சனி, ஜனவரி 06, 2007

நிறவெறி பிடித்த தமிழர்கள் - 2

தமிழர்களின் நிறவெறி என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் இருந்து விட்டது. பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், எனது எண்ணத்தை மேலும் தெளிவு படுத்தும் விதமாகவும் இந்த தொடர்ச்சி:

ஓரளவு உலகைச் சுற்றி வந்து கறுப்பு இனத்தவர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து உணர்ந்து விட்டவர்களுக்கு தமிழர்களிடையே இது போல உணர்வுகள் இருப்பது ஆச்சரியமாகத் தெரியலாம். சராசரி தமிழ்க் குடும்பத்தில், தமிழகத்தின் சிறு ஊர்களிலும், நகரங்களிலும் தோலின் நிறத்தின் மூலம் குழந்தைகளின், வளர்ந்தவர்களின் தன்னம்பிக்கையையே அழித்துப் போடுவது பெருமளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது எனது அவதானம்.

சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற வரும் ஒரு பெரிய மனிதரின் முகம் மட்டும் பொடி பூசப்பட்டு கழுத்துடன் வேறுபட்டு அசிங்கமாகத் தெரிவதும், சின்னச் சின்னக் குழந்தைகள் கூட பவுடரை அப்பி வெள்ளையாக தோன்ற முயற்சிப்பதும் அன்றாடம் பார்க்கக் கிடைக்கும் காட்சிகள்.

மாசிலா சொல்வது போல் கலை, ஊடகங்களின் கருத்தாக்கங்களும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு என்று வைரமுத்து பாட்டு எழுதிய போது எவ்வளவு புதுமையாகத் தெரிந்தது?

என் பையன் சாங்காயில் படிக்கும் போது (குழந்தைகள் பள்ளி) கறுப்பு நிறத்தில் படத்துக்கு வண்ணம் தீட்டியதால் அந்தப் பள்ளியின் தலைமைஆசிரியை குழந்தைக்கு மனம் பாதித்திருக்கிறது என்று சொல்ல வந்து விட்டார். கறுப்பு என்றாலே இழுக்கு என்பது எவ்வளவு நிலைகளில் புகுத்தப் பட்டு விடுகிறது.

இது இந்தியா முழுவதும் இருக்கிறது என்று நாம் சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. உலகில் எத்தனை பகுதிகளில் இது மாதிரி தாழ்வுணர்ச்சிகள் நிலவினாலும், நம்மிடையே அப்படி ஒரு உணர்ச்சிக் குறை இருந்தால் அதை ஒதுக்கி மற்றவருக்கும் வழிகாட்டியாக இருக்க முடியும்.

ஹரிஹரன் சொல்வது போல, அருள் சொல்வது போல உரக்கச் சொல்லி இந்தக் கசடு தங்கியிருக்கும் உள்ளமே இல்லை தமிழரிடையே என்ற நிலையை உருவாக்க அதிக நாள் பிடிக்காது.

நிறவெறி பிடித்த தமிழர்கள்- 1

8 கருத்துகள்:

மஞ்சூர் ராசா சொன்னது…

நம்மிடையே நிறவெறி இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நிறத்தின் காரணமாக பலருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்பது உண்மை. அதை முதலில் அவர்கள் தங்களின் மனதிலிருந்து அகற்றவேண்டும்.

மா சிவகுமார் சொன்னது…

மஞ்சூர் ராசா,

நிறவெறி என்று சொல்லும் அளவுக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், முந்தைய பதிப்பின் பின்னூட்டத்தில் பலர் சொன்னது போல, கறுப்பை இழிவாகப் பார்க்கும் போக்கு பரவலாக இருக்கத்தான் செய்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மாசிலா சொன்னது…

மாவு பூசிய கோர முகங்கள் :
இந்த பிரச்சினையை உளவியல்படி அனுகினோமேயானால், மனிதனின் தன்நம்பிக்கையின்மையே இதற்கு காரணம் எனலாம். மேலும் இக்காலங்களில், மனிதனை நாம் மனிதனாக பார்க்காமல், அவனை, அவளை ஒரு பணம் பன்னும் இயந்திரமாகவே பார்க்கிறோம். சிறுவயது முதலே இந்த நாடகம் ஆரம்பமாகிறது. எப்படியவது, எதையாவது படித்து பார்பதற்கு "அம்சமாக" இருந்து கைநிறைய சம்பாதிக்கவேண்டும். இதற்கெல்லாம் இந்த ஆடம்பர உலகில் "வெளித்தோற்றமும்" ஒரு "அத்யாவசியம்" ஆகிவிட்டது. புதிதாக வலம்வரும் வாகனங்களைப்போல் இயந்திரம் ஆகிவிட்ட மனிதனுக்கும் ஒரு அழகிய (stereo-type) தோற்றம் ஒன்று தேவைப்படுகிறது. மேலும், இதில் 'தான்' தானாக இல்லாமல், ஏதாவது ஒரு நடிகனைப்போல், விளையாட்டு வீரனைப்போல் தோற்றத்தை தேடி அலைகிறான். அதையேதான் மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களை எல்லாம் முகமூடி மனிதர்கள் என்றால் மிகையாகாது.

Machi சொன்னது…

சிவகுமார் நம்மிடையே உள்ள நிறவெறி பற்றி சொல்ல நீங்கள் தொடர் பதிவு தான் எழுத வேண்டும். நம் மக்களின் அன்றாட செயல்களே இதற்கு சாட்சி சொல்லும். இதை பற்றி நானும் எழுதவேண்டும் நினைத்த்துண்டு.

மா சிவகுமார் சொன்னது…

மாசிலா,

நீங்கள் கூட சிவப்பாக அம்சமாக என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது போலத்தானே எழுதுகிறீர்கள். கறுப்பும் அம்சம்தான் என்று உணர வேண்டும், அதுதான் உண்மை என்று நான் கருதுகிறேன். நான் இப்போது இருக்கும் ஆப்பிரிக்க நாட்டில் கருப்பர்களின் முகக்களையும் தோற்றமும் அழகில்லை என்று யார் சொல்ல முடியும்?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

எழுதுங்கள் குறும்பன். பல தடவை எழுதுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லுங்கள். யாராவது ஒருவராவது நினைத்துப் பார்க்க மாட்டார்களா?

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாள் கழித்து உங்கள் வலைப் பதிவுக்கு வருகின்றேன்.என் அண்ணகளையே இது உன் அண்ணாவா என்று சந்தேகத்துடன் பார்கின்றார்கள்.என் நிறம் அப்படி.என்ன செய்வது?வெளுத்த மேனி என்றால் பலருக்கு பெரியதாக தெரிகின்றது.மற்ற இனத்தவர் கேவலமாகப் பார்த்தாலும் பேசினாலும் பொறுத்துக் கொள்ள முடிகின்றது.தமிழர்களே கேவலப் படுத்தினால் என்ன செய்ய?

மா சிவகுமார் சொன்னது…

துர்கா,

தோலின் நிறத்துக்கும் மனிதரின் உயர்வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நம்மவர்களோ, பிறரோ அப்படி உணர்த்த முயன்றால் அவர்களைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டு நகர்ந்து விட வேண்டியதுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்