ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சேவையில் உள் நுழைந்ததும், 'உங்கள் புதிய பிளாக்கர் தயாராக இருக்கிறது' என்ற கண்ணை நிறைக்கும், தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத தகவல் பட்டி தோன்றும். அந்த அழைப்பை ஏற்று திரும்பி வர முடியாத பிளாக்கர் பீட்டா எனப்படும் புதிய உலகுக்குள் நுழைந்து விட்டால் ஆனந்தங்களும், கடுப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு துரத்த ஆரம்பித்து விடும்.
தமிழ் பதிவர்களுக்கு முதல் இழப்பு, வார்ப்புருவில் தமிழில் செய்து வைத்திருந்த மாற்றங்கள் எல்லாம் பூச்சி பூச்சியாக மாறி விடுவது. என்னுடைய பதிவுகளில் பழைய பதிவுகள் எல்லாவற்றிலும் பின்னூட்டம் இட்டவர்களின் தமிழ்ப் பெயர்களுக்கும் அதே கதிதான். இதை யாரிடம் முறையிட வேண்டும் என்று பிளாக்கரில் விபரங்கள் தேடியும் கிடைக்கவில்லை. பீட்டா என்றால் பயன்படுத்துபவர்களின் குறை நிறைகளை வாங்குவதுதானே முதன்மை நோக்கம்!!
பழைய வார்ப்புருவை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முயன்றால் புதிய பிளாக்கரின் பல வசதிகள் கிடைக்காமல் போய் விடும். முந்தைய பதிப்பில் வார்ப்புருவில் எந்த மாற்றமும் html எனப்படும் மீயுரை நிரலை மாற்றுவதன் மூலமே செய்ய முடியும். புதிய பதிப்பில் நிரல் எழுதத் தெரியாதவர்களும் அழகு படுத்தும் வண்ணம் பல பிரிவுகளாக மேம்படுத்தும் சிறு வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.
பீட்டாவுக்கு உங்கள் பதிவுகள் மாற்றப்பட்டு விட்டன என்ற தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்ததும், உங்கள் கூகிள் கணக்கினைப் பயன்படுத்தி பீட்டா பிளாக்கருக்குள் நுழைந்து டேஷ் போர்டு எனப்படும் கருவிப் பலகைக்கு வந்து சேரலாம்.
- கருவிப் பலகையில் Template என்ற சுட்டியை கிளிக்கி வரும் பக்கத்தில் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினால், புதிய வார்ப்புருவுக்கு மாறினால்தான் புதிய வசதிகளை பயன்படுத்த முடியும் என்ற தகவல் பக்கம் வரும். (வலைப்பதிவின் வலது மேல் உச்சியில் இருக்கும் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினாலும் இதே பக்கம் வந்து விடும்).
- Upgrade Your Template என்று வார்ப்புரு தேர்வை புது பதிப்புக்கு மாற்றுவதை ஏற்றுக் கொண்டால், அடுத்த பக்கத்தில் பிடித்த வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்க அவற்றின் படங்களைக் காண்பிக்கிறார்கள். சில படங்களுக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் கூட உண்டு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதன் முன்னோட்டம் உடனடியாகக் காணக் கிடைக்கும். பிடித்த வட்டத்தில் புள்ளி வைத்து Save Template என்று சொல்லி விட்டால் புதிய தனிப்பயனாக்கக் கருவிப் பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள்.
- இங்கு உங்கள் வலைப்பூவின் பல்வேறு பகுதிகள் படங்களாகத் தெரியும். அவற்றின் இடங்களை எலிக்குட்டியால் இழுத்து மாற்றிக் கொள்ளலாம். உள் விபரங்களை மாற்ற Edit என்ற சுட்டியைப் பாவிக்க வேண்டும். அதில் வரும் வெளிச் சாளரமும் எளிமையாக வடிவமைக்க வசதியாக இருக்கின்றது.
- புதிதாக வார்ப்புருவில் ஏதாவது நிரலையோ, படத்தையோ, பட்டியலையோ, முழக்கங்களையோ சேர்க்க Add a Page Element என்ற சுட்டியைச் சொடுக்கினால், பல வகையான அலங்கரிப்புக் கூறுகளுக்கு படங்களாகத் தேர்வுகள். எடுத்துக் காட்டாக் statscounter நிரலைச் சேர்க்க HTML/JavaScript பகுதியை Add to Blog என்று சொடுக்கி வரும் பெட்டியில் தேவையான நிரலை ஒத்து ஒட்டிக் கொள்ளலாம்.
தமிழ் மணம் கருவிப் பட்டையை இணைக்க http://blog.thamizmanam.com/archives/51 என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும்.
2 கருத்துகள்:
பீட்டா தான் போயிடுச்சே!!
//பீட்டா தான் போயிடுச்சே!!//
நான் இதைப் பதிந்த நேரத்தில் பீட்டா போய் பதிப்பே வந்து விட்டது. என் பதிவு ராசி :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக