாரத்தில் இருந்து
இப்போதைய ட்விட்டர், முகநூல், கூகிள் கூட்டல் வரை பொருந்தும்.

இணையத்தில் உள்ள தகவல்களை நம்பி ஒருவர் காதல், நட்பு ஏற்படுத்திக் கொள்வாரெனில், அவர் அந்த தகவல்கள் உறுதி ஆனவை தானா என்று சோதனை செய்து பார்க்க பல வழிகள் உள்ளன - வெப்கேம், வாய்ஸ் சாட், ஐ பி முகவரிகள்

இப்போது மறுமொழி எழுதும் நானே , சுவிட்சர்லாந்தில் இருந்து எழுதுகிறேன், என் வயது ௧௮, நான் கமல்ஹாசன் நிறத்தில் இருக்கிறேன், என் குரல் உன்னி கிருஷ்ணன் போன்று இருக்கும் என்று எளுதினாலு, உடனேயே நீங்கள் உறுதி செய்து கொள்ள வெப் கேம், வாய்ஸ் சாட் போன்றவை உதவும்.


சமூக வலைத்தளங்கள் வெளிப் படையாகவே இருக்கின்றன. ஆரம்பித்திலேயே சொல்கிறது, உங்களின் சரியான , விருப்பமான தகவல்களை விரும்பினால் தரவும், இல்லாவிடில் வெளியேறிக் கொள்ளலாம், இணைய வேண்டாம் என்று. o_066@yahoo.com

அருள் குமார் சொன்னது…

இரயில் பயணங்களின் போது திருடுபோகிறது. கொலை கொள்ளை நடக்கிறது. இரயில்வே நிர்வாகம் உண்மையிலேயே பயணிகள் பாதுகாப்பு கருதி எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்னும் எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லோராலும் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவும் முடிவதில்லை. திருடுவதற்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் உத்திகள், மக்கள் நன்கு அறிந்த உத்திக்ளும் கூட இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. என்ன செய்யலாம்? இரயில் பயணங்களையே தவிர்த்துவிடலாமா? இல்லை இரயில் போக்குவரத்தே தேவையில்லை என்று அரசுக்கு எதிராக போராட ஆரம்பிக்கலாமா?!

RAJA RAJENDRAN சொன்னது…

ஓர் எழுத்தாளரை மிகவும் அருவருப்பான தரத்தில் விமர்சித்திருக்கிறீர்கள் ! அவருக்கு நடந்தது ஒரு கூட்டுச் சதி, அது தெரியாமல் உத்தமர் வேஷம் போட்டு ஊர் முழுக்க அலையும் சொரிபைரவர்கள் குழுமத்தின் பேச்சைக் கேட்டு உமிழ்கிறீர்கள் ! நாகரீகமில்லாமல் நடப்பவருக்குத்தான் அமெரிக்கக் கலாச்சாரம் குறைபாடுள்ளது என்று தெரியும்போல ! உங்கள் கலாச்சாரம் செழிக்க, நீங்கள் இண்டர்நெட்டைக் கூட தவிர்த்து டைம்மெசின் ஏறி புறா, ஓலை என்று மாறுங்கள் !

Vetirmagal சொன்னது…

A very good post. The pitfalls are there. One has to be careful about whom they are connected to. We can restrict access to outsiders .

However, it is always better to be cautious about the information provided about self , in Facebook. Better to be safe than sorry.

chandrasekaran சொன்னது…

நன்றி !எல்லோருக்கும் தேவையான அறிவுரை புதிய பயனாளிகள் சில நேரங்களில் ஆர்வகோளறு காரணமாக பல விஷயங்களை வெளியிட்டுவிடுவார்கள் அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் .

Vetirmagal சொன்னது…

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2904989.ece

நீங்கள் சுட்டி காட்டிய , கவலைப் பட வேண்டிய ,தளங்களைப் பற்றி , இன்றைய நாளிதழில்.

வணக்கம்.

வில்லனின் விநோதங்கள் சொன்னது…

/ இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும் முற்றிலும் விரோதமானது.//

எவற்றையும் புரிந்து கொண்டு செயல்படுவது யாருக்குமே சுலபமில்லை சாத்தியமில்லை.
இவர் விரும்பும் ப்ளாக் வகையறாக்களில்தான் TDS என்ற மூன்று பெருக்கற்குறி வகையற்றாக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன...

தங்களோட ப்ளாகையும் விரைவில் நீக்கிவிடுவீர்கள் என நம்புகிறோம்....


சாருவை வேறு எதோ காழ்ப்புடன் பொறுக்கி என்று கட்டுரையில் போகிற போக்கில் உமிழ்கிறீர்கள்...

So Sad. சாருவை தவிர்த்து பார்த்தாலும் சாருவை சேர்த்து பார்த்தாலும் கட்டுரையாளருக்கு
பேஸ்புக் உபயோகிக்க தெரியாதது மட்டும்தான் புலனாகிறது...

தமக்கு தெரியாத புரியாத ஒன்றை ஒட்டுமொத்தமாக சாடிச்செல்கிறார். துணைக்கு சாருவை காட்டி பயமுறுத்துகிறார்.

அதை ஒரு அமெரிக்க கலாச்சாரம் என்ற வசைபாடும் (இங்கே அவர் ஒரு அமெரிக்க எதிர்ப்புணர்வோடு அல்லது ஒரு வேளை தமிழ்ழ்ழ்ழ்கலாச்சாரம் போல மெகா சீரியல் வீடு மாதிரி பேஸ்புக் இருக்கனும்னு நினைக்கிறாரோ) )ரீதியில் செல்கிறது இவரது பதிவு....

பேஸ்புக் போதிய பாதுகாப்புடனே இருக்கிறது...

ஹெல்மெட் பயன்படுத்தாமல் மண்டை உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாக போராடுபவன் என்னடா இந்திய ரோடு மட்டமா இருக்கேனு புலம்பல் போன்ற முட்டாள்தனமான மொக்கை கட்டுரை இது....

மா சிவகுமார் சொன்னது…

நன்றி கோவி கண்ணன்.

துளசி அக்கா,

நீங்கள் குறிப்பிடுவது போல சமூக வலைத்தளங்களில் உறவுகளை பேணுவது சிக்கலாகி வருவது உண்மைதான்.

ராம்ஜி யாஹூ,

//இணையத்தில் உள்ள தகவல்களை நம்பி ஒருவர் காதல், நட்பு ஏற்படுத்திக் கொள்வாரெனில், அவர் அந்த தகவல்கள் உறுதி ஆனவை தானா என்று சோதனை செய்து பார்க்க பல வழிகள் உள்ளன - வெப்கேம், வாய்ஸ் சாட், ஐ பி முகவரிகள்//

உண்மைதான்.

ஆனால், அதைச் செய்யும் அளவுக்கு முதிர்ச்சி எல்லோருக்கும் இல்லை என்பதும் அப்படி எல்லோரும் செய்வது பேஸ்புக்கின் வணிக நலனுக்கு எதிரானது என்பது இந்த இடுகையின் மையப் புள்ளி.

மா சிவகுமார் சொன்னது…

அருள்,

//இரயில் பயணங்களின் போது திருடுபோகிறது. கொலை கொள்ளை நடக்கிறது. இரயில்வே நிர்வாகம் உண்மையிலேயே பயணிகள் பாதுகாப்பு கருதி எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்னும் எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. //

1. நான் இணையம் பயன்படுத்துவதை முழுவதும் ஒதுக்கச் சொல்லவில்லை.

2. பேஸ்புக்கை முழுமையாக பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தாலும் மற்றவர்களின் அழைப்புகளை பெற்றுக் கொள்ள கணக்கை வைத்திருந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியாகும் தகவல்கள், நான் அறிந்த நிகழ்வுகள் அந்த கணக்கையும் நீக்கத் தூண்டின.

3. நீங்கள் சொல்வது போன்ற இரயில் நிறுவனம் போல இல்லாமல், பேஸ்புக் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில்லை. அப்படிச் செய்து விட்டால் அவர்களது பிசினஸ் மாடலே குலைந்து விடும்.

4. இதற்கு மேல் பேஸ்புக்கை பயன்படுத்த வேண்டுமானால் கடைப்பிடிக்க வேண்டியவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

//ஓர் எழுத்தாளரை மிகவும் அருவருப்பான தரத்தில் விமர்சித்திருக்கிறீர்கள் ! அவருக்கு நடந்தது ஒரு கூட்டுச் சதி, அது தெரியாமல் உத்தமர் வேஷம் போட்டு ஊர் முழுக்க அலையும் சொரிபைரவர்கள் குழுமத்தின் பேச்சைக் கேட்டு உமிழ்கிறீர்கள் !//

சமூகத்தில் வசிப்பதற்கு சில விதிமுறைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கின்றன.

அந்த விதிகளை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றும் நோக்கத்தோடு எழுதுவது, பேசுவது, போராடுவது ஒருவரின் அடிப்படை உரிமை.

ஆனால், அத்தகைய நபரின் நடவடிக்கைகள் சக மனிதர் ஒருவரை பாதிக்கும் போது அது குறித்து எச்சரிப்பதில் எந்த நாகரீகக் குறைவையும் நான் காணவில்லை. .

//நாகரீகமில்லாமல் நடப்பவருக்குத்தான் அமெரிக்கக் கலாச்சாரம் குறைபாடுள்ளது என்று தெரியும்போல !//

'அமெரிக்கக் கலாச்சாரம் குறைபாடுள்ளது' என்று நான் எங்கு சொல்லியிருக்கிறேன். 'மேற்கத்திய கலாச்சாரத்துக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அந்த கலாச்சாரச் சூழலில் தடுக்கி விட நேரும்' என்று சொல்லியிருக்கிறேன்.

//உங்கள் கலாச்சாரம் செழிக்க, நீங்கள் இண்டர்நெட்டைக் கூட தவிர்த்து டைம்மெசின் ஏறி புறா, ஓலை என்று மாறுங்கள் !//

அப்படி மாறப் போவதில்லை, அப்படி செழிக்க வேண்டிய கலாச்சாரம் எதுவும் எங்களிடம் இல்லை.

மா சிவகுமார் சொன்னது…

//A very good post. The pitfalls are there. One has to be careful about whom they are connected to. We can restrict access to outsiders .

However, it is always better to be cautious about the information provided about self , in Facebook. Better to be safe than sorry.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2904989.ece//

நன்றி வெற்றிமகள்!

மா சிவகுமார் சொன்னது…

வில்லனின் விநோதங்கள்,

//எவற்றையும் புரிந்து கொண்டு செயல்படுவது யாருக்குமே சுலபமில்லை சாத்தியமில்லை.
இவர் விரும்பும் ப்ளாக் வகையறாக்களில்தான் TDS என்ற மூன்று பெருக்கற்குறி வகையற்றாக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன...
தங்களோட ப்ளாகையும் விரைவில் நீக்கிவிடுவீர்கள் என நம்புகிறோம்....//

நான் இடுகையிலேயே குறிப்பிட்டிருப்பது போல பேஸ்புக்கின் அடிப்படை வடிவமைப்பு வணிக நோக்கங்களின் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. இணையத்தின் மற்ற பயன்பாடுகளை சரிவர பயன்படுத்துவதில் எனக்கு தயக்கம் கிடையாது.

//சாருவை வேறு எதோ காழ்ப்புடன் பொறுக்கி என்று கட்டுரையில் போகிற போக்கில் உமிழ்கிறீர்கள்...//

சாரு பேஸ்புக்கில் பொறுக்கியது அம்பலப்படுத்தப்பட்ட பிறகுதான் கட்டுரையில் அதை ஒரு உதாரணமாக குறிப்பிட்டேன்.

//So Sad. சாருவை தவிர்த்து பார்த்தாலும் சாருவை சேர்த்து பார்த்தாலும் கட்டுரையாளருக்கு
பேஸ்புக் உபயோகிக்க தெரியாதது மட்டும்தான் புலனாகிறது...//

உண்மைதான். பேஸ்புக் என்ற 'ராக்கெட் விடும் தொழில்நுட்பத்தை' அதிகமாக நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் பேஸ்புக் பற்றிய செய்திகள், அது எப்படி இயங்குகிறது என்ற பல விபரங்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

//தமக்கு தெரியாத புரியாத ஒன்றை ஒட்டுமொத்தமாக சாடிச்செல்கிறார். துணைக்கு சாருவை காட்டி பயமுறுத்துகிறார்.//

ஒட்டுமொத்தமாக சாட வேண்டுமானால் 1 வரி போதும். காட்டி பயமுறுத்தும்படியாகத்தான் சாரு நடந்து கொண்டிருக்கிறார்.

//அதை ஒரு அமெரிக்க கலாச்சாரம் என்ற வசைபாடும் (இங்கே அவர் ஒரு அமெரிக்க எதிர்ப்புணர்வோடு அல்லது ஒரு வேளை தமிழ்ழ்ழ்ழ்கலாச்சாரம் போல மெகா சீரியல் வீடு மாதிரி பேஸ்புக் இருக்கனும்னு நினைக்கிறாரோ) )ரீதியில் செல்கிறது இவரது பதிவு....//

அமெரிக்க கலாச்சாரம் என்று குறிப்பிடுகிறேன். வசைபாடவில்லை.

//பேஸ்புக் போதிய பாதுகாப்புடனே இருக்கிறது...//

இது தொடர்பான தரவுகளை தர முடியுமா? வெற்றி மகள் கொடுத்துள்ள இந்து நாளிதழ் கட்டுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

//ஹெல்மெட் பயன்படுத்தாமல் மண்டை உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாக போராடுபவன் என்னடா இந்திய ரோடு மட்டமா இருக்கேனு புலம்பல் போன்ற முட்டாள்தனமான மொக்கை கட்டுரை இது....//

விபத்து நடக்கும் நிலையில் ரோட்டை மட்டமாக வைத்து விட்டு 'எல்லோரும் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே' என்று வக்கணை பேசுபவனின் பொறுப்பற்ற பின்னூட்டம் உங்களுடையது.

வவ்வால் சொன்னது…

மா.சி,

வணக்கம், நலமா? முகநூல் என்று இல்லை எல்லா சமூக வலைகளிலும் நாம் விவரம்கொட்டினால் அடுத்தவர் அள்ளத்தான் செய்வார்கள். நான் முகநூலில் எவ்வித விவரமும் இல்லாமலேயே கணக்கு வைத்திருக்கிறேன். ஏன் அப்படி எல்லாம் வைத்துக்கொள்ள வேண்டியது தான்.

இவர்கள் ஏன் கொடுக்க வேண்டும் ஏன் எனில் யார் தேடினாலும் கிடைக்க வேண்டும் என்று ஆசையில் தானே. நம்மை மற்றவர்கள் ,கல்வி, வேலை,ஊர் ,பாலினம் ,பெயர் இப்படி ஏதோ ஒன்றின் அடிப்படையிலாவது கண்டுப்பிடித்து வர வேண்டும் என்று ஏன் என்ன வேண்டும்.

வலைப்பதிவு புரோபலிலில் முழு விவரம்ம் கொடுத்தாலும் அடுத்தவர் பார்க்கலாம்/மறைக்கவும் வழி இருக்கு. அதே போல பதிவில் அந்தரங்கம் எழுதினாலும் அம்பலமாகுமே.

ஏன் சாட்டிலும் இதெல்லாம் உண்டு தானே. அப்புறம் என்ன முகநூலும் அதே தான்.

வெளிநாட்டில் ஒருவர் போன் எண் அல்லது அவர் பெயர், வேலை இது போன்ற ஒரு விவரம் தெரிந்தாலே அவர்கள் முகவரியைக்கண்டுப்பிடித்து விடலாம் இணையம் மூலம். ஏன் எனில் ஏதோ ஒரு இடத்தில் அவர்கள் விவரம் இணையத்தில் இருக்கும்.

அப்படி சிதறிக்கிடக்கும் விவரங்களை ஒன்றாக்கி ஒரு தளத்தில் கிடைக்க செய்யவே முகநூல் எளிதாக்கிவிட்டது.

அமெரிக்காவில் இருப்பவர் ஒருவர் மருத்துவர் எனில் கூகிள் மூலமாகவே அவரதது முகவரி, தொலைப்பேசி எண் எடுக்கலாம், முகநூல் கூட தேவை இல்லை. ஏன் எனில் மருத்துவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதே போல துறைவாரியாக எங்கேனும் எல்லார் பற்றிய விவரங்களும் சேகரிக்க முடியும்.ஒருவர் பெயர் மட்டும் தெரிந்தாலே போதும் அவர்களது முகவரியைக்கண்டுப்பிடித்து விட முடியும். என்ன கொஞ்சம் இணையத்தை துழாவனும் அவ்வளவு தான்.

சொந்த விவரத்தை வெளியிடாமல் இணையத்தை புழங்க கூடாது என்று தடை இல்லையே. உண்மையில் நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் எல்லாம் இணையத்தில் இருக்க தகுதியே இல்லாதவர்கள், அவங்க சித்தாந்ததுக்கு ஏற்ப இணையம் இருக்கனும்னு நினைக்கிறாங்க.கடலில் ஏன் நடந்துப்போற அளவுக்கு முழங்கால் அளவு தண்ணி இல்லாம அதிகமா தண்ணீர் இருக்குனு கேட்பவர்கள் :-))

சிலப்பதிவர்கள் மற்றவர்களை பெர்சனலாக தெரிந்தால் மட்டுமே படிப்பேன், பின்னூட்டம் போடுவேன், அவங்க பின்னூட்டம் தான் வெளியிடுவேன் என எல்லாம் கொள்கை வைத்து இருக்காங்க. அப்புறம் ஏன் அவங்க பதிவு எழுதனும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட பேசிக்கிட்டு இருக்கலாமே.

அடுத்தவங்கப்பத்தி தெரியனும்னு சொல்றவங்களே பின்னர் இணையத்தில் இரகசியம் இருக்காது அபாயம்னும் புலம்புறாங்க :-))

தீட்சண்யா சொன்னது…

i shared this article in FB
:)

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வவ்வால்,

நான் நல்லா இருக்கேன். உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

நீங்கள் சொல்வது அனைத்தையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை இணையத்தில் விபரங்களை வெளியிடத் தயங்குவதில்லை. அதன் தாக்கங்களையும், விளைவுகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு வெளியிடுகிறேன்.

ஆனால், பேஸ்புக் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கிறது என்பதுதான் எனது வாதம். அந்த பாதுகாப்பு உணர்வின் கீழ் தகவல் பகிர்ந்து கொள்வதன் தாக்கத்தையும், விளைவுகளையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் தகவல்களை வெளிப்படுத்துகிறார்கள்.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

தீட்சண்யா,

the irony of that!! :-)

கல்வெட்டு சொன்னது…

//2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. //

:-)))