திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறையை நோக்கி...

நானும் சக பயணி வினையூக்கியும் வளசரவாக்கம் வந்து சேர்ந்தோம். அதற்குள் வீடு போய் விட்டிருந்த ஜெயா பதிவு மேசைக்குத் தேவையான விபரங்களைத் தொகுத்து அனுப்பி விடுவதாகவும், அச்செடுத்துக் கொண்டு வந்து விடுமாறும் தொலைபேசினார். நாகர்கோவிலிலிருந்து வந்த எட்வினும் அவரது நண்பரும் தொலைபேச ராமாபுரத்துக்கு வர ரயிலில் கிண்டி வந்து ஆட்டோ பிடித்துக் கொள்ளச் சொன்னேன். வீட்டுக்கு வந்து தூங்கப் போகும் முன் அவர்களும் வந்து சேர்ந்து விட, அதிகாலையிலேயே நான் கிளம்பி விடுவேன், நீங்கள் பேருந்து பிடித்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தூங்க ஏற்பாடுகளையும் காட்டி விட்டுத் தூங்கி விட்டேன்.

அப்படி பின்னிரவில் வந்து சேர்ந்து அடுத்த நாள் முழுவதும் பட்டறையில் பங்கேற்று விட்டு ஞாயிறன்று மாலையே நாகர்கோவிலுக்குப் பேருந்து பிடித்துப் போய் விட்டார் அவர்.

காலையில் நாலரைக்கு எழுந்து மிக அவசியமான வேலைகளை மட்டும் முடித்து விட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். ஜெயா அனுப்பியிருந்த கோப்புகளை சரிபார்த்து அச்சிட்டுக் கொண்டேன். வருபவர்களில் தமிழ்த்துறை மாணவர்கள், இணையத் தளத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாமல் வருபவர்கள் என்று மூன்று வகையான பட்டியல்கள், அந்தந்த மேசைகளுக்கான பெயர், அறைகளுக்கு வினையூக்கி சூட்டிய திருவள்ளுவர், பரிமேலழகர், நக்கீரர் என்ற பெயர் எல்லாம் அச்செடுத்துக் கொண்டேன்.

சாகரன் நினைவு மலர் பிரதிகளையும் வினியோகிக்க எடுத்து வைத்துக் கொண்டேன். அதிகாலை எழுப்பி விடும் சேவை கேட்டிருந்த நண்பர்களுக்குத் தொலைபேசி மணி அடித்துக் கொண்டே இன்னும் ஓரிரு பொருட்களை எடுத்துக் கொண்டு வினையூக்கியின் வீட்டுக்கு ஓரிரு நிமிடங்கள் மட்டும் தாமதமாக போய்ச் சேர்ந்தேன்.

மேக மூட்டமான வானிலை. தூறல்கள் கூட ஆரம்பித்திருந்தன. 25 நிமிடங்களில் ஆற்காடு சாலையின் நீளத்தை அளந்து ராதாகிருஷ்ணன் சாலையை முழுவதும் கடந்து காமராசர் சாலையில் இருக்கும் பட்டறை வளாகத்துக்கு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்த வளாக பாதுகாப்புப் படையினரிடம் அரங்குகளைத் திறக்கும் படிக் கேட்டோம். ஜெயகுமார் பொறுப்பாக தாளில் கையெழுத்து போட்டு பூட்டுகளில் ஒட்டிப் போயிருந்தார்.

உண்மைத்தமிழன், நந்தா, ஜேகே, அதியமான் என்று வந்து கையை மடித்து விட்டுக் கொண்டு களத்தில் இறங்கினோம். அருள், ஜெய் சீக்கிரம் வந்து விட்டார்கள். ஜெயா தனது பொறுப்புக்குத் தேவையான பொருட்களுடன் வந்தார். குப்பையாகக் கிடந்த அரங்குகளை பாதுகாப்புப் பணியிலிருந்த முதியவரே பெருக்கிச் சரி செய்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால் வேலை செய்யும் பெண்மணிகள் வர மாட்டார்களாம்.

வினையூக்கி முதலானோர் கணினிகளை இயக்கி முதல் மாடியில் ஏற்பாடுகளை ஆரம்பித்தார்கள். நந்தாவுடன் போய் திருவல்லிக்கேணி சங்கீதாவில் சாப்பிட்டு விட்டு 4 பொட்டலங்களில் பொங்கல்/வடை வாங்கி வந்தோம். அதில் எண்ணெய் அதிகம் என்ற புகாருடன் சிலருக்குப் பயன்பட்டது.

சிபி நிறுவனத்தினர், ஐசிஎன் கணிப் பொறியாளர்கள், லைனஸ் அகாடமியிலிருந்து சரவணன், என்று ஒவ்வொருவராகக் கூடக் கூட்டம் களை கட்ட ஆரம்பித்தது. கட்ட வேண்டியவை, நிறுத்த வேண்டியவை, சோதிக்க வேண்டியவை எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்தன.

கருத்து அரங்கில் ஆரம்ப அமர்வில் விக்கி பேசச் சொல்லியிருந்ததற்காக அரை மணி நேரம் உட்கார்ந்து குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டேன். ஒன்பது மணியிலிருந்தே பங்கேற்பாளர்கள் வர ஆரம்பித்து ஒன்பதரை மணிக்கெல்லாம் அரங்கம் ஓரளவு நிரம்பி விட்டது. இன்னும் பத்து நிமிடங்கள் பார்க்கலாம் என்று சிலர் சொல்ல, சரியான நேரத்துக்கு வந்தவர்களை காக்க வைப்பது சரியில்லை என்று எனது கட்சிக்கு ஐகாரஸ் பிரகாஷ் உறுதியான ஆதரவு தெரிவிக்க ஒன்பதரை மணிக்கு விக்கி அறிமுக அமர்வை ஆரம்பித்து விட்டார்.

2 கருத்துகள்:

aishwaryan சொன்னது…

நன்றி சிவகுமார். பட்டறையின் பிரதிபலிப்பாக இதோ நானும் வலைக்குள்! http://aishwa.blogspot.com/
நேற்றைய நிகழ்வில் தங்கள் பங்கெளிப்பு கச்சிதம். வாழ்த்துக்கள். சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளலாமா? முதல் சந்தேகம் - tamilbloggers உடன் இணைய என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு பதிவின்போதும் என்ன டைப் செய்யவேண்டும்?

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஐஷ்வா,

வலைப்பதிவர் சமூகத்தில் எப்படி இணைவது என்றுதானே கேட்கிறீர்கள்?

தமிழ்மணம் (http://www.thamizmanam.com), தேன்கூடு (http://www.thenkoodu.com), தமிழ்பிளாக்ஸ் (http://www.tamilblogs.com), போன்ற திரட்டிகளில் உங்கள் பதிவை இணைத்துக் கொண்டால், அங்கு வருபவர்கள் உங்கள் பதிவுக்கு வருவார்கள். நீங்களும் அந்தத் தளங்கள் மூலமாகவோ பிற வழிகள் (bookmarks, feed) பிற பதிவுகளைப் படித்து கருத்துக்களை வெளியிட்டு வாருங்கள். தவறாமல் புதிய இடுகைகளை அடிக்கடி போடுங்கள்.

சில வாரங்களுக்குள் பதிவுலகில் தனி இடம் பெற்று விடுவீர்கள்.

வேறு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் மடல் எழுதுங்கள் (masivakumar@gmail.com)

அன்புடன்,

மா சிவகுமார்
உங்கள் பதிவிலும் இதை பின்னூட்டமாகப் போட்டு விடுகிறேன்.