செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

பரிசு பெறும் பின்னூட்டம்

கைப்புள்ள எழுதிய உலக மயமாக்கல் பற்றிய பின்னூட்டம் இந்த வாரம் இடப்பட்ட பின்னூட்டங்களில் தலைசிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறுகிறது. பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வேண்டுகோளை ஏற்று பின்னூட்டங்களை மதிப்பீடு செய்த துளசி அக்காவுக்கும் சிவஞானம்ஜி ஐயாவுக்கும் நன்றிகள்.

பரிசு பெற்ற கைப்புள்ளயின் பின்னூட்டத்தை இந்தப் பதிவில் மறு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சியும் இயல்பான நடையும் கரடுமுரடான பொருளாதார விவாதத்தையும் எளிதாக விளங்கச் செய்கிறது.

கொடுத்துள்ள நூல் பட்டியிலிருந்து தனக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அது அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 2 வரை அடுத்த நான்கு பதிவுகள் வெளியாகும். இந்த வாரத்திலும் பல விபரம் செறிந்த பின்னூட்டங்கள் விவாதத்துக்கு வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

கைப்புள்ள பன்னாட்டு வர்த்தகம் என்ற பதிவில் இட்ட பின்னூட்டம் :

1990களில் தொடங்கிய உலகமயமாக்குதலின்(Globalisation) பலன்களையும் பின்விளைவுகளையும் இந்தியாவில் நாம் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறோம்.

எண்பதுகளின் இறுதி வரை இந்திய தொழிற் நிறுவனங்களின் நலனைக் காக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுக்குள் வருவதை இந்திய அரசு தடை செய்து வைத்திருந்தது. இத்தகைய பாதுகாப்பான சூழலை அரசு வழங்கியதன் விளைவாக வெளி சந்தையில்(Open market) இந்திய நிறுவனங்களின் competitiveness(போட்டியிடும் தன்மை) வெகுவாகக் குறைந்திருந்தது. உதாரணமாக இந்திய சந்தைகளில் விற்கப் படும் ஒரு பொருள், வெளிநாட்டு சந்தைகளில் விலை போக இயலாத ஒரு நிலை. நம் நாடு "விற்பவர்கள் சந்தையாக"(Seller's market) இருந்தது.

இதனால் இந்திய சந்தையில் அக்காலக் கட்டத்தில் காணக் கிடைத்த நிலை என்பது என்ன? - உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியினை வாங்க ஒருவர் விரும்புகிறார் என எடுத்துக் கொள்வோம், ஒரு டயனோரா டிவியையோ அல்லது ஒரு டெலிவிஜய் டிவியையோ அவரால் இந்திய சந்தையில் வாங்கிக் கொள்ள முடியும். எனினும் ஒரு சோனி டிவியையோ, ஃபிலிப்ஸ் டிவியையோ வாங்க விரும்பினார் ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் நண்பர் மூலமாகவோ அல்லது "பர்மா பஜாரில் தெரிஞ்ச கடையில"வாங்கும் நிலையிலேயே இருந்தோம். ஒரு டெலிவிஜய் டிவி சிங்கப்பூருக்கோ, துபாய்க்கோ ஏற்றுமதி செய்யப் பட்டு ஒரு சோனியுடனோ ஒரு ஃபிலிப்சுடனோ போட்டியிட்டு அச்சந்தையில் வெற்றி பெறும் திறன் கொண்டிலாது போனாலும், நம் நாட்டுச் சந்தையில் அது கண்டிப்பாக விற்றுப் போகும். ஏனெனில் மக்களிடம் "இருப்பதிலேயே நல்லதாக ஒன்று பார்த்து எடுத்துக் கொள்வதைத்" தவிர வேறு வழி இருக்க இல்லை. ஒரு பொருளை ஒருவர் வாங்க விரும்புகிறார் எனில், அப்பொருளை விற்கும் நான்கைந்து நிறுவனங்கள் அளிக்கும் விருப்பு பட்டியலுக்குள் அவருடைய விருப்பம் அமைதல் வேண்டும்.

இதே நிலையை ஒரு "வாங்குபவர்கள் சந்தையில்"(Buyer's market)இல் காண்போமாயின், நாம் கொடுக்கும் காசுக்குத் தரமான பொருளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம் கையில் இருக்கும்(சிங்கப்பூர்/துபாய் நண்பரையோ அல்லது பர்மா பஜாரையோ நம்பத் தேவையின்றி). ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க ஒருவர் விரும்புவார் எனில், 15-20 வெவ்வேறு நிறுவனங்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இருக்கும்(ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விலையில்(price bracket) தரும் வெவ்வேறு மாடல்களைத் தவிர்த்து). இதில் கொடுக்கும் காசுக்குத் தரமானது, உயர்வானது என எதை நாம் எண்ணுகிறோமோ அப்பொருளையே வாங்குவோம். இதன் விளைவாக நம் நாட்டுக்குள்ளேயே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் மடிந்து போகும் நிலையையும் காணலாம்/கண்டிருக்கிறோம்(கட்டுரையில் கூறப் பட்டிருப்பது போல "இது எல்லாம் சரிவர நடக்க, பல வலிகளைத் தாங்கிக் கொள்ள வேன்டியிருக்கும்.." ) கெல்ட்ரான்(Keltron) என்று ஒரு டிவி இருந்ததே, நெல்கோ(Nelco) என்று ஒரு டிவி இருந்ததே என்று யாராவது இன்று நினைக்கிறோமா? சோனியும், எல்ஜியும் நம் தேவைகளை, நம்மால் வாங்கக் கூடிய விலையில் பூர்த்தி செய்யும் போது "we really don't care".

சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டது(market liberalisation) உலகமயமாக்குதலுக்கு(globalisation) வழி வகுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவங்கள் நம் நாட்டுக்குள் வந்து வணிகம் புரியவும் நம் நாட்டு நிறுவனங்கள் வெளி நாட்டுச் சந்தைகளில் சென்று போட்டியிடவும் இது வழி வகுத்துள்ளது. "Survival of the fittest" என்ற டார்வினின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன/ இயங்கப் பழகி வருகின்றன. "If we don't take care of our customers some one else will" என்று அலுவலகங்களுக்குள்ளேயே எழுதி வைத்து அங்கு வேலை செய்யும் மக்களிடையே ஒரு "பயத்தை" உண்டாக்கி எப்போதும் மாறும் சூழலில் தம் நிறுவனம் தாக்குப் பிடிக்க ஏதுவான வழிவகைகளை நிறுவனங்கள் தமக்குத் தாமே வகுத்துக் கொள்கின்றன. "அந்த பயம்" இருக்கும் நிறுவனங்கள் நீடித்து நின்று வெற்றி பெறும், இல்லாதவை அழிந்து விடும்.

மேற்கூறிய "உலகமயமாக்கப் பட்ட சந்தை" எனும் சூழலில், சிவகுமார் அவர்கள் தம் கட்டுரையில் கூறியிருக்கும் பன்னாட்டு வர்த்தகத்தை வளர்க்கக் கூடிய காரணிகள் யாதென ஆய்வோம். இவற்றை ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் காண்போம்.

1. மூலதனமும் உடைமையும் : தொழில் நடத்தி தம்முடைய வருவாயைப் பெருக்கிக் கொள்ள நிறுவனங்கள் நம்புவது "core competence" எனும் மந்திரத்தை. நம்மால்(நிறுவனத்தால்) எந்த வேலையை நன்றாக செய்ய முடியுமோ, எவ்வேலையில் நம்முடைய ஊழியர்களின் திறன் அனைத்தும் அடங்கியுள்ளதோ(கட்டுரையில் கூறப் பட்டுள்ளது போல "ஒரே வேலையைக் கற்றுத் தேர்ந்து கொள்வது") அதில் மட்டுமே நாம் நேரடியாக ஈடுபடுவது. நம் தொழிலுக்குத் தேவையான, அதே சமயத்தில் நம்முடைய 'core competence'க்குள் அடக்கமாகாத வேலைகளை, அவ்வேலையில் யார் திறமையானவர்களோ அவர்களிடத்து விட்டு விடுவது. இதையே 'outsourcing' என்கிறோம். உதாரணமாக, நான் ஒரு மகிழ்வுந்து(car) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறேன் எனில், என்னுடைய கார்களில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத்(troubleshooting information) தெரிவிக்கவும், குறைகளைப் பதிந்து வைத்துக் கொள்ளவும்(complaint registration) ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கி நடத்த விரும்ப மாட்டேன். ஏன் எனில் என்னுடைய(என்னுடைய என்றால் என் நிறுவனத்தின், அதில் பணிபுரியும் ஊழியர்களின்) வேலை "மகிழ்வுந்து தயாரிப்பது" அன்றியே "தகவல் சொல்வதும் குறைதீர்ப்பும்" அன்று. என்னுடைய அனைத்து ஊழியர்களின் திறனும் மகிழ்வுந்து தயாரிப்பதிலேயே இருக்கும். அத்தகையவர்களை மட்டுமே நான் பணியில் அமர்த்திக் கொள்வேன். ஆனாலும் என் வண்டிகளில் ஏற்படும் குறைகளைக் குறித்த தகவல் பரிமாற்ற வசதி நான் தர முன்வர மாட்டேன் ஆயின், மக்கள் என் மகிழ்வுந்துகளை வாங்க மாட்டார்கள். இதை எதிர்கொள்ள "குறை தீர்ப்பு" என்னும் வேலையில் திறன் உள்ளவர்களிடத்து அப்பொறுப்பை நான் ஒப்படைத்து விடுவேன். அதற்கு அவர்களுக்கு இன்ன வேலைக்கு இன்ன விலை என்று நிர்ணயித்து என் தேவையை நான் நிறைவேற்றிக் கொள்வேன். இவ்வாறு மகிழ்வுந்து தயாரிக்கும் என் பணியிலும் நான் என் கவனத்தைச் செலுத்த முடியும், அத்துடன் குறை தீர்ப்பதற்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் என் முதலீட்டை(investment) இடுவதினின்றும், குறை தீர்ப்பு பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை என்னுடைய உடைமையாக்கிக் கொண்டு, அதையும் பராமரிக்கும் தொல்லைகளினின்றும் விடுவிக்கப் படுவேன்.

2. மனித வளம் : மனித வளம்(Human capital) இதை நிறுவனங்கள் ஒரு மூலதனமாகக் கருதுகின்றன. தன் தொழிலை நடத்திட உதவி புரிய திறமையுள்ளவர்களுக்குத் தகுந்த சம்பளம் கொடுக்கவும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்தவொரு முன்னேற்றப் பாதையில் இருக்கும் நிறுவனமும் முயற்சிகள் எடுக்கத் தவறாது. Dr.Reddy' Laboratories மற்றும் Ranbaxy என்னும் இந்தியாவைச் சேர்ந்த "பன்னாட்டு நிறுவனங்கள்" ஃபார்மா துறையில் உலக அளவில் Pfizer போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, வருவாயையும் ஈட்டி இலாபகரமாக இயங்க முடிகிறது என்றால் அதற்கு அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்களே என்றால் அது மிகையாகாது. மனித வளத்தில் ஒரு நிறுவனம் செய்யும் முறையான முதலீட்டின் வாயிலாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான மற்ற முதலீடுகளைக் குறைத்து உலகச் சந்தையில் தங்களுடைய "போட்டியிடும் திறனை" பெருக்கிக் கொள்ளலாம்.

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் "No.1 in Employee Satisfaction as per xxxx Survey" என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம். இதை வெளியுலகத்திற்குப் பறைசாற்ற காரணம் என்ன? திறமை கொண்ட மனித சக்தியைத் தம் பால் ஈர்க்கவே அல்லால் வேறில்லை.

3. பிற்காலப் பலனுக்கான மூலதனம் : குளிர்பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களான கோக்குக்கும், பெப்சிக்கும் தற்சமயம் எதிர்ப்பு கிளம்பியதற்கான காரணங்கள் என்ன? "எம் நாட்டில் வந்து நீ குளிர் பானங்களை விற்கிறாய், எம் நாட்டு வளங்களை உபயோகித்து கொள்கிறாய், கோடி கோடியாக வருவாய் ஈட்டிக் கொள்கிறாய். ஆயினும் எம் மக்களின் நலனின் பொருட்டு உனக்கு சிறிதளவும் அக்கறை இல்லாத பேரினாலேயே நீ பூச்சுக் கொல்லி மருந்துகள் குளிர்பானத்தில் கலந்திருப்பதற்கு பாராமுகம் காட்டுகிறாய், எம் நாட்டு நதிகளிலும் நிலத்திலும் கழிவுநீரைச் செலுத்தி மாசுபடுத்த அஞ்ச நீ தயங்குவதில்லை, உனக்கு தேவையான பணம் கிடைக்கும் வரை நீ இச்சமூகத்தைக் குறித்து எவ்வித அக்கறையும் காட்டப் போவதில்லை" என்ற எண்ணம் சமூக ஆர்வலர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் தோன்றியதினால் தானே?

ஒரு நிறுவனம் தான் செய்யும் தொழிலின் வாயிலாக, தான் இயங்கும் சமூகத்துக்கு பிற்காலத்தில் நன்மை ஏற்படுத்தக் கூடியச் செயல்பாடுகளிலும் ஈடுபாடு வேண்டும். இதையே 'Corporate Social Responsibility' என்கின்றோம். பன்னாட்டு வணிகம் புரியும் ஒரு தொழிற் நிறுவனம், சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் சமூகத்தைக் குறித்த இவ்வக்கறை இருத்தல் அவசியமே. 1980களின் இறுதியில் டாட்டா ஸ்டீல் நிறுவத்தினர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஒரு விளம்பரம் நினைவுக்கு வருகிறது. தாங்கள் செய்யும் நாட்டு நலப்பணித் திட்டங்களை விளக்கிய டாட்டாவினுடைய அவ்விளம்பரப் படம், சமூகத்திற்கு நாங்கள் செய்யும் பணிகள் எங்களுக்கு மிக முக்கியமானவை மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான் என்னும் பொருள்படும் விதத்தில் "We also make steel" என்னும் tagline உடன் வெளியிடப் பட்டது.

இத்துடன் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கவும் பெருக்கவும் ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், இன்னும் சில காரணிகள் இருக்கக் கூடும் என்பது என் எண்ணம். நான் இட்டுள்ள இப்பின்னூட்டம் சிவகுமார் அவர்கள் எழுதியுள்ள 'பன்னாட்டு வர்த்தகம்' குறித்த கட்டுரையைக் குறித்து என்னுடைய புரிதலை விளக்கவே. சிவஞானம்ஜி ஐயாவும், சிவகுமார் அவர்களும், துளசி அக்காவும் இதை குறித்து தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள் எனில் மகிழ்வேன்.

மேலும் அருமையான சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பின்னூட்டங்களுக்குப் பரிசு என்று நண்பர், அறிவித்திருப்பதை அறிந்து தேனினை நோக்கி ஓடி வரும் வண்டு/நரி/மந்தி/கரடி போல இங்கு வந்தேன் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
:))

8 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

பரிசு பெற்ற கைப்புள்ளைக்கு வாழ்த்துகள். கைப்புள்ள என்ற பெயரில் எழுதுபவரை இப்படியெல்லாமும் நல்லதாக எழுத வைக்க முடியும் என்று நிரூபித்து அவரின் திறமைகளை வெளிக் கொணர்ந்த மா சிவக்குமாருக்கும் வாழ்த்துகள்.

ரொம்ப நன்றி சிவக்குமார்.
அன்புடன்,
சீமாச்சு...

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

கைப்புள்ளைக்கும் போட்டியில் பங்கேற்ற ஏனையோர்க்கும்
வாழ்த்துகள்!
தொடர்வோம்.........

துளசி கோபால் சொன்னது…

போட்டிக்கு பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

இப்படி ஒரு நல்ல வாய்ப்பை ( டீச்சர் போஸ்ட் உறுதியாயாச்சு) எனக்களித்த சிவகுமாருக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்,
துளசி.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சீமாச்சு,

கைப்புள்ளயின் எழுத்துக்கள் நகைச்சுவையிலும் ஆழமானவை. சீர்திருத்தக் கருத்துக்களையும் ஒரு இம்சை அரசன் பாணியில் சொன்னால்தானே பரவலாகப் போய் சேர்கிறது. அந்த வகையில் கைப்புள்ளயின் பங்களிப்பு விலை மதிக்க முடியாதது.

அன்புடன்,

மா சிவகுமார்

கைப்புள்ள சொன்னது…

//சீர்திருத்தக் கருத்துக்களையும் ஒரு இம்சை அரசன் பாணியில் சொன்னால்தானே பரவலாகப் போய் சேர்கிறது. அந்த வகையில் கைப்புள்ளயின் பங்களிப்பு விலை மதிக்க முடியாதது.//

ஐயா...போதுங்க. இந்த அளவுக்கெல்லாம் பாராட்டுனீங்கன்னா அப்புறம் நான் அளுதுருவேன்...ஆமா!
:)

என் பின்னூட்டத்தைப் பரிசுக்குரியதாய் தெரிந்தெடுத்தமைக்கும், வாழ்த்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

பரிசிக்குறிய பின்னூட்டம் தான் என்பதில் ஐயமில்லை மிக நன்றாக எழுதியுள்ளார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//சீர்திருத்தக் கருத்துக்களையும் ஒரு இம்சை அரசன் பாணியில் சொன்னால்தானே பரவலாகப் போய் சேர்கிறது. அந்த வகையில் கைப்புள்ளயின் பங்களிப்பு விலை மதிக்க முடியாதது.//

உண்மையில், இந்தப் பின்னூட்டம் முழுமையும் படித்து முடித்தவுடன் எனக்கும் இதே தான் தோன்றியது!!

கங்கிராட்ஸ் கைப்பு!!!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி, துளசி அக்கா, குமரன் எண்ணம், பொன்ஸ்.

அன்புடன்,

மா சிவகுமார்