#defeatcongress லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#defeatcongress லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 10, 2011

காங்கிரசைத் தோற்கடித்த மக்களுக்கு வேலூரில் நன்றி தெரிவிப்பு (ஜூன் 4, 2011)

காங்கிரசு எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கு கண்ணனின் இப்படி ஒரு அறிவிப்புடன் புறப்பட்டது இளைஞர் படை இளைஞர் படை 


"நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் உலக "தமிழ்மக்களின் எதிரியான ஞானசேகரனை" தோல்வியடைய செய்த வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாகவும் மற்றும் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் ஈழதமிழர் படுகொலையும், தமிழக மீனவர் படுகொலையும் தான் முக்கியகாரணம் என்ற கருத்தினை தொடர்ந்து மக்களிடம் கொண்டுச்செல்லும் நோக்கத்துடன் வருகிற 5 ஆம் தேதி"காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து வேலூர் வீதிகளில் பரப்புரை செய்ய உள்ளோம்.

2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்த...
550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றழித்த...
கட்ச தீவினை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த...
அயோத்தி கரசேவகர்களுக்கு துணைபோன...
இந்தி எதிர்பாளர்களை கொன்றழித்த...
தமிழ் தேசிய வளங்களை கொல்லையடித்துக்கொண்டிருக்கும்...
காங்கிரசை தமிழ் மண்ணிலேருந்து விரட்டியடியுங்கள்! விரட்டியடியுங்கள்!


தமிழர்களுக்கு தீங்கு செய்ய முற்படும் எந்தகட்சியானலும், அவர்களுக்கு இதே நிலைதான் என தமிழர்கள் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தினையும் பரப்ப உள்ளோம்.
மக்களை சந்திக்கும் இந்த வாய்ப்பினில் தோழர்களும் தவறாமல் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!"



புகைப்படங்கள் :

 





































சனி, மே 14, 2011

தமிழர் எதிரி காங்கிரசுக்கு எதிரான பரப்புரை தாக்கங்கள்

(ஏப்ரல் 30 அன்று இன்னொரு பதிவில் எழுதி வைத்தது. கருத்துக் கணிப்புகள் என்று சொல்லி சூதாட விரும்பாமல் பரவலாக பகிர்ந்து கொள்ளவில்லை) என்னுடைய உள்ளுணர்வில், நான் பேசிய மக்களின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஸ்வீப்தான் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இது போன்ற தேர்தல் கணிப்பு அல்லது விருப்பத்தை செய்வது ஒரு குருட்டு வித்தை போன்றதுதான். 'நடந்தால் அப்போதே சொன்னேன்' என்று சொல்லிக் கொள்ளலாம், 'இல்லை என்றால், மக்கள் மந்தைகள்' என்று பழி போட்டுக் கொள்ளலாம். 'பெரிய நிறுவனங்களில் புள்ளியியல் அடிப்படையில் செய்யும் கணிப்புகளும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்' என்பது என் கருத்து

ஈழப் படுகொலைகள் பற்றி ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது.

  • ஆனந்த விகடனை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். திருமாவேலனின் கட்டுரைகள், தமிழ்நதி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கணிசமான ஒரு பகுதியினரின் மனதில் ஈழப் பிரச்சனையின் ரணத்தை உயிரோடு வைத்திருந்தது.
  • அடுத்ததாக சீமானின் பரப்புரை, அவரது இயக்கம், தனிப்பட்ட செயல்முறை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அளவில் ஈழப் பிரச்சனையின் முகமாக செயல்பட்ட அவரது பணி மகத்தானது.
  • மூன்றாவதாக காங்கிரசை எதிர்த்துக் களப்பணிஆற்றிய தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை. அப்போதே நினைத்தது போல தேர்தலின் வெற்றி தோல்வியை விட கணிசமான மக்களிடம் ஈழப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அது தனக்குரிய பங்கை ஆற்றியது.
  • கடைசியாக நெடுமாறன், வைகோ போன்று தொடர்ந்து உறுதியாக உழைக்கும் தலைவர்கள். மேலே சொன்ன மூன்று பேரும் கடைசிக் கட்ட போரில் நடந்த அநியாயங்களால் மனம் வெதும்பி செயல்பட்டவர்கள் என்றால் இவர்கள் எந்த கால கட்டத்திலும் மனம் ஊசலாடாமல் உறுதியாக நின்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் நான்காவதாக ஜெயலலிதாவையும் இதில் சேர்க்கலாம். கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துவதாகத் தோன்றினாலும். முந்தைய நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் பேசி பத்திரிகைகளில் செய்தி இடம் பெறச் செய்த வகையில் அவரது பணி முக்கியமானது.

அவரது நிலைப்பாடுகளை சராசரி தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக பார்க்கலாம். 1989 வரை ஈழ இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவு. 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது தவறு என்ற குற்ற உணர்வில் கடுமையான ஒதுக்கி வைத்தல், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளதாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்தது.

இறுதிக் கட்டப் போரில் நியாயங்கள், சர்வதேச சட்டங்கள், மனிதாபிமானம் மனித உரிமைகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு போருக்குப் பின் மக்களை கேவலமாக நடத்தும் சிங்கள பேரினவாத அரசின் மீது கோபம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

இது சரி தவறு என்று அவரவர் அரசியல், உணர்வு நிலைப்பாடு பொறுத்து இருக்கலாம். ஆனால் இது ஒரு வகையான விளக்கம்.

இந்தியா டுடேயின் தேர்தலுக்குப் பின்னான கருத்துக் கணிப்பின் திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 105-120 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இதனால் என்ன விளைவு ஏற்படும்?

திமுக உச்ச வரம்பு வெற்றி பெற்றால்

திமுக கூட்டணி - 130 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 25
பாமக - 15
விசி - 5

அதிமுக கூட்டணி - 104 தொகுதிகள்
அதிமுக - 75
தேமுதிக - 15
கம்யூனிஸ்டுகள் - 10
பிறர் - 5

சிறுபான்மை அரசாக இந்த முறை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசுதான் ஏற்படும் அல்லது

அதிமுக, தேமுதிக, காங்கிரசு சேர்ந்து அரசு அமைக்கும் சூழலும் ஏற்படலாம். கம்யூனிஸ்டுகள் எதிரணிக்குப் போய் விடுவார்கள். பாமக அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம். திமுகவின் 2G ஊழலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று காங்கிரசு அதிமுக அணிக்குப் போய் விடலாம்.

இரண்டாவது சூழலில் திமுக கீழ் வரம்பு வெற்றி பெற்றால்,
திமுக கூட்டணி - 115 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 15
பாமக - 7
விசி - 3

அதிமுக கூட்டணி - 120 தொகுதிகள்
அதிமுக - 80
தேமுதிக - 20
கம்யூனிஸ்டுகள் 15
பிறர் - 5

இந்தச் சூழலில் அதிமுக+தேமுதிக+பிறர் ஆட்சி அமைக்க முடியும், கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தரலாம்.

நான் நடத்திய பத்து பதினைந்து பேரிலான கருத்துக் கணிப்பின் அடிப்படையில்
1. அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2. அரசு உதவி பெறுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் - கூலி வேலை செய்பவர்கள், முதியவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்.
3. 200 ரூபாய் பெரிய தொகையாக கருதுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.
4. திமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்

4. சுயதொழில் செய்பவர்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். - வியாபரம், சேவைத் தொழில்கள் (மருத்துவர், வழக்கறிஞர், கணக்காளர்கள்), நிலம் படைத்த விவசாயிகள், மீனவர்கள்
5. நீண்ட கால திமுக ஆதரவாளர்களில் பலர் அதிமுகவுக்கு வாக்களிக்கா விட்டாலும், சுயேச்சை அல்லது 49 O வாக்கு அளித்திருக்கிறார்கள்.
6. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளைச் சட்டை வர்க்கத்தினர் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
7. இளைஞர்களில் பலர் சீமானின் தாக்கத்தால் ஈழப் பிரச்சனை தொடர்பான வெறுப்பில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

என்னுடைய கணிப்பில் திமுகவின் வாக்கு சதவீதம் 2009 நாடாளுமன்றத் தேர்தலை விடக் குறைந்திருக்க வேண்டும். 2009 மே மாதத்துக்குப் பிறகுதான் ஈழத்துக்குச் செய்த துரோகத்தின் முழு சோகமும் மக்களைத் தாக்கியது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் 2G ஊழல், திரைப்படத் துறை ஆதிக்கம் குறித்த கோபங்கள் வெளியாக ஆரம்பித்தன. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

என்னுடைய கணிப்பின் படி, போட்டி நிலைமை இருந்திருந்தால்
திமுக - 65
காங்கிரசு - 10
பாமக - 15
விசி - 5

அதிமுக - 90
தேமுதிக - 25
கம்யூனிஸ்டுகள் - 20
மமக - 3

ஸ்வீப் என்று இருந்தால் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும். அந்தச் சூழலில்
திமுக - 10
காங்கிரசு - 6
பாமக - 8
விசி - 2

அதிமுக - 140
தேமுதிக - 40
கம்யூனிஸ்டுகள் - 23
மமக - 3

முதல்கணிப்பின் படி முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும். கம்யூனிஸ்டுகள்+தேமுதிக கடிவாளங்களுடன் அதிமுக ஆட்சி அமைவது இருப்பதில் நல்ல அமைப்பாக இருக்கும்.

சனி, மே 07, 2011

காங்கிரசைத் தோற்கடிப்போம் முன்னணி

கண்ணனிடமிருந்து மின்னஞ்சல்

வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு பரப்புரையை நடத்தி முடித்த "காங்கிரசு எதிர்ப்பு முன்னணி" யின் மீளாய்வு கூட்டம் கடந்த 22/4/2011 அன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. அதில் வேலூர் பரப்புரையின் நிறை/குறைகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் '2014 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கான அரசியல் தேவையும், அரசியல் மாற்றமும்' பேசப்பட்டன.

'மே 13 தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் காங்கிரசு பெரும் தோல்வியை தழுவும் தருணத்தில் நாம் எப்படி வினையாற்றப் போகிறோம்' என்ற விடயங்கள் பேசப்பட்டன.

இறுதியாக '63 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்த இயக்கங்களை ஒன்று திரட்டி சென்னையில் "காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து சென்னையில் பெரிய விழா ஒன்றினை நடத்த' முடிவுசெய்யப்பட்டது.

'அதே போல காங்கிரசு தோல்வி பெறும் தொகுதிகளிலும் மீண்டும் மக்களை சந்தித்து நன்றியினையும் தெரிவித்துக்கொள்ளும் முறைகளையும் வாய்ப்பு இருந்தால் தெருமுனைகூட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் ' எனப் பேசப்பட்டன.

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஒத்த அமைப்புகள் அல்லது தனி நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
9940963131/9003154128

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

மின்னஞ்சலில் அனுப்பியவர் சென்னையில் வசிக்கும், வேலூர் பரப்புரையில் பொறுப்பேற்று பணியாற்றிய திரு கண்ணன்

காங்கிரசு எதிர்ப்பு முன்னணி

நடந்து முடிந்த 2011 தேர்தலில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 20 வருடமாக சட்டமன்ற காங்கிரசு வேட்பாளராக இருந்த "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரன் 5 வது முறையாக போட்டியிடும் வேலூர் சட்டமன்ற தொகுதியில் "காங்கிரசு எதிர்ப்பு முன்னனி" என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டதில் "சர்வதேச தமிழர் கழகம்",  "சேவ் தமிழ் இயக்கம்",  "தமிழ் தேசிய மாணவர் இயக்கம்" மற்றும் "தமிழக இளைஞர் எழுச்சி பாசறை" போன்ற அமைப்புகளின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த 2ஆம் தேதியில் "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரனுக்கு எதிராக குறிப்பாக நாங்கள் பரப்புரையை தொடங்கிய காரணத்தை நாங்கள் சொல்லதேவையில்லை. இந்த கடும் பரப்புரை தொடங்க எங்களுக்கு உறுதுணையாகவும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த சுயேச்சை வேட்பாளர் மற்றும் தேர்தலை புறக்கணித்த அரசியல் கட்சியின் அமைப்பை சார்ந்தவர்களுக்கும்"கருஞ்சட்டைகாரர்" அமைப்பை சார்ந்தவர்க்கும், தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளார்க்கும் நாங்கள் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியினையும் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளோம். மேலும் எங்களுக்கு தங்க இடம் கொடுத்த "மெளன புரட்சியாளர்" பேராசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

முதல் நாள் சத்துவாச்சாரியில் குட்டி யானையில் ஒற்றை ஒலி பெருக்கி மற்றும் துண்டறிக்கையுடன் தொடங்கிய பரப்புரை மெதுவாக சூடுபிடித்ததற்கு காரணம் மக்கள் ஆதரவுதான்.

"விரட்டி அடிப்போம்!, விரட்டி அடிப்போம்!
தமிழின விரோத காங்கிரசு கட்சியை
விரட்டி அடிப்போம்!",

தோற்கடிப்போம்!, தோற்கடிப்போம்!
தமிழின விரோதி ஞானசேகரனை
தோற்கடிப்போம்!",

"கொத்து கொத்தாய் மக்களைய் கொன்ற
இன அழிப்பு நடத்திய
ஆயுதம் கொடுத்து உதவி செய்த
சிங்களவனின் கூட்டாளி!
தமிழர்களின் பகையாளி!
காங்கிரசை தோற்கடிப்போம்!",

"கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
தமிழ்த்தேசிய வளங்களேல்லாம்!
கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பினோம்
20 வருடமாய் கோட்டைக்கு அனுப்பினோம்
ஞானசேகரனை கோட்டைக்கு அனுப்பினோம்
கேட்டதுண்டா! கேட்டதுண்டா!
ஞானசேகரன் கேட்டதுண்டா!
கேட்கவில்லை!, கேட்கவில்லை!
ஞானசேகரன் கேட்கவில்லை!
பாலாற்று தண்ணியை கேட்கவில்லை!
பென்னையாற்று மணற் கொள்ளையை கேட்கவில்லை!
காவிரி நீரை கேட்கவில்லை!
தமிழக மின்சாரத்தை கேட்கவில்லை!
நரிமண எண்ணெய்யை கேட்கவில்லை!
நெய்வேலி நிலக்கரியை கேட்கவில்லை!
அவன் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்!
தமிழ் மக்களின் உயிர் மட்டுமே!
ஈழத்தமிழர்களின் உயிர் மட்டுமே"!!!

என்ற முழக்கங்களோடு வேலூர் விதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் துண்டறிக்கைகளுடன் பரப்புரையை தொடங்கினோம்.

இரண்டாவது நாள் வாகனத்தின் இருபக்கங்களிலும்(வலது,இடது) பாதகைகள் கட்டப்பட்டன. ஒரு பக்கத்தில் ஞானசேகரனையும் மறுபக்கத்தில் காங்கிரசை எதிர்த்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதேவாகனத்தில் கூடுதலாக இன்னொரு ஒலிவாங்கியும், ஒலி பெருக்கியும் சேர்க்கப்பட்டன.

'நாங்கள் உங்களிடம் ஒட்டு கேட்டு வரவில்லை, இந்த கட்சிக்கு போடுங்கள், இந்த சின்னத்திற்கு போடுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள் இங்கே பாலாறும், தேனாறும் ஓடும்எனச்சொல்லவில்லை.'

'1 1/2 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்திலே 2 லட்சம் மக்களை கொன்ற காங்கிரசு கட்சியை துரத்தியடியுங்கள்.'

'20 வருடமாய் ஞானசேகரனை கோட்டைக்குஅனுப்பினீர்கள். அவர் இந்த வேலூர் மக்களுக்கு செய்ததுதான் என்ன?'

'பாலாற்றிலே தண்ணீர் வர போராடினாரா? ஆனால் உண்ணாவிரதம் இருந்து நம்மையெல்லாம் ஏமாற்றினார். ஆந்திராவிலே காங்கிரசுதான் ஆள்கிறது, ஞானசேகரனும் காங்கிரசுதான், ஏன் இவர் அவர்களிடம் பேசி தண்ணீர் வர வைக்க முடியாதா?'

'பென்னை ஆற்றிலே மணற்கொள்ளை, என்றாவது அம்மணற்கொள்ளையை தடுக்க முயற்சி செய்திருக்கிறாரா? ஆனால் அந்த மணற்கொள்ளையில் உரிய பங்கை பெற்றுக்கொள்வதில் மட்டும் கவனமாகஇருந்துகொண்டிருக்கிறார்.'

'வேலூர் மக்கள் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததுண்டா?'

'அறிவு நூற்பாலையை புதிப்பித்திருந்தால் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்குமே? செய்தாரா இந்த ஞானசேகரன்!!!'

'காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தை நடத்த ஏதாவது முயற்சி செய்ததுண்டா? ஆனால் பஞ்சமி நிலங்களை தகாத முறையில் அடைந்து அதனை அவருடைய உறவினர்களுக்கு விற்றுவிட்டார்.'

'சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ அலுவலகச்சாலையில் வர இருந்த மேம்பாலத்தை, சுயபயன்பாட்டுக்காக அவர் வீட்டருகே போட்டுக்கொண்டவர்தானே இந்த ஞானசேகரன், அந்த மேம்பாலம் அங்கே இல்லாததால்இதுவரை 144 உயிர்கள் பலியாகியுள்ளனவே. '

'புது பொலிவுடன் அமைய இருந்த வேலூர் பேருந்து நிலையத்தை, அவருடைய சுயலாபத்திற்க்காக சிறிய அளவில் அமைத்து விட்டார்,'

'சுற்றுச்சுழலை கவனத்தில் கொள்ளாமல் பன்னாட்டுநிறுவனங்களிடம் கையுட்டு வாங்கி முறையான அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் அமைந்திட காரணமாக இருந்தார்.'

'சாதாரண குடும்பத்தில் பிறந்த ஞானசேகரனின் சொத்துமதிப்பு இன்று 2000 கோடிக்கு மேல், எப்படி அவரால் இவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது. அவர் என்ன களை பறித்தாரா, நாத்து நாட்டாரா?நம்முடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து சம்பாறித்ததுதானே தமிழர்களே!!!'

'வேலூரில் அமைய இருந்த பல்கலைகழகங்களை கூட பணம் பெற்றுக்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தவர்தானே, இந்த ஞானசேகரன்.'

'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கிட ஐ.டி நிறுவனங்கள் அமைக்க முயற்சித்தாரா!!!'

'ஞானசேகரன் பகுதி பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை, பேசவில்லை. அப்படியென்றால் தமிழ்நாட்டு பிரச்சனையையாவது பேசியிருக்கிறாரா?'

'உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து காவிரியில் தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசுக்கு எதிராக பேசியிருக்கிறாரா!!!'

'20 வருடமாய் வேலூரின் சட்டமன்ற வேட்பாளராய் இருந்த ஞானசேகரனை கஸ்பா பகுதி வாழ்மக்கள் பள்ளிகூடம் கட்டி தாராததால், அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து ஞானசே கரனை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பெண்கள் செருப்பு, முறம், விளக்குமாற்களை வைத்துக்கொண்டு எதிர்ப்புகளை பதிவுச்செய்தார்கள்.'

'சாவு விட்டிலே பிணமாகவும், திருமண விட்டிலே மாப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஞானசேகரனை தோற்கடிப்போம்.'

'இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? ஆனால் அவன் கூட குஜாராத் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினார்கள் என சுட்டுக்கொன்றதிலையே, இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, அண்டை நாடு என கூறிக்கொள்கிறோம், அவன் தானே நம்முடைய தமிழக மீனவர்களை தினம் தினம் சுட்டுகொண்டிருக்கிறான் தமிழர்களே, '

'இதைப்பற்றி என்றைக்காவது ஞானசேகரன் கவலைபட்டதுண்டா?'

'ஈழத்து படுகொலையையும் பேசமறுக்கிறார், "மாவீரன்" முத்துக்குமரன் மற்றும் "மாவீரன்" சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்கின்றார். அப்படியென்றால்அவர் சட்டசபையிலே பேசியதெல்லாம் என்ன? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது, பயங்கரவாதம் பெருகிவிட்டது, தீவிரவாதம் வளர்ந்து விட்டது, ஈழதமிழர்களை கொன்றழிக்கவேண்டும் என்றல்லவா பேசினார்.'

"உலக தமிழர்களின் எதிரியான" ஞானசேகரனை தமிழர்களாகிய நாம் வீட்டுக்கு அனுப்பவேண்டும் தமிழர்களே வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

'வெள்ளைக்காரன் போனான், கொள்ளைக்காரன் வந்தான் என்பார்கள். வெள்ளைக்காரனாவது பள்ளி, மருத்துவமனை, தொழிற்நிறுவனங்கள் நிறுவினான். இந்த வெள்ளைக்காரனுக்கு பிறந்த இந்த கள்ளப்பிள்ள காங்கிரசு இந்தியாவையே பட்டாபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறான். முதலில் நேரு, இந்திரா, ராஜிவ் இப்பொழுது சோனியா நாளை ராகுல். இவர்களேன்ன மன்னர் ஆட்சி நடத்துகிறார்களா!!!'

'ஈழத்தில் மட்டும் தமிழர்களை இவர்கள் கொன்றழிக்கவில்லை, காசுமீரத்திலே 70000 மக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அங்கே 500000 ராணுவத்துருப்புக்களையும் நிறுத்திவைத்துள்ளார்களே!!!' பஞ்சாபிலே சீக்கியர்களை கொன்றழித்தது இந்த காங்கிரசு. வட கிழக்கு பகுதிகளில் அப்பாவி பழங்குடி மக்களை "மாவோஸ்டுகள்" என்ற பெயரிலே பச்சைவேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தகாங்கிரசு.'

'தமிழக மீனவர்படுகொலைக்கு காரணமாக இருந்துக் கொண்டிருப்பது இந்த காங்கிரசு.'

'பாபர் மசூதி இடிப்பு மதவாத சக்திகளுடன் கைக்கோர்த்த காங்கிரசை தடைசெய்வோம். கொலைக்கார காங்கிரசை தடைச்செய்ய வேண்டும், பயங்கரவாத காங்கிரசை தடைச்செய்ய வேண்டும்'

என தோழர்களின் குரல்கள் மண்டி தெரு, பழையபேருந்து நிலையம், அலங்கா, கஸ்பா, திருவள்ளுவர்சிலை, காகிதப்பட்டறை, பெருமுகை, ரங்காபுரம், சி.எம்.சி மருத்துவமனை இன்னும் சில பகுதிகளில் 9ஆம் தேதி இரவு வரை ஒலித்துக்கொண்டே இருந்தது.

6 ஆம் தேதி நாங்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் அளித்தது. திணமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, இந்து, நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழன், ஜெயா, சன் செய்தி நிறுவனங்களுக்கு காங்கிரசு எதிர்ப்பு கருத்துகளை வழங்கினோம்.

இம்மாபெரும் பணிக்கு உண்மையில் மக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்தது, குறிப்பாக துண்டறிக்கையை அனைவரும் படித்தனர், கீழே போட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. பொதுமக்களே எங்களுக்கு குளிர்பானங்கள், தேநீர் மற்றும் திண்பண்டங்களை கொடுத்து மகிழ்ந்தார்கள்.

ஒர் அம்மா, 'நீங்க எத்தனை பேர் இருக்கிறீங்க'னு கேட்டாங்க.
'ஏம்மா கேட்கறீங்க'னு கேட்டோம்.
'அட சும்மா சொல்லுப்பா'னு கேட்டாங்க.
'நாங்க பத்துபேர் இருக்கிறோம்'னு சொன்னோம்.

உடனேஎல்லோருக்கும் குளிபானம் வாங்கி கொடுத்துட்டு,
'என்னல இதத்தான் செய்ய முடியும் தம்பி. நீங்க எல்லாம் செய்யறது பெரிய வேலை தம்பின்'னு சொல்லிட்டு போயிட்டாங்க.

பார்ப்பனர் ஒருவர் எங்கள் அருகே வந்து,
 'நீங்க நல்ல வேலை செய்றேல், ஆனா எங்களத்தான் சேர்த்துக்க மாட்றேல், நேக்கு சீமான் ரொம்ப பிடிக்கும். நீங்கதான் முதலியார், செட்டியார், வன்னியர்சொல்றேல். நாங்க மட்டும் தான் தமிழன்னு சொல்றோம்' என்றார்.

நாங்கள் அவரிடம் கூறினோம், 'அப்படின்னா எங்களோட வந்து துண்டறிக்கை கொடுங்களேன்'னு கேட்டோம்.

அவர் 'நாளை வர்ரேன்'னு சொன்னார். ஆனால் வரவில்லை.

இரண்டு பெரியவர்கள் 'நீங்கள் செய்யும் இந்த பணியினை பராட்டுகின்றோம், மேலும் இது போன்ற இளைஞர்களையெல்லாம் ஒன்று சேருங்கள்' என்றார்.

காக்கிசட்டைக்கூட எங்களுக்கு உதவி செய்தது, சில இடங்களில் எங்களுடன் தோழமையுடன் பழகினார்கள். சில இடங்களில் பொது மக்களே ஒலிவாங்கியை வாங்கி ஞானசேகரனையும் காங்கிரசையும் தாறுமாறாக விமர்சித்தார்கள்.

நாங்கள் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது, எங்களுடைய வாகனம் அருகே பரப்புரை செய்துகொண்டு வந்த வேறுகட்சியை சேர்ந்த மற்றொரு வாகனத்தை பொதுமக்களே பேச்சை நிறுத்தும்படி தடுத்து நிறுத்தினார்கள்.

ஒரு சிலர் நன் கொடை கொடுக்க முன்வந்தார்கள். அச்சகம் மற்றும் பாதகை செய்யும் இடங்களிலும் கூட எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். எங்கள் வாகன ஒட்டிகளான சிறு பொடியன்கள், எந்த வித சலிப்பும் இல்லாமல் உற்சாகத்துடன் எங்களுடன் இணைந்துப் பணியாற்றினார்கள்.

மணி ஒசைவரும் முன்னே, யானை வரும் பின்னே என்பார்கள், அதே போல எங்களுடைய பறை இசை எல்லோரையும் உசுப்பி விட்டது.(எங்களில் யாருக்குமே முறையாக பறை இசைக்க தெரியாதுஎன்பதுதான் முக்கியமான ஒன்று)

ஞானசேகரன் எங்களை முடக்க பல வழிகளிள் தொல்லை கொடுக்க முயன்று கொண்டே இருந்தார். முதலில் எங்கள் வாகனத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி முடக்க முயற்சித்தது. எங்களிடம் எல்லாஆவணங்களும் சரியாக இருந்ததால் உடனே வாகனத்தை மீட்டு வந்து விட்டோம்.

இரண்டாவது முறையாக பரப்புரை செய்யும் அனைத்து பகுதிகளையும், தெருக்களின் பெயர்களையும் மற்றும் நேரம் முதல் கொண்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறை எங்களுடைய பரப்புரையதடுக்க முயற்சித்தார்கள். நாங்கள் உடனே அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு உடனே தகவல் கொடுத்தோம், வேலூர் தேர்தல் அதிகாரியிடமும் முறையிட்டோம். செய்தி அறிந்த உடன்பத்திக்கையாளர்களும் மற்றும் உள்ளூர் தோழமை அமைப்புகளும் உடனே பிரச்சனைக்கூரிய இடத்திற்கு வந்து காவல்துறையிடம் பேசிமுடித்தார்கள். அதன் பின்பு நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம்.

நடிகர் விஜய் ரசிகர்களும் எங்களுக்கு பேராதரவு தந்தார்கள், குறிப்பாக நடிகர் விஜய் நாகபட்டினத்தில் மீனவர்களுக்காக நடத்திய பொதுகூட்டம் இவர்களைமட்டுமல்ல பொதுமக்களையும்கவனிக்க வைத்துள்ளது.

இந்த பரப்புரையின் மூலம் நாங்கள் சில விடயங்களை உற்று கவனித்தோம், பல விடயங்களை மக்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். சென்னையில் இருந்து 150 கி.மி தொலைவில் உள்ள வேலூர்மக்களுக்கு ஈழப்பிரச்சனை முழுமையாக சென்றடையவில்லை என்பதே வருத்தமான ஒன்று.

ஒரு சிலர் 'ஈழம் எங்கிருக்கிறது, ஈழம் என்றால் என்ன? எப்போது 2 லட்சம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.'

வேறு சில இயக்கங்கள் ஈழப்போரின் புகைப்படங்களைப் போட்டு பரப்புரை செய்தார்கள், அந்த துண்டறிக்கைகள் பொதுமக்களை பெரிதும் பாதித்தது. துண்டறிக்கைகளை பார்த்த உடனே கீழே போட்டுவிட்டார்கள், ஒரு சிலர் 'இது என்ன விபத்தா' என்று கேட்டார்கள்.

பெரும்பான்மையான மக்கள் சீமானை அறிந்து வைத்துள்ளார்கள். எங்களைப் பார்த்து பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள், 'சீமான் கட்சிக்காரங்க வந்துட்டாங்க. நிறைய தொலைப்பேசி அழைப்புகள் சீமான் எப்ப வரார், சீமான் எத்தனை மணிக்கு வரார்.'

இதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது சீமானை மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள், சீமானும் மக்கள் நேசிக்கும் போராட்டங்களை கையில் எடுத்து விதியில் இறங்கி போராடினால், நிச்சயம் அதுமக்கள் இயக்கமாக மாறும்.

வேலூரில் நடைப்பெற்ற சீமான் பொதுகூட்டத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், சரியாக 9.15 காங்கிரசை எதிர்த்து இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள்என்ற உடனே கூட்டம் மள மளவென களைய ஆரம்பித்துவிட்டது. 9 ஆம் தேதியே (சனிக்கிழமை இரவோடு) நாங்களும் பரப்புரையை முடித்துக்கொண்டோம்.

வேலூர் பயணம் எங்களுக்கு பெரிய பாடம், நிறைய மக்களிடமிருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த பரப்புரையில் வேலூர் பகுதியை சார்ந்த தோழர்களை விட மற்றப்பகுதி தோழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. நாங்கள் வெறும் ஈழப்பிரச்சனையே மட்டும் பேசியிருந்தால் நிச்சயம் எங்களுக்கு மக்களிடம் இந்த வரவேற்பு இருந்திருக்காது. நாங்கள் வேலூர்வாழ்மக்களின் பிரச்சனைகளை பேசியது மக்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் நிச்சயம் ஒரு இளைஞராவது மக்களுக்காக உழைக்கவும், மக்களுக்காக வீதியிலே இறங்கி போராடவும் தயாராக பாதைதெரியாமலும், சரியான தலைமையும் இல்லாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைய சமுதாயத்தை நாம் கண்டெத்தால், நிச்சயம் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மக்கள் தலைவர்கள் தானாக உருவாகுவதில்லை, மக்கள்தான் தனக்கான தலைவர்களை உருவாக்குகிறார்கள்.

"மக்களிடம் செல்வோம்,
மக்களிடம் கற்றுக்கொள்வோம்,
மக்களை பயிற்றுவிப்போம்,
மக்களை அரசியல் படுத்துவோம்..."

பல்வேறு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் இந்த பரப்புரையில் கலந்துக்கொண்ட மறைமுக ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!!!!