ஞாயிறு, பிப்ரவரி 04, 2007

வலைப்பதிவர் சந்திப்பில் பதிந்தவை

சிவஞானம்ஜி
கணினியில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதால் நீண்ட நாட்கள் தள்ளிப் போட்டிருந்த ஒரு வேலை முடிக்க முடிந்தது. சென்னை பல்கலையில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம். ஆனால், வகுப்பில் தமிழில் சொல்லித் தரும் படி ஆசிரியரைக் கேட்க முடியாது. அந்த நிலை மாற ஆசிரியர்கள் பயன்படுத்த தமிழில் பாடப் புத்தகங்கள் வேண்டும்.

அப்புறம் பருவ முறை வந்ததும் புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருந்தது. எழுதுவதற்கு யாரும் முன் வரவில்லை. 'முந்நூறு ரூபாய்க்கு யார் மெனக்கிடறது' என்று ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.

கணினித் தமிழ் மூலம் ஐயா அந்த வேலையை முடித்து விட்டார்.

ஐகாரஸ் பிரகாஷ்

ஐகாரஸ் என்பதற்கு பெயர் காரணம் கேட்டவர்களில் நான் ஐம்பதாவது ஆள். அதற்கு ஒரு விருந்து வைப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பல துறைகளில் என்னென்ன திட்டப் பணிகள் வரவிருக்கின்றன என்று துப்பு அறிந்து அந்தப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், பொருட்கள், சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிய வைக்கும் புதுமையான அதிகம் அறியப்படாத தொழில் செய்து வருகிறாராம். வரிசையாக சிகரெட்டுகளை உருவிக் கொண்டே இருந்தார்.

டோண்டு ராகவன்
வெற்றிகரமாக புதிய பிளாக்கருக்கு மாறி விட்டார். மென்பொருள் பயன்பாட்டின் அருமைகளை உணரக் கூடிய வல்லமையுடன் புதிய பிளாக்கரின் புது வசதிகளை விவரித்தார். தரையில் உட்கார சிரமப்பட்டு எல்லோரின் அன்பு அழைப்பையும் ஏற்று உட்கார்ந்து கொண்டார். புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்.

விக்கி என்ற விக்னேஷ
பிப்ரவரி 24 அன்று சென்னையில் விக்கிகேம்ப் நடக்க இருக்கிறதாம். விக்கிபீடியாவின் தந்தை வருகை தருகிறாராம். விக்கிபீடியாவின் அடுத்த நிலைகள் பற்றி பேசப் போகிறார்களாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் ஒரு புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.

தற்கால அரசியல் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டோம்.

சோமீதரன்
பிபிசிக்கு வேலை பார்த்து மூன்று ஆண்டுகளாக நிஹாரி என்ற நிறுவனப் பெயரில் ஆவணப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். சமூக அக்கறைப் படங்களைக் கைக்காசு போட்டுக் கூட எடுக்கிறார். தன்னார்வ நிறுவனங்கள், செய்து நிறுவனங்களுக்காக நிதி உதவி பெற்றும் படங்கள் உருவாக்குகிறார்கள். இதைத் தவிர வணிக நிறுவனங்களுக்குத் தேவையான படங்கள் எடுப்பதில் பொருள் ஈட்ட முடிகிறதாம்.

நாலு லட்சம் பேருக்கு என்ன ஆகிறதோ அது எங்களுக்கும் ஆகட்டும் என்று யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட்ட அம்மா அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மரபூர் சந்திரசேகரன
தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய தகவல்களை திரட்டி சிதைந்து போனவற்றைப் புதுப்பிக்கும் பணியை ஒரு குழுவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் வெள்ளை அடித்து அது காயும் முன் சித்திரம் வரையும் முறையில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளைப் பற்றிக் கூறினார். விஜயநகர ஆட்சியின் மீது அதன் மீது இன்னொரு பூச்சு அடித்து அவர்கள் பங்குக்கு வரைந்தார்களாம்.

பிற்காலத்தில் வௌவால் எச்சங்கள் படிந்து ஏதோ கல் தூண் போலக் காட்சியளித்ததாம். அதை மேல் நாட்டு ஆராட்சியாளர் ஒருவர் சுரண்டிப் பார்க்க உள்ளே இருந்த ஓவியங்கள் வெளி வந்திருக்கின்றன. விஜயநகர ஓவியங்களைத் தனியாக பிரித்து எடுக்கும் பணியையும் செய்து முடித்தார்களாம்.

செந்தழல் ரவி
hireafreelancer.com என்ற தளத்தில் போய் திட்டப் பணிகளைப் பிடிக்கலாம். வீட்டிலிருந்த படியே கணினி, இணைய வசதியுடன் எளிதாக மாதம் ஐநூறு டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றார். மேலும் திறமை கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.

வேலை வாய்ப்பு மடல்களுடன் தனது அனுபவப் பதிவுளையும் தொடர்ந்து எழுத கேட்டுக் கொண்டோம்.

முத்து தமிழினி.
வேங்கை வெளியே வருவது போல மீண்டும் வலைப்பதிவுகளின் புத்துணர்ச்சியுடன் இறங்கி விளையாடப் போகிறார்.

பாலராஜன் கீதா
வங்கித் துறை, மென்பொருள் துறை என்று பரவி, சவுதிஅரேபியாவில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு சென்னையில் சொந்த நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

>>hireafreelancer.com என்ற தளத்தில் போய் திட்டப் பணிகளைப் பிடிக்கலாம். வீட்டிலிருந்த படியே கணினி, இணைய வசதியுடன் எளிதாக மாதம் ஐநூறு டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றார். மேலும் திறமை கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.

GetAFreelancer.com தளத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதைவிட Guru.com மிக, மிக நன்று. getafreelancer.comல் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. புதிதாக வரவிருக்கும் Project Expo தளத்தை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

dondu(#11168674346665545885) சொன்னது…

"புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்."

துரதிர்ஷ்டவசமாக புது பிளாக்கரும் அதர் ஆப்ஷனின் அபாயத்தைத் தொடர்கிறது.

இருப்பினும் பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அனானி வசதியை எனது பதிவில் பரீட்சார்த்தமாகத் துவங்கியுள்ளேன். இது தவறான உபயோகம் ஆகாது என நம்புகிறேன். ஆனால் அதற்காக மற்றவர்களையே நம்ப விருப்பம் இல்லை. நானும் உஷாராக இருக்க வேண்டும். அது முடியாவிட்டால் பிளாக்கர் பின்னூட்டமே கதி என்று போக வேண்டும்.

அந்த பகுத்தறியும் திறமை என்னிடம் உள்ளதா என்பதைப் பார்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜி சொன்னது…

நீங்க என்ன பேசினீங்கன்னு போடவே இல்லையே.... :))

மா சிவகுமார் சொன்னது…

ஜி,

நான் பேசுவதுதான் வரிஞ்சு வரிஞ்சு என் வலைப்பூக்களில் எழுதுகிறேனே என்றுதான் விட்டு விட்டேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அந்த பகுத்தறியும் திறமை என்னிடம் உள்ளதா என்பதைப் பார்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.//

நல்லதையே நினைப்போம் சார், யாரும் நம் நம்பிக்கையை மோசம் செய்ய மாட்டார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கிருபா சங்கர்,

//GetAFreelancer.com தளத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.//

நினைவுத் திறன் தவறுவதைப் பற்றி இன்றுதான் எழுதினேன் :-). தகவல்கள் பலருக்கு உதவியாக இருக்கும், நன்றி.


அன்புடன்,

மா சிவகுமார்