ஓசை செல்லா தொலைபேசி சென்னையில் இருப்பதாகவும் மாலையில் மெரீனா கடற்கரையில் சந்திக்கலாம் என்றும் காலையில் சொல்லியிருந்தார். அது குறித்து லக்கிலுக்கின் அஞ்சலும் வந்திருந்தது.
அலுவலகத்திலிருந்து 6.20க்கு, வினையூக்கியின் வீட்டில் ஆறரைக்கு, ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து ஜெமினி வட்டம். அதன் பிறகு அகலமான சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் என்று ஆரம்பித்திருக்கும் தலைவலியால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்தான். அதற்கு யார் என்ன அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள், அத்தனை கார்களை எப்படி நெருக்கடி கொடுக்க விடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.
'காந்தி சிலையின் பின்னால் ஒரு குளம் மாதிரி இருக்கும், தண்ணீ இருக்காது' என்று லக்கிலுக்கின் தொலைபேசி வழிகாட்டலைப் பின்பற்றி போய்ச் சேர்ந்து விட்டோம்.
என்னுடைய கைபேசியில் யாரையாவது அழைத்தால் 'அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் பில் கட்டணம் செலுத்தும் நாள் கடந்து விட்டது. தடை இல்லாத சேவையைப் பெற உடனடியாக பணம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்' என்று ஒரு இயந்திரக் குரல், தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்காமலேயே நிறுத்தி விட்டேன். (அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் பேசி விட்டு அதன் பிறகு இணைக்கிறார்கள் என்பது அடுத்த நாள் காலையில் தெரிந்தது. 'பில் கட்டியாச்சா' என்று கூப்பிட்டுக் கேட்ட இளைஞரிடம் குமுறியதில் அந்த குரலை உடனே நீக்கித் தந்து விட்டார். அது அடுத்த நாள் காலையில்). தொலைபேசியில் யாரையும் அழைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
செல்லாவும் சிவஞானம்ஜியும் உட்கார்ந்திருக்க, லக்கியும் அதியமானும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வரப் போயிருக்கிறார்களாம். ஆழியூரானின் வண்டி பாதியில் நின்று விட்டிருக்கிறது. நான்கு பேரும் வந்து சேரும் இடைவெளியில் அவித்த கடலைப் பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். செல்லா பஜ்ஜி வாங்கி வந்திருந்தார்.
அதியமான் 'என்ன மொட்டை எல்லாம் போட்டிருக்கீங்க, உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே' என்று ஆரம்பித்து, 'மோடி ஜெயித்து விட்டாரே' என்று தொடர்ந்து தனக்குப் பிடித்த விவாதங்களைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார். 'அதியமான் இருக்கும் இடத்தில் சூட்டுக்குக் குறைவே கிடையாது'
இடையில் ஆழியூரானின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் மட்டும் அதியமானுக்கு சரக்கு இருக்கவில்லை. மற்ற எல்லாவற்றிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். முறுக்கு, போளி என்று அடுத்த சுற்று ஆரம்பமானது. ஒன்பது மணி ரயிலைப் பிடிக்க சந்திப்பின் காரணகர்த்தா செல்லா கிளம்பி விட மற்றவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம். செல்லா தொலைபேசி 'உருப்படியாக புராஜக்ட் தமிழ் ரெடி பற்றிக் கொஞ்சம் பேசுங்க' என்று நினைவூட்டினார்.
ஒன்பது மணிக்கு பாலபாரதி கூட்டத்தை முடித்து வைத்தார், சுறுசுறுப்பாக வண்டியை எடுத்தால், 'பின்பக்கம் காத்து குறைவா இருக்கு' என்று எச்சரித்தார்கள். சில அடிகள் போகும் போதே உள்டியூபில் ஓட்டை என்று தெரிந்து விட்டது. அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டு லக்கி தனது வண்டியில் பஞ்சர் பார்ப்பவரை அழைத்து வருவதாகக் கிளம்பினார். ஆழியூரான் தனது வண்டிக்கு வழி செய்யக் கூடவே போனார்.
லக்கியின் உதவியைப் பிடித்துக் கொண்டு நான் பாலபாரதி, வினையூக்கி, அதியமான் சேர்ந்த அரட்டையில் கலந்து கொண்டேன். சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும் படி லக்கி கலக்கிக் கொண்டிருந்தார். டியூப் வேலைக்காகாது என்று புதுசு போட்டு விட்டார்கள், 160 ரூபாயாம், அவ்வளவுக்குக் கையில் காசு இருக்கவில்லை. அதியமானிடம் நிதி திரட்டிப் பணம் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.
