செவ்வாய், ஜனவரி 31, 2012

தட்டச்சும் திறன்


10ம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையின் போது ஆங்கிலத் தட்டச்சு கற்றுக் கொள்ளப் போனோம். வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் போய் நகரத்தின் மையத்தில் இருக்கும் தட்டச்சு பயிற்றுப் பள்ளியில் படிக்க வேண்டும். asdf lkjh என்று அடிப்பதுதான் முதல் பாடம். இதை ஒரு பக்கம் முழுவதும் அடிக்க வேண்டும். இரண்டு எழுத்து வரிசைகளுக்கும் இடையே இடைவெளி, ஒரு வரி முடிந்த உடன் அடுத்த வரிக்குப் போகும் திருப்பு விசையை அழுத்துவது போன்றவற்றை சரியாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

முதல் நாள் அடித்த தாளைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், 'இது என்ன கோழி பீ கிண்டி வைத்தது போல இருக்கிறது' என்று கமென்ட் அடித்தார். புதிதாக வருபவர்களிடம் அவர் அடிக்கும் வாடிக்கையான கமென்ட் என்று இப்போது தெரிந்தாலும், அந்த தாளில் எழுத்துக்கள் அப்படித்தான் கோழி கிண்டி வைத்த பீ போல சிதறியிருந்தன.

அந்த ஒழுங்கு கை வந்த பிறகு அடுத்தடுத்த எழுத்து வரிசைகள், எழுத்துக்களின் மொழி ரீதியான சேர்க்கைகள் என்று பயிற்சி. ஒரு கட்டத்தில் abcdef என்று அடிப்பது ஆரம்பித்தது. மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களை அடிக்க இடது அல்லது வலது புறம் இருக்கும் ஒரு விசையை அழுத்திக் கொண்டு எழுத்தை அழுத்த வேண்டும். தொடர்ந்து மேல் வரிசை எழுத்துக்களை அடிக்க அதே விசையை அழுத்தி இடது புறமாக தள்ளி பூட்டி விட முடியும். அனைத்துமே இயந்திரவியல் அடிப்படையில் உருவான கருவி.

எழுத்துக்களின் இடம், விரல் பயன்பாடு மனதில் பதிந்த பிறகு முதலில் ஆரம்பித்த மெஷினிலிருந்து மாறி இன்னொரு மெஷினில் பழக ஆரம்பித்தோம். முதல் மெசின் பழசாகி விட்ட இது போன்று கத்துக்குட்டிகள் பழக்கமில்லாத விரல்களால் அழுத்தி அழுத்தி விசைகள் கெட்டித்துப் போயிருப்பது. இந்த மெஷின் பழக்கப்பட்டவர்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தியது.

சிறு சிறு உரைகள் அடிக்க ஆரம்பித்தோம். அதிலிருந்து வளர்ந்து கடிதம் எழுதுதல் வரை வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருட பயிற்சிக்குப் கீழ்நிலை தேர்வுக்குப் போகச் சொன்னார்கள். எஸ்எல்பி பள்ளியில் ஒரு கூடத்தில் தேர்வு. காலையில் முதலில் வேகத்துக்கான தேர்வு. குறிப்பிட்ட பத்தியை வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூடவே தேர்வு எழுத வந்திருந்த அண்ணன், நேரம் ஆரம்பித்த உடன் ஏற்படும் பெரு ஓசையைக் கண்டு திகைத்து விடக் கூடாது என்று எச்சரித்திருந்தான். அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் வந்த சத்தம் அது வரை கற்பனை செய்திருக்காததாக இருந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த எந்திரத்தில் ஒரு விசை சிக்குவதாக இருந்தது. பழகும் போது அதை பெரிய குறையாக புகாராக சொல்லவில்லை. தேர்வில் அந்த சிக்கிய எழுத்தில்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதை வெளியில் வந்து சொன்ன பிறகு யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு மேல்நிலை தேர்வுக்குப் படித்ததாக நினைவில்லை. கீழ்நிலை அல்லது லோயர் தேர்வில் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் அடிக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கிடைக்கும். மேல்நிலை தேர்வு எழுதினால் 45 சொற்கள் அடிக்கும் தேர்ச்சி வந்திருக்க வேண்டும்.

இது ஆங்கிலத்தில், எந்திரத் தட்டச்சுக் கருவியில். ஆங்கிலத்தில் கணினியில் இதை விட கணிசமான அளவு அதிக வேகத்தில் அடித்திருக்க முடியும். அப்படி கணிசமான அளவு அடிக்க வேண்டிய வாய்ப்பு கணினியில் ஏற்படவே இல்லை. அலுவலகத்தில் சிறு சிறு கடிதங்கள், பெரும்பாலும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி விடக் கூடியவை அடிக்க வேண்டியிருந்தது.

டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கு விற்பனைப் பிரிவில் இருந்த கணினியில் இந்த கடிதங்கள் அடிக்கும் வேலை கூட எனக்குக் கிடைக்கவில்லை. நிறுவன மென்பொருளுக்கான சர்வருக்கான முனையத்தில் தரவு உள்ளிடும் சிறு சிறு வேலைகள் செய்தேன். லோட்டஸ் 1,2,3 பயன்பாட்டைப் பயன்படுத்தவும் செய்தேன்.

கடிதங்கள் அடிப்பதற்கு முன்னாள் தட்டச்சு எழுத்தர் பெண்மணி இருந்தார். வேகமாக தரவு உள்ளிடுவதற்கு கணினி துறையிலேயே ஓரிருவர் இருந்தார்கள். விற்பனைக்குப் பொதிந்து தயாராகும் தோல்களைப் பற்றிய  அளவைகளை உள்ளிடும் போது அவர்கள் விரல்கள் நம்புவதற்கு அரிதான வேகத்தில் நடனமாடி முடித்து விடும். அவர்கள் நியூமரிக் பேட் எனப்பட்ட எண் பட்டியை மட்டும் பயன்படுத்துவார்கள். அவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தட்டுத் தடுமாறிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த தலைமுறை கணினியாக விண்டோசு 95 போட்டு ஒரு கணினி வந்தது. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் பிரிவுக்கான கையேடு தயாரிக்கும் பணி எனக்கு வந்தது. அந்தக் கணினி மிகவும் மெதுவாக இயங்கும். ஒரு பக்கம் அடிப்பதற்கு ஒரு மணி நேரம்  வரை கூட பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். மைக்ரோசாப்டு வேர்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஆன நேரம் ஒரு பக்கம், விண்டோஸ் 95க்குத் தேவையான நினைவகம், செயலகம் இல்லாததாலும் கணினி தள்ளாடியிருக்கலாம். எப்படியோ, சில நூறு பக்கங்களுக்கு வரும் அந்த மேனுவலை அடித்துத் திருத்தி மாற்றி முடிப்பதற்கு பல இரவுகள் வேலை செய்திருந்தேன். கணினியில் தட்டச்சுவதிலும், கணினி பயன்படுத்துவதிலும் சரளமான வேகம் வந்து விட்டிருந்தது.

இப்போதும் எண் பட்டியில் எண்களை உள்ளிடுவதில் தோல் பொதியும் பிரிவில் இருப்பவருடன் ஒப்பிடும் அளவு கூட தேர்ச்சி வந்ததில்லை.
(அதே போல உற்பத்தி தளத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியதேயில்லை. மேலாளர்கள் அப்படி தொழிலாளர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்க்க ஊக்குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இதற்கு முன்பு அது போன்று இயந்திரங்களை இயக்கித் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றி உயர்வாக பாராட்டியும் சொல்வார்கள்.

எளிதாக இயங்கும் எல்லா வேலைகளையும் என் கைப்பட செய்திருக்கிறேன். வேகமாக நகரும் பட்டியின் கீழ் லாவகமாக தோலை நுழைத்து மெருகூட்டும் பணியில் கடைசி வரை கை வைக்கவில்லை. கொஞ்சம் தவறு செய்தால் கை விரல்கள் நசுங்கி விடும் அபாயம், அப்படி நசுங்கா விட்டாலும் அந்த வேகமாக நகரும் கரத்தைப் பார்க்கும் போதே பயம் ஏற்பட்டு விடும். அதையும் கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. )

அதன் பிறகு ஷாங்காயில் கணினி வாங்கிய பிறகு நிறைய தட்டச்சி பழகினேன். முரசு அஞ்சல் மூலம் தமிங்கில தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டேன். தமிழ் 99 விசைப்பலகைக்கு முன்பே இதைக் கற்றுக் கொண்டதால் என்னை பிற்போக்கு வாதி என்று கருத முடியாது. தமிழ் 99 வந்த பிறகு சுமார் 8 ஆண்டுகள் அதிலேயே பழகியதை வேண்டுமானால் தாமதம் சொல்லலாம். ஆனால், கணினி நுட்பங்களில் புதிய தகுதரங்கள் நடைமுறைக்கு வருவதிலும் கணிசமான நேரம் பிடிக்கத்தான் செய்கின்றன.

தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும். எழுத்துருக்களுக்கான தகுதரம் தனி, விசைப்பலகைகளுக்கான தகுதரம் தனி. எழுத்துருக்களுக்கு டிஸ்கி, டேப், யூனிகோடு என்று தகுதரங்கள். விசைப்பலகைக்கான தகுதரங்கள் எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று வரையறுப்பவை.

கணினிக்கு முன்பே தமிழ் தட்டச்சு முறைக்கான தகுதரம் ஒன்று இருந்தது. நான் அதைக் கற்றுக் கொண்டதில்லை, அது யளனகப என்று வரும் என்று நினைவு. அதில் பழகியவர்கள் அப்படியே கணினியிலும் பயன்படுத்தும்படி மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.

அப்படி தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்காக உருவானதுதான் அஞ்சல் அல்லது phonetic முறை. இதில் தமிங்கில எழுத்துக் கூட்டல் முறையில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடலாம். ammaa என்று அடித்தால் அம்மா என்று புரிந்து கொள்ளும் விசைப் பலகை தகுதரங்கள் உருவாயின. இவற்றில் சிறு சிறு மாறுதல்களுடன் பல வகைகள் கிடைத்தன.

ந என்ற எழுத்துக்கு எந்த விசை, ண அடிப்பது எப்படி, நெடிலுக்கான முறை, ஒற்றெழுத்துக்களை உள்ளிடுதல், இரட்டை எழுத்துக்களை உள்ளிடுத்தல் என்று பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது.

இந்த தொந்தரவு எதுவும் இல்லாமல், தமிழுக்கு இயல்பான விசைப்பலகை வடிவமைப்புதான் தமிழ்99. தமிழ் 99 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒரு மனதாக எல்லோராலும் பாராட்டப்படுவது. ஆங்கில தட்டச்சு அறிமுகம் இல்லாதவர்கள்,  முதல் முறை கணினியில் தமிழ் தட்டச்சுக் கற்றுக் கொள்பவர்கள் இதைத்தான் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் வேகமாக தட்டச்சுபவர்களும் தமிழில் எழுத இதைக் கற்றுக் கொள்வது அவசியம். தமிழில் நிறைய எழுதும் போது மிக உதவியாக இருக்கும்.

நான் சுமார் 2007 வாக்கில் தமிழ் 99 எழுதப் பழகிக் கொண்டேன். சுமார் 6 மாதங்களில் தமிங்கில முறையில் இருந்த வேகத்தை எட்டிப் பிடித்து விட்டேன். தமிங்கிலத்தில் எவ்வளவு வேகமாக எடுத்தாலும் நிமிடத்துக்கு 25 சொற்கள் என்ற வேகத்தைத் தாண்ட முடிந்ததில்லை. அந்த முறையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆதாயம் இருந்தாலும், பல எழுத்துக்களுக்கு 3 விசைகளை அழுத்த  வேண்டியிருந்தது. ணி என்று அடிப்பதற்கு shift-n+i அடிக்க வேண்டும்.

தமிழ் 99 தட்டச்சு முறை தமிழின் 30 அடிப்படை எழுத்துக்களுக்கு இடம் ஒதுக்கியது. இந்த 30 எழுத்துக்களையும் ஒரே விசை அழுத்துவதன் மூலம் அடிக்கலாம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களைப் பெற 'ணி' என்று அடிக்க ண்+இ என்று இரண்டு விசைகள் அடித்தால் போதும். ஒரு சராசரி தமிழ் உரையை எடுத்துக் கொண்டால் இது வேலையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து விடும். குறைந்த முயற்சியில் வேலையை முடித்து விடலாம்.

இப்போது தமிழ் 99 முறையில் தட்டடச்சும் போது வேகம் நிமிடத்துக்கு 30 சொற்களுக்குக் குறையாமல் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து தட்டச்சுவதை இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 1800 முதல் 1900 சொற்கள் வரை அடித்து விடலாம்.

இதே போன்று ஆங்கில உரைகளையும் அடித்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளிட்டுப் பழக வேண்டும். மதுரைத் திட்டத்தின் கீழ் மனோன்மணியம் நூலை டிஸ்கி எழுத்துருவில் தமிங்கில தட்டச்சு முறையில் உள்ளிட்டுக் கொடுத்திருக்கிறேன். அது போன்ற திட்டம் ஏதாவதில் இப்போது செய்து பார்க்கலாம். அதே போன்று ஆங்கில நூல் உள்ளிடலையும் project gutenberg போன்ற தளங்களுக்காக செய்து பார்க்கலாம்.

புத்தகத்தைப் பார்த்து அடிப்பதில் தன்னிச்சையாக அடிப்பதை விட வேகம் குறையலாம் அல்லது கூடலாம். தன்னிச்சையாக அடிக்கும் போது மனதில் தோன்றும் வாக்கியங்களை மூளைக்குள்ளாகவே எழுத்துக்கான விசைப்பலகை அழுத்துவதற்கான கட்டளையாக மாறி விடுகிறது. புத்தகத்தைப் பார்த்து அடிக்கும் போது கண்கள் எழுத்துக்களைப் படித்து மூளைக்கு அனுப்பி, அதை விசைக்கான கட்டளையாக மாற்ற வேண்டியிருக்கும். முதல் வேலையில் சிந்தனைக்கான நேரம் அதிகம், இரண்டாவது முறையில் எழுத்த பார்த்து உள்ளுணரும் நேரம் அதிகம். எழுத்து->விசை மாற்றத்துக்கான நேரம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

1. தானாக எழுதுவது = மூளையில் சொல் தோன்றுதல்+மூளைக்குள் எழுத்து + எழுத்து->விசை மாற்றம்
2. புத்தகத்தைப் பார்த்து எழுதுவது = கண்கள் உரையைப் பார்த்தல்+மூளையில் சொல் எடுத்துக் கொள்ளுதல்+எழுத்து->விசை மாற்றம்.

சிந்திப்பதை விட வாசிப்பதுதான் அதிகம் செய்திருக்கிறோம் (??). அதனால் இரண்டாவதன் வேகம்தான் அதிகமாக இருக்க வேண்டும். கண்கள் மூளைக்கு எழுத்துக்களை கடத்தும் வேகம், நாம் சிந்தித்து வாக்கியம் உருவாக்குவதை விட  பல மடங்கு அதிக வேகத்தில்தான் இருக்க வேண்டும். முயற்சித்துப் பரிசீலனை செய்து பார்த்தால்தான் தெரியும் உண்மை நிலவரம்.

5 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

படித்தவுடன் என் அனுபவத்தை பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றியது. நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

எழுதுங்கள் ஜோதிஜி. தமிழ்99க்கு மாறிட்டீங்களா? :-)

suvanappiriyan சொன்னது…

சிறந்த பகிர்வு!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சுவனப் பிரியன்.

பெயரில்லா சொன்னது…

போனெடிக் முறையில் பயன்படுத்தினாலும், தமிழ் 99 பயன்படுத்த ஆர்வம் உள்ளது. இனிமேலாவது பழக வே
ண்டும்.
-ஜெகன்