ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம். நல்ல சாப்பாடு சாப்பிட்ட அசதி. வீடும் ஊரும் தொலைக்காட்சியிலும், தூக்கத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. நல்ல ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க எண்ணம் வரும். பொன்னியின் செல்வனின் ஓரிரு அத்தியாயங்களையோ, ஜெஃப்ரி ஆர்ச்சர் அல்லது ஆர்தர் ஹீலியின் கதைகளின் ஒரு பகுதியையோ படித்துப் பார்த்தால் எழுதிய ஆசிரியரின் உயர்குணங்களும் உழைப்பும் மனதை நிறைக்கும்.
அந்த வரிசையில் வலைப்பதிவுலகில் நமக்குக் கிடைத்திருப்பவர் திரு டி பி ஆர் ஜோசப் அவர்கள். திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் அவர் எழுதும் வாழ்க்கை அனுபவங்களும், சூரியன் என்ற வங்கி மேலிட அரசியல்கள் குறித்த தொடர்கதையும் தமிழில் எனக்குத் தெரிந்து முதல் முறையாக நடக்கும் இதுபோன்ற முயற்சி.
இந்த இரண்டு பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு வங்கிக் கிளைகளில் நடக்கும் பணிகள், எடுக்கப்படும் முடிவுகளின் பின்னணிகள், வங்கி நடைமுறைகள் போன்றவை புரியும் வண்னம் சுவையாக கதை சொல்கிறார் ஜோசப் சார்.
ஆங்கிலத்தில் ஆர்தர் ஹீலி ஒவ்வொரு துறையையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டி Airport என்று விமானச் சேவைகள் குறித்து, Money Changers என்று வங்கிகள் குறித்து, Wheels என்று கார் தொழிலைக் குறித்து, Hotel என்று நட்சத்திர விடுதிச் சேவையைக் குறித்து, Strong Medicine என்று மருந்துத் துறை குறித்து, In High Places என்று கனடிய அரசியல் குறித்து எழுதியிருக்கிறார். தமிழில் அவ்வளவு ஆழமாக, சில இடங்களில் அதையும் விடச் சிறப்பாக எழுதப்படும் நவீனம் சூரியன் என்று எனக்குப் படுகிறது.
இத்தகைய கதைகளில் நாம் செய்தித் தாளில் மட்டும் படிக்கும் மனிதர்கள் ரத்தமும் சதையும், மூக்குச் சளியுமாக நம் முன் உருவாகிறார்கள். ஆரம்ப அத்தியாயங்களில் ஒன்றில் வங்கியின் இயக்குனரான சிலுவை நாடார் விருந்து ஒன்றில், கைத்துவாலையில் மூக்கைச் சிந்தி சிப்பந்தி கையில் எறியும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவரது நவநாகரீக-பக்குவமில்லாத நடத்தை, அடிமட்டத்திலிருந்து உழைத்து முன்னேறிய வரலாறு, இன்றைக்கு பெரிய பெரிய கோட்டு போட்ட படிப்பாளிகளை ஆட்டி வைக்கக் கூடிய செல்வாக்கு எல்லாமே மனதில் நச்சென்று பதிந்து விடும்.
இப்படியே ஒவ்வொரு பாத்திரமும் தனது முத்திரையைப் பதிக்கும் படி சரியான சம்பவங்களை சுவையாக எழுதிச் செல்கிறார். ஜோசப் சாரின் இந்தப் படைப்புகள் ஆண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கும், வரும் சந்ததியனருக்கு வாசிப்பு மகிழ்ச்சியும் அறிவும் தரும் வேலையைச் செவ்வனே செய்து வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அவரது என்னுலமும், என்கதையுலகமும் தமிழ் வலைப்பதிவுலகை செறிவூட்டுகின்றன. தொடர்கதைகளைப் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் சேர்த்து வைத்து மாதாமாதம் படிக்கலாம். ஒரு நடை போய் திரும்பிப் பார்க்கிறேன், சூரியன் தொடர்களின் ஆரம்பப் பகுதிகளையும், சூரியனுக்கு முன் வந்த அப்பா ஒரு ஹிட்லர் என்ற குடும்பக் கதையை முழுமையாகவும் படித்துப் பார்த்து விடுங்கள். அவை படித்தவருக்கு நன்மையை மட்டுமே தரும் அரிதான ஆக்கங்கள்.
யார் மீதும் எதன் மீதும் காழ்ப்போ, போற்றுதலோ, தன் கருத்தையோ சுமத்தாமல், நிகழ்வுகளை நிகழ்ந்தது போலச் சொல்லிப் போகும் டிபிஆர் ஜோசப்பின் படைப்புகள் எனது ஓய்வு நாட்களின் பல பிற்பகல்களை செறிவாக்கியவை. யாரும் பதிப்பகத்தார் இன்னும் அவரது எழுத்துக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. தொலைக்காட்சி தொடர், திரைப்படம் என்று எந்த வடிவிற்கும் மாற்றிக் கொள்ளக் கூடிய வடிவங்கள் அவரது தொடர்கள்.
8 கருத்துகள்:
நல்லதொரு பதிவு மா.சி.
மிகவும் சரியான நபருக்குத்தான் மகுடம் சூட்டி இருக்கீங்க.
ஜோஸப் அவர்களுக்கு வாழ்த்து(க்)கள்.
சரியான நபருக்கு
சரியான செயலுக்காக
சரியான நபரால் சூட்டப்படும் மகுடம்!
footage problem க்காக இனி சுருக்காமல்
வழக்கம்போல் எழுதினால் நன்றாக இருக்கும
சிவஞானம்ஜி
அந்த அப்பா ஒரு ஹிட்லரின் தொடர்ச்சியை கண்டுபிடிக்க முடியவில்லை , 14 பகுதிவரைதான் கிடைத்தது , இணைப்பு கிடைக்குமா ?
சரியான மகுடம். அவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஒரு விசிறி நான்.
வாழ்த்து தெரிவித்த தேவ், துளசி அக்கா, சிவஞானம் ஐயா, அருண்மொழி அனைவருக்கும் நன்றி.
கரு மூர்த்தி கடைசிப் பகுதியின் சுட்டி இதோ
http://enkathaiulagam.blogspot.com/2006/01/15.html
அன்புடன்,
மா சிவகுமார்
அன்புள்ள சிவக்குமார் மற்றும் நண்பர்களுக்கு...
கடந்த இரண்டு மாத காலமாக அலுவலக வேலைப்பளு காரணமாக எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்...
என்னுடைய பதிவுக்குப் பிறகு நான் அவ்வப்போது படிப்பது துளசி அவர்களின் பதிவை மட்டுமே... அவருடைய எளிமையான எழுத்தின் மீது அத்தனை ஈர்ப்பு ஏற்பட்டு போனது...
இன்றுதான் வலைப்பதிவர்களுக்கான சந்திப்பைப் பற்றிய உங்களுடைய மற்றும் பொன்ஸ் அவர்களின் பதிவுகளைப் படிக்க முடிந்தது.
மற்றபடி என்னுடைய பதிவுகளையும் கற்பனை படைப்புகளையும் பற்றி நீங்கள் எழுதிய இந்த பதிவைப்பற்றி நண்பர் ஜோ அவர்கள் சொல்லித்தான் கேள்விப்பட்டேன்..
உங்களுடைய மற்றும் நண்பர்களுடைய பாராட்டுகளுக்கு நான் எந்த அளவுக்கு தகுதியுள்ளவன் என்று தெரியவில்லை... ஆயினும் அவற்றிற்கு மிக்க நன்றி...
அன்புடன்,
ஜோசஃப்
ஜோசப் சார்,
உங்கள் அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு மறுபடியும் நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக