செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

கருத்துகள் இல்லை: