சீனாவுக்குப் போனதும் யாரையும் பீடிக்கக் கூடிய ஒரு வியாதி உடனடி படிப்பறிவின்மை. அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள், தெருப்பெயர்கள் எங்கு பார்த்தாலும் சீன மொழி எழுத்துக்கள்தான் வரவேற்கும்.
மொழி கற்றுக் கொள்ளா விட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். வேலை எப்படி பார்ப்பது?
ஆறு மாத கல்லூரி வகுப்பில் சேர்ந்து மொழி அறிவைத் தேத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தால், எங்கள் நிறுவனத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். ஓய்வு நேரத்தில் கற்றுக் கொண்டால் போதும்.
கூட வேலை பார்த்த சீன நண்பர் யாராவது வார இறுதிகளில் வந்து கற்றுத் தர ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஒரு நாள், 'நம்ம அலுவலகத்தை பெருக்கி தூய்மை செய்ய வரும் அம்மாவின் மகள் உனக்கு சீன மொழி கற்றுத் தருவாளாம்' என்று சொல்ல வேடிக்கையாக இருந்தது.
வாரா வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளைகளில் 2 மணி நேரம் வகுப்பு. முதல் முதலில் சந்தித்த போது உருண்டை முகம், ச்சின்னக் கண்கள், உப்பிய கன்னங்கள், ஒல்லியான உருவம் என்று குழந்தைப் பொம்மை போல இருந்த அந்தப் பெண்ணா நமக்கு ஆசிரியர் என்று வியப்பாக இருந்தது.
சாங்காய் நார்மல் பல்கலைக் கழகம் என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாங் ஷிங் என்று பெயர். வாங் என்பது குடும்பப் பெயர் ஷிங் என்பது கூப்பிடும் பெயர். இது போதாது என்று சீனாவின் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்றையும் சூட்டி விடுகிறார்கள்.
'நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் பேர் கொடுத்தார்' எலன் என்ற பெயர். வெளி நாட்டினருக்கு வசதியாக அந்தப் பெயராம். சீனாவின் உலகமயமாக்கலுக்கு மக்களைத் தயார் செய்யும் போக்கு. நம்ம ஊரிலாவது கால் சென்டரில் வேலை செய்யப் போகிறவர்களுக்கு மட்டும்தான் மேல் நாட்டுப் பெயர். இங்கு எல்லா குழந்தைகளுக்குமா!
எனக்கு அத்தகைய ஆங்கிலப் பெயர்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். யாரையுமே அவர்களது சீனப் பெயராலேயே கூப்பிடுவது என்று உறுதி செய்து கொண்டேன்.
வார நாட்களுக்கு அலுவலகம் வருவது போல சனி, ஞாயிறிலும் காலையில் எழுந்து குளித்து, தரையடி ரயில் பிடித்து 9 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன். 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுவேன்.
'நாங்கெல்லாம் சாங்காய்னீஸ்' என்று பெருமை. 'சீனாவில் 95% ஹான் இனத்தவர்' என்று பாடத்தில் வரும் போது 'நானும் ஹான் இனம்தான்' என்று பெருமை.
1997ல் நான் அங்கு போய்ச் சேர்ந்திருந்த போதுதான் ஆங்காங் சீன ஆட்சியின் கீழ் வரும் நாள் வந்தது. அதற்கான கொண்டாட்டமாக சாங்காயின் மக்கள் மைதானத்தில் பெருங்கூட்டம் கூடியதாம். அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது, 'கூட்டத்துக்குப் பிறகு திரட்டிய குப்பையின் அளவு 30 டன்னாம். நாங்கல்லாம் வெட்கப்படணும்.' என்று கண்களை உருட்டிக் கொண்டு சொல்கிறார்.
சில மாதங்கள் வகுப்புக்குப் பிறகு ஒரு நாள், 'எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று ஆசிரியையும் அவர் அம்மாவும் சொன்னார்கள். 'சரி, போகலாமே' என்று தயார் செய்து கொண்டோம். அலுவலகம் இருக்கும் 20 மாடிக் கட்டிடப் பகுதிக்கு அருகில்தான், ஷான்ஷி தெற்கு தெருவில்தான் வீடு.
வாய்ஹாய் சாலை என்ற பணம் புரளும் சாலையை வெட்டிச் செல்லும் தெரு ஷான்ஷி தெற்குத் தெரு.
(தொடரலாம்)