விவசாயம் செய்யும் நண்பர் ஒருவரின் குமுறல்.
"ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்? (என்ன செய்தது அரசு?)
இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?"
முழுப்பதிவும் இங்கே . இதைப் படித்த பிறகுதான் இந்தப் பதிவை எழுதினேன். அதில் வந்த பின்னூட்டங்களிலிருந்து:
- "விவசாயிகளுக்கு ஒரே வழி கூட்டுறவை ஏற்படுத்தி பெரிய நிறுவனமாவதே (அமுல் - பால் உற்பத்தியாளர்கள்). அதன்பின் மொத்தமாக விற்பனை செய்வது அல்லது நேரடி விற்பனை என்பதை அவர்கள் யோசிக்கலாம்." - பத்ரி
- "விவசாயத்தில் கூட்டுறவு முயற்சி தேவை. கிராமங்களில் எக்கச்சக்கமான கூட்டுறவு பால் பண்ணைகளைப் பார்த்து இருப்பீர்கள். பாலும் உடனேயே விற்கவேண்டிய பொருள்.இருந்தாலும் அது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது." - கல்வெட்டு
- "விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்ய முறையான ஒரு அமைப்போ அல்லது முறைமையோ இல்லாததுதான் இன்றைய விவசாய விளைபொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்." - உண்மைத் தமிழன்.
- "நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்." - கொங்கு ராசா
- "திடீர் என ஒரே பயிரை அதிக அளவில் அனைவரும் பயிரிட்டு அதிகமாக உற்பத்தி செய்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். அதற்கு மேல் நாடுகளில் உள்ளது போல் பயிர் பதிவு முறை மற்றும் பயிரிடும் பரப்பளவினை முன் கூட்டி தீர்மனிக்கும் முறை வேண்டும்." - வவ்வால்
29 கருத்துகள்:
விவசாயத்துக்கு இதை விட ஒரு நல்ல பதிவு இருக்க முடியாதுங்க
சிவா,
பணப்பயிரான கரும்பு,பருத்தி போன்றவற்றில் இருந்து தொடங்கலாம்.முதலில் கரும்பை எடுத்துக் கொண்டால் நாம் நிச்சயாமாக ஒரு measurable ரிசல்ட் கொடுக்க முடியும்.பின்னால் அனைத்து விவாசாயத்திற்கும் ஒரு தீர்வு கொடுக்க முடியும்.
ஏன் முதலில் கரும்பு ?
1.கரும்பு சீசன் பயிர் அல்ல ( தண்ணீரை நம்பியது என்ற அளவில் தண்ணீர் கிடைக்கும் காலம் முக்கியம் ***)
2.தமிழகத்தில் விலையும் கரும்பு தமிழகம் தாண்டி அரவைக்குச் செல்வதில்லை.அதாவது தமிழகத்தில் உள்ள கரும்பாலைகளின் வருட உற்பத்தி Capacity கணிக்கக் கூடிய ஒன்று.கரும்பாலைகளுக்குள் ஏரியா ஒப்பந்தம் உண்டு. ஸ்ரிகோபியிடம் விசாரிக்கலாம்.கரும்பு விவசாயத்தில் கரும்பாலைகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. அவர்கள் உதவி மற்றும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
3.இப்போதும் கரும்பு விவசாயி ஆலையுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில்தான் கரும்பு பயிரிடுகிறான்.
என்ன செய்யலாம்?
ஒரு கரும்பு ஆலையின் வருடாந்திர உற்பத்தி Capacity யைப் கணக்கில் கொண்டு அந்தப் பகுதுவிவசாயிகள் அதற்குத் தேவையான கரும்பை விளைவிக்கலாம்.கரும்பு அறுவடையை ஆலைகள் தாமதப் படுத்தினால் விவசாயிகளுக்கு ஆலைதான் இழப்பு வழங்க வேண்டும்.ஏன் என்றால் அறுவடை தாமதமாவதால் விவசாயிக்கு கீழ்க்கண்ட நஷ்டங்கள்
1.கரும்பின் எடை குறைவதால் அவர்களுக்கு கிடைக்கும் விலை குறைகிறது.
2.வாங்கிய கடனுக்கு வட்டி
3.அறுவடை தள்ளிப்போக போக அடுத்த பயிருக்காக நிலத்தை தயார செய்ய ம்டியாமல் போகும்.
நாம் கணனி அளவில் சில தவல்களை சொல்லலாம் ஆனால் அது நடைமுறைக்கு வரவேண்டும். ஆலை மற்றும் அரசுத்தரப்பில் சரியான ஒத்துழைப்பு இல்லையென்றால் இது வெற்றி பெறாது.என்னதான் நாம் புள்ளி விவரங்கள் கொடுத்தாலும் ஆலை/அரசு நினைத்தால் விவசாயியை தூக்கில் தொங்க வைக்க முடியும். :-((
ஒரு கரும்பு ஆலைக்கான ஏரியாவில் ஒரு கூட்டுறவு (அரசியல் கலப்பில்லாமல்) சங்கங்களை ஏற்படுத்தினால் விவசாயிகளின் Negotiation power கூடும். ஒரு ஆலை துரோகம் செய்யும் பட்சத்தில் அந்த ஆலைக்கான கரும்பை நிறுத்தி அதன் உற்பத்திக்கு சவால் விடலாம்.
ஏன் ஒரு ஆண்டில் ஆலை தவறு செய்தால் அதற்கான இழப்புத் தொகையை அடையாமல் அடுத்த ஆண்டுக்கு அவர்களிடம் கரும்பு ஒப்பந்தங்கள் செய்யக்கூடாது.
கணனி அளவில் நாம் செய்ய வேண்டியது.
1.கரும்பு ஆலைகளின் பட்டியல்
-அறவைத் திறன்
-அமைந்துள்ள பகுதி
-ஏற்கனவே உள்ள விவசாயி -ஆலை ஒப்பந்தங்கள்
2.ஆலைகளின் ஏரியா வாரியாக விவசாயி மற்றும் அவனின் விளைநிலங்கள்
-கரும்பு பயிரிட தயாராக உள்ள விவசாயிகளின் பட்டியல்
-அவர்களிடம் உள்ள இடம்
-அந்தப் பகுதியில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் கிடைக்கும் காலங்கள்
3.அரசின் கரும்பு விலை சம்பந்தமான Current status
அடுத்த கட்டமாக....
-விவசாயிகளை ஒருங்கிணைக்க கட்சி சராக் கூட்டுறவு.
-அவர்களுக்கு கிராம அளவில் ஒரு கணனி மையம்
(குறைந்த பட்சமாக நாம் நமது நிர்வாகச் செலவுகளுக்கு ஒரு பதிவுத் தொகை வசூலிக்கலாம்)
-கரும்பு ஆலை மற்றும் அரசின் ஒருங்கிணைப்பு.
***தண்ணீர் சிக்கனம்:
சம்சாரியின் பதிவில் உள்ள விசயம் பல விவசாயிகளுக்குத் தெரியாது.
http://samsari.blogspot.com/2007/04/1.html
//``கரும்பு வளர்க்க மிக அதிகமான தண்ணீரைத் தமிழகத்து விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சர்க்கரை உருவாக்க 20 முதல் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீரச் செலவழிக்கிறார்கள். ஆனால், நான் ஒரு கிலோ சர்க்கரையை உருவாக்க 1500 லிட்டர் முதல் 1800 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழிக்கிறேன். அதாவது, மற்ற விவசாயிகளுடன் ஒப்பிடும் போது 10 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்துகிறேன்!''//
கவனத்தில் கொள்ள வேண்டியது...
அரசு நினைத்தால் தனி மனிதன்/குழு/இயக்கத்தின் எந்த நல்ல முயற்சிக்கும் பாடை கட்டலாம் என்பதற்குச் சான்று
ஆக்கலும் அழித்தலும்.
http://sreegopi.blogspot.com/2007/01/blog-post_17.html
அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். அரசை ஒத்துழைக்க வைக்க மக்களின் தொய்வில்லாத ஒற்றுமை தேவை.
கல்வெட்டு பின்னூடங்களைப் பார்க்கும் போது தான் தெரிகிறது சிலர் ஏன் விவசாயம் தெரியாதவர்கள் எல்லாம் பின்னூட்டம் போட்டல் இப்படி தான் இருக்கும் என்று கிண்டல் செய்வதன் காரணம்.
அய்யா சர்க்கரை கரும்பு பயிர் பதிவு முறையில் தான் பயிரிடப்படுகிறது , ஒரு விவசாயி எத்தனை ஏக்கரில் பயிரிட வேண்டுமோ அதற்கு என பதிவுக்கட்டணம்(5000) அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கட்ட வேண்டும்.பின்னரே அவர் கரும்பு போடுவார்.
அதே போன்று கரும்பு விவசாயிகள் சங்கம் என ஒவ்வொரு ஆலைக்கும் உண்டு, ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அறவைத்திறன் அளவிற்கு தான் பயிடப்படுகிறது வெட்டும் உத்தரவு தான் தாமதப்படுத்தபடுகிறது.
எத்தனை ஏக்கர் கரும்பு போடுகிறாரோ அத்தனை எக்கருக்கும் விதை கரும்பு , உரம் என ஆலை நிர்வாகம் தரும் , அந்த பணத்தை பின்னர் விற்பனையின் போது பிடித்துக் கொள்வார்கள்.ஒவ்வொரு முறை பயிரிடும் போது "கரும்பு கள அதிகாரிகள்" ஆலையில் இருந்து வந்து பதிவு செய்து கொள்வார்கள். எனவே கரும்பில் அளவுக்கு அதிகமாக பயிரிடுவது நடக்காது.
கரும்பு விவசாயிகள் நட்டம் அடையக்காரணம் கரும்பின் விலை குறைவாக இருப்பது , ஒரு டன்னுக்கு 1500 கேட்கிறார்கள், தற்போது 850 முதல் 1000 வர அளிக்கப்படுகிறது. அதிலும் ஒரு நிபந்தனை உள்ளது பிழி திறன் 10 சதம் உள்ள கரும்புக்கு தான் 1000 தருவார்கள். சரசரியாக 8 சதம் தான் நம் நாட்டில் விளையும் கரும்பில் சர்க்கரை இருக்கும் இது தெரிந்தே இப்படி ஒரு விதி போட்டவர்களை என்ன சொல்வது.
மேலும் இறக்குமதி சர்க்கரை உள் நாட்டு சர்க்கரையை விட விலைக்குறைவாக உள்ளதும் ஒரு காரணம். அதோடு அல்லாமல் ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் உற்பத்தியில் இத்தனை சதவீத சர்க்கரை அரசுக்கு குறைந்த விலையில் விற்க வேண்டும் அதற்கு லெவி சர்க்கரை என்றே பெயர் அதனால் ஏறபடும் நட்டமும் விவசாயிகளுக்கு தரும் விற்பனை பணத்தில் தான் சரி செய்யப்படும்.
மேலும் கரும்பு வெட்ட வெட்டும் உத்தரவு தர தாமதம் செய்வதும் ஒரு பிரச்சினை,அதற்கு காரணம் இரண்டுள்ளது ,
1) கரும்பு வெட்ட ஒப்பந்த அடிப்படையில் ஆட்களையும் நிர்வாகமே அனுப்பும் அதற்கான பணமும் பின்னர் விவசாயிடம் பிடித்தம் செய்து கொள்வார்கள். இப்படி நிர்வாகமே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களை அனுப்புவதால் அவர்களால் உடனே எல்லாப் பகுதிக்கும் அனுப்ப முடியாது. மேலும் தற்போது நிறைய தொழிட்சாலைகள் பெருகி விட்டதால் கூலிக்கு கரும்பு வெட்ட ஆள் கிடைப்பது கடினமாக உள்ளது.
2) தாமதமாக வெட்டும் உத்தரவு அளிப்பதால் கரும்பில் பூ வந்து விடும் , அதன் பிறகு கரும்பு நீர் எடுக்காது ,சர்க்கரை சதவீதமும் லேசாக குறையும், காய ஆரம்பித்து விடும் இதனால் எடை குறையும் , நிர்வாகத்திற்கு லாபம் , விவசயிக்கு நட்டம்.இதற்காக திட்டமிட்டே கூட பல ஆலைகள் கரும்பு வெட்டும் உத்தரவினை அளிக்க தாமதப்படுத்தும்.
இத்தனைக்கும் பிறகும் ஏன் ஒருவர் கரும்பு போட வேண்டும் , காரணம் விவசாயின் பொருளாதார நிலை தான் , கரும்புக்கு உரம், விதை என நிர்வாகம் முன்னரே அளிப்பது ஆலையே விளைப்பொறுளை வாங்கி கொள்வது இதனால கையில் குறைந்த காசு இருந்தாலே போதும் என்ற நிலை.
நான் பதிவு முறை வேண்டும் என்பது மற்ற பயிர்களுக்கு. தற்போது கூட வேளான் துறை ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக எத்தனை ஏக்கரில் பயிரிடப்படுகிறது , விளைச்சல் எவ்வளவு என்று எல்லாம் கணிப்பார்கள் ஆனால் பதிவு செய்தால் தான் பயிரிட முடியும் என ஒரு சட்டம் இல்லை.
இந்திய அளவில் இது போன்ற புள்ளி விவரங்கள்THE HAND BOOK OF AGRICULTURE) (every year new and updated edition) இல் திரடி அளிக்கப்படுகிறது . தில்லியில் உள்ள"ICAR"(Indian Council for Agriculture and Research Institue)வெளியிடுகிறது . நடைமுறைப்படுத்த அரசு முன் வர வேண்டும்.
சிவா,விவசாயம் குறித்தான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும்,தீர்வுக்கான வழிகள் குறித்தான யோசனைகளுக்கும் மிக்க நன்றி.விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கடமையும்,வழிகளும் முற்றிலும் அரசாங்கத்துக்கே உள்ளது என்பது என் கருத்து.
இன்றைய நிலையில் விவசாயிகளின் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உடனடியாக அரசு எந்த ( உள்நாட்டு ,வெளிநாட்டு)நிர்பந்தத்துக்கும் அடிபணியாமல் செய்யவேண்டியதாக நான் கருதும் விஷயங்கள்.
1.பஞ்சாயத்து அளவிலே கிராமங்கள்தோறும் பயிரிடப்படும் விளைபொருள்கள் குறித்தான அனைத்து தகவல்களும் (விவசாயியே முன்னின்று தகவல் அளிக்க விரும்பும் வகையில்)சேகரிக்கபடவேண்டும்.இதற்கு தேவைப்படின் கிராம அளவிலே பரந்த அமைப்பை கொண்ட அஞ்சல் அலுவவகங்கலை பயன்படுத்தி கொள்ளலாம்.இதனால் விவசாய பயிர்கள் குறித்தான, தெளிவான, அனத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையான தகவல்கள் அரசுக்கு கிடைத்துவிடும்.தற்போதும் தகவல்கள் சேகரிக்கபட்டாலும் சரியான தகவல்கள் இருப்பதில்லை என்பதே உண்மை.
2.விவசாயிகளின் பிரச்சினையில் பெரும்பங்கு வகிக்கும் கட்டுப்படியாகாத அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்.இந்த ஒரு விஷயத்தை அரசாங்கம் கவனித்தாலே விவசாயிகளின் 50% பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நம்புகிறேன்.அரசாங்கம் என்ன செய்யவேண்டும்? மத்திய மந்திரிசபையை கூட்டி குடியரசுதலைவருக்கு ரூ 1 லட்சம் சம்பளம் என தற்போது நிர்ணயம் செய்யும் அரசுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உடனே விவசாய விளைபொருளுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவுவிலையை இரு மடங்காக நிர்ணயிக்கவேண்டும்.நடக்குமா?
3.ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.விரைவில் கெட்டுவிடும் பால் கிராமங்கள் தோறும் சிறந்த முறையில் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் விற்பனை செய்யபடும்போது இதுவும் சாத்தியமானதே.மணல்வியாபாரமும்,மதுபான வியாபாரமும் அரசேசெய்யும்போது விவசாய விளைபொருளை கொள்முதல் செய்வது சிரமமில்லையே.கடந்த காலத்தில் எண்ணைவித்து பொருளான மணிலாவை அரசே கிராமங்கள் தோறும் கொள்முதல் செய்த போது விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்ததை கண்கூடாக நான் கண்டதால் இதில் விவசாயிகளுக்கு நிச்சயம் நன்மை உண்டு.
இவையெல்லாம் எனக்கு கனவாக தோன்றுகிறது. நடக்குமா?
//விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கடமையும்,வழிகளும் முற்றிலும் அரசாங்கத்துக்கே உள்ளது என்பது என் கருத்து.//
எந்த உலக்த்துலயா நீ இருக்க? பரலோகமா?
யோவ் அரசாங்கத்தால அடிப்படை வசதியே செய்து கொடுக்க முடியாத அளவுக்கு கயாலாதவன்களா இருக்கனுங்க நம்ம அரசியல்வாதிங்க. எவன் பிரச்சனையும் அரசால் தீர்க்க முடியாது.
//விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.//
ரெகுலெடட் மார்கெட் என்ற பெயரில் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் லூட்டி அடிப்பது உனக்கு தெரியாதா. ரெகுலெடட் மார்கெட் முலமாக அரசாங்கம் நெல் கொள்முதல் செய்கின்றது, ஆனால் இதில் ஏகபட்ட குளருபடி. பொருளை வாங்கிகொள்ளும் தரகர்கள் பணம் 6 மாதங்களுக்கு பிறகு தருவது விவசாயிகளை நொவடிக்கும் விசயம்.
இதெல்லம் தெரிந்துமா நீ இப்படி "அரசே கொள்முதல் செய்ய வேண்டும" என்று கேட்கிறாய். நீ அரசின் அடிவருடியாக இருப்பது மிக கேவலம்.
அனானி நண்பருக்கு ,
//எவன் பிரச்சனையும் அரசால் தீர்க்க முடியாது//
ஒரு நல்ல அரசாங்கத்தால் எதுவும் செய்யமுடியும்.மக்கள் நலனுக்கு பாடுபடும் அரசாங்கம் அமையாமைக்கு சமுதாயமும் ஒரு காரணம்.சமுதாயத்தின் பிரதிபலிப்பே அரசாங்கம்.
//ரெகுலெடட் மார்கெட் என்ற பெயரில் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் லூட்டி அடிப்பது உனக்கு தெரியாதா. ரெகுலெடட் மார்கெட் முலமாக அரசாங்கம் நெல் கொள்முதல் செய்கின்றது, ஆனால் இதில் ஏகபட்ட குளருபடி. பொருளை வாங்கிகொள்ளும் தரகர்கள் பணம் 6 மாதங்களுக்கு பிறகு தருவது விவசாயிகளை நொவடிக்கும் விசயம்.
இதெல்லம் தெரிந்துமா நீ இப்படி "அரசே கொள்முதல் செய்ய வேண்டும" என்று கேட்கிறாய்//
தமிழகத்தை பொருத்தவரை நெல் மட்டுமே குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் உட்பட மற்ற விளைபொருட்கள் விற்பனைசெய்ய அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் பல உள்ளன.இங்கு கொள்முதல் செய்வது வியாபாரிகள் மட்டுமே அரசு கொள்முதல் செய்வதில்லை.வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இவை ஒரு தொடர்பைமட்டுமே ஏற்படுத்துகின்றன.விலை நிர்ணயம் செய்வது வியாபாரியே.
இங்கும் பல சிக்கல்கல் உள்ளன.2,3 நாட்களுக்கு தன் விளைபொருளை இங்கே இறக்கி வைக்க கூட இடமின்றி இரவு பகல் கண்விழித்து பாதுகாத்து விற்பனை செய்யும் நிலை இப்பொழுதும் உண்டு.கொள்முதல் செய்யும் வியாபாரி காசு கொடுக்காமல் அலைகழித்த சம்பவங்களும் உண்டு.
ஆனால் நான் குறிப்பிடுவது அரசு நேரிடையாக (அ)கூட்டுறவு அமைப்பு மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அனைத்து விளைபொருளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே.இங்கே வியாபாரிகளுக்கு இடமில்லை.விவசாயிகளுக்கும் நன்மையே.
//நீ அரசின் அடிவருடியாக இருப்பது மிக கேவலம்//
கோபப்படும்போது மட்டில் வெளிப்படும் நியாயமற்ற வார்த்தைகள்.
நன்றி.
கல்வெட்டு அவர்களே, விளக்கமான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
கரும்பு பயிர் பொருத்தவரை புள்ளிவிவரங்கள் எளிதில் திரட்டபட கூடியவையே.ஏனெனில் அவை ஆலையுடன் பதிவு பெற்று பயிரிடபடுவதால்.
//கரும்பு அறுவடையை ஆலைகள் தாமதப் படுத்தினால் விவசாயிகளுக்கு ஆலைதான் இழப்பு வழங்க வேண்டும//
இது மிகமுக்கியமான கருத்து.காலம் கடந்த வெட்டு உத்தரவு விவசாயி நட்டமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் ஆலையை மட்டும் குறை கூற முடியவில்லை.அரசாங்கமும் ஒரு காரணம்.
ஒரு சில சமயங்களில் விவசாயிக்கு தெரிந்தே கரும்பு பயிரிடுவது பெருமளவில் நடைபெறுகிறது.காரணம் அரசும் வங்கிகளும்.
வங்கியில்
பயிர்கடனில் பெரும்பகுதி கரும்புகடனாகத்தான் இருக்கும்.நீங்கள் பயிர்கடன் கேட்டு வங்கியை அணுகினால் இன்றும் கரும்பு நடவு இருந்தால் இங்கே வாருங்கள் இல்லையெனில் போய்வாருங்கள் என்றபதில்தான் கிடைக்கும்.ஏனெனில் வசூல் ஆவதில் ஒரு பிரச்சினையுமில்லை.ஆலையே பணம் பிடித்து வங்கிக்கு அனுப்பிவிடும்.
மற்ற பயிர் செய்யும் விவசாயி நிலைமை அதோகதிதான்.இந்த நிலைமையில விவசாயி வேறு வழியின்றி கரும்பு பயிரிட ஆர்வம் கொள்கிறான்.
வவ்வால, உங்கள் சிறந்த விளக்கங்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் குறிப்பிட்டதுபோல் பதிவு கட்டணம் என்பது கூட்டுறவு ஆலைகளுக்கு மட்டுமே.
அரசு 2005-க்கு முன்வரை 8.5% சர்க்கரை கட்டுமானத்துக்கு விலை நிர்னயம் செய்ததை விவசாயிகளுக்கு பாதகமாக 9.0% க்கு தற்போது நிர்ணயம் செய்வது நியாயமற்றதே.
இப்பொது மத்திய அரசின் விலை டன்னுக்கு ரூ802.50 மட்டுமே.இதில் வெட்டுகூலி மட்டும் ரூ200-350 போனால் வேறென்னதான் விவசாயிக்கு மிஞ்சும்.
