திங்கள், ஏப்ரல் 13, 2009

அடுத்த பிரதமர்

மாயாவதி அடுத்த பிரதமராக வருவதன் அவசியம் என்ன? அத்வானி, மன் மோகன் சிங், சரத்பவார் அல்லது ராகுல்காந்தி தலைமையிலான நிர்வாகத்துக்கும் மாயாவதி தலைமையிலான நிர்வாகத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கும்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஊறிப் போய் விட்டு மனுவாத சமூகக் கட்டமைப்பு அதிகார மையங்களிலும் தொழில் வணிக வட்டங்களிலும் இன்னும் உயிரோட்டத்துடன் தளைத்துக் கொண்டிருக்கிறது. காவல் நிலையங்களிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும், அரசாங்க அதிகார மட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நீதி கிடைப்பது இன்றைக்கும் இயல்பானதாக இல்லை.

காவல் நிலையக் கண்காணிப்பாளரின் வளர்ப்புப் பின்னணி, அவர் கேட்டு நடக்க வேண்டிய உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், நிர்வாக அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே நடைமுறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

காங்கிரசு ஆட்சியில் நிதி அமைச்சரின் முதல் கவலை பங்குச் சந்தை குறியீட்டு எண் சரிந்து விடக் கூடாதே என்பதாகத்தான் இருக்கிறது. பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருந்தால்தான், முதலீட்டாளர்கள் தமது சேமிப்பை பங்குகளில் போடுவார்கள், அதை வைத்து தொழில் முனைவு தளைக்கும், அப்படி உருவாகும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதால் ஏழை மக்களும் ஒடுக்கப்பட்டவர்களும் முன்னேறுவார்கள் என்ற trickle down பொருளாதார முறைதான் அவருக்குத் தெரியும்.

பாரதீய ஜனதா ஆட்சியில் அரசின் முதன்மை கவலை, வர்த்தகர்கள் தொழிலதிபர்கள், மடாதிபதிகள் என்ன வேண்டுகிறார்கள் என்பதுதான். சமூகத்தின் மற்ற பகுதியினர் இவர்களது நோக்கங்களுக்கு துணையாக செயல்படுவது வரை சகித்துக் கொள்ளப்படுவார்கள். அதற்கு வெளியில் காலெடுத்து வைத்தால் கால் இருக்காது.

மாயாவதி (அல்லது அவரைப் போன்ற திறமையான பெண்மணி ஒருவர்) தலைமையில் ஆட்சி அமைந்தால், எந்த ஒரு காவல் நிலையத்திலும் எந்த ஒரு கடைநிலை காவலரும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை அலட்சியமாக நடத்தத் துணிய மாட்டார். மேலிடத்துக்கு சேதி போய்ச் சேர்ந்தால் தனக்கு வேலை மிஞ்சாது என்பது அவருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும்.

அதில் தவறுகள் நடக்காதா? நடக்கும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதகமான தவறுகள் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு சாதகமாக நடந்து விடும் தவறுகளை விட ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே இருக்கும்.

நிதி அமைச்சகம் வரவு செலவுத் திட்டம் தீட்டும் போது கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும், எல்லோருக்கும் கல்வி திட்டமும், தாய் சேய் நலத் திட்டமும் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் பிறகு அவற்றுக்குத் துணையாக தொழில் வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சிக்கான திட்டம் போடப்படும். பணம் படைத்தவர்கள் மேலும் பணம் செய்யும் வழிகளை மட்டும் சிந்தித்து இருந்து விட்டு, 'கூப்பாடு போட்டு விடக் கூடிய' பெரும்பான்மை மக்களின் வாயை அடைப்பதற்காக சமூக நலத் திட்டங்களை சேர்க்கும் நடைமுறை மாறி விடும்.

அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர் அதிபர் ஆனது போல இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவினர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்ததாகச் சொல்ல முடியும்.

15 கருத்துகள்:

கவிதா | Kavitha சொன்னது…

அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர் அதிபர் ஆனது போல இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவினர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்ததாகச் சொல்ல முடியும்.
//

காலம் ஆகும்..!! காத்திருக்க வேண்டும்... யாராக இருந்தாலும் கல்வி, நல்ல அறிவு, முதிர்ச்சி, நேர்மை, தன்னலமில்லாமல் பொதுநலத்தோடு இருத்தல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

காத்திருப்போம்... நல்ல தலைமைக்கு... :)

பெயரில்லா சொன்னது…

\\மாயாவதி (அல்லது அவரைப் போன்ற திறமையான பெண்மணி ஒருவர்)\\

எதில்? ஊழலிலா?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கவிதா,
//கல்வி, நல்ல அறிவு, முதிர்ச்சி, நேர்மை, தன்னலமில்லாமல் பொதுநலத்தோடு இருத்தல்//

அப்படி நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அரசியலைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் நீங்கள் எதிர்நோக்கும் தலைமைகள் உருவாகும்.

அனானி,

//எதில்? ஊழலிலா?//

இல்லை ஐயா. தம்மை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு உண்மையுடன் உழைப்பது, அரசியலில் நுட்பமாக செயல்பட்டு இலக்குகளை அடைவது, செய்யும் செயல்களில் துணிச்சல்,

'நிமிந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும்' கொண்ட பெண்மணி ஒருவர் என்று சொல்ல வந்தேன்.

தெளிவுபடுத்தச் சொன்னமைக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஆகா மாயாவதியோட ஆட்சியப் பார்த்துட்டுமா இன்னும் அம்புட்டு நம்பிக்கை உங்களுக்கு?

உங்கள் ஆசை நியாயமானது ஆனால் அதற்கு நீங்கள் தெரிவு செய்திருக்கும் நபர் ????????

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஜோசப் பால்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் என்னதான் நடக்கிறது மாயாவதியின் ஆட்சியில்? முலாயம் சிங்கின் ஆட்சியை விட, கல்யாண் சிங்கின் ஆட்சியை விட, என் டி திவாரியின் ஆட்சியை விட மோசமாக இருக்கிறதா என்ன?

குறைந்த பட்சம், சமூகத்தின் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் அரசியலாக தென்படுகின்றன அவரது நடவடிக்கைகள்.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

ulagin muthal muttal nee.......syco.....unnul marainthirukum thalvu manapanmaiyin velipaduthan un eluthu ........ nee unakkul vattam varainthu antha vatathukul vilayadubavan god will help you.... dnt waste our time and dnt make tention for us bye

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சுபாஷ்,

என் எழுத்தில் என்ன குற்றம் என்று சொல்லத் தெரியவில்லையா? முட்டாள், பைத்தியம், தாழ்வு மனப்பான்மை என்று முத்திரை குத்துவதுதான் ஒரே பதிலா!

உங்கள் நேரத்தை வீணாக்கி ஏன் டென்ஷன் ஆகிறீர்கள்?

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Highlighting the leadership qualities of Ms.Mayavathi and defending her eligibility on these basis will be more relevant than supporting her just for the reason that she hailed from the minority community.

Maximum India சொன்னது…

அன்புள்ள சிவக்குமார்

"தாழ்த்தப் பட்டவர்" என்ற வார்த்தையை பயன்படுத்தவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. இந்த வார்த்தை மேலாதிக்கத்தினரால் "நீங்கள் பிறப்பினாலேயே தாழ்ந்தவர்கள்" என்பதை குறிப்பதற்காகவே உருவாக்கப் பட்டதாக கருத்து நிலவுகிறது. வேண்டுமானால், அவர்களே தம்மை அழைத்துக் கொள்ளும் இனப் பெயரான "தலித்" அல்லது "ஒடுக்கப் பட்ட சமூகத்தினர்" என்ற பெயர்களைக் கொண்டு குறிப்பிடலாம்.

இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினைச் சேர்ந்தவரும் நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்பது ஒரு உயர்ந்த லட்சியம்தான். ஆனால் அது, பரிதாபத்தினால் மற்றவர்கள் இடும் பிச்சையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு சமூகமும் பிரதமர் பதவிக்கு தகுதியான ஒருவரை உருவாக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்க வேண்டும். மக்களும் இனத்தை/ சாதியைப் பார்க்காமல், ஒவ்வொரு தனி நபரின் தகுதிகளின் அடிப்படையிலேயே பிரதமரை தேர்ந்தேடுக்க் வேண்டும்.

இதே பொருள் குறித்த எனது பதிவிலிருந்து சில வாசகங்கள்.

http://sandhainilavaram.blogspot.com/2009/01/blog-post_19.html

"ஒபாமா வெற்றி பெற்ற போது போட்டி வேட்பாளர் "மக்.கைன்" கூறியது.

"ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.''

இதே போல நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொடுமைப் படுத்தப் பட்டுள்ள தலித் இன மக்களில் இருந்து ஒருவர், மற்றவர்களின் அனுதாபத்தாலோ அல்லது அவர்கள் இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவோ அல்லது வெறுமனே சிம்பாலிக்காகவோ இல்லாமல், பெரும்பாலான இந்திய மக்களால் தனது தனிப் பட்ட தகுதியினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் அமர்வாரேயானால், அந்நாள் இந்தியாவின் பொன்னாளாக இருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்."

சூனிய விகடன் சொன்னது…

"தாழ்த்தப்பட்டவர்கள்" என்ற வார்த்தையே தவறு நண்பரே.

"தாழ்த்திக்கொண்டவர்கள்" என்பதுதான் சரியான வார்த்தை.....

இப்போது அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் போதாது என்கிறீர்களா.....

நீங்களெல்லாம் இதற்க்கு மேலும் பொது சமூகத்திலிருந்து விலகிச்செல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களா......வேண்டாம் சிவகுமார்......

இது நீங்கள் பாவிக்கும் தீண்டாமை என்று ஆகி விடும்

இதையெல்லாம் விட இதற்கெல்லாம் அடையாளமாக நீங்கள் உருவகப்படுத்தும் தலைவியை நினைத்தால் .......சிரிப்பு வரவில்லை ....வேதனையாக இருக்கிறது

உங்களுக்கு பிரச்னை இல்லை ..சிவகுமார்

இரண்டு வருடம் கழித்து " மாயாவதியின் உண்மை முகம்" என்று ஒரு பதிவு போட்டு விட்டு தூங்கப் போய விடுவீர்கள்.....எவனாவது ஒரு மனிதன் உங்களின் பதிவை நம்பினாலும் அது இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்யும் கருத்து துரோகமாகிவிடும்

தாழ்த்தப்படுத்திக்கொண்ட சமூகம் அப்படியே இருக்கவே உங்களின் கருத்துக்கள் உதவும் .

மா சிவகுமார் சொன்னது…

ஒரு சில அனானி நண்பர்களின் நிதானமற்ற, விவாதத்துக்கு எந்தப் பங்களிப்பும் தராத பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

நம்மவூர் ஜெயலலிதாவை விட மாயாவதி எவ்வளவோ மேல்.
மறுக்கவோ, மறைக்கவோ முயன்றாலும் உண்மை அதுவே.
- ஸ்ரீனிவாசன்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அனானி,
//Highlighting the leadership qualities of Ms.Mayavathi and defending her eligibility on these basis will be more relevant than supporting her just for the reason that she hailed from the minority community.//

1. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

மாயாவதியின் படிப்பு - பி ஏ, பிஎட், எல் எல் பி

2. இளைஞர்கள் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும்

மாயாவதியின் வயது - 53

3. குடும்ப அரசியலை ஊக்குவிக்கக் கூடாது

மாயாவதி எந்த குடும்ப உறுப்பினரையும் பின்பற்றி அரசியலுக்கு வரவில்லை. வேறு குடும்ப உறுப்பினர்களுக்கு சாதகம் காட்டுவதாகவும் தெரியவில்லை.

4. சாதாரண மக்களின் நிலை உணர்ந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

சராசரி குடும்பத்தில் பிறந்து படித்து வளர்ந்தவர்

5. பொது வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத கவர்ச்சியைப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வரக் கூடாது.

1984லிருந்தே கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து களப்பணி ஆற்றி தலைமைக்கு உயர்ந்திருக்கிறார்.

6. மதத்தின் பேரால், சாதியின் பேரால், மொழியின் பேரால் பிரிவினையைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது

தலித் கட்சி என்று ஆரம்பித்தாலும், மற்ற சமூகத்தினருடன் பகைமையை வளர்ப்பதை கைவிட்டு எல்லோரையும் சேர்த்து சென்று சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சி புரியும் அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

வேறு எந்த தலைவர் இந்தத் தகுதிகளுடன் இருக்கிறார்?

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

Maximum India,

//"தாழ்த்தப் பட்டவர்" என்ற வார்த்தையை பயன்படுத்தவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. இந்த வார்த்தை மேலாதிக்கத்தினரால் "நீங்கள் பிறப்பினாலேயே தாழ்ந்தவர்கள்" என்பதை குறிப்பதற்காகவே உருவாக்கப் பட்டதாக கருத்து நிலவுகிறது.//

நமது அமைப்பின் காரணமாக பல காலமாக ஒடுக்கப்பட்டதால் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்ற பொருளில்தான் அதை எழுதினேன். அதில் எதுவும் தவறிருப்பதாக தெரியவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

//ஒவ்வொரு சமூகமும் பிரதமர் பதவிக்கு தகுதியான ஒருவரை உருவாக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்க வேண்டும். மக்களும் இனத்தை/ சாதியைப் பார்க்காமல், ஒவ்வொரு தனி நபரின் தகுதிகளின் அடிப்படையிலேயே பிரதமரை தேர்ந்தேடுக்க் வேண்டும்.//

அது சாதியே இல்லாமல் ஒழிந்த பிறகுதான் நடக்கும். தகுதி என்பது யார் வகுப்பது என்று சொல்லுங்கள். ஹார்வர்டில் படித்திருக்க வேண்டும். வெள்ளை தோல் இருக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும். தில்லியில் பெரிய பங்களாவில் வசிக்க வேண்டும் என்பதுதான் தகுதியா என்ன?

//இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவோ அல்லது வெறுமனே சிம்பாலிக்காகவோ இல்லாமல், பெரும்பாலான இந்திய மக்களால் தனது தனிப் பட்ட தகுதியினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் அமர்வாரேயானால்,//

அப்படி அமர மாயாவதிக்கு தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்திக்கும், அத்வானிக்கும் இருப்பதை விட பல படி உயர்வான தகுதி அவருக்கு இருக்கிறது.

//தாழ்த்தப்படுத்திக்கொண்ட சமூகம் அப்படியே இருக்கவே உங்களின் கருத்துக்கள் உதவும் .//

ஏன்? நரசிம்ம ராவ், தேவகௌடா, குஜ்ரால், வாஜ்பாயி, மன்மோகன் சிங் இவர்களை விட "மாயாவதியின் உண்மை முகம்" எந்த வகையில் குறைவு என்று நினைக்கிறீர்கள்!

உத்தர பிரதேசத்தில் மாயாவதி ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் என்ன குறைந்து விட்டது!

இந்தச் சுட்டியைப் படித்துப் பாருங்கள்.

http://specials.rediff.com/election/2009/apr/17slide1-in-the-land-of-mayawati.htm

மாயாவதியின் குறைகள் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதாகத் தெரிந்தாலும், சொல்லப்படும் மாற்றங்கள் சிறப்பாகவே தெரிகின்றன.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//நம்மவூர் ஜெயலலிதாவை விட மாயாவதி எவ்வளவோ மேல்//

வணக்கம் சீனிவாசன். ஜெயலலிதாவிடம் இருக்கும் நிர்வாக உறுதி, கண்டிப்பு மாயாவதியிடம் தெரிகிறது. ஜெயலலிதாவின் மேம்போக்கான, மேல்தட்டு அரசியல் இவரிடம் இருப்பது போலத் தெரியவில்லை.

அன்புடன்,
மா சிவகுமார்