ஞாயிறு, ஜனவரி 01, 2012

கண்ணில் விழுந்தவை


1. சச் கே சாம்னா என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப் போகிறார்களாம்.

இது வரை 'மாமனார் மீது ஆசை வந்ததுண்டா' போன்ற கேள்விகளை கேட்டு சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தவர்கள்  இனிமேல் 'லஞ்சம் வாங்கியதுண்டா' போன்ற கேள்விகளைக் கேட்டு சமூகத்தை தூய்மை செய்யப் போகிறார்களாம்.

செய்தி அறிக்கை

2. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் பெர்பார்மன்ஸ் காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

நிறுவனத்தின் லாப வளர்ச்சியை குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லையாம்.

பிரிட்டானியாவின் லாபம் அதிகரிக்க இருக்கிறது

3.  பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் II அரியணை ஏறி 60 ஆண்டுகள் ஆகி விட்டது.

அவரது மகன் சார்லஸ், திண்ணை எப்போ காலியாகும் என்று  காத்திருக்கிறார், கிழவி விட்டுத் தர மாட்டேன் என்கிறார். இதற்கிடையில் பேரன் வில்லியம் வேறு வரிசையில் வந்து விட்டான்.

எலிசபத் ராணியின் மணிவிழா

4. சோனி சோரி என்ற சத்திஸ்கர் சமூக ஆர்வலர், சித்திரவதை செய்யக் கூடாது என்று நீதி மன்றங்கள் உறுதி வாங்கிக் கொண்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த முறை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்து வர முடியாமல் போலீஸ் வேனுக்குள்ளாகவே வருகை பதிவு எடுக்க வேண்டியிருந்ததாம்.

மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான சித்தரவதைகளும் பாலியல் வன்முறைகளும் அவர் மீது நிகழ்த்தப்பட்டன  என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

தெகல்கா

5. செக்ஸ் சர்வே

அவுட்லுக் போன வார இதழில் வருடாந்திர செக்ஸ் சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். வாரா வாரம் வாங்கினாலும் இப்போது பத்திரிகையை பெயர் சொல்லிக் கேட்டதும் கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்து விட்டுத்தான் தந்தார்.

புத்தகத்தில் படங்களும் கட்டுரைகளும் ஒருமாதிரி பார்க்கும் வகையில்தான் இருந்தன.

6. சபரிமலையாக மாறும் தேனி.
சபரிமலைக்கு மாலை போட்ட பல பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையிலேயே விரதம் முடித்துத் திரும்பி விடுகிறார்களாம்.

கேரள வணிகர்களுக்கு பெறும் இழப்பு.

பக்தர்கள் இப்படியே பழகி விட்டால் சபரி மலையும் இந்திய ஒருமைப்பாடும் என்ன ஆகும்? கவலையாக இருக்கிறது.

7. லட்சக்கணக்கான பேர் வட கொரியாவில் அஞ்சலி
வடகொரியாவின் 'சர்வாதிகாரி' கிம் இல் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அழுது புலம்பி அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகியிருக்கின்றன.

பைட் பைப்பர் போல மக்களை எல்லாம் மயக்கி அழ வைத்து விட்டது போல செய்திகள் சொல்லுகிறார்கள்.

8. 'கல்லூரிகளின் நன்கொடையை ஒழிக்க வேண்டும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை வேண்டும்' என்று புகழ் பெற்ற  கல்வி வியாபாரி ஜி விஸ்வநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஐடி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அவர்தான்.

9. 1.4 லட்சம் நேனோ  கார்களில் ஸ்டார்டர் மோட்டாரை மாற்றப் போகிறது டாடா நிறுவனம். 'தரம் உயர்ந்த உதிரி பாகத்தை வாடிக்கையாளருக்குக் கொடுப்பதுதான் நோக்கம்' என்று சாதிக்கிறது.

என்ன ஒரு பெருந்தன்மை!

10. தமிழ்நாட்டில் 7800 ஏரிகள் இல்லாமல் போயின. - 20 ஆண்டுகளில்

11. 2012ல் உலகம் அழியாது என்று பல சோதிடர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.

நிம்மதியாக இருக்கிறது!

12. 100 பில்லியன் (10,000 கோடி  முறை ராமநாமம் எழுதுவது) ராமநாம யக்ஞம் நடத்தியிருக்கிறார்கள்.

கலியுகத்தின் அநியாயங்களை எதிர் கொள்ள வேறு என்னதான் வழி!

13. திருமண விழாக்களுக்கு காப்பீடு செய்யும் வசதி வந்துள்ளது. மழையின் காரணமாகவோ, மணமகன்(ள்) வேறு துணைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விட்டதாலோ, பொது வேலைநிறுத்தத்தின் காரணமாகவோ திருமணம் நின்று விட்டால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு கொடுத்து விடும்.

இது வரை யாரும் ஏன் இப்படி யோசிக்கவில்லை?!


14. கட்டுப்படியாகும் மருத்துவ சேவை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு பிரதம மந்திரி கோரிக்கை விடுத்தார். - காரைக்குடி வாசன் ஐ கேர் நிகழ்ச்சியில் இப்படி பேசியிருக்கிறார்.

இப்பதான் கடமையை ஒழுங்கா செய்கிறார். சபாஷ், கீப் இட் அப்!

15. அம்பானி சகோதரர்கள் மூதாதையர் ஊருக்கு ஒரே நாளில் போனார்களாம்.

16. KG-D6 உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிந்து 2012 ஆரம்பிக்கும் போது முதலிடத்தை இழந்து விட்டது.

17. எல்ஏ ராம் - சீனா போய் வந்த அனுபவங்கள்.
அமெரிக்காவில் எத்தனை வருஷம் இருந்தாலும், சீனாவுக்கே சுற்றுலா போனாலும் தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறாரே!

கொழிக்கிறது சீனா

கருத்துகள் இல்லை: