வியாழன், ஆகஸ்ட் 31, 2006

கடைசி அலகு (economics 14)

ஒருவரது தனிப்பட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஒரு பொருளுக்கான அவரது தேவை மாறுபடுகிறது, இப்படி எல்லோரது விருப்பங்களையும் பார்த்தால் ஒட்டு மொத்த தேவை அளவு உருவாகி, சந்தை விலையைத் தீர்மானிக்கின்றது என்று பார்த்தோம்.

ஒருவரது விருப்பத்தைத் தீர்மானிப்பது எது? ஒரு பொருளை வாங்கினால் கிடைக்கு பலனைப் பொறுத்து அதன் மீதான விருப்பம் இருக்கும். பலன் அதிகமான பொருளின் மீது விருப்பம் அதிகம், இல்லாமலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற பொருட்களின் மீது விருப்பம் குறைவாக இருக்க வேண்டும். இதனால் அவற்றின் விலையும் பலனை ஒட்டிதான் அமைய வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இந்தப் பருப்பு வேகுவதில்லை.
  • நம் உயிர் வாழ இன்றியமையாத தண்ணீரின் விலை லிட்டருக்கு சில பைசாக்கள்தாம்.
  • காற்றுக்கோ விலையே இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.
  • இன்னொரு பக்கம் போதை ஏற்றிக் கொள்ள உதவும் விஸ்கி அரை லிட்டருக்கு எழுபது எண்பது ரூபாய்
  • ஹெராயின் கிராமுக்கு இரண்டு மூன்றாயிரம் ரூபாய் என்றும் விற்கிறது.
தண்ணீரை விட விஸ்கி பலன் அதிகமானது என்று யாரும் சொல்ல முடியாது. அப்புறம் ஏன் விலை இப்படி இருக்கிறது?

இதற்கு விடை சுலபமானது. தண்ணீர் கிடைக்கும் அளவு ஏராளமாக இருப்பதால் விலை குறைவாகவும், விஸ்கியின் விற்பனை அளவு குறைவாகவே இருப்பதால் விலை அதிகமாகவும் இருக்கின்றன. சொல்லப் போனால் ஒரு பொருளின் சந்தை விலை வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனுக்குச் சமமாக இருக்காது.

  • வாங்கும் முதல் லிட்டர் தன்ணீருக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருப்போம்.
    குடிப்பதற்கு அது இல்லாவிட்டால் உயிரே போய் விடும்.

  • ஆனால் கிடைக்கும் அளவு கூடக் கூட நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையும் குறைந்து கொண்டே போகிறது.

  • தோட்டத்துக்கு நீர் பாய்ச்சத் தேவைப்படும் நீருக்கும் லிட்டருக்கு பத்து பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை. அவ்வளவு தண்ணீர் இருப்பதால் விற்பவரும் பத்து பைசாவுக்கு விற்க முன் வருகிறார்.
இங்குதான் ஒரு அருமையான விஷயம் மூக்கை நுழைக்கிறது.

பொருளின் விலை இப்படி சந்தையில் கிடைக்கும் கடைசி அளவுக்கு வாங்குபவர்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகத்தான் இருக்கும். முதல் லிட்டர் தண்ணீரும் அதே விலையில் கிடைத்து விடுகிறது.

நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலை, பொருளை இன்னும் ஒரு கிலோ அல்லது லிட்டர் வாங்கினால் என்ன பலன் கிடைக்குமே அந்த நிலையில் அமைந்து விடுகிறது. அப்படிக் கடைசிப் பயன்பாட்டைப் பொறுத்து நமது விருப்பங்களை மாற்றிக் கொள்கிறோம்.

பத்து ரூபாய் கொடுத்து ஆனந்த விகடன் வாங்குவதனால், எட்டு ரூபாய்க்கு விற்கும் மாம்பழம் வேண்டாம் என்று சொல்லி விடவில்லை. ஏற்கனவே மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்ட பிறகு பத்து ரூபாய் கொடுத்து இன்னும் ஒரு கிலோ வாங்குவதால் கிடைக்கும் நிறைவு ஆனந்த விகடன் கொடுக்கும் நிறைவை விடக் குறைவு. ஆனால் மொத்தமாகப் பார்த்தால் மாம்பழம் கொடுக்கும் பலன் ஆனந்த விகடனின் பலனை விட அதிகம்தான். இந்தப் பத்து ரூபாய்க்கு மாம்பழம் கொடுக்கும் கடைசி மதிப்புக் குறைவு.

இந்தக் கடைசி அலகு அணுகுமுறை பொருளாதாரவியலின் ஒரு அருமையான விஷயம். இதைப் பயன்படுத்தி பல நடைமுறைகளை விளக்கி விடுவார்கள்.

இன்னும் தைரியமாகச் சொல்லப் போனால் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூ ஒரு அம்மா வாங்குகிறார்கள் என்றால், அவருக்குத் தெரிந்த மற்ற எல்லாப் பொருட்களின் கடைசிப் பயன்பாடு இந்த ஒரு முழம் பூவின் பலனை விடக் குறைவு என்று சொல்லலாம். ஒவ்வொரு ரூபாய் செலவளிப்பதிலும் இப்படி கடைசி அலகு கொடுக்கும் நிறைவு எல்லாப் பொருட்களுக்கும் சமமாக அமையும் வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.

இதை எல்லாம் கணக்குப் போட நாம் ஒரு பெரிய கணினியைத் தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை. நம்முடைய மனமே அந்த வேலையைச் செய்து விடுகிறது. பல்லாயிரக் கணக்கான பொருட்களின் கடைசி அலகுப் பலனை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு முடிவிலும் நமக்கு அந்த உணர்வு சரியான வழி காட்டுகிறது.

அதுதான் ஒரு பொருளின் மீதான் விருப்பத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதைக் கவனமாகப் படித்துச் சரிவரப் புரிந்து கொண்டவர்களுக்கு இன்னொரு உண்மை புரியும். அது என்ன?

புதன், ஆகஸ்ட் 30, 2006

தொள்ளாயிரம் பொற்காசுகள்?

இந்த வாரம் இடப்படும் பின்னூட்டங்களுக்கு பின் வரும் நூல்களில், தேர்ந்தெடுக்கப்படும் பின்னூட்டத்தை எழுதியவர் விரும்பிய நூல் பரிசாகக் காத்திருக்கிறது. economics என்ற தலைப்பில் இருக்கும் பதிவுகளில் (இதுவரை 13) ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 3 வரை எழுதப்படும் பின்னூட்டங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

புத்தகங்களின் பெயர்கள்
  1. லூயி ஃபிஷரின் Mahatma Gandhi (Biography)
  2. காந்தியின் Society, social service and reforms 1 (collection of writings)
  3. காந்தியின் Society, social service and reformts 2 (collection of writings)
  4. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (detective stories)
  5. அண்ணாவின் சொற்பொழிவுகள்
  6. ஆதம் ஸ்மித்தின் The Wealth of Nations (One of the greatest Books)
இதற்கு துளசி கோபாலும் , சிவஞானம்ஜியும் பரிந்துரை செய்ய இசைந்துள்ளார்கள்.

எல்லோரும் கலந்து கொண்டு பொருளாதாரம் குறித்த தமது அனுபவங்கள், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

வரிகளும் சாவும் (economics 13)

வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை வரிகளும் சாவும்தான் என்று ஒரு ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. அரசாங்கம் வரி விதிப்பதற்கு இரண்டு நோக்கங்கள்,
  • செலவுக்குத் தேவையான வருமானத்தைப் பெறுவது ஒன்று.
  • மற்றொன்று, குறிப்பிட்ட செய்கையை செய்யாமல் குறைக்க நினைப்பது.
பெட்ரோல் மீது வரியே இல்லா விட்டால் விலை லிட்டருக்கு இருபது ரூபாய் என்று விற்க முடியுமாம். சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி என்று பல நிலைகளில் பல்வேறு முனைகளில் விதிக்கப்படும் வரி அரசுக்கு வருவாயைக் கொடுக்கிறது. வரி விதிப்பதின் விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கும் தேவை/வழங்கல் தொடர்பான பொருளாதாரப் புரிதல்கள் பயன்படுகின்றன.

முதலில் வருமான நெகிழ்ச்சி. 90களில் பொருளாதாரச் சீர்திருத்தம் நடந்து கொண்டிருந்த போது பல பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. வரி வீதம் குறைந்தாலும், அதனால் பொருட்களின் விற்பனை அளவு அதிகமாவதால் அரசுக்கு வருமானம் அதிகமாகும் என்று கணித்து பெரும்பாலான பொருட்களுக்கு அது சரியாகவே இருந்தது.

  1. இருபதாயிரம் செலவில் சந்தைக்கு வரும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை மீது 90 சதவீதம் வரி போட்டால், விற்கும் விலை முப்பத்தெட்டாயிரத்தை எட்டி விடும்.
  2. இருபதாயிரத்துக்கு வாங்கியிருக்கக் கூடிய பலர் தொலைக்காட்சிப் பெட்டியே வாங்காமல் விட்டு விடுவார்கள். இப்போது மாதம் பத்தாயிரம் பெட்டிகள் விற்று அரசுக்கு 18 கோடி ரூபாய் (ஒரு பெட்டிக்கு பதினெட்டாயிரம்) வருமானம் கிடைக்கிறது.
  3. வரியை இருபது சதவீதமாகக் குறைக்கும் போது விற்கும் விலை இருபத்தைந்தாயிரத்துக்கு சரிந்து விடும். இப்போது பல குடும்பங்கள், குறைந்த விலையில் வாங்க முன் வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெட்டிக்கு ஐந்தாயிரம் வீதம் ஒரு லட்சம் பெட்டிக்கு ஐம்பது கோடி ரூபாய் வருமானம் கிடைகிறது.

இப்படி தேவை வழங்கல் விதியின் மீது பயணம் செய்து அரசு வருமானம் அதிகரித்து விடலாம்.

இரண்டாவது புதிய வரி ஒன்றைக் கட்டுவது யார் என்ற கேள்வி.

ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி குறைவாக இருக்கும் போது விலை அதிகமானால் வாங்கும் அளவு குறைவது இல்லை. அதனால் வரிச் சுமையை வியாபாரி விலையில் முற்றிலும் ஏற்றி விடுவார். நுகர்வோருக்கு அதை வாங்கியே தீர வேண்டிய தேவை இருப்பதால் அதிகமான விலை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அரிசி விற்பனையில் வரி விதித்தால் வரி முழுவதும் வாங்குபவர்களின் கையைக் கடிக்கும்.

இதுவே தேவை நெகிழ்ச்சி அதிகமான ஆடம்பரப் பொருட்கள் அல்லது மாற்றுப் பொருட்கள் உள்ளவற்றின் மீதான வரியை ஒட்டி விலையை ஏற்றினால் வாங்கும் அளவு குறைந்து பொருள் தேங்க ஆரம்பித்து விடும். அந்த நிலையில் விற்பனையாளர்கள், தமது லாபத்தைச் சுருக்கிக் கொண்டு வரியின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொள்ளலாம்.

உப்பு வரி கொடுக்க மாட்டோம் என்று காந்தி போராடியதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அத்தியாவசியப் பொருளான உப்பின் மீது விதிக்கப்படும் வரி ஏழைகளின் மீது முற்றிலுமாகப் போய் விடுகிறது. அதன் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. எனவே அதன் மூலம் வருமானம் ஈட்டுவது அரசுக்குத் தகாது என்பதுதான் அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமை.

மூன்றாவதாக வருமானத்துக்காக மட்டுமின்றி வரி விதிப்பின் மூலம் நுகர்வைக் கட்டுப்படுத்துதல். தொண்ணூறுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி பெட்டிகள் முதலானவற்றின் மீது உயர்ந்த வரி விதிக்கப்பட்டதை, அத்தகைய ஆடம்பரப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்தினார்கள். இன்றும் சிகரெட், மது பானம் மீது விதிக்கப்படும் வரிகள் ஆண்டு தோறும் ஏறிக் கொண்டே போகின்றன. யாரும் அதை எதிர்ப்பதில்லை. இந்தப் பொருட்களின் விலை, வரி விதிப்பின் மூலம் ஏறினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு தடையாக மாறும் என்ற சமூகத்தின் நம்பிக்கைதான் அது.

இது போல நல்லொழுக்கக் காரணங்களுக்கான வரி வருமானத்தை கணக்கில் எடுத்து ஒரு அரசு செயல்படும்போது பல கேள்விகள் எழுகின்றன. மது விற்பனையில் வருமானம் வருகிறது என்று அரசே அதைக் கையில் எடுத்து, விற்பனை பெருக எல்லா நடவடிக்கை எடுப்பது, மதுவின் மீதான வரியின் நோக்கத்தையே பாழ் படுத்தி விடுகிறது கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கும் மூடரைப் போல, உடனடி வருமானத்துக்காக தம் மக்களின் வருங்கால நலனைப் பணயம் வைக்கின்றன அரசுகள்.

  • வரிகளுக்கு நேர் எதிரானவை மானியங்கள். குறிப்பிட்ட பொருளின் விலையைக் குறைக்க மானியம் அளிப்பதும் பரவலாக நடக்கிறது. நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை போன்றவை குறிப்பிடத் தக்கவை.
  • இன்னொரு முறை விலைக் கட்டுப்பாடு. அரிசி கிலோ பதினைந்து ரூபாய்க்கு மேல் யாரும் விற்கக் கூடாது என்று விலைக் கட்டுப்பாடு கொண்டு வருவதும் நடக்கின்றன.

    அப்போது என்ன நடக்கும்? சந்தை விலையான இருபது ரூபாய்க்கு வாங்குவதை விட பதினைந்து ரூபாய்க்கு வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருகி விடும். ஆனால் விற்பவர்களின் வழங்கல் அளவு அந்தக் குறைந்த விலையில் குறைந்து விடும். இரண்டுக்கும் நடுவிலான வேறுபாட்டினால் பலருக்கு அரிசி கிடைக்காது. முதலில் வந்தவர்கள் இருப்பதை வாங்கிச் சென்று விட தாமதமாக வருபவர்களுக்கு வெறுங்கைதான்.

    இதைச் சமாளிக்க செயற்கையான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை கொடுத்து நபருக்கு இத்தனை கிலோதான் என்று முதலில் வருபவர் நூறு கிலோ வாங்கத் தயாராக இருந்தாலும் (விலை குறைவாச்சே), ஐம்பது கிலோ மட்டுமே கொடுத்து மிச்சப்படுத்திக் கொண்டால், கடைசி வரை வருபவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடலாம். இதிலும் பல சிக்கல்கள். எத்தனை கிலோவில் மட்டுப் படுத்த வேண்டும் என்று கணக்குப் போடுவது எளிதான வேலை இல்லை.

    கையில் பசை அதிகமாக உள்ளவர்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் கடைக்காரரிடம் பின் வாசலில் பேரம் பேச ஒரு கள்ளச் சந்தை உருவாகி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக காசு கொடுத்து அவருக்குப் பொருள் கிடைத்து விடுகிறது. இதில் எல்லாம் ஒவ்வொருவருக்கும் நேரச் செலவும் மன உளைச்சலும் ஏராளம்.

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

பரிசு பெறும் பின்னூட்டம்

கைப்புள்ள எழுதிய உலக மயமாக்கல் பற்றிய பின்னூட்டம் இந்த வாரம் இடப்பட்ட பின்னூட்டங்களில் தலைசிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறுகிறது. பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வேண்டுகோளை ஏற்று பின்னூட்டங்களை மதிப்பீடு செய்த துளசி அக்காவுக்கும் சிவஞானம்ஜி ஐயாவுக்கும் நன்றிகள்.

பரிசு பெற்ற கைப்புள்ளயின் பின்னூட்டத்தை இந்தப் பதிவில் மறு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சியும் இயல்பான நடையும் கரடுமுரடான பொருளாதார விவாதத்தையும் எளிதாக விளங்கச் செய்கிறது.

கொடுத்துள்ள நூல் பட்டியிலிருந்து தனக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அது அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 2 வரை அடுத்த நான்கு பதிவுகள் வெளியாகும். இந்த வாரத்திலும் பல விபரம் செறிந்த பின்னூட்டங்கள் விவாதத்துக்கு வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

கைப்புள்ள பன்னாட்டு வர்த்தகம் என்ற பதிவில் இட்ட பின்னூட்டம் :

1990களில் தொடங்கிய உலகமயமாக்குதலின்(Globalisation) பலன்களையும் பின்விளைவுகளையும் இந்தியாவில் நாம் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறோம்.

எண்பதுகளின் இறுதி வரை இந்திய தொழிற் நிறுவனங்களின் நலனைக் காக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுக்குள் வருவதை இந்திய அரசு தடை செய்து வைத்திருந்தது. இத்தகைய பாதுகாப்பான சூழலை அரசு வழங்கியதன் விளைவாக வெளி சந்தையில்(Open market) இந்திய நிறுவனங்களின் competitiveness(போட்டியிடும் தன்மை) வெகுவாகக் குறைந்திருந்தது. உதாரணமாக இந்திய சந்தைகளில் விற்கப் படும் ஒரு பொருள், வெளிநாட்டு சந்தைகளில் விலை போக இயலாத ஒரு நிலை. நம் நாடு "விற்பவர்கள் சந்தையாக"(Seller's market) இருந்தது.

இதனால் இந்திய சந்தையில் அக்காலக் கட்டத்தில் காணக் கிடைத்த நிலை என்பது என்ன? - உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியினை வாங்க ஒருவர் விரும்புகிறார் என எடுத்துக் கொள்வோம், ஒரு டயனோரா டிவியையோ அல்லது ஒரு டெலிவிஜய் டிவியையோ அவரால் இந்திய சந்தையில் வாங்கிக் கொள்ள முடியும். எனினும் ஒரு சோனி டிவியையோ, ஃபிலிப்ஸ் டிவியையோ வாங்க விரும்பினார் ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் நண்பர் மூலமாகவோ அல்லது "பர்மா பஜாரில் தெரிஞ்ச கடையில"வாங்கும் நிலையிலேயே இருந்தோம். ஒரு டெலிவிஜய் டிவி சிங்கப்பூருக்கோ, துபாய்க்கோ ஏற்றுமதி செய்யப் பட்டு ஒரு சோனியுடனோ ஒரு ஃபிலிப்சுடனோ போட்டியிட்டு அச்சந்தையில் வெற்றி பெறும் திறன் கொண்டிலாது போனாலும், நம் நாட்டுச் சந்தையில் அது கண்டிப்பாக விற்றுப் போகும். ஏனெனில் மக்களிடம் "இருப்பதிலேயே நல்லதாக ஒன்று பார்த்து எடுத்துக் கொள்வதைத்" தவிர வேறு வழி இருக்க இல்லை. ஒரு பொருளை ஒருவர் வாங்க விரும்புகிறார் எனில், அப்பொருளை விற்கும் நான்கைந்து நிறுவனங்கள் அளிக்கும் விருப்பு பட்டியலுக்குள் அவருடைய விருப்பம் அமைதல் வேண்டும்.

இதே நிலையை ஒரு "வாங்குபவர்கள் சந்தையில்"(Buyer's market)இல் காண்போமாயின், நாம் கொடுக்கும் காசுக்குத் தரமான பொருளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம் கையில் இருக்கும்(சிங்கப்பூர்/துபாய் நண்பரையோ அல்லது பர்மா பஜாரையோ நம்பத் தேவையின்றி). ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க ஒருவர் விரும்புவார் எனில், 15-20 வெவ்வேறு நிறுவனங்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இருக்கும்(ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விலையில்(price bracket) தரும் வெவ்வேறு மாடல்களைத் தவிர்த்து). இதில் கொடுக்கும் காசுக்குத் தரமானது, உயர்வானது என எதை நாம் எண்ணுகிறோமோ அப்பொருளையே வாங்குவோம். இதன் விளைவாக நம் நாட்டுக்குள்ளேயே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் மடிந்து போகும் நிலையையும் காணலாம்/கண்டிருக்கிறோம்(கட்டுரையில் கூறப் பட்டிருப்பது போல "இது எல்லாம் சரிவர நடக்க, பல வலிகளைத் தாங்கிக் கொள்ள வேன்டியிருக்கும்.." ) கெல்ட்ரான்(Keltron) என்று ஒரு டிவி இருந்ததே, நெல்கோ(Nelco) என்று ஒரு டிவி இருந்ததே என்று யாராவது இன்று நினைக்கிறோமா? சோனியும், எல்ஜியும் நம் தேவைகளை, நம்மால் வாங்கக் கூடிய விலையில் பூர்த்தி செய்யும் போது "we really don't care".

சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டது(market liberalisation) உலகமயமாக்குதலுக்கு(globalisation) வழி வகுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவங்கள் நம் நாட்டுக்குள் வந்து வணிகம் புரியவும் நம் நாட்டு நிறுவனங்கள் வெளி நாட்டுச் சந்தைகளில் சென்று போட்டியிடவும் இது வழி வகுத்துள்ளது. "Survival of the fittest" என்ற டார்வினின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன/ இயங்கப் பழகி வருகின்றன. "If we don't take care of our customers some one else will" என்று அலுவலகங்களுக்குள்ளேயே எழுதி வைத்து அங்கு வேலை செய்யும் மக்களிடையே ஒரு "பயத்தை" உண்டாக்கி எப்போதும் மாறும் சூழலில் தம் நிறுவனம் தாக்குப் பிடிக்க ஏதுவான வழிவகைகளை நிறுவனங்கள் தமக்குத் தாமே வகுத்துக் கொள்கின்றன. "அந்த பயம்" இருக்கும் நிறுவனங்கள் நீடித்து நின்று வெற்றி பெறும், இல்லாதவை அழிந்து விடும்.

மேற்கூறிய "உலகமயமாக்கப் பட்ட சந்தை" எனும் சூழலில், சிவகுமார் அவர்கள் தம் கட்டுரையில் கூறியிருக்கும் பன்னாட்டு வர்த்தகத்தை வளர்க்கக் கூடிய காரணிகள் யாதென ஆய்வோம். இவற்றை ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் காண்போம்.

1. மூலதனமும் உடைமையும் : தொழில் நடத்தி தம்முடைய வருவாயைப் பெருக்கிக் கொள்ள நிறுவனங்கள் நம்புவது "core competence" எனும் மந்திரத்தை. நம்மால்(நிறுவனத்தால்) எந்த வேலையை நன்றாக செய்ய முடியுமோ, எவ்வேலையில் நம்முடைய ஊழியர்களின் திறன் அனைத்தும் அடங்கியுள்ளதோ(கட்டுரையில் கூறப் பட்டுள்ளது போல "ஒரே வேலையைக் கற்றுத் தேர்ந்து கொள்வது") அதில் மட்டுமே நாம் நேரடியாக ஈடுபடுவது. நம் தொழிலுக்குத் தேவையான, அதே சமயத்தில் நம்முடைய 'core competence'க்குள் அடக்கமாகாத வேலைகளை, அவ்வேலையில் யார் திறமையானவர்களோ அவர்களிடத்து விட்டு விடுவது. இதையே 'outsourcing' என்கிறோம். உதாரணமாக, நான் ஒரு மகிழ்வுந்து(car) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறேன் எனில், என்னுடைய கார்களில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத்(troubleshooting information) தெரிவிக்கவும், குறைகளைப் பதிந்து வைத்துக் கொள்ளவும்(complaint registration) ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கி நடத்த விரும்ப மாட்டேன். ஏன் எனில் என்னுடைய(என்னுடைய என்றால் என் நிறுவனத்தின், அதில் பணிபுரியும் ஊழியர்களின்) வேலை "மகிழ்வுந்து தயாரிப்பது" அன்றியே "தகவல் சொல்வதும் குறைதீர்ப்பும்" அன்று. என்னுடைய அனைத்து ஊழியர்களின் திறனும் மகிழ்வுந்து தயாரிப்பதிலேயே இருக்கும். அத்தகையவர்களை மட்டுமே நான் பணியில் அமர்த்திக் கொள்வேன். ஆனாலும் என் வண்டிகளில் ஏற்படும் குறைகளைக் குறித்த தகவல் பரிமாற்ற வசதி நான் தர முன்வர மாட்டேன் ஆயின், மக்கள் என் மகிழ்வுந்துகளை வாங்க மாட்டார்கள். இதை எதிர்கொள்ள "குறை தீர்ப்பு" என்னும் வேலையில் திறன் உள்ளவர்களிடத்து அப்பொறுப்பை நான் ஒப்படைத்து விடுவேன். அதற்கு அவர்களுக்கு இன்ன வேலைக்கு இன்ன விலை என்று நிர்ணயித்து என் தேவையை நான் நிறைவேற்றிக் கொள்வேன். இவ்வாறு மகிழ்வுந்து தயாரிக்கும் என் பணியிலும் நான் என் கவனத்தைச் செலுத்த முடியும், அத்துடன் குறை தீர்ப்பதற்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் என் முதலீட்டை(investment) இடுவதினின்றும், குறை தீர்ப்பு பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை என்னுடைய உடைமையாக்கிக் கொண்டு, அதையும் பராமரிக்கும் தொல்லைகளினின்றும் விடுவிக்கப் படுவேன்.

2. மனித வளம் : மனித வளம்(Human capital) இதை நிறுவனங்கள் ஒரு மூலதனமாகக் கருதுகின்றன. தன் தொழிலை நடத்திட உதவி புரிய திறமையுள்ளவர்களுக்குத் தகுந்த சம்பளம் கொடுக்கவும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்தவொரு முன்னேற்றப் பாதையில் இருக்கும் நிறுவனமும் முயற்சிகள் எடுக்கத் தவறாது. Dr.Reddy' Laboratories மற்றும் Ranbaxy என்னும் இந்தியாவைச் சேர்ந்த "பன்னாட்டு நிறுவனங்கள்" ஃபார்மா துறையில் உலக அளவில் Pfizer போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, வருவாயையும் ஈட்டி இலாபகரமாக இயங்க முடிகிறது என்றால் அதற்கு அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்களே என்றால் அது மிகையாகாது. மனித வளத்தில் ஒரு நிறுவனம் செய்யும் முறையான முதலீட்டின் வாயிலாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான மற்ற முதலீடுகளைக் குறைத்து உலகச் சந்தையில் தங்களுடைய "போட்டியிடும் திறனை" பெருக்கிக் கொள்ளலாம்.

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் "No.1 in Employee Satisfaction as per xxxx Survey" என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம். இதை வெளியுலகத்திற்குப் பறைசாற்ற காரணம் என்ன? திறமை கொண்ட மனித சக்தியைத் தம் பால் ஈர்க்கவே அல்லால் வேறில்லை.

3. பிற்காலப் பலனுக்கான மூலதனம் : குளிர்பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களான கோக்குக்கும், பெப்சிக்கும் தற்சமயம் எதிர்ப்பு கிளம்பியதற்கான காரணங்கள் என்ன? "எம் நாட்டில் வந்து நீ குளிர் பானங்களை விற்கிறாய், எம் நாட்டு வளங்களை உபயோகித்து கொள்கிறாய், கோடி கோடியாக வருவாய் ஈட்டிக் கொள்கிறாய். ஆயினும் எம் மக்களின் நலனின் பொருட்டு உனக்கு சிறிதளவும் அக்கறை இல்லாத பேரினாலேயே நீ பூச்சுக் கொல்லி மருந்துகள் குளிர்பானத்தில் கலந்திருப்பதற்கு பாராமுகம் காட்டுகிறாய், எம் நாட்டு நதிகளிலும் நிலத்திலும் கழிவுநீரைச் செலுத்தி மாசுபடுத்த அஞ்ச நீ தயங்குவதில்லை, உனக்கு தேவையான பணம் கிடைக்கும் வரை நீ இச்சமூகத்தைக் குறித்து எவ்வித அக்கறையும் காட்டப் போவதில்லை" என்ற எண்ணம் சமூக ஆர்வலர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் தோன்றியதினால் தானே?

ஒரு நிறுவனம் தான் செய்யும் தொழிலின் வாயிலாக, தான் இயங்கும் சமூகத்துக்கு பிற்காலத்தில் நன்மை ஏற்படுத்தக் கூடியச் செயல்பாடுகளிலும் ஈடுபாடு வேண்டும். இதையே 'Corporate Social Responsibility' என்கின்றோம். பன்னாட்டு வணிகம் புரியும் ஒரு தொழிற் நிறுவனம், சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் சமூகத்தைக் குறித்த இவ்வக்கறை இருத்தல் அவசியமே. 1980களின் இறுதியில் டாட்டா ஸ்டீல் நிறுவத்தினர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஒரு விளம்பரம் நினைவுக்கு வருகிறது. தாங்கள் செய்யும் நாட்டு நலப்பணித் திட்டங்களை விளக்கிய டாட்டாவினுடைய அவ்விளம்பரப் படம், சமூகத்திற்கு நாங்கள் செய்யும் பணிகள் எங்களுக்கு மிக முக்கியமானவை மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான் என்னும் பொருள்படும் விதத்தில் "We also make steel" என்னும் tagline உடன் வெளியிடப் பட்டது.

இத்துடன் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கவும் பெருக்கவும் ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், இன்னும் சில காரணிகள் இருக்கக் கூடும் என்பது என் எண்ணம். நான் இட்டுள்ள இப்பின்னூட்டம் சிவகுமார் அவர்கள் எழுதியுள்ள 'பன்னாட்டு வர்த்தகம்' குறித்த கட்டுரையைக் குறித்து என்னுடைய புரிதலை விளக்கவே. சிவஞானம்ஜி ஐயாவும், சிவகுமார் அவர்களும், துளசி அக்காவும் இதை குறித்து தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள் எனில் மகிழ்வேன்.

மேலும் அருமையான சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பின்னூட்டங்களுக்குப் பரிசு என்று நண்பர், அறிவித்திருப்பதை அறிந்து தேனினை நோக்கி ஓடி வரும் வண்டு/நரி/மந்தி/கரடி போல இங்கு வந்தேன் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
:))

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

பொருளாதாரப் பின்னூட்டங்கள் - பரிசுக்காக...

போன வாரம் இடப்பட்ட பின்னூட்டங்களின் தொகுப்புக்கான சுட்டி இதோ:

http://masivakumar.googlepages.com/060804comments.html

பின்னூட்டம் இட்டு வளம் சேர்த்த அருள் குமார், பத்ரி, வடுவூர் குமார், கலாநிதி, டண்டணக்கா, நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், கைப்புள்ள, கவிதா கெஜானனன், வீரமணி ஆகியோருக்கு நன்றி.