திங்கள், ஜனவரி 09, 2012

பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் (2)


(ஜரன் திரசன்னா பதிவிலிருந்து)

குரவிந்தன் காலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் உழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

அறிவியல் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. அறிவியலின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. விஞ்ஞானிகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.


நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டைன் என்று தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக விஞ்ஞானிகளை வேட்டையாடினார்கள்? ராபர்ட் ஹூக்கும் (Robert Hooke),  ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌசும் (George Westinghouse) என்ன ஆனார்கள்? ஸ்டீபன் ஹாகிங் உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஐன்ஸ்டைன், நியூட்டனை எப்படி எதிர்கொண்டார்? அறிவியல் உண்மையிலேயே முன்னேற்ற வழிதானா? தகவல்கள் அடிப்படையில் உண்மையைக் கண்டறிதல், சக விஞ்ஞானிகளின் கருத்துக்களை விமர்சனம் செய்தல், தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் என்பதெல்லாம் வேத காலத்துக்கு முன்பே அறிவியிலில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.


அறிவியல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் அறிவியல் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? அமெரிக்காவில் அப்துல் கலாமுக்கு என்ன ஆனது? பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.


வெறும் வாய்ப்பந்தல் போடாமல், அறிவியலின் பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் குரவிந்தன் காலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், அறிவியல் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை விஞ்ஞானி என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே அறிவியலுக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

அறிவியலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி விஞ்ஞானிகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி விஞ்ஞானிகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

குரவிந்தன் காலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் அறிவியல் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலக விஞ்ஞானிகள்.

எடிசன், வெஸ்டிங்ஹௌசுக்கு இடையே நடக்கும் போட்டி, எடிசனைப் பார்த்து வெஸ்டிங்ஹௌசே அதிர்ந்து போவது, ஏன் நியூட்டன் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

விஞ்ஞானிகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் விஞ்ஞானிகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் ஐன்ஸ்டைனின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். ஐன்ஸ்டைன் புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக விஞ்ஞானிகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக விஞ்ஞானிகள் வெஸ்டிங்ஹௌசையும், ஐன்ஸ்டைனையும் அறிஞர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் அறிவியல் மயம்.

இந்திய விஞ்ஞானிகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல அமெரிக்காவில்  அப்துல் கலாம் பற்றிய அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. ஸ்டீபன் ஹாகிங் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! ஐன்ஸ்டைனின்  அத்தியாயமோ கிளுகிளு. மூடப் பழக்கங்களுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. விஞ்ஞானிகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் அறிவியல் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. சுயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில் சுயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது குரவிந்தனின் காலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் குரவிந்தன் காலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் அறிவியல் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். அறிவியலின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (உழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

விஞ்ஞானிகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, குரவிந்தன் காலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. scientific americanல்  ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி விஞ்ஞானிகள் கீதையே கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு பிரசங்க  மேடைகளில் பேசும் சாமியார்களுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச விஞ்ஞானிகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் விஞ்ஞானியென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

அறிவியல் ஒழிக.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உழக்கு அரங்கில் கிடைக்கும்)

ஜரன் திரசன்னா

7 கருத்துகள்:

manjoorraja சொன்னது…

நிச்சயம் வாங்குகிறேன். ஏதேனும் பிரச்சினை வந்து இந்த புத்தகம் தடை செய்யப்படும் என தெரிந்தால் எனக்காக ஒன்று வாங்கி வையுங்கள்.

Vetirmagal சொன்னது…

:-))))))))))))

வஜ்ரா சொன்னது…

அரசியல் கொள்கை ≠ அறிவியல்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் எழுதப்பட்ட கட்டுரை தான் இது. இதே அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கம்யூனிசத்தைப் பார்த்தால்... கொள்கைக் கோட்பாட்டுக் கன்றாவிகள் கிழிந்து தொங்கும்...

கம்யூனிசம் = ஓரிறை மதம்.

பஞ்சம் படுகொலை பேரழிவு -ஓரிறை மதம்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வஜ்ரா,

//அரசியல் கொள்கை ≠ அறிவியல்.//

இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அறிவியலையும் அரசியல் கொள்கையையும் பிரித்து வைத்திருப்பதுதான் பிரச்சனைகளுக்கு மூல காரணம்

//இந்த அடிப்படை கூட தெரியாமல் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.//

அது அடிப்படை இல்லை.

//இதே அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கம்யூனிசத்தைப் பார்த்தால்... கொள்கைக் கோட்பாட்டுக் கன்றாவிகள் கிழிந்து தொங்கும்...//

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.

//கம்யூனிசம் = ஓரிறை மதம்.//

கவனமாக 'ஓரிறை' என்ற அடைமொழியைச் சேர்த்திருக்கிறீர்கள் :-). திறந்த மனதோடு அணுக தயாரானால் உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

நன்றி, மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மாசி,

ஒரு சில உள்குத்துக்கொடுக்கலாம் ஒரு பதிவு முழுக்க உள் குத்தா இருக்கே :-))

வழக்கம் போல இணையத்தில திரட்டி உழக்குல புக்கு போட்டாங்க போல.

அத ஒழுங்கா கூட திரட்ட மாட்டாங்களா? நியுட்டனுக்கு வெஸ்ட்மினிஸ்டர் அபெல கல்லறை இருக்குனு படிச்ச நியாபகம், தேடிப்பார்க்கனும்.

அறிவியல் பேரழிவ கொடுத்ததுனு வச்சுப்போம், இந்த மதம் , அரசியல் எல்லாம் செத்தவனையும் எழுப்பி விட்டுச்சாமா? உடன்க்கட்டைல சாம்பாலா போக சொன்னது அறிவியலா சாமி?

மதங்களில் பேரால், கடவுளின் பேரால் எத்தனைப்பேர் செத்தாங்க,ரத்தம் குடித்த மத தலைவர்கள், அரசியல்வாதிகள் பத்தி பொத்தவம் போட தெரியாதே உழக்குக்கு :-))

மா சிவகுமார் சொன்னது…

manjooraja, வவ்வால்,

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவு உண்மையில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றிய இடுகையை கிண்டல் செய்து எழுதப்பட்டது.

பஞ்சம், படுகொலை, பேரழிவு - அறிவியல் என்று எந்த புத்தகமும் வெளியாகவில்லை!

http://www.haranprasanna.in/புத்தகப்-பார்வை/பஞ்சம்-படுகொலை-பேரழிவு-க.html

கலாகுமரன் சொன்னது…

"குரவிந்தன் காலகண்டன்" இந்த பெயரை படிததுமே எனக்கு பொறி தட்டியது. நல்ல வேலை இதை திரித்த பதிவு என்று சொல்லி முற்று புள்ளி வைத்து விட்டீர்கள். எத்தனை பேர் இதை ஆர்வமா படித்து மண்டை காயப்போராங்கலோ?

http://eniyavaikooral.blogspot.com/