புதன், டிசம்பர் 20, 2006

நிறவெறி பிடித்த தமிழர்கள்

'கறுப்பாக இருப்பது இழிந்தது. வெள்ளைத் தோல்தான் முன்னேற்றத்தின் அடையாளம்' என்பது இன்னொரு பிரச்சாரம். குழந்தை பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு நிலையிலும், 'அவன் கறுப்புதான், அவன் நல்ல நிறம்' என்று சமூக அடிமைத்தனத்தை பிரச்சாரம் செய்கிறோம்.

என்னதான் நுணுக்கமாக வேறுபட்டாலும் எல்லோருமை அரை நிறமான பழுப்பு நிறம்தான் என்பதை மறந்து விடுகிறோம். இதே பழக்கத்தில் ஊறிப் போய் இங்கு வெள்ளையானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட வெள்ளை தோல் படைத்த இனத்தவர் முன்பு தாழ்ந்து போய் விட்ட உணர்வு ஏற்படுகிறது. மிகக் கீழ்நிலையில் இருக்கும் வெள்ளை இனத்தவர் கூட முதல் பார்வையில் மதிப்பைப் பெற்று விடுகிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் நம்முடைய பழக்கங்களும், மனப்போக்கும்தான்.

மிக உயர்ந்த நிலையில் பணம் படைத்தவர்கள் கூட தமது முகத்தில் கெட்டியாக பவுடர் பூசிக் கொண்டு விமான நிலையத்துக்குள் வருவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். நம்முடைய தோல், நம்முடைய பழக்கங்கள், நம்முடைய உணவு முறை, நம்முடைய முக அமைப்பு இயற்கையில், பல்லாண்டு கால வாழ்க்கையில் விளைந்தவை. அவற்றை இழிந்ததாகக் கருதுவது நமது தாழ்நிலைக்கு அடிப்படைக் காரணம்,

இந்த இடைவெளியில்தான் பேர்அன்ட்லவ்லி என்று சக்கைப் போடு போட்ட சிகப்பழகு களிம்பு. இப்போது ஆண்களுக்கும் வந்து விட்டதாம். இந்த நிறவெறியை, நிறத் தாழ்வுணர்வை ஒழிக்க:

1. முகப்பவுடர்கள், சிகப்பழகு களிம்புகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம். நம்முடைய முகம் இயல்பாகவே அழகாக, கம்பீரமாக இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு வெளியே கிளம்புவோம்.

2. பல ஆண்டுகளாகப் பழகி விட்ட மனதை சரிப்படுத்த, நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒரே முகத்தை வெவ்வேறு நிறங்களில் பொருத்திக் கற்பனை செய்து பார்க்கலாம். வெள்ளையாக ஒரு பெண்ணைப் பார்த்தால், இதே முகம் கறுப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்று உருவகித்துப் பார்த்துக் கொள்ளலாம். கறுப்பு நிறத்தவரைப் பார்க்கும் போது வெள்ளை நிறத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த முறையைப் பின்பற்றி ஒரு சில வாரங்களிலேயே (ஆறு வாரங்கள்!!), தோல் நிறத்தைச் சார்ந்த அழகுணர்ச்சியை மாற்றிக் கொள்ள முடிந்தது.

3. யாரிடமும் தோல்நிறத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவதை எழுதுவதைத் தவிர்க்கலாம்.

நமது மண் தந்த, நமது பெற்றோர் தந்த தோல் நிறம் எதற்கும் குறைந்தது இல்லை, அதை மாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. அதைப் பெருமையாக ஏற்று தன்னம்பிக்கையோடு நடைபோடப் பழகுவோம்.

8 கருத்துகள்:

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

தாழ்த்தப்பட்டவர் நலனுக்கு தாழ்த்தப்பட்டவர்களே போராட வேண்டுமென்பதும், நிறவெறிக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களே போராட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

கேள்வி கேட்டால் நீ கறுப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பாண்மையுடன் இருக்கிறாய் என்ற பம்மாத்து பதில் தான் வரும்

அருள் குமார் சொன்னது…

//நம்முடைய முகம் இயல்பாகவே அழகாக, கம்பீரமாக இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு வெளியே கிளம்புவோம்.//

பல வருஷமா அப்படித்தானே நம்பிகிட்டிருக்கோம்! :)

மாசிலா சொன்னது…

விவவாத மேடைக்கு ஏற்ற நல்ல பதிவு.

இதற்கு அடிப்படை காரணம் நிறைய உண்டு எனலாம்.
ஆரியர்களின் வருகை, ஆதிக்கம். வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், சினிமா, சின்னைத்திரை, பக்தி படங்களில் உள்ள
தெய்வங்களின் நிறங்கள். கவர்ச்சி மற்றும் வெளித்தோற்றம் முக்கியம் என அகிவிட்ட இந்த நவீன, ஆடம்பர, நுகர்வோர், வியாபார
உலகில் வெளித்தோற்றமே வாழ்க்கைக்கு பெரிய முதலீடு என்ற அளவில் நம்பகமாகிவிட்டது. இசையை, கலையை, நாடகம், தெய்வ நம்பிக்கை ஆகியவைகளில் மிகவும் நாட்டமுள்ள தமிழர்களை இதன் மூலமாகவே இந்த நிறத்தின் மோகத்திற்கு அடிமைப்படுத்த பட்டார்கள். இது பத்தாதற்கு, மேலைநாட்டு மோகம் வேறு. வெள்ளைகாரர் என்றாலே பல்லை இளிக்கும் நம் ஊர் மக்களை எப்படி திருத்தப்போகிறோம்?

வினையூக்கி சொன்னது…

//நமது மண் தந்த, நமது பெற்றோர் தந்த தோல் நிறம் எதற்கும் குறைந்தது இல்லை, அதை மாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. அதைப் பெருமையாக ஏற்று தன்னம்பிக்கையோடு நடைபோடப் பழகுவோம்//
Well said sir

பெயரில்லா சொன்னது…

இந்த பதிவே நிறத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவதிற்க்கு சாட்சி....

மாசிலா சொன்னது…

வெள்ளை நிறமுடையவர்கள் என்றாலே திறமையனவர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் என்கிற மனது பெரும்பாலான தமிழர்களிடம் உண்டு. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இது பொன்ற வித்தியாசங்களை காணலாம்.


நாடகம், திரை, சின்னத்திரை இவைகளில் கோமாளி வேடம் தரிக்கும் மனிதர்கள் 90% கருப்பு நிறமுடையவகளே. ஏழையாக சித்தரிக்கபடுபவர்களும் கரு நிறமுடையவர்களே.


சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் முக்கியமாக ஒதுக்கப்பட்ட தலித் மக்களின் நிறம் கருப்பாக இருப்பதால் இந்நிறம் தவிற்கப்பட வேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது.


தமிழர்களிடம் இருந்த தன்மானம், பூர்வீக பண்பாடு, நாகரீகம், கலை, மொழியின் உயர்வு ஆகியவை அனைத்தும் சிதறடிக்கப்பட்டு, அசிங்கம் அவமானத்திற்கு உள்ளாகி அந்நிய வெள்ளையனது அனைத்தும் உயர்வு என்ற தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு பொறுப்பு.


சொகுசு வாழ்ககைக்கு ஏற்ற நிறம் வெள்ளை நிறம். இதை வேறுமாதிரியாக் கூறவேண்டும் என்றால், வெள்ளையாக இருந்தால்
பிற்காலத்தில் வசதியான சொகுசு வாழ்க்கைக்கு இப்போதே அச்சாரம் கொடுத்ததுபோல் என்ற எழுதப்படாத உண்மை மனம்.


இருந்தாலும் இப்போது மக்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். நாடகம், திரைகளில், சின்னத்திரைகளில் புதிதாக கருப்பு நிறம் உடையவர்வகளும் நல்ல கதா பாத்திரங்களில் வருகிறார்கள். சமுதாயத்தில் இளைஞர்களும் உன்மையை உணர ஆரம்பித்து
விட்டாரகள்.

நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என் நம்புவோமாக.

PRABHU RAJADURAI சொன்னது…

இதில் ஏன் தமிழர்களை மட்டும் குறை சொல்லுகிறீர்கள். பேர் அண்ட் லவ்லி இந்தியா முழுவதும் இதே விளம்பரத்தைதான் செய்கிறது. இந்தி திரைப்படங்களிலோ அல்லது வட இந்திய மாடல்களிலோ கறுப்பு நிறத்தவர் ஒருவர் கூட கிடையாது. நந்திதா தாஸ் போன்ற இடைப்பட்ட நிறத்தவரை 'dusky beauty' என்ற அளவில் ஒத்துக் கொள்வார்கள்.

இந்தியாவில் ஏன், ஹாலிவுட்டில் எத்தனை கறுப்பு நிறத்தவர் கதாநாயகியாக உள்ளனர்?

தவறு நமது மனித இனம் முழுவதும் உள்ளது...

Hariharan # 03985177737685368452 சொன்னது…

சிவக்குமார்,

இது உலகத்தினை ஆக்கிரமித்து அடிமைப்படுத்திய வெள்ளைத்தோல் ஐரோப்பியர்களினால் அவர்கள் ஆக்கிரமித்து அதிகாரம் செய்து இருந்ததைப் பார்த்து வந்து தங்கிவிட்ட கலோனியல் மெண்டாலிட்டியின் எச்சம்.

இது தமிழர்கள் மட்டுமே இன்னும் பின்பற்றுகிறார்கள் என்கிற பார்வை சரியன்று.

தெற்கு ஐரோப்பாவின் இத்தாலியர்கள் கொஞ்சம் குறைவான தோல் நிறம் உடையவர்கள். இவர்களை வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியர்கள் சரிசமமாக இன்றைக்கும் மனத்தளவில் நினைப்பதில்லை!

இத்தாலியர்களுக்கும் இந்த நிறக்குறைவு மனக்குறை உண்டு என்ன நம்மளவுக்கு காண்டிராஸ்டாக இல்லை!

நிறத்தில் மட்டுமா கலோனியல் எச்சமான எண்ணம் இருக்கிறது? கிரிக்கெட்டை அளவுக்கு மிஞ்சிக் கொண்டாடுவதும் இத ரெசிடியூவல் கலோனியன் சிந்தனை சிண்ட்ரோம் தான்!

இன்னிக்கும் ஆமா பெரிய ஜில்லா கலெக்டர்ன்னு நினைப்பு இவருக்கு என்கிற சொல்லாடல் நமது வழக்கில் இருப்பதும் ஆங்கிலேய ஜில்லாக் கலெக்டராக இருந்த வெள்ளைக்காரனுக்கு அன்று நம்மை அடிமையாக ஆள நாம் தந்த அதிகாரத்தினை, வெள்ளைக்காரனுக்கு அடிமையான நமது வரலாற்றினை சிந்திக்காமல், இன்றும் நமது சமூகம் கலெக்டர் பதவிக்கான அதிகாரத்தினை எவ்வளவுக்கு அங்கீகரித்து ஆராதிக்கிறது என்பதற்கு உதாரணமாகும் கலோனியல் சிந்தனை!

அய்யா சாமி தர்மம் போடுங்க என்கிற நம்மூர் ஸ்டைல் பிச்சை கேட்டலை அறிந்த நம்மில் பலர் கடல்தாண்டி உத்யோக விஷயமாக வெள்ளைக்கார நாடுகள் போகும் போது ரயில் நிலையங்களில் வெள்ளைக்காரப் பிச்சைக்காரன் "could you order me a coffee" என்று அதிகாரமாகப் பிச்சை கேட்கும்போது அவனை ஆங்கிலம் பேசுவதாலேயே கலெக்டர் மாதிரி பார்க்க ஆரம்பநாட்களில் நமது கலோனியல் சிந்தனை வழிநடத்தும்!

கஎல்லோரும் உயர் கல்வி கற்று உலகம் சுற்றி உலக ஞானம் வரும் காலங்களில் இந்த கலோனியல் எச்சம் நீர்த்துக் கரைந்துபோகும்.

அடுத்த சில தலைமுறைகளில் இது சரியாகும்! கண்டிப்பாக! எனது பாட்டன், தந்தை மாதிரி நான் சிந்திப்பதில்லை. எனது அடுத்த தலைமுறை என்னிலும் மேம்பட்டுச் சிந்திக்கும் என்பது நிச்சயம்.

இந்த தாழ்வுமனப்பான்மையால் வரும் நிற ஒப்பீட்டுப் பேச்சுகள் நின்றுபோக, இதற்கு ஒரே தீர்வு உயர் கல்வியும் , அதனால் கிடைக்கும் உலகலாவிய சமூக அறிவும் மட்டுமே. :-)))

இவ்வளவு கவலை கொள்ள வேண்டியதில்லை! ஒருவேளை தொடர்ந்து நம் ஊரில் இருந்தால் இப்படி எண்ணம் வருமோ என்னவோ?