சிறில் காலையில் ஒன்பது மணி வாக்கில் தொலைபேசி, வந்து சேர்ந்து விட்ட தகவலை அறிவித்தார். 'மதியம் ஒன்று ஒன்றரை போல நாகர்கோவிலில் சந்திக்கலாம் என்று பேசி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பார்க்கலாம்' என்று திட்டம் செய்து கொண்டோம்.
ஆசாரிபள்ளத்திலிருந்து எட்வின் என்ற நண்பர் அழைத்தார். காலையில் இடுகையில் பார்த்ததாகவும் அவரும் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். டிவிடி பள்ளியின் அருகில் இருக்கும் அலுவலகத்தில் குமரி மைந்தனை சந்தித்துப் பேசலாம் என்று சொன்னார். குமரி மைந்தன் என்ற பெயர் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது. சிறில் ஏற்கனவே உங்கள் நண்பன் சரவணன் மற்றும் அரவிந்தன் நீலகண்டனுக்கு தொலைபேசியில் பேசி விட்டிருந்தாராம்.
மதியம் சாப்பிட்டு முடிக்கும் போது வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக சிறில். மழைக்கு இருட்டிக் கொண்டிருந்தது. பேருந்துக்கு போவதை விட நடந்தே போய் விடலாம் என்று சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். கூடவே ஒரு குடையும்.
மழை பெரிய பெரிய துளிகளாக விழுந்து கொண்டிருந்தது. சில நிமிடங்கள் அடித்து விட்டு மறைவதும், மீண்டும் வருவதுமாகக் கண்ணாமூச்சி. பழக்கமான சாலைகள் வழியாக நடந்து புதிய கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டே, புதிய பார்வையில் பழைய கட்டிடங்களை வருடிக் கொண்டே தாமரைப் பூப் போட்ட வீட்டின் முன் தெருவில் திரும்பி, நாகர்கோவில் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் சாலையில் இணைந்தேன். மாவட்ட சிறைச் சாலையாகப் பதவி உயர்வு பெற்றிருந்தது, முன்பு சப்ஜெயில் என்று இருந்த இடம். எதிரிலேயே ஒரு எரிபொருள் நிரப்பும் மையம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து சேர்ந்த போது இரண்டரைக்கு பத்து நிமிடங்கள் இருந்தன. சிறில் இருக்கும் வரை வலைமேயலாம் என்று எதிரிலேயே இருந்த இணைய மையத்துக்குள் போனேன். கணினியில் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கவும் சிறிலின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. 10 ரூபாய் கேட்டவரிடம் 5 ரூபாய்தான் சில்லறை இருப்பதாகக் கொடுத்து விட்டுக் கீழே இறங்கினேன்.
'டாடா சுமோவில் வந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்லியிருந்தார் சிறில். ஓரிரு நிமிடங்களில் வண்டி வந்து விட்டார், சுமோ அடையாளம் இல்லாமல் சிறிலை கண்டு கொண்டிருக்க முடியாது. புகைப்படத்தில் இருந்த கண்ணாடி இல்லாமல் மிக இளமையாக கல்லூரி மாணவனின் தோற்றத்துடன் காரிலிருந்து இறங்கினார். இறங்கிய உடனேயே உங்கள் நண்பனுக்குத் தொலைபேசினார். அரவிந்தன் நீலகண்டனுக்கும் அறிவித்தார்.
உங்கள் நண்பன் ஓரிரு நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டார். மூவரும் தேநீர்க் கடையில் தேநீர் சொல்லி விட்டு சிறில் ஒரு புகை பற்ற வைத்துக் கொண்டார். சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அரவிந்தன் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகும். கவிமணி நகரில் இருந்து வருகிறாராம். பத்து இருபது நிமிடங்கள் பிடிக்கும். அவரும் வந்து அறிமுகங்கள் முடிந்தவுடன் குமரி மைந்தன் அலுவலகத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
சிறிலின் வண்டியில் நான் ஏறிக் கொள்ள அரவிந்தனும், உங்கள் நண்பன் சரவணனும் தத்தமது இரு சக்கர வண்டிகளின் முன்னால் போனார்கள். காரிலேயே எனது சமீபத்திய ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு பதிவு குறித்தப் பின்னணியை விளக்கி விட்டேன். அதற்குள் போக வேண்டிய இடம் வந்து விட்டது. எட்வின் சொன்ன அடையாளத்திலிருந்து சிரமம் இல்லாமல் குமரி மைந்தனின் அலுவலகத்தை அடைந்து விட்டோம்.
எட்வின் இளைஞர். குமரி மைந்தன் வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன், கறுப்பாக உட்கார்ந்திருந்தார். அவர் தகவல்களின் களஞ்சியமாகப் பேசினார். தான் ஆராய்ச்சி செய்த பண்டைத் தமிழ் மரபுகள், மனித வரலாறு குறித்து நிறைய எழுதியிருக்கிறார், பேசவும் செய்தார். அங்கு உட்கார்ந்திருக்கும் போது வெளியில் மழை பிடித்துக் கொண்டது. சோவென பெருமழையாக ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்தது.
அதுவும் ஒரு காரணமாகச் சேர்ந்து விட குமரி மைந்தன் ஐயாவின் பேச்சு நீண்டு கொண்டே போனது. புராணங்கள் முதல், குமரிக் கண்டம் வரை, இந்திய அரசியல் முதல் உள்ளூர் சாதிக் கொடுமைகள் வரை, அவரது நில, சமூகப் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள் வரை நிறைய விவாதித்தோம். சிறிலும், உங்கள் நண்பனும் அதிகம் கலந்து கொள்ளவில்லை. நான் கொஞ்சம் பொறுமையின்றியும், அரவிந்தன் நிதானமாகவும் கலந்து கொண்டோம். சிறிலும் தனது பாணி கருத்துக்களை அவ்வப்போது போட்டு வைத்தார்.
குமரி மைந்தனின் படைப்புகளை கணினியில் உள்ளிட்டுப் பதியும்படி சொன்னேன். ஏற்கனவே ஒரு பதிவு இருக்கிறதாம். அசுரன், ராஜாவனஜ் போன்றவர்களின் பதிவுகளிலிருந்து சுட்டி இருக்கிறது என்று அரவிந்தன் பின்னால் சொன்னார். குமரி மைந்தனின் பேச்சுக்களை, எழுத்துக்களை முழுமையாக கணினி வடிவாக்க தொழில் நுட்ப சாத்தியங்களைக் குறித்து எட்வின் கேட்டார். 'மனித இடையூறு இன்றி பேச்சுப் பதிவுகளை, தமிழ் அச்சுப் பிரதிகளை கணினிக் கோப்புகளாக மாற்றிக் கொடுக்கும் தொழில் நுட்பங்கள் இன்றைக்கு முழுமையாக இல்லை' என்று சொல்லி, 'தன்னார்வலர் சிலரைப் பிடித்து உள்ளிடச் சொல்வது' சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொன்னேன்.
வெளி நாட்டிலிருந்து அழைப்பு. பெண் குரல். அமெரிக்காவிலிருந்து அழைப்பதாக அம்மா தனது பெயரையும் சொன்னார்கள். பெயர் சரியாகக் கேட்கவில்லை. 'இன்று தமிழ் வருடப்பிறப்பு, எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி தொலைபேசி கொண்டிருந்தேன். இன்று வலைப்பதிவர் சந்திப்பு என்ற அறிவிப்பு பதிவில் உங்க தொலைபேசி எண்ணைப் பார்த்தேன். அதான் பேசினேன். நீ என் பிள்ளை மாதிரி' என்றார்கள். வல்லிசிம்மன் அம்மா. மனம் நிரம்பி வழிந்தது. 'திடீரென்று கூப்பிட்டு அதிர்ச்சி கொடுத்து விட்டேனா' என்றார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்ததை வெளிப்படுத்தினேன்.
பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அமெரிக்கா வந்திருப்பதாகவும் ஜூனில் இந்தியா திரும்புவதாகவும் சொன்னார்கள். வழியில்தான் துபாயில் இறங்குவதாகத் திட்டம் போலிருக்கிறது.
மழையும் ஓய்ந்திருக்க விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் போது வாதம் ஓயவில்லை. சிறில் இன்னொரு முறை பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அழைத்து வெளியே வந்தார். எஸ்எல்பி பள்ளி மைதானத்துக்குப் போகலாம் என்று கிளம்பினோம். உங்கள் நண்பன் சரவணின் அலுவலகம் அருகிலேயே இருந்தது. சிறிலுக்கு நேரம் முடியப் போகிறது.
சேதுலட்சுமி பாய் பள்ளி என்ற எஸ்எல்பி பள்ளிக்குள் நுழைந்து பேசிக் கொண்டே பின்புற மைதானத்தை அடைந்தோம். அரவிந்தன் தனது எழுத்துக்களை விளக்கிக் கொண்டு வந்தார். 'மதம் என்பதே மனிதனின் கற்பனை, மன அனுபவம்தான்' என்று தான் நம்புவதாகச் சொன்னார். எந்த மதத்தையும் தாக்குவது தனது நோக்கம் இல்லை என்று திருத்தமாக உரைத்தார். சிறிலும் புத்திசாலிக் கேள்விகளைக் கேட்டு விபரங்களை வரவழைத்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்து விட சிறிலை வழியனுப்பி வைத்தோம். நாங்கள் மூன்று பேரும் மீண்டும் பள்ளியினுள் நுழைந்து முன் வாசல் படியில் உட்கார்ந்து கொண்டோம். சரவணனுக்கு முந்தைய இரண்டு மணி நேரப் பேச்சுக்கள் புரிந்து கொள்ள மிக அடர்த்தியாக இருந்ததாம். இப்போது அரவிந்தனின் பேச்சு என்னுடைய ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்துத் திரும்பியது.
சிறில் இருக்கும் போது இருந்த தொனி மாறி, நடைமுறை பற்றி பேச்சு. சரவணன் இடையில் வெப்பம் தாங்க முடியாமல் விலகிப் போனார். எனக்கு அரவிந்தன் சொன்னது போலத் தோல் தடித்திருந்தது. அவரது கேள்விகள்/கருத்துக்களை பல முறை கேட்டிருந்ததால் என்னை அதிகம் பாதிக்கவில்லை. நான் சரவணனிடம் பின்னர் சொன்னது போல 'ஒன்று இடத்தை விட்டு ஓடி விட வேண்டும். அல்லது என்னைப் போல தோல் தடித்திருக்க வேண்டும். நடுநிலையான சிறிதளவு மனம் சலித்திருக்கும் ஒருவருக்கு உணர்ச்சிகளைத் தூண்டி விடும் கருத்துக்கள்.' தேர்ந்த பயிற்சி பெற்ற ஊழியர் அவர்.
'அவர் சொன்னதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதில் சொன்னீர்களே' என்று சரவணன் பின்னர் சொன்னார். எப்படியாவது எனது கோபத்தைத் தூண்ட வேண்டும் என்று கடைசி வரை முயன்றார். காந்தியவாதியா என்று முதலிலேயே கேட்டிருந்தபடி காந்தி ஒரு தோல்வி என்று கூடச் சொல்லிப் பார்த்தார். நான் ஆர்எஸ்எஸ் ஒரு அபாயம் என்று என்ன எழுத வேண்டுமோ அதை அனைத்தையும் உறுதி செய்யும் படியான ஆர்எஸ்எஸ் பிரதிநிதி அவர்.
சரவணன் ஏதாவது திரைப்படம் போகலாமா என்று கேட்டார். அப்போதான் எனக்குப் பேச நேரம் கிடைக்கும் என்றார். அரவிந்தன் கிளம்பி விட்டார். நானும் சினிமாவை மறுத்து விட்டு எங்காவது உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்து கொண்டோம். எங்க வீடு நோக்கி அவரது வண்டியில் வந்து கன்கார்டியா பள்ளிக்கு சற்று முன்பு ஒரு மூடியிருந்த கடையின் முன் வாசலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
தமது ஊர், தந்தையின் மிளகாய் விவசாயத் தொழில், படிப்பு, உழைப்பு, தமது எழுத்துக்கள், தனது தொழில் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் அந்த வழியாகப் போன காவலர்களின் சந்தேகத்துக்கும் ஆளானோம். அவரிடம் விளக்கி விட்டுக் கிளம்பினோம்.
சரவணன் நாகராஜா கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் உட்கார்ந்து எனது தத்துவங்களுடன் நேரம் போனது. நேரத்தை நீட்டிக் கொண்டே போய் எட்டேகால் ஆகி விட்டது. அம்மா மட்டும் வீட்டில் இருந்தார்கள். வெளியே எங்கும் போகவில்லையாம். சரவணன் என்னை விட்டு விட்டுச் செல்வதாக வந்தார்.
வீட்டுக்கு வந்து உள்ளே வரத் தயங்கினார். அம்மாவுக்கு அறிமுகப் படுத்து புத்தாண்டு பாயாசம் கொடுத்து, சிறிது நேரத்தில் சாப்பாட்டுக்கும் சம்மதிக்க வைத்தோம். தினமும் விடுதியில் சாப்பிடும் பழக்கத்துக்கு ஒரு நாளாவது வீட்டு சாப்பாடு நல்லது என்று வற்புறுத்தினேன்.
உங்கள் நண்பன் சரவணனின் இடுகை
6 கருத்துகள்:
இப்படி சந்தித்துப் பேசினாலே
புரிதல் நிறைய இருக்கும் சிவக்குமார்.
ஆனால் ஒரு பட்சமாகப் போய்விடக்கூடாது:-)
உங்கள் தொலைபெசி எண் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
வலைபதிவர்கள் சந்திக்கும்போதெ உங்களிடம் பேசியதும் சிறப்பே.
மனித இடையூறு இன்றி பேச்சுப் பதிவுகளை, தமிழ் அச்சுப் பிரதிகளை கணினிக் கோப்புகளாக மாற்றிக் கொடுக்கும் தொழில் நுட்பங்கள் இன்றைக்கு முழுமையாக இல்லை' என்று சொல்லி, 'தன்னார்வலர் சிலரைப் பிடித்து உள்ளிடச் சொல்வது' சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொன்னேன்.
சென்னையில் ஒருவர் பள்ளிப்பாடங்களை முழுவதுமாக கணினி கோப்பாக மாற்றி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் போட்டு காண்பிக்க முயற்சி எடுத்து செய்தும் வருகிறார்கள்.
பாயசம் எல்லாம் கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கூட வந்திருப்பேன்.. ;)
சந்திப்பை கண் முன் நிறுத்திய அருமையான எழுத்தாக்கம்.
//புகைப்படத்தில் இருந்த கண்ணாடி இல்லாமல் மிக இளமையாக கல்லூரி மாணவனின் தோற்றத்துடன் காரிலிருந்து இறங்கினார்.//
மாசி ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஆகாதுங்க!( சிறில் கண்டுக்காதீங்க!)
//உங்கள் நண்பனும் அதிகம் கலந்து கொள்ளவில்லை.//
உண்மையில் நல்ல பல விசயங்கள பேசினார்கள் ஆனால் என் சிற்றறிவுக்குத்தான் புரிந்துகொள்ள கஷ்டமாக இருந்தது!
//சரவணனுக்கு முந்தைய இரண்டு மணி நேரப் பேச்சுக்கள் புரிந்து கொள்ள மிக அடர்த்தியாக இருந்ததாம். //
கண்ணைக்கட்டி அடர்ந்த காட்டில் விட்ட பழமொழியை அன்றுதான் அனுபவித்தேன்!
//சரவணன் இடையில் வெப்பம் தாங்க முடியாமல் விலகிப் போனார். //
ஆனால் அப்பொழுதுதான் மழை பொழிந்து முடிந்த குளிர்ந்த நேரம், வெப்பம் என்பது பாம்பு மற்றும் தேள் கதைகளினால் என்பதையும் குறிப்பிடவும்!:)))
//நான் சரவணனிடம் பின்னர் சொன்னது போல 'ஒன்று இடத்தை விட்டு ஓடி விட வேண்டும். அல்லது என்னைப் போல தோல் தடித்திருக்க வேண்டும். நடுநிலையான சிறிதளவு மனம் சலித்திருக்கும் ஒருவருக்கு உணர்ச்சிகளைத் தூண்டி விடும் கருத்துக்கள்.' //
100% உண்மையே!
//சரவணன் நாகராஜா கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் உட்கார்ந்து எனது தத்துவங்களுடன் நேரம் போனது.//
நினைவில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய பேச்சுக்கள்!
// அம்மாவுக்கு அறிமுகப் படுத்து புத்தாண்டு பாயாசம் கொடுத்து, சிறிது நேரத்தில் சாப்பாட்டுக்கும் சம்மதிக்க வைத்தோம். தினமும் விடுதியில் சாப்பிடும் பழக்கத்துக்கு ஒரு நாளாவது வீட்டு சாப்பாடு நல்லது என்று வற்புறுத்தினேன்.//
உண்மையாவே நல்ல திருப்தியான குறிப்பாக பாசமான வீட்டுச் சாப்பாடு! நன்றி திரு.மா.சிவக்குமார் அண்ணன் அவர்களே!
அன்புடன்...
சரவணன்.
//இப்படி சந்தித்துப் பேசினாலே
புரிதல் நிறைய இருக்கும் சிவக்குமார்.//
வணக்கம் அம்மா,
அன்று முழுவதும் அருமையான சந்திப்புகள் நேரிலும், தொலைபேசியிலும் :-)
//
சென்னையில் ஒருவர் பள்ளிப்பாடங்களை முழுவதுமாக கணினி கோப்பாக மாற்றி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் போட்டு காண்பிக்க முயற்சி எடுத்து செய்தும் வருகிறார்கள்.//
அதை உரையாக மாற்றி விட முடியமா குமார்?
//பாயசம் எல்லாம் கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கூட வந்திருப்பேன்..//
அடுத்த தடவை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் :-)
14 மணி நேர பயணத் தொலைவில் இருந்தாலும் அன்று எங்க அம்மா வைத்திருந்த பாயாசத்துக்கு அது லாயக்காகத்தான் இருந்திருக்கும். சாதாரணமாக இனிப்பு சாப்பிடாத நானே இரண்டாவது தடவை போட்டுக் குடித்தேன்.
ஜோ,
நன்றி.
சரவணன்,
சென்னைப் பயணம் முடிவு செய்து விட்டீர்கள்தானே? இது போன்ற விவாதங்கள் இருக்கும் என்று பயந்து இருந்து விடாதீர்கள் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக