யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,
-- பாரதியார்
14 கருத்துகள்:
தேவையான நேரத்தில் தேவையான பதிவு
நன்றி மா.சிவகுமார்.
இதற்கு மேல் வேறு வார்த்தைகள் தேவையில்லை என நினைக்கிறேன்.
அமரகவி பாரதியின் புகழ் பரப்புவோம்!
மாசிலா, பாரதியின் கனவை நனவாக்குவோம்!
நன்றி முரளி கண்ணன்.
அன்புடன்,
மா சிவகுமார்
அருமை!
பதிவும் பாட்டும்; பொழுதும் பொருத்தமும்.
படிச்சா ஒரு பெரிய பெருமூச்சு வந்துது.
ஹ்ம். இந்த மாதிரியெல்லாம் எழுத வரலன்னாலும், அந்தாளு சொன்ன நல்ல விஷயங்கள்ள ஒண்ணாவது செய்ய முயற்சி பண்ணலாம், முயற்சி பண்றவங்களுக்கு உதவியா இருக்கலாம்.
எவ்வளவு அழகான வரிகள்.
பள்ளிக்கூடத்தில் வேண்டா வெறுப்பாக, கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
இந்த கவிதையை மனதில் பதியும்படி அன்னிக்கே சொல்லித் தந்திருந்தா, வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கலாம், என்னுடன் படித்த, பலருக்கும் :)
இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை வரிகள்.முண்டாசுக் கவிஞனின் கனவுகள் நனவானால்....நினைக்கும்போதே சிலிர்க்கிறது
//இந்த கவிதையை மனதில் பதியும்படி அன்னிக்கே சொல்லித் தந்திருந்தா, வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கலாம், என்னுடன் படித்த, பலருக்கும் :)
//
அது சரிதான். படிக்கும்பொழுதே இது எல்லோருக்கும் 'சரியாக'ப் போய்ச் சேர்ந்திருந்தால், இன்றைய நிலை, அழகானதாக மாறிப்போயிருக்க கூடிய வாய்ப்பிருந்திருக்கும். இப்பொழுதும் காலம் கெட்டு விடவில்லை!!
இந்த நேரத்துல ரொம்ப அவசியமாக்கும் இது.. தப்பிக்கிறதுக்கு வேற நல்ல ஐடியாவா கிடைக்கலை..?
நன்றி மதுரா,
சர்வேசன்,
//பள்ளிக்கூடத்தில் வேண்டா வெறுப்பாக, கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
இந்த கவிதையை மனதில் பதியும்படி அன்னிக்கே சொல்லித் தந்திருந்தா, வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கலாம், என்னுடன் படித்த, பலருக்கும் :)//
நானும் கிட்டத்தட்ட அதே கதைதான். இதைப் புரிந்து செயல்படும் முதிர்ச்சியும் சீக்கிரம் வாய்த்து விடுவதில்லை என்று நினைக்கிறேன்.
மதுரை சொக்கன்,
//முண்டாசுக் கவிஞனின் கனவுகள் நனவானால்....நினைக்கும்போதே சிலிர்க்கிறது//
அது நம் கையில்தான் இருக்கிறது.
யோசிப்பவர்
//இன்றைய நிலை, அழகானதாக மாறிப்போயிருக்க கூடிய வாய்ப்பிருந்திருக்கும். இப்பொழுதும் காலம் கெட்டு விடவில்லை!!//
அதேதான் :-)
உண்மைத்தமிழன்,
//இந்த நேரத்துல ரொம்ப அவசியமாக்கும் இது..//
வேறு என்ன அவசியம் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி,
என்ன கவிதை ஏரியாவுக்குள்ள எல்லாம் வர ஆரம்பிச்சுட்டிங்க , அப்புறம் எங்க ஏரியா உள்ள வராதே ... என்று வலையுலகவிப்பேரரசுகள் எல்லாம் போர் முரசு கொட்டுவார்கள் :-))
பாரதியார் சொன்ன கவிதை காலத்தால் அழியாத அமரத்துவம் எய்த வேண்டும் என்று தான் நம்ம மக்கள் தங்களை மாத்திக்காம இருக்காங்க , எல்லாம் திருந்திட்டா இப்படி கவிதைய சொல்ல முடியுமா :-))
1000 பாரதியார் வந்தாலும் திருந்த மாட்டாங்க !
மா.சி,
இப்போ தான் கவனித்தேன் நம்ம பதிவுக்கும் தொடுப்பு கொடுத்து பெருமை படுத்தி இருக்கிங்க, அடுத்தவர்களையும் அடையாளம் கண்டு பாரட்ட ஒரு பரந்த மனம் வேண்டும், அது உங்களுக்கு அதிகம் இருக்கிறது , மிக்க நன்றி!(கண்டிப்பா அதற்குள் 4 பேரு உங்களுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பார்களே :-)) )
வவ்வால்,
//வலையுலகவிப்பேரரசுகள் எல்லாம் போர் முரசு கொட்டுவார்கள்//
கவிதை நான் எழுதவில்லையே, மேற்கோள்தானே, அதனால் போர் முரசு அபாயம் இல்லைதான் :-)
//நம்ம பதிவுக்கும் தொடுப்பு கொடுத்து பெருமை படுத்தி இருக்கிங்க,//
நீங்கள் எழுதும் தரமான பதிவுகளுக்கு இன்னொரு இடத்தில் வெளிச்சம், அவ்வளவுதான். இப்பதான் 2 நாள் முன்பு, RSS feed இணைக்கும் வசதியில் சேர்த்துக் கொண்டேன்.
கண்டனம் எல்லாம் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை :-)
அன்புடன்,
மா சிவகுமார்
வவ்வால்! உங்கள் வார்த்தைகளைக் கொஞ்சம் கடனெடுத்துக்கொள்ளலாமா?
"இப்போதான் கவனித்தேன். நம்ம பதிவுக்கும் தொடுப்பு கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கீங்க, அடுத்தவர்களையும் அடையாளம் கண்டு பாராட்ட ஒரு பரந்த மனம் வேண்டும், அது உங்களுக்கு அதிகம் இருக்கிறது , மிக்க நன்றி"
நன்றி சிவகுமார்.
//வவ்வால்! உங்கள் வார்த்தைகளைக் கொஞ்சம் கடனெடுத்துக்கொள்ளலாமா?//
வாங்க தமிழ்நதி.
வவ்வாலுக்குச் சொன்ன பதிலையே சொல்கிறேன் :-)
"நீங்கள் எழுதும் தரமான பதிவுகளுக்கு இன்னொரு இடத்தில் வெளிச்சம், அவ்வளவுதான்."
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக