சனி, டிசம்பர் 23, 2006

சாதி ஒழிய வேண்டும் - 2

சாதி ஒழிய வேண்டும்

Bad News India,
புரியலியே. இன்னும் தெளிவா எழுதி இருக்கலாமோ?

சாதி ஒழிய வேண்டும். பல நூறு ஆண்டுகள் ஒடுக்கப்பட்டவர்கள் தமது நிலைமையை முன்னேற்றிக் கொள்ள சாதி அடையாளத்தைத் தேடிக் கொள்வது தேவை என்றாலும், அப்படிச் செய்வது, இப்படி ஒரு கொடுமுறையை உருவாக்கிய சாத்திரங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும் எனபதை உணர்ந்து செயல்பட வேண்டும் (necessary evil).

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், இப்படி சாதியின் பெயரால் சலுகைகள் கொடுக்கப்படுவதால் தாம் தமது சாதி அடையாளங்களை தோளில் அணிந்து கொள்ளலாம் என்று இல்லாமல், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைக்க மட்டுமின்றி மற்ற எல்லா நேரங்களிலும் சாதியை அடையாளமாகக் காட்டுவது அவமானமாகக் கருதப்பட வேண்டும்.

லக்கிலுக்,
சாதி ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனாலும் பல தலைமுறைகளாக சாதிமுறையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான ஒரு நீதி உங்களிடம் இருக்கிறது எனப் புரியவில்லை.

இருட்டில் தொலைத்ததை அங்கேயே தேட வேண்டியது நியாயந்தான். ஆனால், இருட்டை உருவாக்கிய கூட்டம் இன்னும் விளக்கை மறைத்துக் கொண்டு இருக்க நாம் தேடிக் கொண்டே இருந்து விட வேண்டி வரும். சீக்கிரம் இழந்ததைப் பிடித்து விட்டு, அடக்கி ஆள நினைக்கும் சாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட வெளிச்சத்தில் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

ஓகை,
சூதாட்ட விடுதியின் உதாரணத்த்தை எவ்வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியவில்லை

சாதி அமைப்பின் கீழேயே நியாயம் தேட முனைவது, சூதாட்ட விடுதியில் பணம் ஈட்ட முனைவது போலத்தான். இன்றைக்கு இந்து நாளிதழில் தலைமை நீதிபதி நியமனம் பற்றிய அறிவிப்பில் அவரது சாதி பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அதுதான், இந்த மனுசாத்திரத்தின் கொடுமை. இது ஒழிய வேண்டுமானால், சாதிக்குக் கொடுத்துள்ள அங்கீகாரம் போக வேண்டும்.


ஹரிஹரன்,

சாதியற்ற சமூகம் என்பது இம்மாதிரி உழைப்பால் மேலேறி வந்தபடியே அனைவரும் கல்வி கற்கின்றபோது மட்டுமே சாத்தியமாகும்.

ஒவ்வொருவரும் சாதி அடையாளங்களை முற்றிலும் துறந்து விட முன் வந்தால் சாதி ஒழிந்து விடும். கல்வியினால் மட்டுமே அது ஒழிந்து விடாது. பெரும் படிப்பு படித்த பல சாதிகளில் சாதி உணர்வு அதிகமாவதுதானே நடந்து கொண்டிருக்கிறது. உடலில் சாதி அடையாளங்கள், திருமண உறவுகளில் சாதி பார்ப்பது, பிறரின் சாதியை அறிய முயன்று ஒரே சாதி என்று தெரிந்தால் குறித்த சாதித் தமிழில் பேசுவது இவை அனைத்துமே அவமானங்களாக கருதி ஒதுக்கப்பட்டால் சாதி ஒழிந்து விடும்.

தமிழன்,

ஓத்துக்கொள்ளாதவர்களைச் ச்ட்டம் தண்டிக்க வேண்டும்.
சட்டத்தை விட தனிமனித மன மாற்றம், சமூக கருத்தாக்கம் தேவை. மற்றபடி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உருப்படியானவை:
  1. இந்திய அரசியல் சட்டத்திலே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று இருப்பது போய் சாதி ஒழிய வேண்டும் என்று வரவேண்டும்.இதற்காகத்தான் பெரியார் அன்று சட்டத்தை எரித்தார்.அதைப் பண்டித நேரு அவர்களிடம் சரியாக எடுத்துச் சொல்லாமல் மாற்றி பெரியார் இந்தியாவுக்கு எதிரானவர் என்று தடம் மாற்றிவிட்டனர்,
  2. அனைவர்க்கும் பிறப்பில் இருந்து இறப்புவரை ஒரு எண் தரப்பட வேண்டும்.அது அவர்கள் செய்யும் தொழில் வேலை வருமானம் வங்கி கணக்கு என்பது அனைத்தையும் இணைக்கும்,ஏமற்ற முடியாது வரவைக் காண்பிக்கவேண்டிவந்து விடும் அதிலேயே சாதிகளையும் குறிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டால் படிப்பு வேலை எதற்கும் சாதியே போடவேண்டியதில்லை.யார் எந்த சாதி என்பது ரகசியமாகவே இருக்கும்.அடுத்த தலைமுறைக்குச் சாதியே தெரியாது.
  3. ஆரம்பக்கல்வி முதலே ஆண்களும் பெண்பிள்ளைகளும் சேர்ந்தே உட்காரவேண்டும்.பேசிப் பழகி வளர்ந்து விட்டால்,காதல் மணங்கள் மலரும்,பல பிரச்சனைகள் ஒழியும்.
  4. அடுத்தத் தலைமுறையிலிருந்துக் கட்டாயமாகவும்,இந்த தலைமுறை விரும்புபவர்களும் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்,சாதி அமைப்புகள் கலைக்கப்படவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள்,தென் ஆப்பிரிக்காவைப் பாருங்கள்.

இது போன்ற எண்ணங்கள் வளர வேண்டும், பரவ வேண்டும் என்று நம்புவோம்.

அனானி,
சாதிகளை எல்லாம் பேப்பரில் எழுதி எரித்து விட்டு சாதி ஒழிந்தது என்று சந்தோசபடுங்கள். சாதிகளாவது ஒழியிறதாவது.

தீண்டாமை என்பது சமூகத்தின் முன் அவமானமாகவும், சட்டத்தின் முன் குற்றமாகவும் மாறியது கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததுதான். அதே போல் இன்று ஆரம்பித்தால் அடுத்த தலைமுறைக்குள் சாதி அடையாளம் அவமானமாக மாறி விடுவது நடக்கலாம்.

9 கருத்துகள்:

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சாரா,

விழிப்புணர்வோடு ஒவ்வொருவரும் தமது மனதை அலசிப் பார்த்துக் கொண்டால் எந்தச் சமூக நோயையையும் விரட்டி விடலாம். மனமிருந்தால் வழி பிறக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//விழிப்புணர்வோடு ஒவ்வொருவரும் தமது மனதை அலசிப் பார்த்துக் கொண்டால் //
நடை முறையில் இது சாத்தியம் என்று நம்புகிறீர்களா சிவகுமார்? ஆறுகோடித் தமிழர்களும் தாம் எந்த சாதி என்பதை மறந்து வாழ விரும்புவார்கள் என்று நிச்சயமாக நம்ப முடியுமா? அதுவும் குறுகிய காலத்திலேயே?

அப்படி முடியும் என்று நம்பினால், அதற்குரிய வழிகளாக நீங்கள் முன்வைப்பதென்ன? நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நாம் சாதி பார்க்கப் போவதில்லை. ஆனால், எதிராளி சாதி பார்த்து நம்மை ஒதுக்கும் போதோ, இணக்கமாகும் போதோ என்ன செய்து அந்தப் பிரிவினை பார்க்கும் தன்மையை எதிராளியிடமிருந்து நீக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

மா சிவகுமார் சொன்னது…

//ஆறுகோடித் தமிழர்களும் தாம் எந்த சாதி என்பதை மறந்து வாழ விரும்புவார்கள் என்று நிச்சயமாக நம்ப முடியுமா? அதுவும் குறுகிய காலத்திலேயே?//

முடியும் என்றுதான் நினைக்கிறேன் பொன்ஸ்.

//அப்படி முடியும் என்று நம்பினால், அதற்குரிய வழிகளாக நீங்கள் முன்வைப்பதென்ன?//

1. (சாதிக் கட்டமைப்பினால் ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை முன்னேற்றுவதற்குத் தவிர) வேறு எந்த சூழலிலும் சாதி அடையாளத்தை பயன்படுத்த மாட்டோம் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்:

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது
திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது
அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது
அக்கம்பக்கத்து உறவுகளிடம்
அரசியலில்
சாதி அடையாளம் காண விழைய மாட்டோம் என்றும் அப்படி அடையாளம் காண முயல்பவர்களை உறுதியாக மறுப்போம் என்றும் உறுதி பூண வேண்டும்.

//என்ன செய்து அந்தப் பிரிவினை பார்க்கும் தன்மையை எதிராளியிடமிருந்து நீக்க முடியும் என்று நம்புகிறீர்கள்? //

நீங்கள் எதிராளியின் பிரிவினை பார்க்கும் தன்மைக்குக் கட்டுப்பட மறுத்து விட்டால், அவர் உங்கள் வழிக்கு வந்துதானே தீர வேண்டும். எதிராளிக்குக் கட்டுப்பட்டு நாம் நடப்பதை விட, நியாயத்தை நம் பக்கம் சேர்த்துக் கொண்டு அவரை நம் வழிக்கு மாற்ற முடியாதா? அப்படி மாற்ற முடியா விட்டால், அவரது பிரிவினை பார்க்கும் அடிப்படையிலான உறவே வேண்டாம் என்று மறுத்து விட நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா?

என்னிடம் 'உன் சாதி என்ன?' என்று நேரடியாகக் கேட்டவர்களுக்கும், மறைமுகமாகத் தெரிந்து கொள்ள முயன்றவர்களுக்கும் உறுதியாக பதில் மறுக்க முடிந்திருக்கிறது. சுற்றியிருக்கும் எவரையும் சாதி தெரியாமலேயே பழக முடிகிறது. திருமண உறவுகளில் இது எளிதாக இருக்கப் போவதில்லை என்றாலும், மன உறுதியினால் முடியாதது இல்லை என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்த வரை என் குழந்தைகளுக்கு அவர்கள் என்ன சாதி என்ற அறிவு கிடையாது.

அன்புடன்,

மா சிவகுமார்

BadNewsIndia சொன்னது…

ஜாதி என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்பது சரியா என்று தெரியவில்லை.

பெயருக்கு பின் தேவர் என்றும், ஐயர் என்றும், நாயக்கர் என்றும் போட்டுக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்று நான் எண்ணியதுண்டு. ஜாதியின் அடையாளம் மெள்ள வழக்கில் இருந்தும், மனதில் இருந்தும் களைவதே முன்னேற்றம் தரும் என்ற நினைப்பு. ஆனால், அது தவறு என்று புரிந்தது. மனிதனுள் இருக்கும் பலவேறு ஜாதிகளும், அந்த ஒவ்வொரு ஜாதிகளில் இருக்கும் கலாசாரமும், பழக்கங்களும் அழியாமல் நம்மில் இருக்கும் பல்சுவை தொடர வேண்டும்.

ஜாதிகளின் நடுவே இருக்கும் ஏற்ற தாழ்வை குறைக்க அனைவருக்கும் கல்வியும், போட்டியிட சமவெளியும் (balanced playing field) உருவாக்குதலே முக்கியம்.

////என்னிடம் 'உன் சாதி என்ன?' என்று நேரடியாகக் கேட்டவர்களுக்கும், மறைமுகமாகத் தெரிந்து கொள்ள முயன்றவர்களுக்கும் உறுதியாக பதில் மறுக்க முடிந்திருக்கிறது////

நான் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது 'நீங்க என்ன ஜாதி' என்று கேட்க்க இது நாள் வரையில் தோன்றியதில்லை. அதிக பட்சமாக, நீங்க தமிழா, தெலுங்கா, மலையாளமா என்று தான் கேட்டு இருக்கிறேன்.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" போன்ற விழிப்புணர்வு வாக்கியங்கள், (படித்த) நம் மனதை ஓரளவுக்கு தெளிவாக்கி இருக்கலாம்.

நாமும் பாரதியின் வாக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்தால் இன்னும் சில வருடங்களில் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் வருமென்றே தோன்றுகிறது.

கூடி முயற்சித்தால் நல்ல மாற்றங்கள் விரைவில் அமையும்.

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

As long as there is a reservation system based on caste, caste will persist.Those who speak of abolition of caste have to think of an alternative to the reservation system first.
To eradiciate one evil one
should not help another evil
to grow.That is what is happening
today.Govt. is trying to divide and
grant favors on the basis of caste
and faith.As long as this persists
any talk of aboilition of caste
while supporting this is an act
of hypocrisy and a cruel joke
on the victims of reservation.

மா சிவகுமார் சொன்னது…

//this is an act of hypocrisy and a cruel joke on the victims of reservation.//

I am sorry Ravi Srinivas. There are no victims of reservation, only beneficiaries.

//Those who speak of abolition of caste have to think of an alternative to the reservation system first.//

ஆதிக்க சாதியினர் சாதியை மறப்பது முதலில் நடந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்களை இட ஒதுக்கீட்டைக் கைவிடச் சொல்லுங்கள், ரவி ஸ்ரீனிவாஸ். சாதி இல்லை என்று சொல்லும் எத்தனை ஆதிக்க சாதியினர் சொந்த வாழ்வில் சாதி பார்ப்பதில்லை? தமக்கு பாதகம் என்றால் சாதி பார்க்கக் கூடாது, தமக்கு ஆதாயம் என்றால் சாதி வேண்டும் என்பது காலம் காலமாக அடக்கப்பட்டவர்கள் செய்வதில் நியாயம் இருக்கிறது.

சாதிக் கட்டமைப்பின் பலன்களை அனுபவித்த அனுபவித்து வரும் சாதியினர் சாதி அடையாளங்களை முற்றிலும் மறந்த/ஒழித்த பின்னர், சாதி அமைப்பினால் அடக்கப்பட்டவர்களை இட ஒதுக்கீட்டுக்கு மாற்று தேடும்படி கேட்டுக் கொள்ளலாம்.

உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும் என்று நினைத்தால் சாதி தொடர்பான புற அடையாளங்களையாவது துறக்க வைக்க உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அன்புடன், சற்றுக் கோபத்துடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

Bad News India,

நமக்கு சின்ன வயதிலிருந்தே ஊட்டப்பட்ட உணர்வை மறுப்பது சிரமம்தான். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் சாதி உணர்வில் ஊர் பற்று, உறவினரின் மீதான பாசமும் கலந்து விடுகிறது. அவற்றை நீக்கி விட்டால், பிறப்பை மட்டும் சார்ந்து மனிதனால் வகுக்கப்பட்ட சாதிப் பிரிவு தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

//ஜாதிகளின் நடுவே இருக்கும் ஏற்ற தாழ்வை குறைக்க அனைவருக்கும் கல்வியும், போட்டியிட சமவெளியும் (balanced playing field) உருவாக்குதலே முக்கியம்.//

அப்படிச் செய்து விடலாம் என்பதுதான் காந்தி உட்பட்ட பல சமூகச் சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கையாக இருந்தது என்று நினைக்கிறேன். எனக்கென்னவோ, முந்தைய இடுகையில் சொன்னது போல் இந்த அமைப்பை உருவாக்கி வைத்தவர்கள் தமக்கு என்று சிறப்புச் சலுகைகளை கட்டமைப்பிலேயே புகுத்தி வைத்திருப்பதால், சாதியின் பெயரால் என்ன மாற்றம் நடந்தாலும் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குத்தான் ஆதாயம் என்று படுகிறது.

//நான் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது 'நீங்க என்ன ஜாதி' என்று கேட்க்க இது நாள் வரையில் தோன்றியதில்லை.//

என்னிடம் அப்படிக் கேட்ட ஆட்கள் இருக்கிறார்கள், சென்னையிலேயே. மேலோட்டமான உறவில் தெரிந்து கொள்ள முயலாவிட்டாலும், ஓரளவு நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு சாதியைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிலருக்கு இயல்பாகவே வந்து விடுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சிவகுமார்,
//குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது
திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது
அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது
அக்கம்பக்கத்து உறவுகளிடம்
அரசியலில்//
இவை எல்லாவற்றிலும் சாதி அடையாளம் காண மாட்டேன் என்று எல்லாரும் முடிவெடுப்பது சிரமம் என்று தோன்றுகிறது.

அரசியலில் உள்ள ஒரு சிலருக்கு சாதி பேர் சொல்லித் தான் பிழைப்பே நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சாதிக்கான சில சடங்குகளின் போது பக்கத்து வீட்டுக்காரர் என்ன சாதி என்பது தெரிந்து போய்விடுகிறது - அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உருவாகிவிடுகிறது; உருவாகமலே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டுவிடுகிறார்கள்! நம் ஆன்மீகப் பழக்கவழக்கங்கள் சாதி சார்ந்ததாக இருக்கும் வரை இதை நிறுத்தமுடியுமா என்று தெரியவில்லை.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது சாதி சொல்லாமல் சேர்ப்பது மிக நல்ல யோசனை. ஆனால், எத்தனை பேருக்கு அப்படி ஒரு வழி இருப்பது தெரியும்? என்ற கேள்வி வருகிறது. அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது என்ற விழிப்புணர்வு உருவாக்குவது அடுத்த அவசியம்.

[எதிர்வினைகளாக வைத்துக் கொண்டிருப்பதால் "சாதி ஒழிய வேண்டும்" என்ற தலைப்பில் எனக்கு ஒப்புமை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம் :) எப்படி முடியும் என்ற கேள்விக்கு விடை தேடும் யோசனையிலேயே இத்தனை கேள்விகளும். ரவி ஸ்ரினிவாஸ் போல், "அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்தறேன்" என்ற தொனி இந்தப் பின்னூட்டங்களில் இல்லை என்று நம்புகிறேன். :)]

மா சிவகுமார் சொன்னது…

//ஒவ்வொரு சாதிக்கான சில சடங்குகளின் போது பக்கத்து வீட்டுக்காரர் என்ன சாதி என்பது தெரிந்து போய்விடுகிறது - அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உருவாகிவிடுகிறது; உருவாகமலே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டுவிடுகிறார்கள்! நம் ஆன்மீகப் பழக்கவழக்கங்கள் சாதி சார்ந்ததாக இருக்கும் வரை இதை நிறுத்தமுடியுமா என்று தெரியவில்லை.//

ஒவ்வொன்றாக அலசிப் பார்த்தால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தீர்வு கண்டு விடலாம். சாதியை வெளிப்படையாகத் தெரிவிக்கும் புற அடையாளங்கள், சின்னங்கள் நீக்கப்பட்டு விட்டால் சமய வழிபாடுகளில் இன்னும் பலன் அதிகரிக்கும். நான் ஏற்கனவே சொன்னது போல ஊர் தொடர்பான உறவு முறை சார்ந்த பழக்கங்களும் சாதி அடையாளத்துடன் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது. கவனமாக முயற்சித்தால் முன்னதை வைத்துக் கொண்டு சாதி அடையாளத்தை ஒதுக்கி விட முடியும்.

//குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது சாதி சொல்லாமல் சேர்ப்பது மிக நல்ல யோசனை. ஆனால், எத்தனை பேருக்கு அப்படி ஒரு வழி இருப்பது தெரியும்? என்ற கேள்வி வருகிறது. அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது என்ற விழிப்புணர்வு உருவாக்குவது அடுத்த அவசியம்.//

அப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை பரவலாக அறியச் செய்ய வேண்டும். டிபிஆர் ஜோசப் சார், தம் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும் போது சாதிப் பெயரைக் குறிப்பிட உறுதியாக மறுத்து விட்டதைக் குறிப்பிட்டிருந்தார். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே அவரால் அது முடிந்திருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தத்தானே இது போன்ற விவாதங்கள்.

//எப்படி முடியும் என்ற கேள்விக்கு விடை தேடும் யோசனையிலேயே இத்தனை கேள்விகளும்.//

நம்மால் சந்திரனுக்கு விண்கலம் விடுவதைப் பற்றி திட்டமிட முடிகையில் சாதியை ஒழிப்பது மனது வைத்தால் நடந்து விடக் கூடியதுதான். சாதி இருந்து விட்டுப் போகட்டுமே என்று இன்னும் பலருக்கு ஒரு பரிவு இருந்து கொண்டிருப்பது ஒரு பெரிய தடை.

//"அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்தறேன்" என்ற தொனி இந்தப் பின்னூட்டங்களில் இல்லை என்று நம்புகிறேன்.//

சாதி ஒழிப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களுக்கு பரிகாரமாக செய்யப்படும் நடவடிக்கைகளை மட்டும் குறி வைத்து விட்டு, பிறரை இரட்டை வேடம் போடுவதாக நீங்கள் பேசவில்லையே :-)

அன்புடன்,

மா சிவகுமார்