அதியமானும், வினையூக்கியும், ஆழியூரானும், நானும் எங்காவது சாப்பிட்டு விட்டுத் தொடர முடிவு செய்தோம். கடற்கரைச் சாலையைத் தாண்டி வெளியே வரும் போதே வண்டி இன்னும் ஆடுவது போலப் பட்டது. பார்த்தால் முன் சக்கரத்திலும் ஓட்டை விழுந்திருக்கிறது. யாராவது வேண்டுமென்றே கிழித்திருப்பார்களோ என்று சந்தேகப் புத்திக்கு, 'ஒரு ஆணி முன்னால் குத்தி, அப்புறம் பின் சக்கரத்தையும் பதம் பார்த்திருக்கும்' என்று ஆழியூரான் சொன்னார்.
பத்தரை மணிக்கு மேல் பஞ்சர் கடையைத் தேடி, நண்பர்களின் உதவியோடு, அண்ணா சாலை பள்ளிவாசலின் அருகில் போய்ச் சேர்ந்தோம். இந்த டியூபும் வேலைக்காகது. அடுத்த 160 ரூபாய்கள். முன்பக்க டயரும் வழுக்கையாகி விட்டது என்று எச்சரித்தார்.
எதிரில் இருந்த புகாரி ஓட்டலின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்ததால் அங்குதான் சாப்பிடப் போகிறோமோ என்று நினைத்தால், அதன் அருகிலேயே அருந்த வசந்தபவன் வரவேற்றது. இட்லி, இன்னும் ஒரு பிளேட் இட்லி, இன்னும் ஒரு இட்லி என்று சாப்பிட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு முன்பனிக் குளிரில் நடுங்கிக் கொண்டே வீடு வந்து சேரும் போது நள்ளிரவு பன்னிரண்டு தாண்டி விட்டிருந்தது.
8 கருத்துகள்:
:):)
சிவா சார்,
அன்று அந்த டயர் பஞ்சர் மற்றும் அதைத்தொடர்ந்து வந்த அலைச்சல்கள் சிரமமாக இருந்தாலும், அன்றைய தினம் கற்றுக்கொண்டப் பாடங்கள் அதிகம்.
1.வெளியில் செல்லும்பொழுது குறைந்தது 500ரூபாய் எமர்ஜென்சி தேவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
2. ஒரு டயர் பஞ்சரானால் இன்னொரு டயரும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் எந்த இக்கட்டான சூழலில் இருந்தாலும் , நண்பர்கள் சூழ இருக்கும்போது மிகப்பெரும் சிக்கல்கள்கூட சூரியனைக்கண்ட பனிபோல விலகும்.
பாலபாரதி,லக்கிலுக் ஆகியோரின் உதவியும் , இரண்டாவது பஞ்சருக்குப்பின் ஆழியுரானின் தொடர் உதவியும், அதியமானின் உதவிகளும், அதைத்தொடர்ந்து அவர் நமக்களித்த நள்ளிரவு டின்னரும் என்றும் மறக்க முடியாதது.
நன்றி சார் பகிர்ந்து கொண்டமைக்கு
அன்புடன்
வினையூக்கி செல்வா
//1.வெளியில் செல்லும்பொழுது குறைந்தது 500ரூபாய் எமர்ஜென்சி தேவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.//
அப்படியானால், எமர்ஜென்சி தேவைக்கு 500 ரூபாய்கூட வைத்துக் கொள்ள முடியாதவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வரவே கூடாது.. சரி.. ரொம்பச் சரி..
//2. ஒரு டயர் பஞ்சரானால் இன்னொரு டயரும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.//
எதுக்கு கொஞ்ச தூரம் போய் நிறுத்தி இன்னொரு டயருக்கும் பஞ்சர் போடணும்.. ஒரு டயருக்கு போடும்போதே இன்னொண்ணுக்கும் சேர்த்தே போட்டிரணும்.. சரி.. ரொம்பச் சரி..
//ஆனால் எந்த இக்கட்டான சூழலில் இருந்தாலும் , நண்பர்கள் சூழ இருக்கும்போது மிகப் பெரும் சிக்கல்கள்கூட சூரியனைக்கண்ட பனிபோல விலகும்.//
இந்த அளவுக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் டயருக்கு பஞ்சர்கூட ஒட்ட முடியும்.. இல்லாவிடில் நடராஜா சர்வீஸ்தான்.. சரி.. ரொம்பச் சரி..
முருகா.. உன் விளையாட்டே விளையாட்டு..
எனக்கெல்லாம் இப்படி எந்த பிரெண்ட்டையும் கண்ல காட்ட மாட்டேங்குறியேடா..
இல்லாதவங்களுக்கு கொடுக்கிறதை விட்டுட்டு இருக்கிறவங்களுக்கே கொடுத்துக்கிட்டே இருக்கியேடா..
முருகா.. முருகா.. முருகா..
@உண்மைத்தமிழன் சார்,
வாகனங்கள் வைத்திருப்பவர்கள் 500ரூபாய் எமர்ஜென்சிக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
உண்மைத்தமிழன் நாங்க எல்லாம் உங்க நண்பர்கள் தானே, முருகன் உதவிக்கு வராரோ இல்லையோ நாங்க கண்டிப்பாக வருவோம்.
உண்மைத்தமிழன் நீங்கள் ஒரு மொக்கைதமிழன் என்று போகிற இடங்களிலெல்லாம் நிரூபித்து கொண்டேயிருக்க வேண்டுமா என்ன?
இவ்வளவு நாள் கழித்து இந்தப்பதிவு
ஏன்?
ஓ!
அடுத்த சந்திப்பிற்கு நேரம் நெருங்கி
விட்டதா?
சரி ஏற்பாடு செய்யுங்க
மாசி,
ஆமாம் இது எந்த வருஷத்து வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு :-))
பழைய பங்சர் கதைய தூசு தட்டி போடும் அளவுக்கு எழுத மேட்டர் பஞ்சமா :-))
அனேகமாக இப்போ சமீபமாக உங்க வண்டி மீண்டும் பங்சர் ஆகி இருக்கும், அதன் விளைவாக பழைய நினைவுகள் கிளரப்பட்டு இதை போட்டிங்கனு நினைக்கிறேன் :-))(இல்லை யாராவது பேசி நினைவூட்டிடாங்களா)
//சில அடிகள் போகும் போதே உள்டியூபில் ஓட்டை என்று தெரிந்து விட்டது.//
அது என்ன புதுசா உள்டியூப் , அப்போ வெளி டியூப்னு ஒன்று இருக்கா . வெளில இருந்தா அதுக்கு பேரு டயர் :-))
//பார்த்தால் முன் சக்கரத்திலும் ஓட்டை விழுந்திருக்கிறது. யாராவது வேண்டுமென்றே கிழித்திருப்பார்களோ என்று சந்தேகப் புத்திக்கு, 'ஒரு ஆணி முன்னால் குத்தி, அப்புறம் பின் சக்கரத்தையும் பதம் பார்த்திருக்கும்' என்று ஆழியூரான் சொன்னார்.//
எனக்கு கூட ஒருமுறை இந்த மாதிரி நடந்த்திருக்கிறது. அங்கே ஆணிக்கோ, முள்ளுக்கோ வேலையில்லை. சில விஷமிகள் இதற்காகவே திரிகிறார்கள் என்று நினைக்கிறேன். வண்டியில் எதாவது பொருள் வைத்திருந்தால் அது காணாமல் போகவும் வாய்பிருக்கிறது.
வால்பையன்
வணக்கம் வினையூக்கி,
உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்தான்.
உண்மைத்தமிழன்,
உண்மையான பக்தி இருந்தால் முருகன் அருள் புரிவார் :-)
சிவஞானம்ஜி, வவ்வால்,
எழுதியது என்னவோ அப்பவே செய்து விட்டேன். வரைவில் போட்டு வைத்து பல நாட்கள் கழித்துதான் வெளியிடலாம் என்று தோன்றியது. வெளியிட்டேன்.
மேட்டர் பஞ்சம் எல்லாம் வரவே வராது. ஒன்னும் இல்லைன்னா, தோசை சுட்டது, பேருந்தில் போனது என்று கொட்டிக் கிடக்குதே ஒவ்வொரு நாளும் :-)
வால்பையன்,
அப்படி விஷமிகளின் செயலாக இருக்கக் கூடாது என்று ஆசை!
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக