ஏப்ரல் மாத ஒரு ஞாயிற்றுக் கிழமை
மாலை நண்பர்கள் இருவர் அலுவலகத்துக்கு வந்திருந்து ஏழரை மணிக்குக் கிளம்பிய பிறகு செல்லாவைக் கூப்பிட்டேன். தாமதமாகி விட்டதுதான். மாலையிலிருந்தே எதிர்பார்த்திருந்திருப்பார். ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை நான். அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.
எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து கை கால் எல்லாம் கழுவி, உடை மாற்றி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவர் அழைப்பு. அவரது நண்பர் வந்து விட்டாராம், அப்படியே பாண்டிபஜார் நாயுடுஹால் எதிரில் இருக்கும் கேரளா ஜுவெல்லர்ஸ் பின்னால் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சு அருகில் வரச் சொன்னார்.
தூக்க உணர்வு வந்து விட்டிருந்ததைக் களைந்து விட்டு, பேன்டு சட்டை போட்டு வண்டியில் கிளம்பினேன். நெசப்பாக்கம், கே கேநகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக திநகர் சுரங்க வழியை அடையும் போது இரண்டே இரண்டு சாலை நிறுத்தங்களைத்தான் சந்தித்திருந்தேன். நகருக்குள் வருவதற்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. வாகன நெரிசல் குறைவான ஊருள்ளான வழி.
பாண்டிபஜார் சாலையில் திரும்பி ஒரு இடத்தில் குத்து மதிப்பாக நிறுத்திப் பேசினேன். சரியாக அதே இடத்தில் நாயுடு ஹால், இடது பக்கம் கேரளா ஜுவெல்லர்ஸ், அந்த கட்டிடத்துக்குப் பின்னால் ஸ்ரீகிருஷ்ணா இனிப்புக் கடை உள்ளது என்று அவர் நண்பர் வழி சொல்ல வண்டியை நிறுத்தி விட்டு நடந்து போனேன்.
அந்தக் கடையின் எதிரில் வெற்றாகக் கிடக்கும் ஒரு மனை. நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். வீடு இல்லாமல் அங்கேயே தூங்கக் கூடியவர்கள் என்று பட்டது. கடைக்கு வெளியே பூக்கட்டி விற்கும் ஒரு அம்மா, அவரிடம் வம்பளந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மாவிடம் வம்பு செய்ய வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரை கல்லை எடுத்துக் கொண்டு துரத்தும் இந்த அம்மா என்று சுவாரசியங்களுக்குக் குறைவில்லை.
பை நிறைய மாதிரிகளுடன், உடலில் உருட்டி வலியை, சலிப்பைக் குறைக்கும் கருவி ஒன்றை விற்கும் இரண்டு பேர். கிருஷ்ணா இனிப்பகம் உள்ளே போகிறவர்களையும், வெளியே வருபவர்களையும் நிறுத்தி விற்க முயன்று கொண்டிருந்தார்கள். காதில் செல்பேசியை ஒட்டிக் கொண்டே, அல்லது செல் பேசியை ஒரு அடித் தள்ளிப் பிடித்துக் கொண்டே பெண்களும், ஆண்களும்.
கடையின் முன், தமிழ்ப் புலவர்கள் குறித்து நிகழ்ச்சி விபரங்கள், தமிழிசை இசை நிகழ்ச்சி விபரங்கள் என்று வைத்திருந்தார்கள். 'வாயில் கரையும் ஒரே மைசூர் பாகு' என்று ஒரு தட்டி.
அந்த இடத்தில் ஏதோ சுவர்க்கம் போல விளக்குகளுடன் மின்னும் கடை. வெளியிலேயே காத்திருந்தேன்.
இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து விடுவோம் என்று சொல்லியிருந்தவர்கள், பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள்.
ரிலையன்ஸ் வெப் வோர்ல்டில் இருந்தார்களாம். நண்பரின் வீடு அருகில்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்து, முன்னறையில் குளிரூட்டியைப் போட்டார். ஒரு முன்னறை, அடைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளறை, கீழிறங்கிப் போகும்படி சமையலறை. கைக்கடக்கமான வீடு. அறை குளிரூட்டும் கருவியைத் தவிர ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி இடத்தைப் பிடித்திருந்தன.
அவரது தகவல் செறிந்த புத்திசாலித்தனமாக வாதங்களைக் கேட்க ஆரம்பித்தோம். தமிழ் நாடு அரசியல், கருணாநிதி, ஜெயலலிதா, அதிமுக/திமுக, கேரளா, துபாயில் அவர் வேலை பார்த்தது, அவர் உதவியவர்கள் பற்றிய கதைகள், இப்போதைய அவரது பணி என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்.
பேசிப் பேசி களைத்ததாலோ என்னவோ, எனக்குக் குடிக்கத் தோன்றுகிறது என்று குப்பிகளையும், காய்கனிகளையும் வெளியே எடுத்து வைத்தார். எனக்கும் கடுமையான பசி.
பழங்கள் வெளியே வர ஒரு ஆப்பிளைக் கைப்பற்றிக் கொண்டேன். ரம்மில் 7 அப் ஊற்றுக் கொண்டார்கள். செல்லா காய்களை சிறிது சிறிதாக வெட்ட ஆரம்பித்தார். அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்த முஸ்லீம் பெரியவர் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் செய்த பிரியாணியில் மயங்கி 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்தார்களாம்.
அவரது நண்பர் ஒரு ஆங்கிலோ இந்தியரைக் குறித்துச் சொன்னார். சிறிது நேரத்தில் அவருக்குத் தொலைபேசியும் செய்தார். பத்து மணிக்குக் கிளம்பலாம் என்பது நீண்டு பத்தரைக்குப் புறப்பட்டேன். வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனியாக நின்றது. ஓனிக்ஸ் நிறுவன ஊழியர் சாலையோரத்தை தூய்மை செய்து கொண்டிருந்தார்.
இப்போது பனகல் பூங்கா வழியாக, போத்தீஸ் எதிரில் இருகக்கும் சாலையில் திரும்பி, சுரங்கப் பாதையில் நுழைந்து மேற்கு மாம்பலம் பிடித்து, அசோக் நகர், அசோகா தூண் வழியாக கேகே நகர் அடைந்தேன். இந்த நேரத்தில் சாலை நிறுத்தங்களில் நிற்பது யாருக்குமே தேவை என்று படுவதில்லை.