மாமாவுக்கு 87 வயது. வண்டி இடித்துக் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது நடமாட முடியாமல் இருக்கிறார். போன தடவை வந்த போது போய்ப் பார்க்க முடியவில்லை.
யார் என்று கேட்டு அடையாளம் தெரிந்து கொண்டார். காது நன்கு கேட்டது. என்னைப் பற்றிய விபரங்கள் நன்கு நினைவு இருந்தன. கீழே விழுந்த, அறுவைச் சிகிச்சை செய்த அனுபவங்களை எல்லாம் சொன்னார். யோகீஸ்வரர் சாமிக்கு நிறைய சொத்து, அதை எல்லாம் வித்து இரண்டு கோடி ரூபாய் வங்கியில் போட்டு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்களாம்.
'தோசையைச் சுடு, காபியைப் போடு' என்று அத்தையை விரட்டிக் கொண்டிருந்தார் மாமா. கடைசியில் சீனி போடாமல் பால், முறுக்கு என்று கையில் திணித்து விட்டுத்தான் ஓய்ந்தாள் அத்தை, அப்பாவின் அக்கா. 'வெளியே போக முடியாமல் எப்படிப் பொழுது போகிறது' என்று கேட்டேன். தொலைக்காட்சி எல்லாம் ஈடுபாடு இல்லை, அப்படியே சும்மா படுத்துக் கிடப்பேன் என்றார் மாமா.
விவசாயம் செய்து வந்தவர் அவர். சின்ன வயதில் நான் அங்கு போன போதெல்லாம் அதிகமாகப் பேச மாட்டார். ஆனால் தலைப்பாகைக் கட்டோடு, கரிய உடலோடு, புகையிலை அடக்கிய வாயோடு சாப்பிட வரும் போது கொஞ்சம் பயமாக இருக்கும். நல்ல உழைப்பாளி என்று நினைவு இருக்கும். இப்போது எண்பத்தியேழு வயதிலும் உடல் உறுதியாக, எலும்பு முறிவைத் தாங்கி தேறும் வளைவுத் தன்மையுடன் இருந்தது.
'எப்படியெல்லாம் பாடுபடுவோம் நாங்க. மழை வெயில் பார்க்க மாட்டோம். விவசாயம் செய்யணும்னா உழைப்புத்தான். எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவுதான் நிக்கும். வருஷம் பூராவும் உழைப்புத்தான்' என்றார். ஒரு பையன், நான்கு பெண்கள். பையன் நான் சின்ன வயதாக இருக்கும் போதே திருச்சியில் விபத்தில் இறந்து போனான். அதன் பிறகு நான்கு பெண்களையும் வளர்த்து ஆளாக்கிய பிறகு மாமாவும் அத்தையும் தனியாக இருக்கிறார்கள்.
'வேறு வருமானம் ஒன்றும் கிடையாது. மக்கமாருகள் கொடுக்கும் பணத்தில்தான் செலவுகள். ஆப்பரேஷனுக்கு இருபதாயிரத்துக்கு மேல் ஆகி விட்டது. நானும் சித்தப்பாவும் ஆளுக்கு ஐயாயிரம் கொடுத்தோம். இன்னைக்கு நீ ஒரு நூறு ரூபாய் மாமா கையில் கொடு' என்று முன்பே சொல்லியிருந்தார்கள் அப்பா.
'என்கிட்ட இருக்கு, ஐநூறு வேணும்னாலும் கொடுக்கேன்' என்றேன். கொஞ்சம் யோசித்து விட்டு, இருநூறு ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள் அப்பா. தயாராக பணப்பையிலிருந்து உருவி வைத்துக் கொண்டேன்.
பேச்செல்லாம் முடிந்து கிளம்பும் போது மாமாவின் கையில் நோட்டுக்களைக் கொடுத்தேன். எப்படி எந்த நேரத்தில் கொடுப்பது என்றெல்லாம் சமூக நடவடிக்கை தெரியாத அப்பாவி நான். சரியாகத்தான் கொடுத்தேன் என்று பட்டது. அப்படியே கண்களில் ஒத்திக் கொண்டார் மாமா.
மனம் கடுத்துப் போனது. வாழ்நாள் முழுவதும் மண்ணில் பாடுபட்ட இந்த மனிதரை அடுத்தவரை அண்டி இருக்க வைத்து விட்ட நம் அமைப்பின் மீது வருத்தமாக இருந்தது. சொந்தக் காரர்கள் உதவியில்தான் இருந்தாலும், மைத்துனர்கள், மகள்களிடமிருந்து பணம் வாங்கும் போது அந்தப் பெருமையான மனிதருக்கு மனம் என்ன பாடுபடும்? தனது உழைப்புக்கு அங்கீகாரமாக ஏதாவது மாதாமாதம் வரும் படி நாட்டின் விவசாயிகள், உடல் உழைப்பாளிகள் அனைவருக்கும் ஏற்பாடு இருக்க வேண்டும்.
அரசாங்க உதவிகள் பெறக் கிட்டத்தட்ட பிச்சைக்காரராக ஆகி விட வேண்டியிருக்கும். எப்படியோ இந்தச் சமூக அமைப்பு அவரை தாங்குகிறது.
10 கருத்துகள்:
கொடுமைதான், நானும் இந்த மாதிரி கொடுக்க நேர்கையில் வருந்தியிருக்கிறேன்.....ஜெ. ஆட்சியில் ஒரு நல்ல காரியமாக எல்லா விவசாயிக்கும் இன்ஷுரன்ஸ் பண்ணினார். ஆனால் இந்த அரசு அந்த திட்டத்தை தகர்த்துவிட்டது......
இரும்பு இதயத்தோடு வாழும் ஆட்சியாளர்கள்,மனித தன்மையோடு பேசும் நீங்கள்,மரகட்டையாய் விட்ட விவசாயிகள்.ஆள்பவர்கள் எப்பொழுது திருந்துவது?விவசாயிகள் உணர்வு பெறுவது எப்பொழுது?என்ன சொல்வதென்று புரியவில்லை.
இப்படியும் ஒரு அனுபவமா, உணர்வுப் புரிதல்களா. சிவா, உங்களின் எண்ணவோட்டம் என்னை பிரமித்துப் போக வைக்கிறது.
என்றொன்றும் அது கை கூடியே நிற்க ப்ராத்திக்கின்றேன்.
அன்புடன்,
தெகா.
அனானி,
//கொடுமைதான், நானும் இந்த மாதிரி கொடுக்க நேர்கையில் வருந்தியிருக்கிறேன்.//
உழுதுண்டு முழுமையான வாழ்வு வாழ்ந்து நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு தலை நிமிர்த்தி வாழ வழி இல்லாத இப்படி ஒரு அமைப்பு அவமானம்.
sree ஐயா,
//விவசாயிகள் உணர்வு பெறுவது எப்பொழுது?//
எல்லோரையும் சோற்றில் கை வைக்க உதவும் விவசாயிளுக்கு முதன்மை கொடுப்பது இன்றும் பேச்சளவில்தான் இருந்து வருவது கொடுமை!!
தெக்கிட்டான்,
//இப்படியும் ஒரு அனுபவமா, உணர்வுப் புரிதல்களா.//
நன்றி,
அவ்வளவு வலிமையான தாக்கம் கூட. யாருக்கும் உறைக்கக் கூடிய நிலைமை.
அன்புடன்,
மா சிவகுமார்
நல்ல ஒரு திட்டம் வேண்டும், சோஷியல் செக்யூரிடி போல் (அதுவே வரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு காலியாகி விடும்). மக்களும் தன் மக்களுக்காகவே வாழ்வதோடு திருப்தி அடைந்தது விடுகின்றனர். ஒரளாவது தங்கள் எதிர்கால வாழ்விற்காக் சேமிக்க வேண்டும்.
அன்புடன்
இராசகோபால்
//மனம் கடுத்துப் போனது. வாழ்நாள் முழுவதும் மண்ணில் பாடுபட்ட இந்த மனிதரை அடுத்தவரை அண்டி இருக்க வைத்து விட்ட நம் அமைப்பின் மீது வருத்தமாக இருந்தது. சொந்தக் காரர்கள் உதவியில்தான் இருந்தாலும், மைத்துனர்கள், மகள்களிடமிருந்து பணம் வாங்கும் போது அந்தப் பெருமையான மனிதருக்கு மனம் என்ன பாடுபடும்? தனது உழைப்புக்கு அங்கீகாரமாக ஏதாவது மாதாமாதம் வரும் படி நாட்டின் விவசாயிகள், உடல் உழைப்பாளிகள் அனைவருக்கும் ஏற்பாடு இருக்க வேண்டும்.//
மனதுதான் கனத்துப் போனது. நீங்கள் சொன்னது சரியே. இதற்கு நிச்சயம் ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும்.
எவ்வளவு நல்ல திட்டங்களாக இருந்தாலும்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால், போன அரசின் திட்டங்களை அடுத்த அரசு தூக்கியெறியும் கேவலமா நிலை இருக்கும் வரை இது கேள்விக்குறிதான்.
:-((
***
அரசின் திட்டங்கள் குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு வேண்டுமானால் நிச்சயம் பயன்படும்.ஆனால் இந்தியர்களிடம் எந்த திட்டமும் செல்லாது.
பேறுகாலச் செலவுக்காக கொடுக்கப்படும் Rs 1500/- (?)தொகைக்கு மருத்துவரின் கையொப்பம் தேவை. அதற்கு செவிலியரின் வழியாக வாங்கப்படும் இலஞ்சம் Rs 300/- . குழந்தையின் தொப்புள்கொடி அறுத்த சாட்சியில் இருந்தே இலஞ்சம் ஆரம்பமாகி விடுகிறது.
****
குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு ஏன் குழந்தைகள் அவர்களை கண்ணியமாக வாழ ஆதாரம் ஏற்படுத்தி தரக்கூடாது? காசு கொடுப்பது மட்டும் அல்ல, பெற்றோர்கள் அவர்களின் ஓய்வுக்காலங்களில் கண்ணியமான வாழ்க்கை வாழ குழந்தைகள் என்ன செய்கின்றன?
**
அரசாங்கத்திடம் இருந்து சொற்ப உதவி பெறும் தாயிடம் இருந்து குடிக்க காசு கேட்டு கொடுமைப் படுத்தும் குடிமகன்களும்,நாகரீக கனவான்களின் நாகரீக சால்ஜாப்ப்புகளும் மலிந்துள்ள நாடு இது :-((
****
எதை எல்லாம் நுகராலாம் என்றே சிந்திக்கத் தெரிந்த சமுதாயம் வாழ்வைத் தொலைத்துவிடும். இந்தியாவில் பெரும்பான்மையான சமுதாயம் அவ்வாறே உள்ளது.
வாங்க ராசகோபால்,
//மக்களும் தன் மக்களுக்காகவே வாழ்வதோடு திருப்தி அடைந்தது விடுகின்றனர். ஒரளாவது தங்கள் எதிர்கால வாழ்விற்காக் சேமிக்க வேண்டும்.//
வாழ்க்கை கடனில் ஓடாவிட்டால் நல்லது என்று இருப்பவர்கள் சேமிக்க எங்கே போவார்கள். எனக்குத் தெரிந்து சுயமதிப்போடு வாழும் வாழ்க்கைக்கு ஈட்டவே சரியாகப் போய் விடுகிறது விவசாய வருமானம். ஆடம்பரம் தவிர்த்து சேமிக்க வேண்டும் என்று கூட சொல்ல முடியாது, மிக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
//அரசியல் காழ்ப்புணர்ச்சியால், போன அரசின் திட்டங்களை அடுத்த அரசு தூக்கியெறியும் கேவலமா நிலை இருக்கும் வரை இது கேள்விக்குறிதான்.//
பரிதாபமான நிலைதான் அது. நாட்டுக்க நல்லது நடக்கிறதா என்று பார்க்காமல், ஒருவர் மீது ஒருவர் சேறு எறியும் அசிங்க அரசியல் தமிழகத்தின் விதியாகப் போய் விட்டது.
அன்புடன்,
மா சிவகுமார்
//எதை எல்லாம் நுகராலாம் என்றே சிந்திக்கத் தெரிந்த சமுதாயம் வாழ்வைத் தொலைத்துவிடும். இந்தியாவில் பெரும்பான்மையான சமுதாயம் அவ்வாறே உள்ளது.//
அந்த சிந்தனைக்குத் தீனி போடவே ஊடகங்களும், அரசுகளும், தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு வேலை பார்க்கிறார்கள்.
எவ்வளவு காலம் இப்படி கனவுகளைத் துரத்திக் கொண்டே இருக்க முடியும். இந்தப் பூமியும் தாங்க வேண்டுமே!
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக