செவ்வாய், ஜனவரி 26, 2010

சாதி இருக்கிறது!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி
--ஔவையார்

சாதி இரண்டே இரண்டுதான். நீதி தவறாமல் வாழ்ந்து, ஈட்டிய பொருளை பொது நலனுக்காக செலவழிப்பவர் உயர் குலத்தோர். அப்படிச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள்.

மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா

- கவிமணி தேசிக விநாயகம்

எல்லோரும் நன்றாக வாழ உழைப்பவர்கள், உயர் சாதியினர். தன் நலத்தை மட்டும் பேண பாடுபடுபவர்கள் தாழ்ந்த சாதியினர்.

வெள்ளி, ஜனவரி 15, 2010

உள்ளுவதெல்லாம்.....

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (661)

செய்ய வேண்டியதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை, அதை கையில் எடுத்த ஒருவனின் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது. மற்றவை எல்லாம் துணைப் பொருட்கள்தான்.

வினைத்திட்பம் (67)

செவ்வாய், ஜனவரி 12, 2010

ஆள்பவரின் மாட்சி

921 . உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதர் கொண்டொழுகு வார்.
-- 93 கள்உண்ணாமை

கலைஞர் உரை:
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.
ஆட்சி புரிபவர்கள் மக்களைக் கண்டு பயப்படாமல், அவர்களை மதிக்காமல் நடந்து கொள்ள வழி கண்ட முதலமைச்சர் திரு கருணாநிதி மது விற்பனையை முடுக்கி விட்டு தமிழர்களை இழித்து வைத்திருக்கிறார்.
  • அரிசி, பருப்பு, காய்கறி விலை விண்ணுக்கு
  • மது விற்பனை வானுயர்ந்து நிற்றல்
  • தடி எடுப்பவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாக விளங்குதல்
'கலைஞரின்' நல்லாட்சி வேறு என்ன சாதிக்க வேண்டும்!

திங்கள், ஜனவரி 11, 2010

நூலறிவு

636 - மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.

- 64 அமைச்சு

For the one with sharp intellect and wide reading, what complex issue can they not confront successfully?

இயல்பான அறிவுக் கூர்மையுடன், பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் எதிர்காண முடியாத பணி எதுவும் இருக்கிறதா என்ன?

நிறைய படிக்க வேண்டும்.
சான்றோரின் படைப்புகளை படிக்க வேண்டும்.
மனதுக்கு செறிவூட்டும் படைப்புகளை படிக்க வேண்டும்.