செவ்வாய், ஜூன் 09, 2026

இஸ்ரேல், ஈரான் - ஓர் உரையாடல்

 A forwarded message in a whatsapp group by VA

 ஈரான் - இஸ்ரேல் பகை: மக்களின் வாழ்வைப் பலிகொடுக்கும் அதிகாரப் போதை!

 ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் உள்ளது. நேரடி எல்லைகளோ அல்லது நிலப்பரப்புச் சிக்கல்களோ இல்லாத நிலையில், ஈரான் அரசு இஸ்ரேல் மீது கொண்டிருக்கும் இந்தப் பகை முழுக்க முழுக்க தேவையற்றது மற்றும் அந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாகும்.

பாதிக்கப்படும் மக்களின் கண்ணோட்டத்தில் சில கசப்பான உண்மைகள்:

 1. வறுமையில் மக்கள் - ஏவுகணையில் வரிப்பணம்:

ஈரானிய மக்கள் இன்று கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் நிலையில் உள்ளனர். பணவீக்கம் விண்ணைத் தொடுகிறது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசு, பல ஆயிரம் கோடிகளை இஸ்ரேலைத் தாக்குவதற்கான ஏவுகணைகளுக்கும், ட்ரோன்களுக்கும், பிற ஆயுதக் குழுக்களுக்கும் வாரி இறைக்கிறது.

2. திசைதிருப்பப்படும் அடிப்படை உரிமைகள்:

நாட்டிற்குள் மக்கள் சுதந்திரம் கோரியோ அல்லது வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தோ போராடும்போது, "இஸ்ரேல் அச்சுறுத்தல்" என்ற பொய்யான பயத்தை உண்டாக்கி அந்தப் போராட்டங்களை ஈரான் அரசு நசுக்குகிறது. மக்களின் உண்மையான அழுகுரலை 'போர் முழக்கம்' கொண்டு அந்த அரசு மறைக்கிறது.

3. தேவையற்ற 'மதவாத' மேலாதிக்கம்:

இந்த 1,000 கி.மீ தூரப் பகை என்பது ஈரானிய மக்களுக்கானது அல்ல; அது அங்கிருக்கும் மதகுருமார்களின் 'ஈகோ' சார்ந்தது. தங்களை இஸ்லாமிய உலகின் தலைவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற மதவாதப் போதையில், ஒரு செழிப்பான தேசத்தை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி, இருண்ட காலத்திற்குத் தள்ளியிருக்கிறார்கள்.

4. இளைய தலைமுறையின் கனவுகள் சிதைப்பு:

ஒரு காலத்தில் நவீனமான சிந்தனைகளுடன் இருந்த ஈரான், இன்று மதவாதச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. உலகத்தோடு போட்டி போட வேண்டிய ஈரானிய இளைஞர்கள், இன்று தேவையற்ற போர் அச்சத்திலும், மதக் கட்டுப்பாடுகளிலும் தங்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள்.

 

5. போலித்தனமான அறம்:

தன் சொந்த நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்து, மாற்றுக்கருத்து பேசுபவர்களைச் சிறையிலடைக்கும் ஈரான் அரசு, பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகப் பேசுவதாகச் சொல்வது மிகப்பெரிய நகைமுரண். இது அப்பட்டமான அரசியல் பித்தலாட்டம்.

 முடிவு:

சொந்த நாட்டு மக்கள் நிம்மதியாகவும், பசியின்றியும் வாழ வழி செய்யாத ஒரு அரசு, 1,000 கி.மீ தள்ளி இருக்கும் எதிரியைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்தானது. மதவாதம் என்ற போதையை ஊட்டி, மக்களின் வயிற்றை அடித்து நடத்தும் இந்த அதிகாரப் போட்டி நிறுத்தப்பட வேண்டும். ஈரானிய மக்களுக்குத் தேவை ஏவுகணைகள் அல்ல; சுதந்திரமும், கண்ணியமான வாழ்வுமே!

 VA comment in support of Israle

அவர்கள் யாரை அழித்தார்கள் எவர் குடியை கெடுத்தார்கள் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

 அந்த நிலப்பகுதி அவர்களுடையது. வரலாறு முழுவதும் அவர்கள் தமது இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டும் மீண்டும் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் கையறு நிலையில் வரலாறு இழுத்து செல்லும் போக்கில் சென்று இருக்கிறார்கள். பல காலங்களில் இன அழிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஃபிலிஸ்தியர் அமலேக்கியர் எகிப்தியர் பாபிலோனியர் ரோமானியர் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகள் கிறிஸ்தவ அரசுகள் ரஷ்யா நாஜி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் என்று அனைத்து தேசங்களாலும் நாடுகளாலும் மக்களாலும் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு ஆட்பட்டு வரலாறு நெடுக வாழ்ந்து இருக்கிறார்கள்.

 அவர்கள் அறிவாளிகள், resilient மக்கள்.

 இப்போதுதான் அவர்கள் ஆசுவாசமாக மூச்சு விட இடம் கிடைத்து இருக்கிறது. இனி வருங்காலங்களில் முன்னர் போல அவர்களை அழிக்க நினைத்து விட முடியாது.

 Response by SK

 இது வரலாற்றுப் பார்வையும் இல்லாமல், அரசியல் புரிதலும் இல்லாமல் அன்னா ஹசாரே போல அறம் பேசும் அற்பவாதிகளின் எழுத்து.

 இஸ்ரேல் என்ற நாடு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அது பாலஸ்தீனர்களின் நிலத்தை எவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது என்பதைப் பற்றிப் பேசட்டும்.

 நீங்கள் வேறு மக்கள் வாழும் பகுதிக்கு வாழச் சென்றால் அவர்களை மதித்து, அவர்களை ஏற்க வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒண்ட வந்தப் பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியடிக்கும் கதைதான் ஜியோனிஸ்டுகளின் அடாவடி அரசியல்.

 அடுத்தபடியாக, ரிக் வேதத்தில் சொன்னதையும் மனு தருமத்தில் சொன்னதையும் இந்தியாவில் சட்டமாக்க வேண்டியதுதான் மிச்சம். பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் பழிவாங்கப்பட்டோம் என்ற புலம்பலும், யூதர்களின் மேலாதிக்கமும் பழிவாங்கப்பட்டோம் என்ற புலம்பலும் ஒரே இரகம்.

 பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டியதற்கும் இதுதான் அடிப்படை. மதவாத, மேலாதிக்க சக்திகளான பார்ப்பனர்கள் யூத மேலாதிக்க வாதிகளை கொஞ்சிக் குலாவுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அப்படி எதிர்ப்பவர்களை ஆதரிப்பதும்தான் சமூகநீதியுடன் கூடிய உலகை உருவாக்குவதற்கான வழி.

 பைபிள் கதைகளையும் இராமாயண கதைகளையும் கதைகளாக, தேவைப்பட்டால் அவை கூறும் பாடங்களைப் பின்பற்றும் வழிகாட்டிகளாக பயன்படுத்தலாம். அதற்குமேல் அவற்றுக்கு வரலாற்று அடிப்படை கொடுக்க நினைத்தால், இந்தியாவை பார்ப்பனர்கள்தான் ஆள வேண்டும்.

 அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? பார்ப்பனியமும் மனு தருமமும்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உங்களுக்கு உடன்பாடுதானா?

 மோசஸின் கதையை ஒரு inspiration ஆக எடுத்துக் கொண்டு அம்பேத்கர் பேசியதாகக் குறிப்பிடும் ஒரு பத்திரிகைச் செய்தியை வைத்துக் கொண்டு இஸ்ரேலின் அனைத்து அடாவடிகளையும் படுகொலைகளையும் ஆதரிக்கும் அரசியலுக்கு எந்த நியாய அடிப்படையும் இல்லை.

 சோவியத் ஒன்றியத்தில் யூதர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள்? கொல்லப்பட்டார்கள்? சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டார்கள்?

 போகிற போக்கில் அடித்து விடக் கூடாது. யூதர்கள் இஸ்ரேலுக்கு (அதாவது பாலஸ்தீன நாட்டுக்கு) புலம்பெயர்வதைத் தடுத்ததுதான் சோவியத் ஒன்றியத்தின் அரசியல். யூத மேலாதிக்க குடியேற்றத்தை சோவியத் ஒன்றியம் ஆதரிக்கவில்லை.

 அது, ஒடுக்குமுறை என்றால், இட ஒதுக்கீடு மூலம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததையும் ஒடுக்குமுறை என்பீர்களா?

 நான் முன்பு சொன்னதைத் திருத்திக் கொள்கிறேன்.

 யூதர்கள் இந்த நிலத்தில் வாழ்ந்ததற்கான அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் பண்டைய இலக்கிய ஆதாரங்களும் உள்ளன என்று தெரிகிறது. இவை அனைத்தும் குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் அங்கு வாழ்ந்திருக்கலாம் என்று காட்டுகின்றன.

 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஒடுக்குமுறைக்கு (அப்படி நடந்திருந்தாலும்) இருபதாம் நூற்றாண்டில் அந்த அடிப்படையில் தீர்வு காண்பது தவறு. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி பிறந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்று 1992 இல் பாபர் மசூதியை இடித்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இராமர் கோயில் கட்டியதைப் போன்ற ஒரு நடவடிக்கை அது.

 பால்ஃபோர் டிக்ளரேஷன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியிட்டது. அதனை நாடுகளின் கழகத்தில் ஏற்க வைத்ததும் ஏகாதிபத்திய நாடுகளின் பணி.

 பாலஸ்தீனத்தில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமை எந்த வகையிலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை.

 சரி, அப்படியே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொண்டாலும் (நடந்து முடிந்து விட்ட கதை என்பதால்), அங்கு பாலஸ்தீனர்களுக்கும் ஓர் அரசு வேண்டும் அல்லது ஒரே அரசின் கீழ் இரு தரப்பினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அது யூதர்களின் தாயகமாக இருக்க முடியாது. பாலஸ்தீன நிலத்தில் குடியேறிய அவர்கள் அதைப் புரிந்து கொண்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

 நான் வைத்துதான் சட்டம் என்று சுற்றி உள்ள அனைத்து மக்களையும் பகைத்துக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிக் கப்பலாக" செயல்படக் கூடாது.

 இது இன்றைய ஏகாதிபத்திய உலகில் சாத்தியமற்ற ஒன்றுதான். நியாயமான ஒரு சோசலிச உலகில் அதை வந்தடைய முடியும். அதுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இஸ்ரேலின் மேலாதிக்க அரசியலையும் எதிர்ப்பதுதான் சனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களின் கடமை, இஸ்ரேலில் வாழும் யூதர்கள் உட்பட.

 1500 ஆண்டுகளுக்கு முன்பு, ரோமப் பேரரசின் காலத்தில் யூதர்கள் துரத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, யூதர்கள் உலகின் பிற பகுதிகளில் ஒடுக்கப்பட்டிருக்கலாம் (ஹிட்லரின் ஜெர்மனியில்). அதற்குத் தீர்வு அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழும் அந்தந்த நாடுகளிலேயே அவர்களது சனநாயக உரிமைகளை உறுதி செய்வதுதான்.

 கல் தோன்றி மண் தோன்றா காலத்து அதாவது பண்டைய வரலாற்றையெல்லாம் திருத்தி எழுதத் தொடங்கினால் உலகம் அந்தப் பண்டைக் காலத்திலேயே தேங்கியிருக்க வேண்டியது நேரும். போர்களும் இரத்தக் களறியும் படுகொலைகளும் நடக்கும். அதற்கு வாழும் எடுத்துக்காட்டுகள் பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும், அதை விடச் சிறிய அளவில் ஆனால் அதே அளவு கொடூரமாக பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டப்பட்டதும். இரண்டின் விளைவாகவும் மதவெறி அரசியலும் மக்கள் மீதான அடக்குமுறையும் ஏற்பட்டிருக்கின்றன.

 சில கேள்விகள்

1. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனி என்ற நாடு கிடையாது

2. பிரித்தானியா தீவில் இன்றைய மக்கள் கிடையாது

3. இப்போதைய சீனா, இந்தியா, ஈரான், எகிப்து முதலிய நாடுகளும் ஆப்பிரிக்க பழங்குடிகளும்தான் அன்று இருந்து இன்றும் தொடரும் நாகரிகங்கள்

இஸ்ரேலுக்கான நியாயத்தை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் ஐரோப்பியர்கள் காலி செய்ய வேண்டியிருக்கும். பழங்குடி மக்களிடம் அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டியிருக்கும். இன்று யாரும் அதைக் கேட்கவில்லை. இந்த ஐரோப்பியக் குடியேறிகள், தங்களது வரலாற்றுத் தவற்றை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டு எஞ்சியிருக்கும் பழங்குடிகளை மதிக்க வேண்டும் என்ற குறைந்த அளவு கோரிக்கைதான் வைக்கப்படுகிறது. அதைக் கூட ஏகாதிபத்திய சக்திகள் இதுவரை ஏற்கவில்லை.

 யூதர்களை ஒடுக்கிய, துன்புறுத்திய ரோமப் பேரரசின் ஐரோப்பிய அரசுகளின் நாஜி ஜெர்மனியின் வாரிசுகளான மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் மன்னிப்பு கேட்டு மனம் வருந்தட்டும். அதற்காக பாலஸ்தீன மக்களை பலி கொடுப்பது என்ன நியாயம்? பாலஸ்தீன நிலம் பிரித்தானிய காலனிய ஆட்சியில் இருந்தது. அதை எடுத்து, அந்த மக்களை கேட்காமலேயே இஸ்ரேல் நாட்டை அமைத்தது பிரித்தானியா.

 இஸ்ரேலின் யூதர்கள் (நியாயமான யூதர்கள் அதைச் செய்வார்கள்) தங்களது நிலையை உணர்ந்து ஐரோப்பியர்களை மன்னிப்புக் கேட்கும்படி கோர வேண்டும். அரபு மக்களிடம் நட்புக் கரம் நீட்ட வேண்டும். பிரித்தானிய/அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிக் கப்பலாக" தங்களது நாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

 அப்போது யூதர்களுக்கு உலக மக்களின் ஆதரவு கிடைக்கும். உலகம் முழுவதையும் ஒடுக்கி வரும் வில்லன்களின் சட்டைப் பைக்குள் இருந்து கொண்டு, அடாவடி போர்களை நடத்திக் கொண்டு, 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமது மக்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையைப் பற்றி முறையிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதுவும் தங்களை ஒடுக்கியவர்களின் பைகளுக்குள் இருந்து கொண்டு உலகை மிரட்டுகிறார்கள்.

 

1500 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட யூதர்களுக்கு ’நியாயம்’ வழங்கிய பிரித்தானியா, 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட வட அமெரிக்கப் பழங்குடிகளுக்கு என்ன செய்தது? என்று கேட்டுப் பாருங்கள். இஸ்ரேல் ஏன் ஐரோப்பிய/அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் திட்டம் என்பது தெளிவாகும்.

செவ்வாய், ஜூலை 20, 2021

தீண்டாத வசந்தம்

மக்களின் வாழ்க்கை எப்படி சொல்லப்பட வேண்டும், வாழ்வையும், மகிழ்ச்சியையும், திறமைகளையும், அதன் ஊடான கொண்டாட்டத்தையும், அந்த வாழ்வானது தொடர்ந்த வன்முறைக்குக் கீழ் நிகழ்வதையும் சித்தரிப்பது என்பது தீண்டாத வசந்தத்தில் நடக்கிறது. சொல்லப் போனால், ஏழு தலைமுறைகள் (Roots) நாவலை விட "தீண்டாத வசந்தம்" ஒரு படி உயர்ந்தது. அந்த நாவலின் வடிவத்தின் சுவடுகள் இங்கு நிறையவே காணப்படுகின்றன. ஆனால், அதை விட ஆழமாக, உழைப்பின் மேன்மையையும், அதை சுரண்டும் அற்பத்தனத்தையும், அதோட இணைந்த அரசியலையும் அற்புதமாகக் காட்டுகிறது, தீண்டாத வசந்தம்.

எல்லண்ணாவும் சுபத்ராவும், ரூத்தும், ரூபேனும், எல்லண்ணாவின் அத்தை பூதேவியும் அவரது அம்மா அப்பா பிச்சையும், அம்மா லிங்காலுவும், பிச்சையின் மச்சான் எங்கட நரசுவும் என மறக்க முடியாத நபர்கள். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான கோர்வையான கதையோட்டம், பாத்திரப் படைப்பு.

நாகண்ணா, உறுமி சந்திரப்பா, நாகண்ணாவின் அப்பா நாரிகானும், நாரிகானும் மாத்தையாவும் நடத்தும் வீரப் போரும், சுபத்திராவின் ஆவேசப் போரும், எல்லண்ணாவின் பயணங்களும், அவரது பையன் சிவண்ணாவும் சசிரேகாவும், தாது வருஷப் பஞ்சம், கலைகளிலும் இலக்கியத்திலும் நிலவும் ஆளும் சாதியினரின் ஆதிக்கம், வெள்ளைக்கார ஆட்சியிலும் கிருத்துவ மதத்திலும் கூட இடம் பிடிக்கும் சாதி ஆதிக்கம், பஞ்ச நிவாரண பணியிலும் தீண்டாமை, சிவய்யா சிமோன் ஆவது, அதிலிருந்து ரூபன், ரூத், இம்மானுவேல், மேரி, ஜெசி, ரூபி என போராட்ட பாரம்பரியத்தை 300 பக்கங்களில் சொல்லி விடுகிறார், கல்யாண் ராவ்.

சின்னச் சின்ன வாக்கியங்களாக இருப்பதைப் பற்றி கல்யாண் ராவிடம் பத்திரிகை பேட்டியில் கேள்வி கேட்கிறார்கள். ஆமாம், அப்படித்தான் மக்களின் இலக்கியம் உள்ளது என்கிறார். மக்களின் வாழ்வும், போராட்டமும் கதைகளாக பாடல்களாக கட்டப்பட்டு ஊரெங்கும் பரவுகிறது. தாய் நாவலில் பாவெல் கற்றுக் கொண்டு பேசும் உழைப்பின் பெருமையை, இரத்தத்தோடும் வாழ்வோடும் உணர்ந்த சமூக மக்கள் உள்ளுணர்வாக கொண்டாடுகிறார்கள்.

ஆளும் வர்க்க அரசியல், கணக்குப் பிள்ளை, ரெட்டி, பறையர், சக்கிலியர், வண்ணார் என்று சாதிகளின் பெயர்களையும் பொருத்தமாக மொழி பெயர்த்து ஆந்திராவில் நடக்கும் தமிழ்க் கதையாகவே ஆக்கி விட்டார் மொழிபெயர்ப்பாளர். இதே கதை தமிழகத்தின் ஆயிரம் கிராமங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் நடந்திருக்க வேண்டும்.

கர்ணன் படத்தில் தீண்டாத வசந்தத்தின் வரிகளைப் பார்க்க முடிந்தது. தீண்டாத வசந்தத்தில் வரலாற்றின் வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களின் இலக்கியத்தில் இருக்கும் தொடர்ச்சி இந்தப் படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

1980-களில் லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சுஜாதா, ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வாசித்து ஒரு கட்டத்தில் பாலகுமாரன் மிகப்பெரிய படைப்பாளியாகத் தெரிந்தார். சென்னைக்கு வந்த பிறகு தமிழ் இலக்கிய உலகின் விளிம்பை எட்டிப் பார்த்த போது, 'இவர்கள் எல்லாம் வணிக எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்தான் உலகத் தரத்திலான சிறுகதை எழுத்தாளர்' என்றார்கள். அவரிடம் செல்லம்மாவுக்கு வைத்தியம் பார்க்கும் துணிக்கடையில் வேலை பார்க்கும் பிள்ளையின் மேல்சாதி வறுமைக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. 'உலகத்தின் 20 படைப்பாளிகளில் தானும் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் ஜெயமோகனின் கதைகளில் உழைக்கும் மக்களின் வாழ்வு டிராமாத்தனமாக காட்டப்படுவதாகத்தான் இருந்தது.

இவ்வளவு வாசிக்கக் கூடிய பழக்கம் இருந்தும், 2004-ல் வெளியான தீண்டாத வசந்தம் நூலை 18 ஆண்டுகளாக வாசிக்காமல் இருந்தது, வெட்கமாக இருந்தது. பலமுறை நூலின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ் புனைவு வாசிப்பதில் சலிப்பும் விலகலும் ஏற்பட்டிருந்தது. வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்று வாழ்க்கை நகர்ந்து விட்டிருந்தது. இலக்கிய வாசிப்பு என்றால் ஆங்கிலத்தில் டால்ஸ்டாய் எழுத்தையும், அமெரிக்க எழுத்துக்களையும், பிரிட்டிஷ் எழுத்துக்களையும் வாசிப்பது என்றாகி விட்டது.

Roots நாவலை கல்லூரியில் படிக்கும் போது, அமெரிக்கன் நூலகத்தில் எடுத்து வாசித்து விட்டேன். War and Peace நாவலை டாடாவில் வேலை செய்யும் போது வாசித்து விட்டேன். அவற்றின் பிரம்மாண்டமும் ஆழமும் பார்த்த பிறகு குட்டையில் மீன் பிடிப்பதாக அமையும் தமிழ் படைப்புகளை (எனக்கு அறிமுகமானவற்றை) படிப்பதில் சலிப்பு ஏற்பட்டது, அதன் மீது ஒரு இகழ்வும் இருந்தது.

எரியும் பனிக்காடு என்ற நாவல் பிடித்தமானது. ஆனால், “தீண்டாத வசந்தம்"தான் தமிழின் நாவல். எப்படி பா. ரஞ்சித்தின் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்க்கையை கொண்டு வந்ததோ, அதில் நிரம்பியிருக்கும் கொண்டாட்டங்களையும், திறமைகளையும், உழைப்பையும், போராட்டங்களையும் சேர்த்து கொண்டு வந்ததோ, மாரி செல்வராஜின் படைப்புகள் எப்படி திரையுலகை புரட்டிப் போட்டனவோ, அது போல புரட்டிப் போட்டிருக்கும் படைப்பு தீண்டாத வசந்தம்.

எஸ் ராமகிருஷ்ணன் 100 தமிழ் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார். அதில் எதுவும் இது போன்ற வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கவில்லை.

கல்யாண் ராவின் எழுத்தில் வாழ்வும் உண்டு, வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அரசியலும் உண்டு. காங்கிரஸ் அரிசன சேவா சங்கம் வருகிறது, அதிலும் ரெட்டிகள் இருக்கிறார்கள், அம்பேத்கரின் விமர்சனம் வருகிறது, கிருத்துவ மதப் பிரச்சாரம் வருகிறது, அதையும் ஆளும் சக்திகள் தமதாக்கிக் கொள்கிறார்கள், யாராலும் கைப்பற்ற முடியாத சக்தியாக கம்யூனிசம் வருகிறது. அதை ஒடுக்குகிறார்கள். ராமானுசத்தையும் போராடும் தோழர்களையும் அடித்து கொன்று விடுகிறார்கள். இம்மானுவேல் நூற்றுக் கணக்க்கான, ஆயிரக்கணக்கான மக்களின் தோழனாக மரிக்கிறான். ரூத்-ஆல் எழுத முடியாத இமானுவேலின் வாழ்க்கையை அடுத்த நாவலாக எழுத வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர். இமானுவேல், ஜெசி, மேரி, ரூபி இந்தத் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு காவியமாக இருக்கும்.

சாதியை அழித்தொழிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தோழர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அதில், சாதி ரீதியான வேலைப் பிரிவினை எப்படி தனிநபரை ஒடுக்குகிறது என்று அம்பேத்கர் விளக்குவதைச் சொல்லியிருந்தார்கள். அருந்ததி ராய் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் அவரால் வாழ்வைச் சொல்ல முடியவில்லை. வாழ்க்கையில் இருந்து விலகிய பாத்திரங்களின் பார்வையிலிருந்துதான் வாழ்வை பார்க்க முடிகிறது, அவரால். அது அவரது தவறில்லை, அவர் பிறந்த இந்திய சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் பிரச்சினை.

சங்கிகள் நடத்திய கிளப் ஹவுஸ் விவாதத்தில், ‘பிராமணனான என்னை பூசை செய்ய விடவில்லை' என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்லி, கோயில்களில் பிற சாதியினர் அர்ச்சகர் ஆக முடியாது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். “என்னை ஏன் பூசை செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்" என்று கொதிக்க முடியவில்லை அவருக்கு. இது ஒரு மனித விரோத, முன்னேற்றத்துக்கு விரோதமான கட்டமைப்பு

அதை மிகப் பிரமாதமாக, வரலாற்றோடு அதன் அநீதிகளோடு, அதன் ஓட்டங்களோடு கொண்டு வந்திருக்கிறது, தீண்டாத வசந்தம். அதை இன்னொரு முறை படித்தால்தான் முழுமையாகப் புரியும். பரியேறும் பெருமாள் படத்தை 2 முறையோ 3 முறையோ பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போது அது ஒரு புதிய வாழ்வைக் காட்டியது.

பா ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜூக்கும் கல்யாண் ராவுக்கும் வணக்கங்கள். வாழ்வின் திரையை விலக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

தாய் நாவலையும் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பாவெலும் அவனது அம்மாவும் தொழிலாளர்களும் தொழிற்சாலையும், தோழர்களும் அம்மாவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அது சோசலிச யதார்த்தவாத படைப்பாம். அப்படி என்றால் கல்யாண் ராவின் படைப்பை என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழருக்கும் "சாதியை அழித்தொழிப்பது" மட்டுமின்றி "தீண்டாத வசந்தமும்" கட்டாய பாடமாக இருக்க வேண்டும். அரசியலையும் வாழ்வையும் அவை கற்றுக் கொடுக்கின்றன.


செவ்வாய், செப்டம்பர் 03, 2019

சாதி பற்றி வினவின் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்

A. நடைமுறை

"புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை" - என்ன செய்ய வேண்டும், லெனின் (பக்கம் 25, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது)

வினவு, ம.க.இ.க-வின் நடைமுறை என்பது புரட்சிகரமான நடைமுறையாக இல்லாததற்குக் காரணம் அவர்களது சாதி பற்றிய கோட்பாடு (மட்டுமின்றி இன்னும் அடிப்படையான கோட்பாடுகளும்) மேம்போக்கானது, தவறானது. எனவே, வினவு, ம.க.இ.வின் நடைமுறை (களத்தில் தோழர்களின் தீரமான போராட்டங்கள்) புரட்சிகரமான இயக்கமாக மாறாமல் தேங்கிப் போயிருக்கின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தவறான கோட்பாடும், 40 ஆண்டுகளாக அதை பரிசீலித்து சரி செய்யத் தவறிய கோட்பாட்டு தலைமையும்தான்.

இல்லை என்றால் ம.க.இ.க-வின் கடந்த கால நடைமுறை போராட்டங்கள், சாதி ஒழிப்புப் பற்றிய அதன் கோட்பாட்டோடு எப்படி தொடர்புடையனவாக இருந்தன என்று சொல்லுங்கள்? அவை அந்தக் கோட்பாட்டுக்கு எப்படி வலு சேர்த்தன அல்லது அதை மேம்படுத்த உதவின என்று விளக்குங்கள். அப்படி எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

அதனால்தான், வினவு, ம.க.இ.க சாதி எதிர்ப்பு அரசியலை பேசுகின்ற, நடைமுறையில் ஈடுபடுகின்ற எல்லோரையும் முத்திரை குத்தி அவமதிப்பதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

B. ரஞ்சித் பற்றி வினவு இங்கு துலக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் "தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும்" செலக்டிவாக பேசுகிறார் என்று.

இந்த அலட்சியப்பார்வையின் அடிப்படை எது? சாதி குறித்த சித்தாந்த ஓட்டாண்டித்தனமா? இல்லை சாதி ஆதிக்க பார்வை மேலெழுந்ததா? இரண்டுமேதான். முன்னது பின்னதை மேலெழுவதற்கான காரணமாக இருக்கிறது.

சாதி பற்றிய வினவின் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது? அரை நிலப்பிரபுத்துவம் என்ற அதன் கோட்பாட்டு முடிவு எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது.

முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய "இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம்" என்ற நூல் மார்க்சின் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. மார்க்சின் அந்தக் குறிப்புகளில் இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.*

a. முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு

"1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பிற ஆசியபாணி சமூகங்களின் சொத்துடைமை முறை]

2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே குடிமகன் மட்டுமே ஒரு தனி உடைமையாளர், ஆனால் அவரது சொத்துடைமை தனியாகவும் இருப்பது. [ரோமானிய பழங்குடி சமூகங்களின் சொத்துடைமை முறை]

3. இறுதியாகத் தனிச்சொத்துடைமைக்கு துணையாக மட்டுமே சமூகச் சொத்துடைமை இருப்பது. தனிச்சொத்துடைமையே சமூகத்துக்கு அடிப்படையாகவும், உறுப்பினர்கள் கூடும் பொழுதும் பொதுத்தேவைகளின் போதும் மட்டுமே சமூகம் உண்மையில் நிலவுவது. [ஜெர்மானிய பழங்குடிகளின் சொத்துடைமை முறை]

- ஆகிய இந்த வெவ்வேறு வடிவங்களிலான சமூக அல்லது பழங்குடி உறுப்பினர்களின் ஓரிடத்தில் குடியேறிய பழங்குடி நிலத்துடனான உறவு பழங்குடியின் இயற்கையான குணாம்சங்கள் மீது ஒரு பகுதியாகவும், உண்மையில் பழங்குடி நிலத்தின் உடைமை செலுத்துவதில், பலனை அனுபவிப்பதில், பொருளாதார நிலைமைகளின் மீது ஒரு பகுதியாகவும் சார்ந்து நிற்கிறது.

உடைமை செலுத்துவதை, பலனை அனுபவிப்பதை தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை, பகைமையான அல்லது அண்டைப் பழங்குடியுடனான உறவுக் குடியேற்றங்களினால் ஏற்படும் திருத்தங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன."

(இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், பக்கம் 58 - படிப்பதற்கு வசதியாக வாக்கியங்களை பிரித்து, வரிசை எண் தரப்பட்டுள்ளது, சதுர அடைப்புக் குறிக்குள் எனது குறிப்புகள்)

இதில் 1-ல் சொல்லப்படுவது இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை, 2-ல் ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை, 3-ல் ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை. இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

b. குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு "முதலாளித்துவ உற்பத்திக்கு முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்தின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது".

இதற்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு (சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு "மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்"

எனவே, இந்தப் பகுதியில் மார்க்ஸ் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தையும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவை மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் போது இந்த்க் குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

c. இந்திய சாதி முறை பற்றி

1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் [வம்சாவழி கணங்கள்] மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய [படிநிலை] வரிசை ஆகும், அதில் [கணங்கள்] ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. கணங்களுக்கிடையே திருமண உறவு உரிமை இல்லை, கணங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வான சலுகைகளைப் பெற்றவை. [கணங்கள்] ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட, மாற்றிக் கொள்ள முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச - 409)

(சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறை. இந்த வாக்கியம் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூலில் இடம் பெறவே இல்லை!)

2. "[அடிமை முறை, பண்ணையடிமை முறை ஆகியவற்றுக்கு உரிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது" (குருண்ட்ரிச 433) [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது. ஆனால், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்கிறது.]

3. "பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறு சமுதாயங்களின் மேல் நிற்கும் உச்சபட்ச அதிகாரம் [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோற்றமளிக்கிறது.  உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்" (குருண்ட்ரிச 404)[இதில் இந்திய சமுதாயப் பொருளாதரப் படிவம் அரசனுக்கு நிலவுடைமை சொந்தமாக இருப்பதை மட்டும் வலியுறுத்துகிறது. பரம்பரை வழி பாத்தியதை பெறும் "சமுதாயங்களைப்" பற்றிய பரிசீலனைக்கு உள்ளே போகவில்லை.]

d. இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற ஆவணம் இது போன்ற குறிப்புகளை சொல்லி விட்டு

"ஆசியச் சொத்துடைமை வடிவம், மறுஉற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் மட்டுமல்ல, எங்கெல்ஸ், லெனின் ஆகியோரும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். பழம்பண்டு ஜெர்மானிய, ஸ்லாவினிய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஒன்றுதான் ஆசியச் சொத்துடைமை வடிவம் மற்றும் உற்பத்தி முறையாகும். சில பிரத்தியோகமான காரணங்களினால் இந்த வடிவமும் முறையும் எடுத்திருப்பினும், உலகெங்கும் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்கள், முறைகளின் சாராம்சத்தில் இருந்து வேறுபாடானதோ, விதிவிலக்கானதோ அல்ல" (பக்கம் 105)

“சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஆகிய வர்ணங்கள் ஐரோப்பாவில் நிலவிய அரசு உயர்குடி, பிரபுத்துவ உயர்குடி, நிதி ஆதிக்க உயர்குடியான பாட்ரீஷியன்கள், உழைக்கும் நகர்ப்புற பிளெபியன்கள் மற்றும் விவசாயிகள் போன்ற சில பிரிவு வர்க்கங்கள் அடங்கிய ஒரே வகையினரான சமூக எஸ்டேட்டுகளையே குறிக்கும். சாதி அடிப்படையிலான குலத்தொழில்கள், குடிசைத் தொழில் மற்றும் விவசாயத்தின் ஐக்கியத்தைப் பராமரித்த வேளையில், வர்ண அடிப்படையிலான வைசிய சமூகப் பிரிவு, பண்ட உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான கூறுகளைப் பெற்றிருந்ததையே காட்டுகிறது” (பக்கம் 110)

“இந்தியச் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பே கிடையாது என்பதில்லை. அதேபோல் பொதுச்சொத்துடைமை அடிமைமுறையையும் மறுப்பதற்கில்லை” (பக்கம் 109)

“நிலப்பிரபுத்துவத்தின் சாராம்சம் தனிச்சொத்துடைமையோ, கைத்தொழிலும் விவசாயமும் வேறு வேறாக வளர்வதோ மட்டுமல்ல; அதன் பிரதானமான அம்சம் உழைப்பாளர் நிலத்தோடும் பிற உற்பத்திச் சாதனங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான்; சாதிய அமைப்பு முறை, பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மூலம் சமூகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் நிலத்தோடும் உழைப்பாளனை பிணைத்திருக்கிறது” (பக்கம் 110)

என்று முடிவு செய்கிறது.

இவ்வாறு, 'இந்தியாவின் சாதி முறை என்பது ஐரோப்பாவின் சமூக எஸ்டேட்டுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை', 'இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இருந்தது, பொதுச்சொத்துடைமை அடிமை முறை இருந்தது', எனவே 'இந்தியாவுக்கும் ஐரோப்பிய சமூகங்களுக்கும் வேறுபாடு இல்லை' என்று முடிவு செய்கிறது அந்த ஆவணம். அதன் அடிப்படையி்ல இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று வரையறுக்கிறது. சாதி பற்றிய யதார்த்தத்தை திரை போட்டு மூடுகிறது.

சாதி பற்றி மார்க்ஸ் கொடுத்திருக்கும் குறிப்புகளை பின்பற்றி அம்பேத்கரின் எழுத்துக்களையோ, அதற்குப் பிந்தைய வரலாற்று அறிஞர்களின் படைப்புகளையோ கருத்தில் கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. அதன் பிறகு 1990-களில் பெரும் அளவில் வெளியிடப்பட்ட ஆய்வுகளை "பின் நவீனத்துவம்", "மார்க்சிய விரோதம்" என்று தாக்கிக் கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

இவ்வாறாக, வினவு குழுவினர் சாதி (இந்திய சமூகம்) பற்றிய கோட்பாட்டில் 1980-ல் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல், இன்று வரை வறட்டுவாதிகளாகவே தொடர்கின்றனர்.

இது வினவு பரிதவிப்புடன் பரிசீலிக்க வேண்டிய‌ விஷயம். குறைந்தபட்சம் தன்னை இன்னமும் நம்பி வந்தடையும் வாசகர்களுக்கு நேர்மையாக இதைப் பற்றி வினவு பேசியிருந்திருக்க வேண்டும். மாறாக, "நீ‌ பெரிதா நான்‌ பெரிதா", "யார் சுத்தமான‌‌ கம்யூனிஸ்டு" என ரத்த பரிசோதனை செய்யும் வகையில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பின்குறிப்பு : என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

* இது தொடர்பான மார்க்சின் முழுக் குறிப்புகளையும் படிக்க விரும்புபவர்களுக்கு https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm , https://www.marxists.org/archive/marx/works/1857/grundrisse/ , https://www.youtube.com/watch?v=lIx2tEweLeE]

குருண்ட்ரிச மேற்கோள்கள் நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. (பக்க எண்கள் மார்க்சிஸ்ட் இன்டெர்நெட் ஆர்கைவ்-ன் பி.டி.எப் கோப்புடையவை)

https://www.vinavu.com/2019/08/26/vinavu-q-and-a-about-director-pa-ranjith-cpi-cpm-parties-and-tamil-groups/#comment-534503 -க்கு மறுமொழி

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சாதிய பிரச்சனை, வினவின் பிரச்சனை

1. கடந்த காலத்தில் ம.க.இ.க, வி.வி.மு தோழர்கள் களத்தில் நடத்திய வீரியமான போராட்டங்களை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. நீங்களும் கார்த்திகேயனும் கொடுத்த பட்டியலுடன் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்களை, குறிப்பாக 11 இசைப் பேழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பின்னர் வினவு மூலம் தி.மு.க/தி.க நீர்த்துப் போக வைத்து விட்ட பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்த பணியை, குறிப்பாக 2014 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலை செயலூக்கத்துடன் எடுத்துச் சென்றதை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

2. இங்கு அது இல்லை விவாதம். வினவு ரஞ்சித் பற்றிய தனது பதிலில் சொல்லியிருப்பது, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.”

அதாவது ‘இந்தியாவின் சாதிய பிரச்சனை பற்றி கற்பது, கற்று ஆய்வு என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்’ என்கிறது வினவு. ஆனால், வினவின் அமைப்பு ரீதியான சாதி பற்றிய ஆய்வும் கோட்பாடும் மிகவும் மேலோட்டமானது; மூலதனம் நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் எழுதிய Grundrisse என்ற முதல் பிரதியின் (first draft) குறிப்புகளை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்பட்டது. (பார்க்கவும் – இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்).

அந்த நூலில் மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் முதலாளித்துவ கூலி உழைப்பாளிக்கும் அதற்கு முந்தைய சமூகங்களில் உழைப்பாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்கானவை. ஆனால், அதன் ஊடாக மார்க்ஸ் முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமையில் ரோமானிய, ஜெர்மானிய, இந்திய வடிவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்புகளைச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து ஆரம்பித்து இந்தியாவில் சாதி பற்றிய பருண்மையான ஆய்வை செய்திருக்க முடியும்.

ஆனால், 1980-களில் எழுதப்பட்ட அந்த ஆவணம் அத்தகைய ஆய்வு எதையும் செய்யவில்லை. 1940-களுக்கு முன்பே அம்பேத்கர் செய்து முடித்து விட்ட சாதி பற்றிய ஆய்வுகளை பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் சாராம்சத்தில் ரோமானிய, ஜெர்மானிய சமூகங்களில் இருந்து வேறுபட்டது இல்லை (இயற்கை சார் உற்பத்தி, எளிய மறுஉற்பத்தி, உழைப்பாளி நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது போன்றவை), இந்திய சமூகம் காலனிய ஆட்சிக்குப் பிறகு அரை நிலப்பிரபுத்துவமாக மாறி விட்டது என்று முடித்துக் கொண்டது. சாதியக் கட்டமைப்பு பற்றிய பருண்மையான வரலாற்று அடிப்படையிலான ஆய்வைச் செய்யவில்லை.

அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் வெளியான சாதி பற்றிய பல ஆய்வுகளை “பின்நவீனத்துவம்” “அடையாள அரசியல்” என்று முத்திரை குத்தி புறக்கணித்து தான் எடுத்த “அரை நிலப்பிரபுத்துவம்” என்ற கோட்பாட்டிலேயே இன்று வரை நிற்கிறது வினவு/புதிய ஜனநாயகம்/புதிய கலாச்சாரம். இவ்வாறாக 35 ஆண்டுகளாக அமைப்பாகச் செயல்பட்ட வினவு சாதி பற்றிய ஒரு புரட்சிகர கோட்பாட்டை உருவாக்கத் தவறியிருக்கிறது. [இதைப் பற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்]

3. எனவே, 1-ல் சொன்ன ம.க.இ.க-வின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எல்லையைத் தாண்டி புரட்சிகர பரிமாணத்தை பெற முடியவில்லை. எனவே, சாதி ஒழிப்புக்கான பாதையை உருவாக்கவோ, சாதியப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சக்தியாக உருவெடுக்கவோ முடியவில்லை.

இன்றைய (2019) நிலையில் கூகை, casteless collective போல ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தும் போராட்டத்திலோ, நீலம் பண்பாட்டு மையம் போல சாதி எதிர்ப்புப் போராட்டத்திலோ வினவோ, ம.க.இ.கவோ இல்லை என்பது யதார்த்தம். அதற்குக் காரணம் மேலே சொன்ன கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்.

4. சாதி ஆணவம் என்பது தன்னை அறியாமல் கூட ஒருவருக்கு வரலாம். அதுவும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதி என்ற மலம் உள்ளே ஒட்டிக் கொண்டே இருக்கிறது. சாதியை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்டு (அம்பேத்கரை படித்து, பரியேறும் பெருமாள் போன்ற படைப்புகளை பார்த்து) தொடர்ந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் மூலம்தான் அதன் துர்நாற்றத்தை துரத்த முடியும். வினவு அதில் தவறியிருக்கிறது என்று சொல்கிறேன்.

5. மற்றபடி, என்னுடைய பின்னூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து நீங்கள் பட்டியல் இட்டிருக்கும் சொற்களை வாக்கியங்களோடு சேர்த்தே படித்துப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(இது ரஞ்சித் பற்றிய வினவின் கேள்வி-பதில் பதிவில் போட்ட மறுமொழி)