//நான் பதிவு முறை வேண்டும் என்பது மற்ற பயிர்களுக்கு//
நிச்சயம் தேவை.நன்றி
வவ்வால்,
நான் சொன்னது
//3.இப்போதும் கரும்பு விவசாயி ஆலையுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில்தான் கரும்பு பயிரிடுகிறான்.//
நீங்கள் சொல்வது
//கல்வெட்டு பின்னூடங்களைப் பார்க்கும் போது தான் தெரிகிறது சிலர் ஏன் விவசாயம் தெரியாதவர்கள் எல்லாம் பின்னூட்டம் போட்டல் இப்படி தான் இருக்கும் என்று கிண்டல் செய்வதன் காரணம்.
அய்யா சர்க்கரை கரும்பு பயிர் பதிவு முறையில் தான் பயிரிடப்படுகிறது //
:-))
****
நாம் இங்கே முயற்சி செய்வது ஒரு வெளிப்படையான தகவல் தொடர்புதளம் பற்றியது. இருக்கும் அனைத்து தகவல்களையும் இணைப்பதன் மூலம் தேவை,உற்பத்தி போன்றவற்றை விவசாயிகள் தங்கள் அளவில் ஒழுங்குபடுத்தமுடியும் என்ற நம்பிக்கையில்தான்.
//அதே போன்று கரும்பு விவசாயிகள் சங்கம் என ஒவ்வொரு ஆலைக்கும் உண்டு, ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. //
அவர்களால் செய்ய முடியும். அதற்குத்தான் இந்த புது முயற்சி. By doing the same thing again and again we can not expect different results.
உங்களிடம் நிறைய தகவல்கள் உள்ளது. அவசியம் பகிர்ந்து கொள்ளவும். நிச்சயம் மாற்றம் உண்டாக்கலாம்.
//கோபப்படும்போது மட்டில் வெளிப்படும் நியாயமற்ற வார்த்தைகள்.//
sree உங்களை திட்டியதற்கு மன்னிக்கவும், கோபம் கண்ணை மறைத்தது.
இவ்வளவு நடந்த பிறகும் அரசை நம்புவதா?. இந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரவில்லை.
அரசு APMC act மூலம் விவசாயிக்கு இழித்த கொடுமைகள் எத்தனை. APMCயின் கீழ்தான் 'ரெகுலெடட் மார்கெட்' என்னும் ஒழுங்குமுறை விற்பனைகூடம் வருகிறது. இங்கு நடப்பது விவசாயிக்கு சாதகமாக தோன்றினாலும், இது விவசாயிக்கு பாதகமே.
என்னெறால் APMCயின் கீழ் விவசாயிக்கு கட்டுப்பாடுகள் மிக அதிகம், அவர் நினைத்தவரிடம் விற்க முடியாது. எந்த விற்பனையும் APMC முலம்தான் நடைபெற வேண்டும் என்பது சட்டம். (minimum support price) குறைந்தபட்ச ஆதரவு விலையும் APMCயின் கீழ் அடங்கும்.
//சமுதாயத்தின் பிரதிபலிப்பே அரசாங்கம்.//
இது உண்மையாக இருப்பதனால்தான் அரசாங்கத்தை நான் நம்புவதில்லை.
அரசு மற்ற அடிப்படை வசதிகளை விவசாயிக்கும் பொதுமக்களுக்கும் கொடுப்பதை முதலில் முயற்ச்சிக்கட்டும். பிறகு விளைபொருட்களை வாங்குவது பற்றி யோசிக்கலாம்.
நன்றி இளா!
பதிவு மட்டும் போதாதே! நடைமுறையில் ஏதாவது நடக்க வேண்டும். இந்த வார பூங்கா தலையங்கத்தில் சொல்வது போல சிவாஜி படம் குறித்து செலவிட்ட பண/மன வளங்களில் ஒரு பகுதியாவது இந்தப் பிரச்சனை தீரப் பயன்படுத்தினால் போதும்.
வாங்க கல்வெட்டு,
//பணப்பயிரான கரும்பு,பருத்தி போன்றவற்றில் இருந்து தொடங்கலாம்//
ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். மென் பொருள் உருவாக்கம் மிகச் சிறிய ஆரம்பப் படிதான். நடைமுறைக்குக் கொண்டு வருவதில்தான் வேலை இருக்கிறது.
//நாம் கணனி அளவில் சில தவல்களை சொல்லலாம் ஆனால் அது நடைமுறைக்கு வரவேண்டும்.//
முற்றிலும் உண்மை. சீக்கிரம் கெட்டுப் போய் விடக் கூடிய காய்கறிகளிடமிருந்து கூட ஆரம்பிக்கலாமா? அங்குதான் விலை ஊசலாட்டம் அதிகமாக இருப்பதாகப் படுகிறது.
வவ்வால்,
//இந்திய அளவில் இது போன்ற புள்ளி விவரங்கள்THE HAND BOOK OF AGRICULTURE) (every year new and updated edition) இல் திரடி அளிக்கப்படுகிறது .//
அத்தகைய புள்ளி விபரங்கள் விவசாயிக்கு நாள் தோறும் பலனளிக்கும்படி இருக்கிறதா? ஏதோ ஒரு அலுவலர் தொகுத்து, திரட்டி, அது திரிந்து நடைமுறைக்கு உதவாமல் பொதுப்படையாகக் கிடைப்பவைதானே புள்ளிவிபரங்கள் (lies, damn lies and statistics).
வேலை வாய்ப்புத் தளங்கள் போல, திருமணப் பொருத்தம் சேர்க்கும் தளங்கள் போல தனி விவசாயிகளை இணைக்கும் கூட்டுறவு வர வேண்டும். அரசு இயந்திரத்தை ஓரளவுதான் நம்பியிருக்க முடியும்.
வணக்கம் ஸ்ரீ,
//விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய கடமையும்,வழிகளும் முற்றிலும் அரசாங்கத்துக்கே உள்ளது என்பது என் கருத்து.//
//தற்போதும் தகவல்கள் சேகரிக்கபட்டாலும் சரியான தகவல்கள் இருப்பதில்லை என்பதே உண்மை.//
கடமையும் வழிகளும் இருந்தாலும் மனமும் திறனும் இருக்க வேண்டுமே. அரசாங்கத் திட்டங்களில் ஏற்படும் விரயங்களும் ஏராளம்.
நீங்கள் சொல்வது போல சமூகத்தின் பிரதிபலிப்புதானே அரசாங்கம். சமூகம் சிவாஜி பட வெளியீட்டிலும், மதுரை இடைத் தேர்தலிலும் மெய் மறந்து நிற்கும் போது அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்! நம்மால் ஆன முயற்சிகளை ஆரம்பித்து விட்டால் அரசாங்கம் பொருத்தமான நேரத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
//எண்ணைவித்து பொருளான மணிலாவை அரசே கிராமங்கள் தோறும் கொள்முதல் செய்த போது விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்ததை கண்கூடாக நான் கண்டதால் இதில் விவசாயிகளுக்கு நிச்சயம் நன்மை உண்டு.//
இது ஏன் தொடரவில்லை? மற்றப் பயிர்களுக்கும் ஏன் விரிவடையவில்லை? என்று நினைத்துப் பாருங்கள்!
//கோபப்படும்போது மட்டில் வெளிப்படும் நியாயமற்ற வார்த்தைகள்.//
அனானியின் சுடு சொற்களைப் பொறுத்து, அமைதியாகப் பதில் அளித்ததற்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
//சமூகம் சிவாஜி பட வெளியீட்டிலும், மதுரை இடைத் தேர்தலிலும் மெய் மறந்து நிற்கும் போது//
:-))
சிவா,
எந்தவிதமான விளை பொருட்களில் இருந்தும் தொடங்கலாம்.
எப்படித் தகவல் திரட்டுவது?
1.
விவசாயக் கிராமங்களில் Farmers Boutique அமைப்பதன் மூலம் விவசாயிகளிடம் தகவல் பெறவும் அவர்களுக்கு தகவல் அளிக்கவும் ஒரு களம் அமைக்கலாம். நிர்வாகச் செலவுகளை சமாளிக்க விவசாயம் சம்பந்தமான பொருட்களை நியாயமான விலையில் விற்கலாம்.
2.மாவட்டம் வாரியாக விளைவிக்கப்படும் விளை பொருட்களின் பட்டியல்.
3.என்ன இடங்களில் என்ன பயிர்கள் விளைகிறது?
4.எந்த காலங்களில் இது விளைவிக்கப்படுகிறது?
போன்ற பல தளங்களில் இருந்து தொடங்கலாம்.
விவசாய கல்லூரிகளின் உதவியை நாடலாம்.
நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை தீர்மானித்துவிட்டு அந்தப் புள்ளியில் இருந்து தொடங்கலாம்.
கல்வெட்டு,
உங்கள் கருத்துக்களைத் திட்டப் பக்கத்தில் சேர்த்து விட்டேன். நீங்கள் சொல்வது போல பல கோணங்களிலும் அணுகி வளைவுத் தன்மையுடன் போக வேண்டியிருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
அனானி, உங்களின் கோபம் மிகவும் நியாயம் என்பதை உணர்ந்துள்ளேன். உங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன்.
விவசாயிகளின் பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் மிகசரியாக உணரக்கூடிய அளவிற்கு தகவல்கள் அவர்களை சென்றடைவதில்லையோ என நினைக்கதோன்றுகிறது.
//ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். மென் பொருள் உருவாக்கம் மிகச் சிறிய ஆரம்பப் படிதான். நடைமுறைக்குக் கொண்டு வருவதில்தான் வேலை இருக்கிறது//
சிவா,
மிக சரியாக சொன்னீர்கள், சிரமங்களைபாராது மென்பொருள் உருவாக்கினாலும் அதன் பயன்பாட்டினை விவசாயிகள்(அ)விவசாயிகளின் நலனுக்காக அரசு பயன்படுத்தி கொள்வதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியாகும்.
ஏதாவது செய்யவேண்டுமென்று களத்தி இறங்கி போராட தயராகிவிட்ட உங்கள் உணர்வு அரசுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவிட்டால் விவசாயம் மேன்மைபெறும்.
//இது ஏன் தொடரவில்லை? மற்றப் பயிர்களுக்கும் ஏன் விரிவடையவில்லை? என்று நினைத்துப் பாருங்கள்//
முழுக்க முழுக்க அரசே காரணம்.
கல்வெட்டு ,
நீங்கள் பதிவு முறையை பருத்தி கரும்பிலிருந்து துவங்கலாம் என கூறி இருந்தீர்கள் அதனால் அப்படி சொல்ல நேரிட்டது.
விவசாய பல்கலைகழங்களின் உதவியை நாடலாம் என்கிறீர்கள் அவர்களது புள்ளி விவரங்களை எல்லாம் புழுத்த பொய் என்பாரே மா.சி , ஏனெனில் அவர்களும் அரசு சார்பானவையே, ICAR என்பது இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயப்பல்கலைக்கழகங்களுக்குமான உச்ச அமைப்பு!
//1.
விவசாயக் கிராமங்களில் Farmers Boutique அமைப்பதன் மூலம் விவசாயிகளிடம் தகவல் பெறவும் அவர்களுக்கு தகவல் அளிக்கவும் ஒரு களம் அமைக்கலாம். நிர்வாகச் செலவுகளை சமாளிக்க விவசாயம் சம்பந்தமான பொருட்களை நியாயமான விலையில் விற்கலாம்.
2.மாவட்டம் வாரியாக விளைவிக்கப்படும் விளை பொருட்களின் பட்டியல்.
3.என்ன இடங்களில் என்ன பயிர்கள் விளைகிறது?
4.எந்த காலங்களில் இது விளைவிக்கப்படுகிறது?
போன்ற பல தளங்களில் இருந்து தொடங்கலாம்.
விவசாய கல்லூரிகளின் உதவியை நாடலாம்.//
இவை அனைத்திற்குமான விடைகள் ஏற்கனவே உள்ளது , மேலும் திட்டங்கள் செயல் படுத்த பட்டும் வருகிறது என்ன ஒன்று அதன் வீச்சும் செயல் திறனும் விவசாய சமூகம் முழுவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே தற்போது உள்ள திட்டங்களை செம்மை படுத்தி நேர்மையானவர்களிடம் பொறுப்பை ஒப்படைதாலே போதும்.(அது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி)
அரசின் சார்பாக செயல்படும் நிறுவனங்கள்,
தமிழ் நாடு குடிமை வழங்கல் கழகம்(TNCSC): நெல் முதலான தானிங்களை கொள்முதல் செய்கிறது;
தமிழ் நாடு விற்பனைக் குழுமம்(TANFED): எண்ணை வித்துகள், மற்றும் மிளகாய் முதலிய பொருட்களையும் கொள்முதல் செய்கிறது.
இந்திய பருத்திக்கழகம்(cotton corporation of india) மற்றும் தமிழக அரசின் வேளான் துறை இணைந்து பருத்திக்கொள்முதல் செய்கிறது.
கதர் மற்றும் கிரமத்தொழில் வாரியம்: கைவினை பொருட்கள், விவசாய விளைப்பொருட்கள், பனைபொருட்கள் என அனைத்தையும் வாங்கி விற்கிறது.
ரூரல் பஜார்(rural bazzar): மகளீர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து கிராமிய பொருளாதாரத்திற்கு வழி வகுக்கிறது(production, procurement &sales). இதன் சார்பாக மாவட்டம் தோறும் பெரிய வணிக வளாகங்கள் அமைக்கப்பட்ட்டு வருகிறது.(as kalvettu told Farmers Boutique)
அக்மார்க்(agriculture marketing): விவாசயப்பொருட்களுக்கான தர நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்துல் ஆகியவற்றை செய்கிறது.
இவை எல்லாம் இருந்தும் விவசாயிகள் சுபிட்சமாக இல்லையே ஏன், காரணம் ஊழல் , மற்றும் நிர்வாக திறன் இல்லாதவர்களின் கையில் பொறுப்பு உள்ளது. பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இது போன்ற பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இத்துறைகளில் பதவி என்பது தண்டனைக்காலமாக நினைக்கின்றனர் பின்னர் எப்படி சேவை செய்வார்கள்.
காய்கறிகள் தொடர்பான ஒரு அமைப்பு இல்லை(உழவர் சந்தையே போதுமா?) அது தவிர புதிதாக தகவல்களோ அமைப்புகளோ கூட தேவை இல்லை இருக்கும் அமைப்புகளையும் தகவல்களையும் சரிபார்த்து செப்பனிட்டு ஊழல் அற்ற வெளிப்படையான நிர்வாகம் செய்தாலே போதும்.
sree,சொல்வது போல்,
அரசு அளிக்கும் ஆதரவு விலையினை இரண்டு மடங்கு ஆக்க அரசு முன்வராது அப்படி செய்தால் பொதுமக்கள் அதிக விலைக்கொடுத்து வாங்க நேரிடும் அதனால் அரசுக்கே ஆபத்து வரும். இடு பொருட்களின்(உரம், பூசி மருந்து,மின்சாரம்,அல்லது எரிபொருள்) விலையை குறைத்து மலிவாக கிடைக்க செய்தாலே விவசாயிக்கு பெரும் உதவியாக இருக்கும்
ஸ்ரீ, வவ்வால்,
அரசு இயந்திரத்துள் புகுந்து வரும் முயற்சிகள் சிதைந்து ஆரம்பித்த நோக்கம் திரிந்து போகின்றன. 'அரசுத் திட்டங்களுக்காக (சமூக நலத் திட்டங்களுக்காக) செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 10 ரூபாய்க்கும் குறைவாகவே (அல்லது அத்தகைய குறைந்த மதிப்பு) இலக்கைச் சேருகிறது' என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்.
அரசு ஊழியர்களின் நோக்கம் சேவை நிலையிலிருந்து மாறி தமது அதிகாரத்தையும் பதவியையும் உருப் பெருக்கிக் கொள்வதாக மாறி விடுவதால்தான் lies, damn lies and statistics என்று புள்ளி விபரங்கள் உருவாகின்றன. ஒன்றும் இல்லாததற்கு அவை தேவலாம் என்று பயன்படுத்தலாமே தவிர அவற்றை நம்பி நம்பகமான முடிவுகள் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
அரசின் மூலம் சிலவற்றை செய்யலாம். மற்றதற்கு கூட்டுறவு முயற்சி பலன் அளிக்கும் என்று படுகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
//அரசின் மூலம் சிலவற்றை செய்யலாம். மற்றதற்கு கூட்டுறவு முயற்சி பலன் அளிக்கும் என்று படுகிறது.//
மா.சி ,
கூட்டுறவு என்று அடிக்கடி முழுங்குகிறீர்கள் ஆனால் அனைத்து கூட்டுறவு அமைப்பும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவதே அப்படி எனில் அதுவும் அரசின் முயற்சி தானே!
தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சொல்கிறீர்களா , எவையாக இருந்தாலும் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நடைபெறாது.
நான் அரசிற்காக வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் அரசு தன் முனைப்பு காட்டாத வரையில் மாற்றம் ஏற்படாது என்பதே உண்மை!
வவ்வால்,
// தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சொல்கிறீர்களா , எவையாக இருந்தாலும் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நடைபெறாது. //
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஒரு கட்டமைக்கப்பட்ட நாட்டிற்குள் இருக்கும் எந்த இயக்கங்களும் அந்த அரசினால் காட்டுப்படுத்தக்கூடியவையே.
அரசு நினைத்தால் தனி மனிதன்/குழு/இயக்கத்தின் எந்த நல்ல முயற்சிக்கும் பாடை கட்டலாம் என்பதற்குச் சான்று கீழே உள்ள sreegopi யின் பதிவு.
ஆக்கலும் அழித்தலும்.
http://sreegopi.blogspot.com/2007/01/blog-post_17.html
அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
அது கிடைக்காத பட்சத்தில் அந்த அரசை ஒத்துழைக்க வைக்க மக்களின் தொய்வில்லாத ஒற்றுமை தேவை.
மக்களின் தொய்வில்லாத ஒற்றுமை கிடைத்துவிட்டால் அரசை ஒத்துழைக்க வைத்துவிடலாம்.
(இதை ஏற்கனவே மூன்றாவது பின்னூட்டமாக கொடுத்துள்ளேன்)
****
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. பல அமைப்புகள் இருக்கின்றன. அவ்வளவு இருந்தும் ஏன் இந்த சீரழிவு ? என்பதும் அதற்கு என்ன தீர்வு ? என்பதும்தான் இந்த விவாதத்தின் நோக்கம்.
1.செயல்படாத இந்த அமைப்புகளை அல்லது measurable result காட்ட முடியாத இந்த அமைப்புகளைச் சுத்தப்படுத்தலாம்.
அல்லது
2.புதிதாக தன்னார்வலர்களின் கட்டுப்பாட்டில் விவசாய தகவல் மையத்தை தொடங்கலாம்.
இந்த 2 option தான் நல்லது என்று நினைக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் ஒரு measurable result காட்டிவிட்டால் நிச்சயம் அரசின் மற்ற அமைப்புகள் உதவி செய்ய வரும்.
***
உதாரணமாக ஒரு சின்ன திட்ட வடிவம்:
(இதில் குறைகள்/பிழைகள்/தவறான தகவல்கள் இருக்கலாம். இங்கே பொதுவில் பேசுவதே அனுபவம் உள்ளவர்களுடம் இருந்து சரியான தகவல்களைப் பெறுவதற்கே. எனது அனுமானங்கள் தவறு என்னும் பட்சத்தில் திருத்தவும்)
1.தக்காளியின் விலை எல்லா காலத்திலும் சீராக இருப்பதில்லை. 5% ஏற்ற இறக்கங்களை ஒத்துக் கொள்ளலாம்.
2.ஆனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக மாறுவது என்பதும் அதுவே தீடிரென்று 8 ரூபாயாகக் குறைவதும் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பிரச்சனை.
3.இப்போது நாம் பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்தாகி விட்டது.
4.இதற்கான தீர்வுகள் என்ன?
அ. விவாசாயத் திட்டமிடல்
ஆ. ஆண்டின் சாராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)
இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.
ஈ. இந்த விளைவுத் திறனை சம்ச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.
** ஒரு நாளைக்கு 3 கிலோ உற்பத்தி மட்டுமே இருக்கும் பட்சத்தில் நம்மால் ஆண்டு முழுவதும் நுகர்வோரின் தேவையை ஒத்துக் கொள்ளப்பட்ட 5% ஏற்ற இறக்கங்களுடன் பூர்த்தி செய்ய இயலும்.
** உற்பத்தியை 3 கிலோக்குள் வைத்து இருக்க முடியவில்லை எப்போதும் 5 கிலோவையே தொடுகிறது என்றால் அதிகமுள்ள 2 கிலோக்கான மாற்றுச் சந்தையை கண்டறிய வேண்டும்.
உ. இந்த 3 கிலோ உற்பத்தியை மாவட்ட அளவின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள தக்காளி பயிர் செய்யத்தக்க விவாசாய நிலங்களில் பிரித்து பயிரிடலாம்.
ஊ. புதியதாக ஒருவர் தக்காளி பயிரிட நினைக்குப் போது அவர் நமது தகவல் நிலையத்தை அணுகுவார்.
தக்காளி அறுவடைக்கு வர 50 நாட்கள் ஆவதாகக் கொண்டால் அவர் அந்த 50 வது நாளில் 3 கிலோவுக்கு குறைவாக "விளைச்சல் Forecast" செய்யப்படு இருந்தால் மட்டுமே அந்த குறையை சரி செய்ய பயிர் செய்ய வேண்டும்.
எ. "விளைச்சல் Forecast" அவரை தக்காளி பயிரிட அனுமதிக்காத பட்சத்தில் அவர் மற்ற பயிர்களின் (அவரது நிலத்தில் அந்தப் பருவத்தில் விளையக்கூடிய) விளைச்சல் Forecast ஐப் பார்த்து அதைப் பயிரிட வேண்டும்.
ஏ. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ( 4 மாதங்கள் என்று கொள்வோம்) எந்த விவாசாயப் பொருட்களின் "விளைச்சல் Forecast" ம் சரியாக அமையவில்லை என்றால் அவர் விளைவிக்காமைக்கு மானியம் பெறத் தகுதியாகிறார். அத்துடன் அவர் "விளைச்சல் Forecast" ன் படி 4 வது மாத முடிவில் பயிரிடப் போகும் பயிரை உடனே முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஐ. இந்த மானியம் அரசின் உதவியால் மட்டுமே சாத்தியம் என்றாலும்,மானியத் தொகைக்காக இலாபத்தில் ஒரு பங்கை சேமிப்பாக நாம் வைத்துக் கொள்ளலாம்.இதனால் அரசை (மண் குதிரையை) நம்பி இந்த திட்டடத்தில்( ஆற்றில்) இறங்கும் சாத்தியம் குறையும்.
* இது கடலை கடுகுக்குள் புகுத்த நினைக்கும் திட்டம் போல் தெரிந்தாலும் சாத்தியமே என்று தோன்றுகிறது.
****
சிவா,
வேண்டுமானால் இந்த திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அலச ஒரு விவாதத்தை தொடங்கலாம்.
*****
வவ்வால்,
இங்கே சொல்லப்பட்டுள்ள "திட்ட மாதிரி" வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளதா?
இப்படிச் செய்வதால் விவசாயத்தில் ஒரு சீரான வளர்ச்சியை கொண்டுவர முடியும்.
பருவ காலங்கள்,இயற்கை போன்ற காரணிகளுக்குத் தக்க திட்டத்தில் தேவையான அளவு % மாற்றி "விளைச்சல் Forecast" ஐ நாம் அமைக்கலாம்.
கல்வெட்டு ,
நீங்கள் பட்டியலிட்ட அம்சங்களை கொண்டது தான் பயிர் பதிவு முறை, ஆனால் இதில் ஒரு அம்சம் மட்டும் இருப்பதாக தெரியவில்லை ... விளைவிக்காமைக்கு மானியம் என்ற ஒன்று தவிர , மற்ற அனைத்தையும் கொண்டது தான் பயிர் பதிவு முறை, எந்த பயிர் என்று தேர்வு செய்து , ஒரு விரவலாக்கிய முறையில் சாகுபடி செய்தால் இது போன்ற நிலை வராது.
உதாரணமாக தக்காளி எடுத்துக்கொள்வோம்,
ஒரு ஆண்டுக்கு 100 டன் தெவைப்படுகிறது , அதற்கு 1000 ஏக்கர் நிலம் தேவை எனில் , முதல் 3 மாதங்களுகு 250 ஏக்கருக்கு மட்டும் அனுமதி தரப்படும், இப்படி நான்காக பிரித்து ஒராண்டு முழுவதும் வருமாறு செய்வார்கள், அதுவும் வேறு வேறு பகுதிகளில், இடைப்பட்ட காலத்தில் பயிர் சுழற்சி முறையில் வேறு பயிர் சாகுபடி செய்யப் பரிந்துறைக்கப்படும், இது போன்ற கணக்கீடுகளுக்கு தான் அரசு செயல்படவேண்டும் , எல்லாம் ஒரு ஒருங்கிணைந்த மைய முறையில் இருக்கும்.
ஏதாவது ஒரு காரணத்தால் உற்பத்தி பாதிக்கப்படும் எனில் அதற்கு காப்பீடும் வழங்கப்படும். இத்தகைய முறை தான் அமெரிக்க , சீனா ஆகிய நாடுகளில் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். விதைக்கும் நாள் முதல் அனைத்தும் ஒரு முன்கூட்டிய திட்டமிடல் இருக்கும் இதில்.
நீங்கள் கூட இதனை கேள்விப்பட்டிருக்கலாம் , அமெரிக்க போன்ற நாடுகளில் திடீர் என அப்படி குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்தே அதிக விளைச்சல் வந்து விட்டால் அதனை கடலில் அல்லது ஆற்றில் விவசாயிகள் கொட்டி விடுவதாக.
நம் நாட்டில் அப்படி ஒரு நிலை வராது ஏன் எனில் நம் மக்கல் தொகை அதிகம் , மேலும் நமகு இன்னும் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகமாகவே உள்ளது.
ஒரே பிரச்சினை குறிப்பிட்ட காலத்தில் தேவை எவ்வளவு என தெரியாமல் மானாவாரியாக எல்லாரும் ஒரே படிரைப்போட்டு விலை வீழ்ச்சியடைவது தான்.
இதனை செய்வதற்கு அரசு தயங்க காரணம் இதற்கு என்று மேலும் விரிவான ஒரு நெட்வொர்க், ஆள்பலம், விரைந்து செயல்படும் வேகம், விவசாயிகளுக்கு இதனை புரியும் படி விளக்கி ,முறையாக பின்பற்ற வைத்தல் ஆகியவை செய்ய வேண்டும். வேளான் துறைக்கு வேலைப்பளு அதிகரிக்கும் .
முன்னரே இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்,புதுவையில் எம்.எச்.சுவாமினாதன் வேளான் ஆராய்ச்சி மையம் இது போன்ற ஒரு மாடலை பரிட்சார்த்த ரீதியாக புதுவையில் சில கிராமங்களில் மட்டும் செய்து வருகிறார்கள்.
அது செயல்படுவது இப்படி தான், ஒரு கிராமத்தில் முன்னோடி விவசாயி என ஒரு சிலரை தேர்ந்தெடுத்து , அவருக்கு கணிப்பொறி, வயர்லெஸ் கருவி எல்லம் தருவார்கள் அவர்களை மத்திய மார்கெட்டில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இணைத்து விடுவார்கள், அங்கு ஒரு நாளைக்கு என்ன தேவை என்பதை உடனுக்குடன் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு தெரிவிக்க வைப்பார்கள் அதற்கு ஏற்றார்ப்போல் தான் காய்கறிகளை கூட பறிப்பதாக சொல்கிறார்கள், இது பற்றி முன்னர் தினமணிக்கதிரில் ஒரு கட்டுரை வந்துள்ளது. இதே முறை மீனவர்களிடமும் செய்து வருகிறார்கள். எந்த மீனுக்கு தேவை எவ்வளவு என்பது கரையில் இருந்து கடலில் உள்ள மீனவருக்கு வயர்லெஸ்ஸில் தெரிவிக்கப்படுகிறதாம்.
விளைவிக்காமைக்கு மானியம் அவசியம் என்பது எனது நிலைப்பாடு.
இது விவசாயிக்கு ஒரு உத்திரவாதத்தைத் தரும். சரியான திட்டமிடல் இருந்தால் அந்தக் காலங்களில் சரியான மாற்றுப்பயிரை பயிரிடச் சொல்லி அதற்கான சந்தை உத்திரவாதத்தையும் அளிக்கலாம்.இதனால் மானியம் தவிர்க்கப்படலாம் அல்லது மாற்றுப்பயிரின் விலைக்கு ஏற்ப மானியத்தை குறைத்துக் கொள்ளலாம்.
****
//ஒரே பிரச்சினை குறிப்பிட்ட காலத்தில் தேவை எவ்வளவு என தெரியாமல் மானாவாரியாக எல்லாரும் ஒரே படிரைப்போட்டு விலை வீழ்ச்சியடைவது தான்.//
//புதுவையில் எம்.எச்.சுவாமினாதன் வேளான் ஆராய்ச்சி மையம் இது போன்ற ஒரு மாடலை பரிட்சார்த்த ரீதியாக புதுவையில் சில கிராமங்களில் மட்டும் செய்து வருகிறார்கள்.//
இது போல் ஒரு முயற்சி ஏற்கனவே இருப்பது நல்ல செய்தி.
இவர்கள் மூலம்
எந்த அளவில் இது வெற்றி பெற்றுள்ளது? ,ஏன் இது வளரவில்லை? அல்லது அடுத்த கட்டம் என்ன ? என்பது போன்ற தகவல்களைப் பெறலாம்.
*****
விவசாயிகளிடம் செல்லும் முன் அதற்கான கட்டமைப்பை தகவல் தொழில் நுட்ப ரீதியில் நாம் முடித்து வைத்துவிட வேண்டும். பின்னர் களத்திற்குச் செல்லலாம்.
****
//அது செயல்படுவது இப்படி தான், ஒரு கிராமத்தில் முன்னோடி விவசாயி என ஒரு சிலரை தேர்ந்தெடுத்து , அவருக்கு கணிப்பொறி, வயர்லெஸ் கருவி எல்லம் தருவார்கள் அவர்களை மத்திய மார்கெட்டில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இணைத்து விடுவார்கள், அங்கு ஒரு நாளைக்கு என்ன தேவை என்பதை உடனுக்குடன் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு தெரிவிக்க வைப்பார்கள் அதற்கு ஏற்றார்ப்போல் தான் காய்கறிகளை கூட பறிப்பதாக சொல்கிறார்கள்,//
நல்ல திட்டம்தான்.
இதையே கொஞ்சம் முன்னோக்கி பயிரிடல் அளவிலேயே தொடங்கலாம்.
நான் நினைப்பது கிராம அளவில் ஒரு Farmers Boutique அமைப்பதன் மூலம் எல்லா விவசயிகளும் வந்து தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி.
//இதனை செய்வதற்கு அரசு தயங்க காரணம் இதற்கு என்று மேலும் விரிவான ஒரு நெட்வொர்க், ஆள்பலம், விரைந்து செயல்படும் வேகம், விவசாயிகளுக்கு இதனை புரியும் படி விளக்கி ,முறையாக பின்பற்ற வைத்தல் ஆகியவை செய்ய வேண்டும். வேளான் துறைக்கு வேலைப்பளு அதிகரிக்கும் .//
உண்மைதான்.
but with the same effort we can not make new changes...
**
நாம் முதலில் தகவல் தொழில் நுட்ப அளவில் தகவல் சேகரிப்பு/ பயிர்ப் பதிவு / விளைச்சல் Forecast போன்றதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டால் விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வை உண்டக்கலாம்.
micro credit போல் இதனை கிராம அளவில் விவசாய சுய உதவிக் குழுக்கள் போன்று வேர் அளவில் இறங்கி செயல் படுத்தலாம்.
அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மிகவும் சுலபம் பார்க்கலாம்.
நம் முயற்சி தோல்வி அடைந்தால் கூட முயன்ற திருப்தியும், நாம் செய்த தவறுகள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிற்காலத்தில் பயன் படலாம். எத்தனை காலத்துக்கு விவசாயியை புறக்கணிக்க முடியும்?
தொடர்ந்து நல்ல தகவல்களைக் கொடுப்பதற்கும், நல்ல விவாதத்திற்கும் ,பங்களிப்புக்கும் நன்றி
மேலும் விவாதிப்போம்
கல்வெட்டு,வவ்வால் அருமையான தகவல்கள்,யோசனைகள் தந்துள்ளீர்கள்.கிராம விவசாய கணனிமையம் விவசாயிகளுக்கு என்னதேவையோ அதை வழங்கமுடியாவிட்டால் அது பயனற்றது என்பது எனக்கு அனுபவபூர்வமானது.
அரசின் ஒத்துழைப்பு இல்லையெனில் எந்த பயனுமில்லை.
என்னை பொறுத்தவரை மென்பொருள் உருவாக்கம்,தகவல் திரட்டுதல் போன்றவற்றைவிட முக்கியமானது ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளுக்கு என்ன தேவை?அதை நிறைவேற்ற என்னென்ன செய்யலாம் என்பதே.
குறிப்பாக முதலில் இடுபொருட்கள்,விவசாய நவீன இயந்திரங்கள்,அடுத்து விவசாய தொழில்நுட்பங்கள் முதலியவற்றை ஒவ்வொரு கிராமத்திலும் கிடைக்க ஏற்பாடுசெய்யலாம்.
இதற்கு நம்பகமான வழி அரசு சாரா அமைப்பு ஒன்று உருவாக்குவது முதல் படியாக இருக்கலாம்.
முதலில் கிராமம்,அடுத்து பஞ்சாயத்து,ஒன்றியம்,வட்டம்,என இதன் சேவையை பின்னர் விரிவுபடுத்தலாம்.இதுதான் தற்போதைக்கு சிறந்தவழியாக கருதுகிறேன்.
கல்வெட்டு,
//வேண்டுமானால் இந்த திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அலச ஒரு விவாதத்தை தொடங்கலாம்.//
உங்கள் பின்னூட்டத்தை தனி இடுகையாகப் போட்டு விடுகிறேன்.
வவ்வால்,
//இதனை செய்வதற்கு அரசு தயங்க காரணம் இதற்கு என்று மேலும் விரிவான ஒரு நெட்வொர்க், ஆள்பலம், விரைந்து செயல்படும் வேகம், விவசாயிகளுக்கு இதனை புரியும் படி விளக்கி ,முறையாக பின்பற்ற வைத்தல் ஆகியவை செய்ய வேண்டும். வேளான் துறைக்கு வேலைப்பளு அதிகரிக்கும் .//
நமக்கு நாமே என்று கிராமம் தோறும் ஆரம்பித்துப் பார்க்கலாம். ஒன்றும் இல்லா விட்டாலும், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் எந்த ஊரில் என்ன பயிர் போடப்பட்டுள்ளது என்று தெரிய வருமே!
கல்வெட்டு
//நாம் முதலில் தகவல் தொழில் நுட்ப அளவில் தகவல் சேகரிப்பு/ பயிர்ப் பதிவு / விளைச்சல் Forecast போன்றதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டால் விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வை உண்டக்கலாம்.
//micro credit போல் இதனை கிராம அளவில் விவசாய சுய உதவிக் குழுக்கள் போன்று வேர் அளவில் இறங்கி செயல் படுத்தலாம்.
//அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மிகவும் சுலபம் பார்க்கலாம்.
//நம் முயற்சி தோல்வி அடைந்தால் கூட முயன்ற திருப்தியும், நாம் செய்த தவறுகள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிற்காலத்தில் பயன் படலாம். எத்தனை காலத்துக்கு விவசாயியை புறக்கணிக்க முடியும்?
ஆமென்!!
ஸ்ரீ,
//இதற்கு நம்பகமான வழி அரசு சாரா அமைப்பு ஒன்று உருவாக்குவது முதல் படியாக இருக்கலாம்.//
//முதலில் கிராமம்,அடுத்து பஞ்சாயத்து,ஒன்றியம்,வட்டம்,என இதன் சேவையை பின்னர் விரிவுபடுத்தலாம்.இதுதான் தற்போதைக்கு சிறந்தவழியாக கருதுகிறேன்.//
பத்தாயிரம் மைல் பயணமும் முதல் அடியில்தானே தொடங்குகிறது. கல்வெட்டு சொல்வது போல முயற்சித்துப் பார்ப்போம்.
அன்புடன்,
மா சிவகுமார்
கல்வெட்டு,வவ்வால் இருவரும் தொடர்ந்துவரும் நடைமுறைகள் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்க்கு மிக்க நன்றி. இடையிடையே தனது நேரிடை அனுப்பங்கள் மூலம் செறிவூட்டும் sree அவர்களுக்கும், இதை பேசும் பொருளாக கொணர்ந்த சிவா அவர்வளுக்கும் நன்றிகள்.
இப்பொதைக்கு ஒரு வாசிப்பாளனாக வெளியில் இருந்து நடக்கும் ஒரு நல்ல தகவல் பரிமாற்றத்தை நுகர்ந்து வருகிறேன்.
//ஒரு வாசிப்பாளனாக வெளியில் இருந்து நடக்கும் ஒரு நல்ல தகவல் பரிமாற்றத்தை நுகர்ந்து வருகிறேன். //
நானும்.. சில தகவல்கள் எனக்குத் தலைக்கு மேலே போவதாக தோன்றினாலும், விடாமல் கவனித்து வருகிறேன்.. பின்னூட்டங்கள் தனிப்பதிவாக வரும்போது ஓரளவுக்கு எனக்குத் தெளிவு வரும் என்று நம்புகிறேன்..
டண்டணக்கா, பொன்ஸ்,
தொடர்ந்து கவனித்து உங்கள் கருத்துக்களையும் பதித்தால் பலருக்கும் பலனளிக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக