சனி, பிப்ரவரி 02, 2019

கார்ப்பரேட் சாதி இந்துத்துவ அரசியலின் மூக்கில் குத்திய ஓவியர் முகிலனுக்கு பாராட்டு

பிப்ரவரி 1-ம் தேதி மாலை ஓவியர் முகிலனை பாராட்டி பெரியார் விடுதலை கழகம் சார்பாக ஒரு கூட்டம் நடத்தினார்கள். மயிலாப்பூர், சிட்டி சென்டருக்கு பின்புறம் பெரியார் பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. வெளியில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

சிறியதாக இருந்த அந்த அலுவலகத்துக்குள் நிறைய பேர் கூடி விட்டார்கள்.

திராவிடர் விடுதலை கழகம் என்பது பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தின் வாரிசு. திராவிடர் கழகத்திலிருந்து பெரியார் திராவிடர் கழகம் என்று பிரிந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பின்னர் அதுவும் இரண்டாக பிரிந்து திராவிடர் விடுதலை கழகம் என்ற இந்த அமைப்பு உருவானது. இதில் முக்கியமாக கொளத்தூர் மணி என்பவர் தலைவராகவும், விடுதலை ராஜேந்திரன் என்பவர் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்கள்.

ஓவியர் முகிலன் கார்ப்பரேட் அரசியலையும், இந்துத்துவ சாதி அரசியலையும் எதிர்த்து ஓவியங்கள் வரைபவர். கடந்த 15 ஆண்டுகளாக தாமிரபரணி தண்ணீரை கோக்கோ கோலாவுக்கு கொடுப்பதை எதிர்த்து, மகாராஷ்டிராவில் உள்ள கயர்லாஞ்சி என்ற ஊரில் சுரேகா அவரது மகள் பிரியங்கா இருவரும் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டது பற்றி, கந்தமாலில் சாதிக் கொடுமையை தாங்க முடியாமல் மதம் மாறிய பழங்குடி மக்களின் கிராமத்தையே மதவெறியர்கள் கொளுத்தியது ஆகிய பல பிரச்சனைகள் பற்றி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை ஒட்டி அந்தந்த காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் 34-ஐ சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த ஒரு நாட்டுப்புறக் கலைக்கான திருவிழாவில் காட்சிக்கு வைத்திருக்கிறார். அதில் நமது நாட்டு மக்கள் மீது அன்னிய கார்ப்பரேட்டுகளின் தாக்குதலை ஆதிக்கத்தை பாரத மாதாவின் மீது 'பாலியல்' சீண்டல்கள் பாய்வது போல வரைந்திருந்த ஓவியம் பா.ஜ.கவின் எச்.ராஜாவின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது. 'நாட்டை பாரதமாதா என்று சித்தரிக்கும் நீங்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் யார் வேண்டுமானாலும் நமது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு திறந்து விட்டிருப்பது நீங்களே சொல்லிக் கொள்ளும் பாரதமாதாவை பாலியல் ரீதியாக தாக்குவதை அனுமதிப்பது' என்று உருவகித்திருக்கிறார். அதை சமீபத்தில் பெருமளவு சர்ச்சைக்குள்ளான பெண்களை பாலியல் ரீதியில் சீண்டும் பெரிய மனிதர்கள் பற்றிய #MeToo என்பதுடன் இணைத்திருந்தார்.

இன்னொரு பிரச்சனைக்கு உள்ளான ஓவியம், நந்தினி என்ற தலித் பெண் மணிகண்டன் என்ற இந்து முன்னணி பிரமுகரால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு இந்து முன்னணி கும்பல் நந்தினியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை பிறப்புறுப்பு வழியாக குத்தி வெளியில் எடுத்து, அந்தப் பெண்ணை வெட்டி கிணற்றில் வீசி எறிந்த கொடூரத்தை பற்றியது. அதில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஈட்டி தாக்குவதாக வரையப்பட்டிருந்தது. ஈட்டி என்பது இந்துத்துவ கும்பல் குஜராத்தில் 3,000 இசுலாமியர்களை படுகொலை செய்த போது கையில் ஏந்தியிருந்த ஆயுதம். நமது கிராமங்களில் அய்யனார் சிலை முன்பு நிற்கும் அப்பாவி ஈட்டி இல்லை அது இந்துத்துவ கும்பல் கையில் கொலைகார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அதை காட்சிப்படுத்தும் வகையில் வரைந்த ஓவியத்தை "பெண்களை இழிவுபடுத்தி விட்டார், ஈட்டியை இழிவுபடுத்தி விட்டார்" என்று பழிக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே ஓவியங்களை சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் வாங்கிச் சென்று காட்சி நடத்தியிருந்தார்கள். அப்போது எதுவும் பிரச்சனை செய்யாத பா.ஜ.கவினர் இப்போது லயோலா கல்லூரியில் நடப்பதால் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். லயோலா கல்லூரியை குறி வைக்கின்றனர்.

முகிலனுக்கு நிறைய நிதி வருவதாக பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில், அவரது ஓவியங்கள் 20 ரூபாய் அட்டைகளில் வரையப்படுபவைதான். ஆனால், அவை சொல்லும் அரசியல், சொல்லும் வடிவம், அதன் கலை உணர்ச்சி அவர்களுக்கு பீதியை உருவாக்குகிறது. முகிலன் மீது போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் எச்.ராஜா. அதைத் தொடர்ந்து முற்போக்கு ஜனநாயக சக்திகள் முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தன.

இதை ஒட்டித்தான் திராவிடர் விடுதலை கழகம் முகிலனுக்கு பாராட்டு விழா நடத்தியது. முதலில் மனிதி இயக்கத்தைச் சேர்ந்த செல்வி பேசினார்.

தொடர்ந்து பேசிய விடுதலை ராஜேந்திரன் பெரியார் இயக்கமும் பார்ப்பன எதிர்ப்பும்தான் தமிழக அரசியல். அன்று வர்க்கம் பேசியவர்கள் எல்லாம் இன்று பார்ப்பனீயம் பற்றி, பிள்ளையார் பற்றி, ராமர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, பெரியார் செய்தது போன்ற வேத, புராண புரட்டுக்களை அம்பலப்படுத்தி மக்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கும் பிரச்சாரத்தை நாம் கைவிட்டிருக்கிறோம். அதை மீண்டும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்று திராவிடர் கழக அரசியலை பேசினார்.

அடுத்து முகிலன் சிறப்பாக பேசினார். மேலே சொன்ன விபரங்களை சொல்லி விட்டு தனது "ஓவியத்துக்குப் பின் இருக்கும் அரசியல் கார்ப்பரேட் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல். அதன் மீதான எதிர்ப்பு ஒரு கலைஞனாக என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுகிறது. அது கோபமாக இருக்கிறது, வன்முறையாக இருக்கிறது, மனதை புண்படுத்துவதாக இருக்கிறது என்றால் உண்மைதான். ஏனென்றால் அந்த கார்ப்பரேட் இந்துத்துவ அடக்குமுறைகள் கோபமாக உள்ளன, வன்முறையாக உள்ளன, மனதை புண்படுத்துவதாக உள்ளன. அதை எதிர்த்த எனது கலை வடிவிலான போராட்டத்தை நான் தொடர்ந்து செய்வேன்" என்றார். "உதாரணமாக, நம் நாட்டின் ஒவ்வொரு முக்கிய ஆறுகளிலிருந்தும் கோக், பெப்சி என்று பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் உறிஞ்சுகின்றன. குஜராத்தில் கொல்லப்பட்ட 3,000 இசுலாமியர்களின் பிணங்கள்தான் மோடியின் முகம், இதை நான் எங்கு வேண்டுமானாலும்" சொல்வேன் என்று பேசினார்.

கூட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அரசியல் முன்னணியாளர்கள் வந்திருந்தார்கள். முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்கள்.

ஜோடியாக கைகோர்த்து நிற்கும் கார்ப்பரேட் - சாதி இந்துத்துவ அரசியலை ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்த்து நிற்க வேண்டிய காலம் இது. இதை எதிர்க்காவிட்டால் நம் நாட்டு தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டு விடும். 'நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அடங்கி இருந்தால் மூன்று வேளை சோறு பிச்சையாக போடுகிறோம். தின்று விட்டு கம்மென்று இருக்க வேண்டும். எதிர்த்து கேட்டால், கருத்து சொன்னால் அடிதான், உதைதான்' என்று உழைக்காமல் கொழுக்கும் சாதியினரும், கார்ப்பரேட் முதலாளிகளும் சொல்வார்கள். அவர்கள் போடும் கோட்டுக்குள் நாம் வாய் பொத்தி, கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

சனி, ஜூலை 07, 2012

காலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம்

ஜெயந்த் வி நார்லிகர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 


கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அடிப்படைத் துகள்கள் பற்றிய இயற்பியல் ஹிக்ஸ் போஸான் என்ற துகளையே வலம் வந்து கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இந்த துகளை "கடவுள் துகள்" என்று செல்லமாக அழைக்கின்றன. உயர் ஆற்றல் துகள்களைப் பயன்படுத்தி பரிசோதனைகள் நடத்துவதற்கு உலகிலேயே தலை சிறந்த சோதனைக் கூடம் ஜெனீவாவில் அமைந்துள்ள செர்ன் (அணுக்கரு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய நிறுவனம்)ஆகும். ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உயர் ஆற்றல் துகள்களின் மோதல்களை விடாமல் நடத்திக் கொண்டிருந்தது செர்ன்.

அதிக ஆற்றலுடன் அடிப்படைத் துகள்களை மோத விடும் போது அவை உடைந்து புதிய துகள்களாக உருமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக புதிய துகள்களையும் புதிய இடைவினைகளையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இந்த வழியில் ஹிக்ஸ் போஸானின் இருப்பை கண்டுபிடிக்க முயற்சித்து வந்தனர். இப்போது இந்த மோதல்களின் பின் விளைவுகளில் ஹிக்ஸ் போஸான் பங்கெடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாக தெரிகிறது. அந்த பரிசோதனையைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஹிக்ஸ் போஸானின் இருப்பை நிரூபிக்க விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு தவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும், அதற்கு "கடவுள் துகள்" என்ற படோடபமான பெயர் ஏன் வழங்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம்.

இயற்கையின் மர்மங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் இயற்பியலாளர்கள், இயற்கையைப் பற்றிய விதிகளின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள் என்று வரலாறு காட்டுகிறது. ஆரம்பத்தில் பல தரப்பட்ட விதிகள் பல இருந்திருக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் போய்ச் சேர விரும்பும் ஆதர்ச சூழலில் பரந்த பயன்பாடு உடைய குறைந்த எண்ணிக்கையிலான விதிகளே இருக்கும். எடுத்துக்காட்டாக, மின்ஈர்ப்பு பற்றிய கூலும் விதியை எடுத்துக் கொள்வோம், அது மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது அல்லது விலக்குவதைப் பற்றி பேசுகிறது. காந்த ஈர்ப்பு மற்றும் விலக்கத்தை பற்றி இதே போன்ற ஒரு விதி உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது வெவ்வேறாக தெரியும் இந்த விதிகளை ஒரே குடைக்குள் கொண்டு வந்தது ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்லின் மின்காந்தப் புலம் என்ற கோட்பாடு. அது நடந்தது 1865ல். ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மின்காந்த விசையும் இயற்கையின் இன்னொரு விசையான "மெல்லிய விசை"யும் ஒன்றுபடுதல் நடந்தது. மின்-மெல்லிய விசை என்று அழைக்கப்படுவது இயற்பியலாளர்கள் அப்துஸ் சலாம் மற்றும் ஸ்டீவன் வைன்பெர்க் ஆகியோரின் பரிசோதனைகளின் முடிவு ஆகும்.

முன்னேற்றத்துக்கான அடுத்த கட்டம் வலுவான விசையை இதே ஒன்றுபடுத்தல் கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியுமா என்பதை நோக்கி பயணிக்கிறது. ஒன்றுபடுத்தலுக்கான இந்த பயணத்தின் இறுதிக் கட்டத்தில்தான் முதலில் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு விசையை மற்ற விசைகளுடன் ஒன்று சேர்க்கும் முயற்சி சாத்தியமாகும் என்பதுதான் வேடிக்கை. ஆப்பிள் விழுவதிலிருந்து தூண்டப்பட்டதாக சொல்லப்படும் நியூட்டனின் கண்டுபிடிப்புதான் ஈர்ப்பு விசை.

ஒன்றுபடுத்தல் பாதையில் பயணிக்கும் விஞ்ஞானிக்கு வழி காட்ட ஒரு குத்து மதிப்பான வழிகாட்டல் இருக்கிறது. பொருட்களை மேலும் மேலும் சிறிய அளவில் பரிசோதனை செய்து கொண்டே அணு மற்றும் மூலக்கூறு வடிவம் வரை வேதியியலாளர் போவது போல, இயற்பியலாளர் இன்னும் சிறிய அளவில் அணுவுக்குள்ளும் உட்கருக்குள்ளும் இருக்கும் துகள்களை நோக்கி தனது ஆய்வை நகர்த்துகிறார். மேலும் மேலும் சிறிய அளவில் ஆய்வுகள் நடத்த பயன்படுத்தப்படும் துகள்களுக்கு மேலும் மேலும் அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. மின்சாரத்தை காந்தவியலுடன் ஒருங்கிணைப்பதற்கு உயர் ஆற்றல் துகள்கள் தேவைப்படவில்லை. ஆனால் அடுத்த கட்டத்துக்கு அவை தேவைப்பட்டன. மின்-மெல்லிய விசையை உறுதிப்படுத்துவதற்கு புரோட்டானை விட நூறு மடங்கு அதிக ஆற்றலில் துகள் மோதல்கள் நடத்த வேண்டியிருந்தது. புரோட்டான் அணுவின் உட்கருவில் இருக்கும் துகள்களில் முக்கியமான ஒன்றாகும்.

பருப்பொருளின் அடிப்படை இயல்புகளை புரிந்து கொள்ளும் திசையை நோக்கி ஒருவர் பணியாற்றும் போது எதிர் கொள்ளும் கேள்வி: "ஒரு துகள் எங்கிருந்து எப்படி நிறை என்ற பண்பை பெறுகிறது?" நவீன இயற்பியலின் தொடக்கமான இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்று விதிகளிலிருந்து இயற்பியலின் வளர்ச்சியை பார்க்கும் போது இந்தக் கேள்வி நீண்ட காலம் பதில் சொல்லப்படாமல் இருப்பது என்ற சாதனையை கொண்டது என்று உணரலாம். உலகத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் சடத்துவம் என்ற பண்பு இருக்கிறது என்கின்றன நியூட்டனின் விதிகள். ஓய்வு நிலையில் இருக்கும் பருப்பொருளை நாம் நகர்த்த முயற்சித்தால் அதன் மீது விசையை செலுத்த வேண்டும். அதே அளவுடைய பீரங்கி குண்டை விட ஒரு கால் பந்தை நகர்த்துவது எளிதாக இருக்கிறது. சடத்துவம் எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு இல்லை என்று இந்த வேறுபாடுகள் காட்டுகின்றன. சடத்துவத்தின் அளவை நிறை என்று நியூட்டனின் விதிகள் சொல்கின்றன. ஆனால், நிறை எப்படி உருவாகிறது என்றோ, பொருளின் நிறையை எது தீர்மானிக்கிறது என்பதோ நமக்கு இன்னும் தெரியாது.

அணுத் துகள்களுக்கான நவீன கோட்பாட்டில் இந்த கேள்வி விடையளிக்கப்படாமல் இருக்கிறது. எனினும், 1960 களின் ஆரம்பத்தில் பீட்டர் ஹிக்ஸ் முன்மொழிந்த கருத்துக்களின் படி ஹிக்ஸ் துகள் என்று பின்னர் அழைக்கப்பட்ட துகள்தான் மற்ற துகள்களுக்கு நிறையை அளிப்பதற்கு பொறுப்பானது. அடிப்படைத் துகள்கள் பற்றிய எந்த ஒரு நவீன கோட்பாட்டுக்கும் தொடக்கப் புள்ளியாக கருதப்படும் செந்தர மாதிரி ஹிக்ஸ் துகள் இருக்க வேண்டும் என்பதை வேண்டுவதோடு அதன் நிறையும் அடிப்படை பண்புகளும் குறிப்பிட்ட அளவு மதிப்புகளுக்குள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அடிப்படை துகள்கள் இந்திய இயற்பியலாளர் சத்யேன் போஸால் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா அல்லது இத்தாலிய இயற்பியலாளர் என்ரிகோ பெர்மியால் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா என்பதைப் பொறுத்து போஸான்கள் அல்லது பெர்மியான்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் என்பதால் அது ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அதன் அடிப்படைத் தன்மையின் காரணமாக நோபல் பரிசு பெற்ற நியோன் லேடர்மேன் சூட்டிய "கடவுள் துகள்" என்ற பெயரை பெற்றது. தேவையில்லாமல் கடவுளை உள்ளே நுழைக்கும் இந்த பெயரை பல விஞ்ஞானிகள் விரும்புவதில்லை.

எதிர்பார்த்த நிறையுடைய ஹிக்ஸ் போஸானை கண்டு பிடிப்பது துகள் இயற்பியலின் செந்தர மாதிரியை இன்னும் அதிக வலுவாக்கும். அது கண்டுபிடிக்கப்படா விட்டாலோ, அல்லது வேறுபட்ட நிறையில் காணப்பட்டாலோ, நவீன துகள் இயற்பியலின் பல கருத்துக்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும். அண்டத்தின் தொடக்கங்களை ஆய்வு செய்யும் அண்டவியலாளர்களும் இந்த பரிசோதனைகளை கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பருப்பொருள் எப்படி உருவானது, பிக்பேங்கில் அண்டம் உருவான பிறகு எப்படி பரப்பப்பட்டது என்பது குறித்த முக்கியமான பல கேள்விகளின் பட்டியல் அவர்களிடம் இருக்கிறது.

ஜூலை 4, 2012 அன்று செர்ன் அறிவித்த கண்டுபிடிப்பை இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும். அவதானிக்கப்பட்ட மோதல் நிகழ்வுகளின் ஆய்வு போஸான் போல நடந்து கொள்ளும் புரோட்டான் அல்லது நியூட்ரானை விட கணிசமான அதிக நிறையுடைய ஒரு துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டுகின்றன. அதன் பண்புகள் எதிர்பார்க்கப்படும் ஹிக்ஸ் போஸான் பண்புகளை அது ஒத்திருக்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் முனைந்து வலியுறுத்துவைப் போல அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஹிக்ஸ் போஸான் அதுதான் என்று இப்போதே முடிவு செய்ய முடியாது. அந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு பொறுமையும் இன்னும் பல பரிசோதனைகளும் தேவை.

இதைப் பற்றி ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம் : கடற்கரையில் உங்களுக்கு தெரிந்த ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அவரது தடங்களோடு ஒத்து போகும் சில காலடி தடங்களை பார்க்கிறீர்கள், உங்கள் நண்பரின் நிழலை போன்ற நிழல் தெரிந்ததாக கேள்விப்படுகிறீர்கள். இவற்றின் மூலம் அவர் கடற்கரையில்தான் எங்கோ இருக்கிறார் என்று உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் அவரை நீங்கள் இன்னும் நேரில் பார்க்கவில்லை.

ஹிக்ஸ் போஸான் இப்போது தோன்றி மறையும் நிழலாகத்தான் காணப்பட்டிருக்கிறது. 

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

இணைய இதழ்களும் இளைய சமுதாயமும்


இணைய இதழ்களும் இளைய தலைமுறையும் என்ற தலைப்பின் நோக்கம் இணைய இதழ்கள் இளைய தலைமுறையினரை எப்படி கவர்ந்திருக்கின்றன என்று பார்ப்பதுதான். அவர்கள்தான் எதிர்கால வாசகர்களாக மாறப் போகிறார்கள். அதனால் அது தொடர்பான போக்குகளை தெரிந்து வைத்திருப்பது ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தகவல் பரிமாற்றத்துக்கான இந்த தொழில்நுட்ப மாற்றம் அடிப்படையானதா அல்லது கடந்து போகும் மேகமாக கலைந்து போய் விடுமா என்ற கேள்வி. இந்த மாற்றம் இனி வரும் ஆண்டுகளில் நிலை பெற்று உலக மக்களின் படிக்கும், தகவல் பெறும் முறைகளில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் என்பதுதான். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது?

நவீன அச்சு தொழில் நுட்பம் 1436ல் கூட்டன்பெர்கால் கண்டுபிடிக்கப்பட்டு 1456ல் கூட்டன்பெர்க் பைபிள் வெளியிடப்பட்டது. ரோட்டரி பிரின்டிங் பிரஸ் 1843ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடகங்களை குறிப்பிடும் சொல்லான பிரஸ் என்பது பிரின்டிங் பிரஸ் என்ற ஆங்கில சொல்லிலிருந்து வந்தது.

புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 15ம் நூற்றாண்டில் அதை பயன்படுத்துவது எவ்வளவு குழப்பமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதை விளக்க ஒரு காணொளியை பார்க்கலாம்.




அச்சிட்ட புத்தகங்கள், இதழ்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக நமக்கு பயன்பட்டு வருகின்றன. படைப்பாளர், பதிப்பாளர், அச்சு நுட்பத் துறையாளர், வினியோகிப்பு சங்கிலி, வாசகர் என்று நீண்ட காலமாக பழகிப் போன முறை ஒன்று நம்மிடையே இருக்கிறது. அதன் மொழி, அதன் முறைகள் நமக்கு பழகி போயிருக்கின்றன. அந்த பழக்கத்திலிருந்து நாம் சீக்கிரம் மாறி விட முடியுமா? புத்தகங்களும் அச்சு இதழ்களும் முழுக்க முழுக்க இணைய இதழ்களால் இல்லாமல் செய்யப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது?

'என்ன இருந்தாலும் புத்தகம் போல வருமா? கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, தாளின் மணத்தை முகர்ந்து கொண்டு படிப்பது போல வருமா? புத்தகத்தை படித்துக் கொண்டு படிக்கலாம், டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், பூங்காவில் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், படித்த இடத்தைக் குறிக்க விளிம்பை மடக்கிக் கொள்ளலாம், அடிக் கோடிடலாம், குறிப்புகளை எழுதி கொள்ளலாம். இதெல்லாம் கணினியில் அல்லது மின்னணு கருவிகளில் முடியுமா' என்று வாசகர்களாக நமக்குள் கேள்வி எழுகிறது.

முதல் விஷயம் தாளின் வாசனை தரும் கவர்ச்சி. புத்தக வாசனை என்பது புத்தகத்தில் இருக்கும் தகவல், படைப்புடன் இணைத்துதான் நமக்கு கிளர்ச்சியை தருகிறது. அதை ஒதுக்கி விடலாம். மற்ற விஷயங்கள் அனைத்துமே சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட e-book படிப்பான்களில் தீர்வு காணப்பட்டு விட்டது. அவற்றில் e-இங்க் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணை உறுத்தாமல், காகித எழுத்துக்களை படிப்பது போலவே படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் கிண்டில் சாதனத்தின் 2007ம் ஆண்டு பதிப்பு பற்றிய ஒரு காணொளியை பார்க்கலாம்.



நாம் பார்த்தது போல இந்த கருவியில் படிக்கும் போது புத்தகங்களின் வலது பக்க மேல் முனையை மடித்துக் கொள்ளலாம், குறிப்பு எடுத்துக் கொள்ளலாம், தெரியாத விபரங்களை தேடி பார்த்துக் கொள்ளலாம். இதன் எடை சுமார் 170-300 கிராம் மட்டுமே, அதாவது சாதாரண ஒரு பேப்பர் பேக் நாவலின் அளவுதான். அதனால் இதை சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், படுத்துக் கொண்டு ஒற்றை கையால் பிடித்து பயன்படுத்தலாம்.

அமேசான் கிண்டில் அடிப்படை வடிவம்

கூடவே இந்த கையடக்க கருவியில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களுக்கான பேக் அப் இன்னொரு கணினியில், அல்லது பென் டிரைவில் வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களை இணையத்தில் வாங்கி சேமித்துக் கொள்ளலாம். கருவி உடைந்து விட்டால் புதிய கருவி வாங்கி பேக் அப்பிலிருந்து புத்தகங்களை ஏற்றிக் கொள்ளலாம். வீடு மாற்றும் போது பெட்டி பெட்டியாக புத்தகங்களை சுமந்து மாற்ற வேண்டியதில்லை. இதன் அமெரிக்க விலை 79 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4,000 ரூபாய்). யாருக்காவது புத்தகம் இரவல் கொடுக்க வேண்டுமானால் மின்னஞ்சலில் அனுப்பி கொள்ளலாம்.

இவ்வளவு இருந்தும் ஏன் இது இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை?

இதற்கு காரணங்கள்

1. இணைய/மின்னணு கருவி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது.

2. பதிப்பக துறையில் படைப்புக்கான ஊதியம் பெறுவதற்கான மாதிரி இன்னமும் முழுமை பெறாமல் இருப்பது.

முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பெரும்பகுதி மக்கள் இணையத்தில் இணைந்துள்ள மின்னணு கருவிகளை வாங்க முடிந்தாலும், தகவலை படைத்தவர், பொதிபவர், வினியோகிப்பவர் இவர்களுக்கு எந்த வகையில் ஊதியம் அளிப்பது என்ற முக்கியமான கேள்வியில்தான் இணைய வழி வினியோகம் சிக்கி நிற்கிறது. பாடல்களாகட்டும், திரைப்படங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், இணைய இதழ்களாகட்டும் பணம் சம்பாதிக்கும் வழி முறை இன்னமும் தெளிவாகவில்லை.

வாசகர்கள் சந்தா கட்டி படிக்கும் மிகச் சில இணைய பத்திரிகைகளை தவிர மற்ற அனைத்து இணைய இதழ்களும் விளம்பர வருமானத்தையே நம்பி இருக்கின்றன. அல்லது நிறுவனத்தின் மற்ற பகுதிகள் இணைய பிரிவுக்கு ஆதரவு தருகின்றன. இணைய பிரிவின் மூலம் மற்ற பகுதிகளுக்கு விளம்பரமும் விற்பனை அதிகரிப்பும் கிடைக்கிறது.

சந்தா கட்டி படிக்கும் இதழ்களாக தமிழில் ஆனந்த விகடன் முதலான இதழ்கள், ஆங்கிலத்தில் இந்தியா டுடே, பன்னாட்டு அளவில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்றவை இருக்கின்றன.

புதிய கருவிகளான கிண்டில், ஐ-பேட் போன்றவற்றில் பயனாளரிடம் இதழை அல்லது புத்தகத்தை விற்று வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் வினியோகிப்பாளருக்கு என்ன பங்கு, படைப்பாளிக்கு என்ன பங்கு, பதிப்பாளருக்கு என்ன பங்கு என்ற சச்சரவு இன்னும் முழுமையாக தீரவில்லை. பெரிய நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் போன்றவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத பத்திரிகைகள், அறிவியல் வெளியீடுகள் என்று சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இது போன்ற கருவிகளில் வாங்கும் புத்தகங்களை நகல் எடுக்கவோ பிறருக்கு அனுப்பவோ முடியாது. வாங்கிய புத்தகங்கள் விற்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஒரு முறை அமேசான் ஒரு புத்தகத்தை விற்ற பின் ஏதோ காப்புரிமை பிரச்சனை ஏற்பட, அதை வாங்கியவர்களின் கருவிகளிலிருந்து அந்த புத்தகத்தை நீக்கி விட்டது பெரிய பிரச்சனையானது.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த வணிக ரீதியான மாதிரிகள் உருவாக்கப்பட்டு விட்ட பிறகு வினியோக வீச்சு பெருமளவு விரிந்து விடும். கார்னிங் கண்ணாடி நிறுவனம் உருவாக்கிய எதிர்கால சாத்தியங்கள் பற்றிய காணொளியை இப்போது பார்க்கலாம்.


கவன சிதறல்கள்

கிண்டில், ஐ-பேட் போன்ற கருவிகள் பல வண்ண திரையுடன் வீடியோ, இணைய இணைப்பு, மியூசிக் பிளேயர் என்று பல்லூடக கருவியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றால் புத்தகம் படிக்கும் கவனம் கலைகிறது என்று பலர் புகார் சொல்கிறார்கள்.

இணையத்தின் மிகப் பெரிய பிரச்சனை கவனச் சிதறல்தான். இந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு இருக்கும் சுட்டி மூலமாக அல்லது இன்னொரு தத்தலில் வீடியோ ஒன்றை பார்க்க தாவி விடுகிறோம். அந்த கவனச் சிதறலை கணக்கில் எடுத்துக் கொண்டு இணைய இதழ்கள் இயங்க வேண்டியிருக்கிறது. கவனச் சிதறலை தம் பக்கம் ஈர்க்கவும், தம் பக்கம் வந்தவர்களை தமது தளத்திலேயே இருக்கும் படி தளத்தை வடிவமைப்பதும் தேவையானதாக இருக்கிறது.

இணைய இதழ்கள் புதிய கட்டுரைகள் அல்லது செய்திகள் வெளியானதும் அவற்றுக்கான சுட்டிகளை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது இப்போது பரவலான வழக்கமாகி விட்டது. ஒரு கட்டுரையின் பக்கவாட்டில் அல்லது இறுதியில் தொடர்புள்ள முந்தைய செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை இணைக்க முடிகிறது.

இன்னொரு முக்கிய கூடுதல் வசதி வாசகர் பின்னூட்டம். தினமலர் இணைய இதழில் ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக்கணக்கான பேர் கருத்து சொல்கிறார்கள். (அவர்கள் அனைவருமே ஒரே ஆளா என்று சில சமயம் சந்தேகம் ஏற்பட்டதுண்டு). பின்னூட்டம் எழுதுவதும், வெளியாவதும் எளிதானதாக இருப்பதால் இணைய இதழ்களுக்கு அவை ஒரு முக்கிய உயிரோட்டமாக இருக்கின்றன.

இணைய இதழ்களுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் இருக்கின்றன. தொழில் முறை ஊடகவியலாளர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் பல மடங்கு திறமையை காட்ட வேண்டியிருக்கும். ஒரு வலைப்பதிவுக்கும், ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுதான் இணைய இதழ்களின் வலிமை.

ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் எப்படி தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும். மடிக்கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இணையத்தில் ஒரு வலைப்பதிவு, டுவிட்டர் கணக்கு, பேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்வது அவசியத் தேவை. வலைப்பதிவுகள் மூலம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு வளர்ந்த பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் சிலரை நாம் அனைவரும் அறிவோம்.

அச்சு பத்திரிகைகள், நாளிதழ்கள் என்ன செய்ய வேண்டும்?

நிச்சயம் இணைய இதழ்களுக்கு போக வேண்டும். அச்சு இதழில் விளம்பர வருமானம் குறைவாக இருக்கும் இதழ்கள் கூட இணையத்தில் வெளியாவதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பிக்கலாம். கூகுள் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட்ஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பேஸ்புக் கணக்கு ஒழிப்பு


பேஸ்புக் கணக்குகள் நீக்குதல்

பேஸ்புக் கணக்குகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து விட்டேன். பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடினால் இரண்டு லிங்குகள் கிடைத்தன. எல்லாமே பேஸ்புக்கின் உதவிக் குறிப்புகள்தான். (http://www.facebook.com/help/search/?q=how+do+i+delete+my+account)

முதல் குறிப்பில், கணக்கில் புகுபதிகை செய்து அமைப்புகள் போய், கணக்கை முடக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும். அலுவலக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட, குறைவான செயல்பாடுகள், நண்பர்கள் கொண்ட கணக்கில் லாகின் செய்திருந்தேன்.

அதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கத்தில் 'நண்பர்கள்' புகைப்படங்கள் வரிசையாக வைத்து, "இன்னார் உங்களை தேடுவார், அன்னார் உங்களை தேடுவார்" என்று உணர்வுரீதியான அழுத்தம் தரும் பக்கம். அதிலும் உறுதி சொன்ன பிறகு அடுத்த பக்கத்தில் "ஏன் பேஸ்புக் கணக்கை முடக்க விரும்புகிறீர்கள்?' என்ற கருத்தெடுப்பு. 'பாதுகாப்பு குறித்த கவலை' என்று தேர்ந்தெடுத்தேன். அடுத்த பக்கத்தில் கடவுச்சொல்லை உறுதி செய்து, captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும். அதற்கடுத்த பக்கத்தில் வெளியில் அனுப்பி விட்டார்கள். மின்னஞ்சலுக்கு, இப்படி "உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கணக்கை பயன்படுத்த விரும்பினால், உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்தால் போதும், உங்கள் விபரங்கள், அமைப்புகள் இப்போது இருந்தபடியே திரும்ப கிடைத்து விடும்' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

இன்னொரு கணக்கு தனிப்பட்ட மின்னஞ்சலுடன் இணைந்தது. பொதுவாக பேஸ்புக்கில் எதையும் எழுதவோ, தகவல் அறிவிக்கவோ செய்யாமல் இருந்தாலும், பேஸ்புக்கில் செயல்படும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய அழைப்பை ஏற்பது மட்டும் செய்து கொண்டிருந்தேன். அப்படி நிறைய அழைப்புகள் சேர்ந்து வாரத்துக்கு நான்கைந்து முறையாவது எட்டிப் பார்க்கும் கணக்காக அது இருந்தது. அதில் நுழைந்து கணக்கை நீக்குவது பற்றிய தேடலின் இன்னொரு சுட்டிக்குப் போனேன். 'நீங்கள் கணக்கை நிரந்தரமாக முற்றிலுமாக அழிக்க விரும்பினால்' என்ற தலைப்பில் அதன் விளைவுகளை விளக்கி விட்டு, 'அப்படி விரும்பினால் இந்தச் சுட்டியை கிளிக்கவும்' என்று ஒரு சுட்டி இருந்தது. அதை கிளிக்கியதும் கடவுச்சொல்லை உறுதி செய்து captcha உள்ளிட்டதும் 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைத்து விபரங்களும் அமைப்புகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும். அதற்குள் நீங்கள் விரும்பினால் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் மூலம் லாகின் செய்து அதைச் செய்யலாம்' என்று அறிவிப்பு. அதே விபரம் மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டிருந்தார்கள்.

பேஸ்புக் கணக்கை நீக்குவதில் அதிக மனப் போராட்டம் ஏற்பட்டு விடவில்லை. புகைப்படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள் என்று எதிலுமே பேஸ்புக்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் சேர்த்த புகைப்படங்களில் எனது படத்தில் டேக் செய்திருந்தது மட்டும் எனது டைம்லைனில் வந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்தது போய் விடுமே என்ற வருத்தம் இல்லை.

பேஸ்புக் மீதான ஆரம்ப அணுகுமுறை

ஏன் பேஸ்புக் கணக்கை நீக்க வேண்டும்? இணையத்தில் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் பெரிதும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிந்தாலும், அவற்றை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மாறவில்லை. டுவிட்டர், கூகுள்+, கூகுளின் பிற சேவைகளில் கணக்கு இருக்கிறது. அவ்வப்போது குறைந்த அளவிலான கருத்து தெரிவிப்புகளையும் செய்கிறேன். பிளாக்கர் மூலம் வலைப்பதிவுகளில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கின் மீது ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் நிறைய இருந்தது. பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க பயனர்கள் ஸ்லாஷ்டாட்டில் வைத்த விமர்சனங்களை நிறைய படித்திருந்தேன். அப்போது பேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் என்று சமூக வலைத்தளங்களின் போட்டி தணிய ஆரம்பித்து பேஸ்புக் முன்னணியில் வர ஆரம்பித்திருந்த சமயம். 'பேஸ்புக்கில் சுய தகவல்களுக்கு பாதுகாப்பு, அந்தரங்கம் இல்லை' என்பதுதான் அந்த விமர்சனங்களின் சாராம்சம்.

என்னைப் பொறுத்த வரை 'அந்தரங்கமாக தகவல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வலைப்பதிவில் கூட  நாட்குறிப்பு என்ற பெயரில் முடிந்த வரை மற்றவர்களை குறிப்பிடாமல் எனது தினசரி வாழ்க்கையை பதிவு செய்து வந்தேன். ஆனால் 'பேஸ்புக்கின் கவர்ச்சியில் சிக்கி தம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது' என்பது லாஜிக்கான வாதமாக இருந்தது. அந்த வாதத்தை நிரூபிப்பது போல நடைமுறையில் பல செய்திகள், நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

பேஸ்புக்கின் வெற்றி அடிப்படை

பேஸ்புக்கின் அடிப்படை கோட்பாடு, 'யாருக்கும் அந்தரங்கம் இல்லை' என்பதுதான். 'பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதுதான்' பேஸ்புக்கின் வணிக அடிப்படை. அடிப்படையில் பேஸ்புக்கின் வடிவமைப்பு, பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பொதுவில் வெளியிடும் வகையில் இருந்தது/இருக்கிறது. அந்தரங்க பாதுகாப்பு ஆர்வலர்களின் தொடர்ந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேஸ்புக் கூடுதல் பாதுகாப்புகளை அடிப்படை வடிவமைப்பின் மீது ஏற்படுத்திக் கொண்டது.

அதன் மூலம், இப்போது ஒருவர் 'விரும்பினால்', தனது விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், அப்படி எத்தனை பேர் 'விரும்பு'வார்கள்? அப்படிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்த பேஸ்புக் என்ன செய்கிறது? என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை.

'பயனர்களின் தனித் தகவல்களை சரக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தனது பயன்பாட்டை வடிவமைப்பது' என்றுதான் பேஸ்புக் செயல்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அரை மனதோடு, குறை சொல்பவர்களின் வாயை மூட செயல்படுத்தப்பட்டவைதான்.

பேஸ்புக்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை

விண்டோஸ் (3.1, 95, 98, Me) தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதை நெட்வொர்க் சூழலில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்க வைக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதே சுமைதான் NT அடிப்படையிலான XP முதலான இயங்குதளங்களுக்கும் இருக்கிறது. ஆரம்ப வடிவமைப்பில் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த மென்பொருள் பயன்பாட்டையும் அதன் பிறகு வெளிச்சேர்க்கைகள் மூலம் பாதுகாப்பானதாக மாற்ற முடியாது. இதே பிரச்சனை பேஸ்புக்குக்கும் இருக்கிறது.

பேஸ்புக்கில் சேருபவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உணர்வு, 'நாம் நமது நண்பர்களின் மத்தியில் இருக்கிறோம்' என்பது. நண்பர்கள் ஏற்பாடு செய்யும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உணர்வுதான் பேஸ்புக்குக்குள் ஏற்படுகிறது. பார்ட்டியில் சந்திக்கும் போது ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு, தெரியாதவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு சமூக வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்கிறோம். அதே போன்ற தோற்றமும் உணர்வும் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது.

நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், நண்பர் கோரிக்கைகளை அனுப்புவதும் இயல்பான ஒன்றாக படுகிறது. முகத்துக்கு நேர் பேசுவதில் தயங்கும் இளைஞர்கள் கூட கணினியின் முன்பு கிடைக்கும் முகமிலி வசதியில் நண்பர்கள் ஊடே சகஜமாக பேச, எழுத, எதிர்வினை புரிய முடிகிறது. நண்பர்களை கோரிக்கை அனுப்புவதற்கு பேஸ்புக் தொடர்ச்சியாக பரிந்துரைகளை செய்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல பார்ட்டி ஒருங்கிணைப்பாளராக விருந்தில் கலந்து கொண்டிருக்கும் எல்லோரையும் மகிழ்ச்சியாக பிறருடன் சேர்ந்து நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து தருகிறது.

விருந்தில் ஏற்படும் தொடர்புகள் வளர்ந்து சிலருடன் தனிப்பட்ட ஆழமான உறவாக வளர்வதற்கும் பேஸ்புக்கில் வசதி கிடைக்கிறது. அது காதல், திருமணம் என்று கூட வளர்ந்து போகலாம்.

80 கோடி பேர் கலந்து கொள்ளும் விருந்து

இதுதான் பேஸ்புக்கின் அடிப்படை. அது ஒரு மிகப்பெரிய பார்ட்டி, அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உள்ளே நுழைவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை (மின்னஞ்சல், பெயர்) காண்பித்தால் போதும். உள்ளே நுழைந்த பிறகு நீங்கள் அதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவரிடமும் உறவாடும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவில் உருவானதால் பேஸ்புக் நடத்தும் இந்த பார்ட்டி/விருந்து என்பது மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அது செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான, வசதியான சூழலில் என்ன நடக்கிறது என்பதன் விளைவுகள்தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் செய்திகளில் படிக்கும் கேள்விப்படும் நிகழ்வுகள்.

இந்த அடிப்படையின் மிகப்பெரிய சிக்கல், அந்த பார்ட்டி ஒரே ஹாலின் கீழ், சுமார் 80 கோடி பயனர்களும் ஒரே குழுவாக புழங்குவதாக இருப்பதுதான். சுமார் 80 கோடி பேர் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத பார்ட்டியாக இருந்தாலும் நிகர்நிலை உலகில் அது சுமார் 30 முதல் 40 பேர் வரை புழங்கும் பார்ட்டியைப் போல  எளிமையாக இருக்கிறது. அதில் நண்பர்களுடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளலாம். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், பார்ட்டிக்குள் வந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் நம்பத் தகுந்தவர்தான் என்ற அடிப்படையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கையான குழுவின் மத்தியில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், புகைப்படங்களை காட்டலாம். 'இவற்றை செய்யும் போது நமக்கும் இருக்கும் உணர்வு 30 முதல் 40 பேர் வரை கலந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் குழுவில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால், உண்மையில் 80 கோடி பேர் அதே அறையில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்'.

1. அவர்களை அழைத்த பேஸ்புக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறது.
2. அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள்.
3. நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் 80 கோடி பேரில் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது.

செயற்கையான பாதுகாப்பு உணர்வுடனான, உண்மையில் அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சூழலில் இயங்குவதுதான் பேஸ்புக்கின் பிரச்சனையே. தேவைப்படும் சமூக பாதுகாப்புகளை உண்மையாகவே செயல்படுத்தி விட்டால், பேஸ்புக்கின் வணிக மாதிரியே இல்லாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான்

1. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் அவரது உறவு நிலையை மாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். அந்த இளைஞரைப் பொறுத்த வரை அவர் தனிப்பட்ட முறையில் தனது புரொபைலில் ஒரு மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலியோ 'அது உலகின் முன்பு பகிரங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது' என்பதை உணர்ந்து மனம் உடைந்து தனது உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. தயக்கத்துடனும் கூச்சத்துடனும் பார்ட்டிக்குள் நுழைந்து ஓரமாக ஆரஞ்சு ஜூசை சிப்பிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை குறிபார்த்து, அவரது அழகைப் புகழ்ந்து, அவரது உடையை பாராட்டி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, தனியறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்முறை செய்யும் காமக் கொடூரர்களுக்கான களம் இது. அத்தகைய காமக் கொடூரர்கள் பேஸ்புக்கின் அடிப்படையையும் அதில் கலந்து கொள்ள வரும் பலதரப்பட்ட பயனர்களின் மன உணர்வுகளையும் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய புரிதலும், நண்பர்களின் ஆதரவும் இல்லாத மதுரைப் பொண்ணுகள் எண்ணெய்க் காகிதத்தில் மோதி மாட்டிக் கொள்ளும் பூச்சிகளாக மாட்டிக் கொள்கிறார்கள்.

3. சிலர் பேஸ்புக் மூலமாக, பார்ட்டியில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானதா என்று கூட சரிபார்க்க  முடியாது. ஒரு பெண் பயனரிடம் அவரது பேஸ்புக் நணபர் புரபோஸ் செய்ய அவரும் அதை ஏற்றுக் கொள்ள, அந்த காதலர் 'நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, உன் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வை' என்று கேட்க இவரும் அனுப்பி வைத்திருக்கிறார். அதை அவன் இணையத்தில் பரவலாக போஸ்ட் செய்து விட்டிருக்கிறான்.

இவை எதுவும் பேஸ்புக்கின் தவறு இல்லை என்பது உண்மை. பேஸ்புக் ஒரு களம் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிஜ உலகில் மனிதர்களிடம் என்னென்ன சிக்கல் இருக்கிறதோ அந்த சிக்கல்கள்தான் பேஸ்புக்கில் வெளிப்படுகின்றன. அந்த சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்கும்படியான களத்தை உருவாக்கி, அத்தகைய சிக்கல்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வு ஏற்படாதவாறு போலியான சூழலை ஏற்படுத்தி, பயனர்களை சிக்க வைப்பதுதான் ஏற்படுத்துவதுதான் பேஸ்புக் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சிக்கல்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பேஸ்புக்கில் உங்களுக்கு நண்பர் கோரிக்கை விடுப்பவர் தெருவில் சந்திக்கும் முன்பின் தெரியாத நபர். பார்ட்டியில் சந்திக்கும் நண்பர் வட்டத்துக்குள் உள்ள நபர் இல்லை.

2. பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும், நாற்சந்தியில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர் போன்றது. நண்பர்கள் குழுவுக்குள் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் பார்க்கும் படியான வெளிப்பாடு இல்லை.

3. யாரும் பார்க்கவில்லை என்று பார்ட்டி ஹாலின் பக்கவாட்டு அறைக்குள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வில் செய்யும் செயல்களும் உலகுக்கே தெரிகின்றன. தனி அறையைச் சுற்றி பல காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்ளே நடப்பவை சக நண்பரால் பொதுவில் வெளியிடுப்படும் என்ற எண்ணத்துடனேயே எதையும் செய்ய வேண்டும்.

3. பேஸ்புக் மூலம் ஏற்படும் எந்த நட்பு அல்லது உறவு, ரயில் பயணத்தில் பேச்சு கொடுத்து ஏற்படும் நட்பு/உறவு போன்றது மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த சமூக ஆதாரமும் நம்பகமும் அதில் இல்லை. நிஜ உலகில் எப்படி உறவுகளை எச்சரிக்கையுடன் சரி பார்க்கிறோமோ அப்படி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூடுதலாக, தமிழ் பயனர்களைப் பொறுத்த வரை பேஸ்புக் இடைமுகம் மட்டும்தான் தமிழில் இருக்கிறது, அதன் செயல்பாடுகள் அனைத்துமே மேற்கத்திய பார்ட்டியின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதனால் தனியாக  பாதிப்பு இல்லை என்றாலும் சின்னச் சின்ன வழிகளில் மேற்கத்திய பார்ட்டிகளுக்கு பரிச்சயமானவர்கள் சமாளித்துக் கொள்ளும் சிக்கல்கள் அவற்றிற்கு அறிமுகம் இல்லாதவர்களை வீழ்த்தி விடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும்  முற்றிலும் விரோதமானது.

திங்கள், பிப்ரவரி 13, 2012

வாழ்வின் ஆதாரம்


அறிவு முயற்சியில் சலிப்பு

வாசிப்பது, எழுதுவது சலித்துப் போவதற்கு முக்கிய காரணம் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவுதான்.

'உலகின் எல்லா நிகழ்வுகளையும் விளக்குவதற்கான தத்துவத்தை வந்தடைந்து விட்டோம்' என்று தோன்றி விட்டால் பார்ப்பது, படிப்பது எல்லாவற்றையும் அந்த தத்துவத்துக்குள் பொருத்திப் பார்ப்போம். ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொல்பவை காதில் விழுந்தாலும் மூளைக்குள் போவதில்லை. நாம் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் என்ன பொருந்துமோ அதை மட்டும் எடுத்து அதில் பொருத்திக் கொள்கிறோம். 'அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஏற்கனவே தெரியும், பார்த்தால் அதைத்தான் சொன்னார்' அவர் வேறு ஏதாவது சொல்லியிருந்தாலும், நமக்குத் தேவையானதை மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து அவரது 'அறியாமை'யை நீக்குவதற்கு நமக்குத் தோன்றிய கருத்தை அவர் காதில் போட விளைகிறோம். அவரும் நம்மைப் போன்ற ஆளாக இருந்து விட்டால் அவருக்குள்ளும் இதே போன்ற பதிவுதான் ஏற்படும். இரண்டு செவிடுகள் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் பல நேரங்களில் நடக்கிறது.

தத்துவ சட்டகங்கள்

நாம் இது வரை தெரிந்து கொண்டவை,  இப்போதைய அறிவு நிலை இவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொருத்தி வைத்திருக்கிறோம். அப்படி ஒரு சட்டகம்தான் வாழ்க்கையின் பிடிப்பு. அது குறிப்பிட்ட மதக் கோட்பாடாக இருக்கலாம், அல்லது அரசியல் கட்சியாக இருக்கலாம் அல்லது தத்துவநிலையாக இருக்கலாம். புதிதாக சந்திக்கும், தினசரி நிகழ்வுகளை அந்த சட்டகத்துக்குள் பொருந்துகிறதா என்று மட்டும் அவ்வப்போது சரி பார்க்கிறோம். ஏதாவது ஒன்று கொஞ்சம் கரடு முரடாக பொருந்தாமல் இருந்தால் அதன் ஓரங்களை மடக்கி திணித்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் சுருட்டி மடக்கி வைத்துக் கொள்கிறோம்.

ஒரு நாள் என்ன செய்தாலும் பொருந்தி போகாத ஒரு நிகழ்வு அனுபவம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சட்டகம் உடைய வேண்டும். அல்லது அதை மாற்றி அமைக்க வேண்டும். அதைச் செய்யும் துணிச்சல் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் தைரியம் தேவை.

அறிவியலிலும் உலக அளவில் இப்படி நடக்கிறது.

நாம் ஏற்படுத்தும் விதிகள் அமைத்துக் கொள்ளும் சட்டகங்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டும் என்று உலகத்துக்கு விதி இல்லை. உலகமும், விலங்குகளும் தாவரங்களும், மனிதர்களும் நமது அறிவியல் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

நமது அப்போதைய விதிகளுக்குள் கட்டுப்படாத ஒரு சோதனை அளவீடை சந்திக்கும் போது, பல விஞ்ஞானிகள் அதை ஏதோ பரிசோதனை முறையில் தவறு என்று ஒதுக்கி விடலாம் (அப்படியும் பல தவறான அளவீடுகள் கிடைக்கின்றன). மீண்டும் ஒரு முறை பரிசோதனையை கவனமாக செய்து பார்க்கிறார் அந்த விஞ்ஞானி, மீண்டும் அதே அளவீடு. அந்த அளவீட்டை அப்போதைய அறிவியல் கோட்பாடு சட்டகத்தினுள் விளக்க  முடியவில்லை. மீண்டும் ஒரு முறை பரிசோதனையை தவறு ஏற்படக் கூடிய சாத்தியங்களை எல்லாம் விலக்கி விட்டு பரிசோதிக்கிறார். அப்போதும் அதே அளவீடு. இப்போதுதான் அதை கவனமாக பதிவு செய்து ஒரு அறிவியல் அறிக்கையாக வெளியிடுகிறார்.

முதலில் அதைப் படிப்பவர்கள் நம்பிக்கையற்று எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களில் சிலர் இப்போது நிலவி வரும் நம்பிக்கைக்கு மாற்றான அந்த முடிவுகளை உடைத்துக் காட்ட அல்லது உறுதி செய்ய தாமும் அறிக்கையில் கொடுத்துள்ள பரிசோதனை முறையைப் பின்பற்றி செய்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதே அளவீடு கிடைக்கலாம் (அல்லது அப்போதைய சட்டகத்துக்குட்பட்ட அளவீடு கிடைக்கலாம்). அதே புதிய அளவீடு கிடைத்தால், அவர்களும் தமது சோதனைகளை வெளியிடுவார்கள்.

இப்போதுதான் உலகம் புதிய அறிவியல் கோட்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகிறது. இப்படி உண்மையிலிருந்து நமது நம்பிக்கைகளை சட்டகங்களை தொடர்ந்து பரிசோதித்து மாற்றிக் கொள்ள அல்லது தேவைப்பட்டால் முற்றிலும் உடைத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் the world refuses to be classified உலகம் வகைப்படுத்தப்படுவதற்கு உட்படுவதில்லை.

ஒத்துப் போதலும் நிராகரிப்பும்

'நம்முடைய வகைப்படுத்தல்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டுமா' என்பது அடுத்த கேள்வி.

மனித குலத்தின் அறிவுகளை வகைப்படுத்தல் மூலம் இயற்கையில் நடப்பவற்றை முன்கணிக்கவும் அவற்றைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யவும், அல்லது அவற்றை மாற்றி அமைக்க ஏற்பாடுகள் செய்வதும் சாத்தியமாகிறது. உலகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் விளக்கும் படியான முழுமையான சட்டகம் என்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. குறிப்பிட்ட கால கட்டத்தில் நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறிவியலின் அடிப்படையில் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆராய்ச்சி செய்து இந்த சட்டகத்துக்கு மாறான முடிவுகளை தேடும் விஞ்ஞானிகளைத் தவிர மற்ற அனைவரும் அந்த சட்டகங்களின் விதிகளை ஏற்றுக்  கொண்டு செயல்படுகிறார்கள். அதுதான் சாத்தியமான நடைமுறை.

நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றின் அடிப்படையில்தான் நமது அறிவு உருவாகிறது. நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றை தனித்தனியாக நினைவில் வைத்திருக்காமல் ஒரு சட்டகத்துக்குள் அமைத்துக் கொள்வதன் மூலம் பகுத்தறிவும் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

அத்தகைய சட்டகங்களுக்குள் பொருந்தாத அனுபவங்களை விளக்க சட்டகத்தை மாற்றி விரிவுபடுத்த அல்லது புதிய சட்டகத்தை உருவாக்க அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் மிகச் சிலர் வேலை செய்கிறார்கள்.
புதிய சட்டகம் பழைய நிகழ்வுகளுக்கான விளக்கத்தையும் உள்ளடக்கியிருப்பதோடு, பழைய சட்டகத்தை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறது.  அந்த மேம்பட்ட சட்டகத்தின் அடிப்படையில் நாம் மேம்பட்ட வாழ்க்கையை நடத்துகிறோம்.

வாழ்க்கை போராட்டங்கள்

1. மனிதர்கள் சந்திக்கும் அடிப்படையான சவால், இயற்கையுடனான போராட்டம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பொருத்தமாக பயன்படுத்துவது, இயற்கை சக்திகளை எதிர் கொள்வது இவற்றுக்கான போராட்டம்தான் அறிவியல்.

2. வேலைப் பிரிவினை செய்து கொண்ட பிறகு அதனால் ஏற்படும் சமூக உறவுகளிடையே ஏற்படும் போராட்டம் இன்னொரு போராட்டம், முழுக்க முழுக்க மனிதரால் உருவாக்கப்பட்டது. மனித சமூகமும் அப்போதைய நடைமுறையைப் பின்பற்றி பல பிரிவுகளான சட்டகமாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதங்கள், மொழிக் குழுக்கள், தேசங்கள், 20ம் நூற்றாண்டின் நாடுகள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சட்டகம் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் செயல்படுகிறோம்.

3. மூன்றாவதாக ஒவ்வொருவரும் சந்திக்கும் போராட்டம் தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியது. 'நாம் எப்படி சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் நமது பாத்திரம் என்ன' இந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். குடும்பம், சாதிக் குழு, இனக்குழு, மொழிக் குழு, தேசம், நாடு என்று ஒவ்வொரு படிநிலையாக நமது இடத்தை பொருத்திக் கொண்டிருக்கிறோம். இந்த படிநிலைகள் மனிதரால் அப்போதைய தேவைக்கு உருவாக்கப்பட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை, புரிந்து கொள்வதுமில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டகத்துக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

மாறும் வழிமுறை

அறிவியலில் ஏற்படும்  மாற்றங்களைப் போல சமூக உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. மனித அறிவு வளர வளர, புதிய புதிய தகவல்கள் தெரிய வர, ஏற்கனவே இருந்த சட்டகத்தை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதற்கான அல்லது உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்குதவற்கான தேவையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும்.

அறிவியலில் பின்பற்றுவது போல, ஒருவர்  சொன்னதாலேயே அறிவியல் கோட்பாடு உருவாகி விடாது. அவர் சொல்வதை சக விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். அது வரை தெரிந்த உண்மைகளையும் இனிமேல் பரிசோதனைகளில் செய்யும் அளவீடுகளையும் விளக்க வேண்டும். பரிசோதனையில் என்ன அளவீடு கிடைக்கும் என்று கணிக்க வேண்டும். இப்படி பல ஆண்டுகள் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அறிவியல் சட்டகம் மாறுகிறது அல்லது உடைக்கப்படுகிறது.

அதே போல, இன்றைக்கு இருக்கும் அறிவியல் விதிகள்தான் இறுதியானவை. இனிமேல் புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை. எல்லோரும் அப்படியே சொன்னதை செய்து கொண்டு வாழ்ந்தால் சொர்க்கம்தான் என்று அறிவியல் சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.

சமூக அமைப்புகளிலும் இது பொருந்துகிறது. சமூகத்தின் செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட சட்டகங்கள் அவற்றுக்கான விதிகள், அவற்றைப் பின்பற்றுவது அவசிய தேவை. யாரோ ஒரு சோம்பேறியின் மனதில் உதித்த கற்பனை கனவுகளின் அடிப்படையில் மற்றவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

சட்டகத்துக்குள் பொருந்தாத உண்மையை அதே போல ஒருவர் நடைமுறையில் உணர்ந்து, அதை வெளியிட்டு, பலர் அதை நடைமுறையில் பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்த பிறகு அந்த புதிய தரவு சட்டகத்துக்குள் பொருந்தும் படி சட்டகம் விரிவுபடுத்தப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.