ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

சீனா மனிதர்கள் மூலம் - கல்லூரி மாணவி

சீன மொழி தெரியாமல் சீனாவில் எதுவும் செய்ய முடியாது. நான் போய்ச் சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு சீனர் ஏற்கனவே இருந்தார். ஆனால், நாங்கள் இரண்டு பேரும் தனித்தனியாக செயல்பட்டு வணிகத்தைப் பெருக்க வேண்டும் என்று நிறுவனத்தின் திட்டம். அவருடனே நான் சுற்றிக் கொண்டிருந்தால் அந்தத் திட்டம் என்ன ஆவது!

சரி, சீன மொழி பேசத் தெரியா விட்டால், யாராவது ஒரு மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே! அந்த வழியில் இறங்கினேன். ஒரு நாள் தரையடி ரயிலில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருக்கும் போது அன்னிய முகத்தைப் பார்த்த ஒரு சீன இளைஞர் என்னை அணுகி ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேச முடியும் சீனர்கள் மிகச் சிலரே இருந்தார்கள். அது பணக்காரர்கள் ஆவதற்கான கடவுச் சீட்டு போன்ற திறமை.

ராய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனது பெயர் அட்டையைக் கொடுத்து ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளும்படி சொன்னார். அவரிடம் உதவி கேட்கலாம் என்று தொலைபேசினேன். அடுத்த வார இறுதியில் வீட்டுக்கே வந்து விட்டார். தான் இப்போது நல்ல வேலையில் இருப்பதாகவும் அதனால் வேறு ஒருவரை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் சொன்னார்.

கல்லூரி மாணவர் யாராவது பகுதி நேரத்தில் எனக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்தால் போதும் என்று முடிவு செய்தோம். அவரது மாநிலத்தில் இருந்த போது அவர் ஆங்கில ஆசிரியராக ஒரு பள்ளியில் பணியாற்றினாராம். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்தவர்கள் பலர் சாங்காயில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மார்கரெட் என்ற பெண் மிகத்திறமையானவள். அவளைப் பார்க்க அழைத்துப் போகிறேன் என்று சொன்னார்.

ஒரு நாள் சாங்காய் ஜியாவ்தோங் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அழைத்துப் போனார். சந்திக்க வேண்டிய பெண் அறையில் இல்லை. அவரது அறைத் தோழியர் நான்கைந்து பேர் வரவேற்று உட்கார வைத்தார்கள். இந்தப் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். பல்கலையில் முதுநிலை மேலாண்மை பட்டம் பயின்று கொண்டிருந்தார். இது கடைசி பருவம் ஆதலால், நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். பகுதி நேர மொழிபெயர்ப்பாளர் பணி செய்ய முடியும் என்று ஒத்துக் கொண்டார். வாரத்துக்கு 400 யுவான் என்று மாதம் 1600 யுவான்கள் சம்பளம்.

ஆங்கிலப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்று மார்கரெட்டை கை விட்டு விட்டேன். என்னுடைய உதவியாளர் போல ஆகி விட்டார் நிங். நான் வாங்கிய கணினிக்கு இணைய இணைப்பு சீன தகவல் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து வாங்கிக் கொடுத்ததில் ஆரம்பித்து, நிறுவனத்தைப் பற்றிய குறிப்பை சீன மொழியில் மொழி பெயர்த்து, விற்பனைக்கு எந்த ஊருக்குப் போகலாம் என்று துப்புத் துலக்கி சரியான சந்தையையும் பிடித்து விட்டார்.

'நான் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர், தெரியுமா' என்று ஒரு நாள் கேட்டார். 'அப்படியா' என்று பரபரப்பில்லாமல் கேட்டுக் கொண்டேன். 'அது என்ன இவ்வளவு சாதாரணமாக கேட்டுக் கொள்கிறீர்கள், எல்லோரும் கட்சியில் சேர்ந்து விட முடியாது தெரியுமா, எங்க வகுப்பிலேயே விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையினர்தான் கட்சி உறுப்பினர்கள். பல ஆண்டுகள் முயற்சித்து, பல பணிகளை முடித்து, கட்சி நம்பிக்கையைப் பெற்றால்தான் உள்ளேயே விடுவாங்க. நானும் அதை சாதிச்சவ'

அப்பவும் எனக்கு அது பெரிய சாதனையாக படவில்லை.

நிங்கின் வகுப்புத் தோழன் ஷூகாங் என்பவர். அவரையும் எங்கள் நிறுவனத்தில் சேர வைத்து விட வேண்டும் என்று எனக்கு எண்ணம். அவரை விருந்துக்கு அழைக்குமாறு நிங்கை தொந்தரவு செய்து ஒரு நாள் மூன்று பேரும் சாங்காயின் விலை உயர்ந்த இந்திய உணவகத்திற்குப் போனோம். எனது கனவுகள் எல்லாம், ஆங்காங்கில் டாடா நிறுவன அலுவலகத்தைப் போல நான் சாங்காயில் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான்.

17 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

வாரம் 400ன்னு ரொம்பம் மலிவுன்னு சொல்றார் கோபால். இவரோட மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு நாளைக்கு 50 அமெரிக்கன் டாலர்கள் கொடுக்கிறாராம்.

ஒரு சின்னக் கையேடு வச்சிருந்தாலும், தங்கும் ஹோட்டேலில் அதைப் பார்த்து எதாவது சொல்றதுக்குள்ளே அங்கிருப்பவரே ஆங்கிலத்தில் பேசிவிடுவாராம்:-))))

நமக்குத் தெரிஞ்சதெல்லாம் நீ ஹா(ங்) தான்:-)

சுவையா இருக்கு உங்க பதிவு.

ம்.அப்புறம் என்னாச்சு?

வினையூக்கி சொன்னது…

சார், சீக்கிரம் அடுத்தப்பகுதி போடுங்க

வடுவூர் குமார் சொன்னது…

சீனத்தொடரா?

வஜ்ரா சொன்னது…

//
'நான் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர், தெரியுமா' என்று ஒரு நாள் கேட்டார். 'அப்படியா' என்று பரபரப்பில்லாமல் கேட்டுக் கொண்டேன். 'அது என்ன இவ்வளவு சாதாரணமாக கேட்டுக் கொள்கிறீர்கள், எல்லோரும் கட்சியில் சேர்ந்து விட முடியாது தெரியுமா, எங்க வகுப்பிலேயே விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையினர்தான் கட்சி உறுப்பினர்கள். பல ஆண்டுகள் முயற்சித்து, பல பணிகளை முடித்து, கட்சி நம்பிக்கையைப் பெற்றால்தான் உள்ளேயே விடுவாங்க. நானும் அதை சாதிச்சவ'

அப்பவும் எனக்கு அது பெரிய சாதனையாக படவில்லை.
//

இருப்பது ஒரே கட்சி. அதில் சேர்ந்துவிட்டதால் என்ன பெரிய சாதனை ? அப்படியே நம்பிக்கையைப் பெற்று சேர்ந்துவிட்டால் உடனடியாக போலிட் பீரோ மீட்டிங் மினிட்ஸ் எல்லாம் கொடுக்கவா போகிறார்கள் ? சீன அரசியல் எல்லாம் குழந்தைக்குக் கூடத் தெரியும் எவ்வளவு regressive என்று. அதைச் சொல்லிப் பெருமைப்படும் அளவுக்கு மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது என்பதை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

சின்னப் பையன் சொன்னது…

நல்லா இருக்கு... சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க...

பெயரில்லா சொன்னது…

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள்
ஆளுங்கட்சியைப் பார்த்து
குரைப்பார்கள்,
சீனாவில் மக்களை
கடிப்பார்கள் என்று என் நண்பன்
சொன்னான்.. உண்மையா.....?

வால்பையன் சொன்னது…

சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆதலால். வேலையில்லா திண்டாட்டம் இருக்க வேண்டுமே. அது பற்றியும் அதை முறியடிக்க அவர்கள் என்னமாதிரியான முயற்சி செய்கிறார்கள் என்ற பதிவும் போட்டால் கொஞ்சம் உதவியாய் இருக்கும்

வால்பையன்

KARTHIK சொன்னது…

மஞ்சள் நதியின் தற்போதைய நிலை பற்றியும் எழுதுங்கள்.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

//

சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆதலால். வேலையில்லா திண்டாட்டம் இருக்க வேண்டுமே. அது பற்றியும் அதை முறியடிக்க அவர்கள் என்னமாதிரியான முயற்சி செய்கிறார்கள் என்ற பதிவும் போட்டால் கொஞ்சம் உதவியாய் இருக்கும்

வால்பையன்

//


வால்,


எந்த நாட்டில் அரசு வேலையே வேலை மற்றவேலையெல்லாம் வேலையே இல்லை என்ற நம்பிக்கை மேலோங்கி இருக்குமோ அந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும்.


சுயபுத்தியைப் பயன் படுத்தி, தன்னிடம் உள்ள முதலைப் போட்டு அபிவிருத்தி செய்யும் அருகதை இல்லாத தருதலைகளை உருவாக்கிடும் சோசியலிசக் கொள்கையை நாட்டின் அரசியல் சாசனத்தில் எழுதிக் கடைபிடிக்கும் நாட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும்.


கம்யூனிஸ்டு நாடான சீனாவில் எப்படி என்பதை மா.சி. விளக்குவார்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க அக்கா,

நான் எழுதுவது 1997ல் நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஆங்கிலப் பயன்பாடு பெருமளவு அதிகரித்திருக்கிறது என்று அறிகிறேன்.

கூடவும், ஒரு நாளுக்கு என்று வேலைக்கு வைத்தால் அதிகக் கட்டணம் ஆகும். மாதச் சம்பளத்தில் அல்லது வாரச் சம்பளத்தில் உதவியாளர் கிடைத்தால், செலவு குறையும்.

நீ ஹாவ்!

//ம்.அப்புறம் என்னாச்சு?//
கொஞ்ச கொஞ்சமா எழுத முயற்சிக்கிறேன்.

வினையூக்கி, சின்னப்பையன்,

அடுத்த பகுதி இன்னும் எழுதவில்லை. எழுதி போடுகிறேன். :-)

வஜ்ரா,

//இருப்பது ஒரே கட்சி. அதில் சேர்ந்துவிட்டதால் என்ன பெரிய சாதனை ? அப்படியே நம்பிக்கையைப் பெற்று சேர்ந்துவிட்டால் உடனடியாக போலிட் பீரோ மீட்டிங் மினிட்ஸ் எல்லாம் கொடுக்கவா போகிறார்கள் ?//
நம்ம ஊர் சுண்டைக்காய் கட்சிகள் போல இல்லை. உண்மையிலேயே தகுதி பெற்றவர்கள்தான் கட்சிக்குள் நுழைய முடியும். விதிவிலக்குகள் பல இருந்தாலும் ஒரு meritocracy முறை நிலவுவதாகத்தான் எனக்குப் புரிந்தது.

அரசியல் தலைவர்கள், அரசாங்க பொறுப்பேற்பவர்கள் திறமையாக செயல்படுகிறார்கள்.

பாலா (பின்னூட்ட பாலா?),

மொத்த மக்கள் தொகையில் சுமார் 7% கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் என்று நினைவு. உண்மையிலேயே சமூகத்தின் பல துறைகளிலிருந்தும் பல பின்னணிகள் உள்ளவர்கள் கட்சிப் பணி ஆற்றுகிறார்கள். அந்த முறையில் பல நன்மைகள் இருக்கின்றன. (அதன் பாதகங்களைக் குறித்து நிறையப் பேசித் தீர்த்திருக்கிறோம்.)

வால்பையன்,

//சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆதலால். வேலையில்லா திண்டாட்டம் இருக்க வேண்டுமே.//

திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறியதிலிருந்து வேலை வாய்ப்புகள் பெருமளவு பெருகியிருக்கின்றன. விவசாயிகள், கிராமப் புற மக்கள், ஆங்கில அறிவு போதாதவர்கள் நிலைமை முன்னேறுவதுதான் சிக்கலாக இருந்து வருகிறது.

வாய்ப்பு கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்.

கார்த்திக்,
//மஞ்சள் நதியின் தற்போதைய நிலை பற்றியும் எழுதுங்கள்.//
மாசுப் படுதலைக் குறித்து சொல்கிறீர்களா? வெள்ளச் சீற்றங்களைக் குறிப்பிடுகிறீர்களா? எனக்கு விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.

//கம்யூனிஸ்டு நாடான சீனாவில் எப்படி என்பதை மா.சி. விளக்குவார்.//
சீனாவில் மக்களின் வாழ்க்கைத் தரம் இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறிது முன்னேறியே இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

இது நகரங்களுடன் மட்டுமின்றி, நான் பயணம் செய்து பார்த்த கிராமங்களையும் கருத்தில் வைத்துச் சொல்வது.

"கம்யூனிஸ்டு" ஆட்சி சாதித்த நன்மைகள்:

1. பெண்களுக்கு பல நிலைகளில் சமநிலை, ஒரு தொழிற்சாலை தலைமை மேலாளராள ஒரு பெண் பணியாற்றுவது இயல்பாகப் பார்க்கலாம். பேருந்து ஓட்டுனர், அரசியல் தலைவர்கள் என்று எல்லா நிலைகளிலும் பெண்களின் சமூக உரிமைகள் நம்ம ஊரை விடப் பல மடங்கு முன்னேறி இருக்கிறது

2. குழந்தைத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்ல வேண்டும்.

3. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி அரசால் கொடுக்கப்பட்டு விடுகிறது.

4. பட்டினியால் சாவு என்பது ஒழிக்கப்பட்டு விட்டிருக்கிறது.

5. மதங்களின் பெயரால் மக்களை ஏய்க்கும் கூட்டங்கள் செயல்பட முடிவதில்லை.

இவற்றில் சில நாம் ஏற்றுக் கொள்ளும் கொள்கைகளுக்கு எதிராகவும், பல விஷயங்களில் நிலைமை மோசமாக இருந்தாலும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் பங்களிப்பு பல இடங்களில் நல்லத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறியதிலிருந்து வேலை வாய்ப்புகள் பெருமளவு பெருகியிருக்கின்றன. விவசாயிகள், கிராமப் புற மக்கள், ஆங்கில அறிவு போதாதவர்கள் நிலைமை முன்னேறுவதுதான் சிக்கலாக இருந்து வருகிறது.
//

சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் மாறியது 1970 களில், நாம் மாறியது 1990 களில். 20 ஆண்டுகள் gap இரண்டு நாடுகளுக்கும் இன்றும் இருக்கிறது. அந்த இடைவெளி குறைவதை நம்மூர் கம்யூனிஸ்டுகள் விரும்புவதில்லை.

நம் செய்தித் தாள்கள் மற்றும் ஒலி, ஒளி ஊடகங்களில் சீனக் கொடி தாங்கிகள் கம்யூனிஸ்டுகளாக இயங்கி தைரியமாக வலம் வரும் போது, ஏன் சீன ஊடகங்களில் இந்தியக் கொடி தாங்கிகள்
வலம் வருவதில்லை ?



//

நம்ம ஊர் சுண்டைக்காய் கட்சிகள் போல இல்லை. உண்மையிலேயே தகுதி பெற்றவர்கள்தான் கட்சிக்குள் நுழைய முடியும். விதிவிலக்குகள் பல இருந்தாலும் ஒரு meritocracy முறை நிலவுவதாகத்தான் எனக்குப் புரிந்தது.

//


நம்மூரில் நெருவின் சோசியலிசத்தால் சீரழிக்கப்பட்ட காங்கிரஸ் தவிர வேறு நல்ல கட்சிகள் இருக்கின்றன. கட்சிக்குள் ஜனநாயகத்தைச் செயல்படுத்தும் கட்சிகள் தான் ஜனநாயக நாட்டை ஆளத் தகுதி பெற்ற கட்சிகள்.

KARTHIK சொன்னது…

//மாசுப் படுதலைக் குறித்து சொல்கிறீர்களா? //

ஆம் அண்ணா
பெருளாதார வளர்ச்சியின் காரணமாக.
அன் நதியின் இன்றைய நிலை பற்றியும் குறிப்பிடுங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,
//அவர்கள் மாறியது 1970 களில், நாம் மாறியது 1990 களில். 20 ஆண்டுகள் gap இரண்டு நாடுகளுக்கும் இன்றும் இருக்கிறது.//

கூடவே சமூக அமைப்புகளில் செய்யப்பட் பெருமளவு மாறுதல்களும் சீன சமூகம் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கிறது.

நம் நாட்டில் அந்த வகையில் பின்தங்கியே இருக்கிறோம். தமிழ் நாட்டில் பெரியாரின் சீர்திருத்த இயக்கம் போல ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தோன்றி அவையும் காலப் போக்கில் நீர்த்துப் போய் இன்றைக்கு பிற்போக்குவாதிகளின் எதிர்த் தாக்குதல் கூட ஆரம்பித்திருக்கிறது.

அந்தக் காரணிகளுக்கு நல்ல தீர்வு காண்பது வரை இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுவது சிரமம்தான். நாடாளுமன்ற மக்களாட்சி முறை, கருத்துரிமை போன்ற தனி மனித கூறுகளில் இந்தியா முந்துகிறது.

//கட்சிக்குள் ஜனநாயகத்தைச் செயல்படுத்தும் கட்சிகள் தான் ஜனநாயக நாட்டை ஆளத் தகுதி பெற்ற கட்சிகள்.//
சீனக் கம்யூனிஸ்டு கட்சிக்குள் வாக்குப் பெட்டி ஜனநாயகம் இல்லா விட்டாலும், சீனர்களுக்கே உரித்தான ஒருமித்த கருத்து அடிப்படையிலான ஜனநாயகம் இருக்கிறது.

கார்த்திக்,

//பெருளாதார வளர்ச்சியின் காரணமாக.
அன் நதியின் இன்றைய நிலை பற்றியும் குறிப்பிடுங்கள்.//

எங்காவது படித்துதான் எழுத வேண்டும். நேரடியாக மாசுபடுதல் குறித்து தெரிந்து கொண்டிருக்கவில்லை.

தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து பெரிய ஆறுகளையே பார்த்திராத எனக்கு யாங்சே ஆறு ஒரு பெரிய கடல் போலத்தான் தெரிந்தது.

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
கூடவே சமூக அமைப்புகளில் செய்யப்பட் பெருமளவு மாறுதல்களும் சீன சமூகம் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கிறது.

நம் நாட்டில் அந்த வகையில் பின்தங்கியே இருக்கிறோம். தமிழ் நாட்டில் பெரியாரின் சீர்திருத்த இயக்கம் போல ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தோன்றி அவையும் காலப் போக்கில் நீர்த்துப் போய் இன்றைக்கு பிற்போக்குவாதிகளின் எதிர்த் தாக்குதல் கூட ஆரம்பித்திருக்கிறது.
//

எத்தகய சமூக அளவிலான மாற்றங்கள் என்று தயவு செய்து விளக்குங்கள். பெரியார் செய்தது ஒரு social experiment, அந்த எக்ஸ்பெரிமெண்ட் தோல்வியில் முடிந்து விட்டது. அதையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும், மற்றவர்களும் அதை கடைபிடிக்கவேண்டும் என்று நம்புவது முட்டாள்தனம்.


சமூக அளவில் சீனாவில் ஹான் இனத்தவர் மற்ற இனத்தவரை படுகொலை செய்தும், மற்றவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், சீனத் தொன்மங்களை அழித்தும், வேரில்லாச் சமுதாயத்தை உருவாக்கியும் பல அக்கிரமங்கள் செய்துள்ளனர்.


பழம்பெரும் பொக்கிஷங்களான புத்தகங்களை எரித்து, நகரங்களில் இருந்து மக்களை கிராமங்களுக்கு விரட்டிஅடித்தது போன்ற "நல்ல" சமூக மாற்றங்கள் செய்துள்ளனர்.


அதையெல்லாம் பார்த்த சீன மக்கள் இன்று எல்லாத்துறையிலும் நின்று அடி வெளுக்கிறார்கள் என்றால் அவர்களின் தன் நம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வஜ்ரா,

//எத்தகய சமூக அளவிலான மாற்றங்கள் என்று தயவு செய்து விளக்குங்கள்.//

ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெரும்பான்மை மக்களை தளைகளிலிருந்து விடுவிக்க அறிவுத் தளம் அமைத்துக் கொடுத்தது. அதற்கான நடைமுறை செயல்களை தெருவில் இறங்கிச் செய்தது.

செயல்படுத்தலில் சில வெறுப்பூட்டும் கசப்பூட்டும் நிகழ்வுகளும் இருந்தாலும் முழுமையாக பார்க்கும் போது நிகழ்ந்த மாறுதல்கள், தமிழகத்தின் தலைவிதியையை மாற்றி அமைத்து இன்றைக்கு ஆசியாவிலேயே சிறப்பாக இயங்கும் பொருளாதார சமூகங்களில் ஒன்றாக உருவெடுக்க வைத்திருக்கிறது.

//பெரியார் செய்தது ஒரு social experiment//

சின்ன correction, அது ஒரு சமூகப் புரட்சி. கழுத்தை நெறிக்கும் சமூக அமைப்பில் ஒடுங்கிக் கிடந்த மக்களுக்கு குரல் எடுத்துக் கொடுத்த மாபெரும் மாற்றம் அது.

//அந்த எக்ஸ்பெரிமெண்ட் தோல்வியில் முடிந்து விட்டது.//
நீங்கள் வடமாநிலங்களில் பயணிக்கவும் வசிக்கவும் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழகத்தைப் போல சீர்திருத்தங்கள் நடக்காத மாநிலங்களின் அவலங்கள் நாடறிந்த உண்மை. இன்றைக்கும் உத்தர பிரதேசத்தின் நலிந்த சமூகத்தினருக்கு பெரியார் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறார்.

//அதையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும், மற்றவர்களும் அதை கடைபிடிக்கவேண்டும் என்று நம்புவது முட்டாள்தனம்.//

அது முட்டாள்தனம் என்றால், எல்லா இடங்களுக்கும் அது பரவட்டும் என்றுதான் நான் சொல்வேன்.

'மனிதனுக்கு மனிதன் இளைத்தவன், ஒரு பிரிவினர் உழைப்பில் ஒரு பிரிவினர் சுக வாழ்வு வாழ்வது' என்ற சமூக அமைப்பைக் கட்டிக் காப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால் அப்படிப்பட்ட புத்திசாலித்தனம் தேவையேயில்லை.

வஜ்ரா,

நாமெல்லாரும் நமது பிறப்பின், வளர்ப்பின், குடும்பச் சூழலின், நண்பர்கள் கூட்டத்தின் கைதிகள். ஒரு கட்டத்தில் அந்த மதில் சுவர்களைத் தாண்டி வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

சொல்வதை சரியான நோக்கில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஆன்ம பரிசோதனை செய்து பாருங்கள்.

//சமூக அளவில் சீனாவில் ஹான் இனத்தவர் மற்ற இனத்தவரை படுகொலை செய்தும், மற்றவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், சீனத் தொன்மங்களை அழித்தும், வேரில்லாச் சமுதாயத்தை உருவாக்கியும் பல அக்கிரமங்கள் செய்துள்ளனர்.//

ஹான் இனத்தவர் 94% சீனாவில். திபெத்திலும், ஷின்ஜியாங்கிலும் அந்தப் பகுதி மக்களை ஒடுக்குவதில் சீனா செய்த அட்டூழியங்கள் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பது சரிதான்.

மற்றபடி, சீனத் தொன்மம், வேர்கள், நில உரிமை எல்லாமே அநீதிகளின் அடிப்படையில் இருந்திருந்தால் அவை அழிந்ததில் என்ன வருத்தம் இருக்க முடியும்?

//பழம்பெரும் பொக்கிஷங்களான புத்தகங்களை எரித்து, நகரங்களில் இருந்து மக்களை கிராமங்களுக்கு விரட்டிஅடித்தது போன்ற "நல்ல" சமூக மாற்றங்கள் செய்துள்ளனர்.//

எது பொக்கிஷம், எப்படி எரித்தார்கள். யார் யாரை கிராமங்களுக்கு விரட்டினார்கள்? அடாவடி, அநியாயம் என்பதை தீர்ப்பு சொல்லும் முன்பு, சில புத்தகங்களின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக மக்களை ஏய்த்துக் கொண்டிருந்தவர்களின் நடத்தைக்கு என்ன பெயர் என்பதையும் சொல்லி விடுங்கள்.

அவற்றுக்குப் பரிகாரம் புத்தகங்களை எரிப்பது இல்லை என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ொற்காலத்தை உருவாக்குவோம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்புகளை எந்த வகையில் சேர்ப்பீர்கள்?

//அதையெல்லாம் பார்த்த சீன மக்கள் இன்று எல்லாத்துறையிலும் நின்று அடி வெளுக்கிறார்கள் என்றால் அவர்களின் தன் நம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும்.//
அதெயெல்லாம் பார்த்ததால்தான் அப்படி அடி வெளுக்க முடிகிறது. தமிழகத்தின் இளைஞர் சக்தி மகத்தானதாக உருவெடுத்து நிற்பதின் அடிப்படையும் பெரியாரின் சீர்திருத்த இயக்கத்தின் பலன்தான்.

ஒரு சமூகத்தில் சிறு பிரிவினர் மட்டும் கற்றுத் தேர வாய்ப்புகளும் வசதிகளும் உண்டு என்று இருந்தால் அது உருப்பட வழியே கிடையாது. அதை மாற்றி அமைக்கும் எந்த செயலும் உடனடி தீமைகளைத் தாண்டிப் பார்த்தால் சமூகத்துக்கு நன்மை விளைவிப்பவைதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

உ.பி பீஹார் மாநிலங்களில் நலிந்த சமூகத்தினர் மீது ஏறி மிதிக்கும் கூட்டம் பெரியார் சொன்ன "சிறு கூட்டம்" இல்லை என்பது தான் உண்மை. தமிழகத்திலும் அதுவே உண்மை. பெரியாரின் புரட்சி பரவியது என்றால் ஏன் இன்னும் மதுரை பெரியார் நிலையத்திருந்து பஸ் நம்பர் 40p செல்லும் பாப்பாபட்டியில் தலித் வேட்பாளர் நின்று ஒரு தேர்தல் நடக்கவில்லை ? இவ்வளவுக்கும் தமிழகத்தை பெரியார் காலம் முதல் இன்று வரை பெரியாரின் "புரட்சி" சிந்தனையில் இயங்கும் திராவிடக் கட்சிகள் தான் ஆண்டு வருகின்றன.

அறுவை சிகிச்சைக்குக் கடப்பாறை: ஈ.வே.ராவின் அனுகுமுறை என்ற ஜெயமோகன் திண்ணைக்கட்டுரை தான் ஞாபகம் வருகிறது.


ஈ.வே.ரா வைப் பற்றிய பதிவு அல்ல என்பதால் அதை முடித்துக் கொள்வோம்.


//

அடாவடி, அநியாயம் என்பதை தீர்ப்பு சொல்லும் முன்பு, சில புத்தகங்களின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக மக்களை ஏய்த்துக் கொண்டிருந்தவர்களின் நடத்தைக்கு என்ன பெயர் என்பதையும் சொல்லி விடுங்கள்.

//


அந்த லிஸ்டில், அநீதி என்பதும் அடங்குமா ? ஏனென்றால்


"சீனத் தொன்மம், வேர்கள், நில உரிமை எல்லாமே அநீதிகளின் அடிப்படையில் இருந்திருந்தால் அவை அழிந்ததில் என்ன வருத்தம் இருக்க முடியும்?"


என்று நீங்கள் மட்டும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பைச் சொல்லி அதை நம்பச் சொல்கிறீர்கள்.



//

சில புத்தகங்களின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக மக்களை ஏய்த்துக் கொண்டிருந்தவர்களின் நடத்தைக்கு என்ன பெயர் என்பதையும் சொல்லி விடுங்கள்.

//


கிருத்துவம், இஸ்லாம், கம்யூனிசம் என்று மூன்றுவகையாகப் பிரிக்கப்படும் ஒரே கொள்கை தான் புத்தகங்கள் அடிப்படையில் மக்களை ஏமாற்றும் கொள்கை. அதில் திராவிடம் என்ற கொள்கையும் அடங்கும்.


கொள்கை-தூதுவர்-புத்தகம்

கிருத்துவம்
-ஏசு
-பைபிள்
இஸ்லாம்-முகம்மது-குரான்

கம்யூனிசம்-கார்ல் மார்க்ஸ்-தாஸ் காபிடல்

திராவிடம் - பெரியார்
-பெரியாரின் சீடர்கள் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.



//
அதெயெல்லாம் பார்த்ததால்தான் அப்படி அடி வெளுக்க முடிகிறது. தமிழகத்தின் இளைஞர் சக்தி மகத்தானதாக உருவெடுத்து நிற்பதின் அடிப்படையும் பெரியாரின் சீர்திருத்த இயக்கத்தின் பலன்தான்.

//


அப்ப இங்கேயும் அப்படி நடக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

மா சிவகுமார் சொன்னது…

//பெரியாரின் புரட்சி பரவியது என்றால் ஏன் இன்னும் மதுரை பெரியார் நிலையத்திருந்து பஸ் நம்பர் 40p செல்லும் பாப்பாபட்டியில் தலித் வேட்பாளர் நின்று ஒரு தேர்தல் நடக்கவில்லை ?//

உண்மையிலேயே வருந்தத்தக்க நிலைதான் வஜ்ரா. அதைத்தான் நான் பிற்போக்கு வாதிகளின் எதிர்த்தாக்குதல் என்று கருதுகிறேன். பெரியாரின் புரட்சி வெற்றிபெறுவதற்குத்தானே நாமெல்லாம் முயற்சி செய்ய வேண்டும்!

//நீங்கள் மட்டும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பைச் சொல்லி அதை நம்பச் சொல்கிறீர்கள்.//

அப்பொருள் மெய்ப்பொருள் காணுங்கள் என்று சொல்கிறேன், அவ்வளவுதான்.

//அப்ப இங்கேயும் அப்படி நடக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா ?//

இங்க அப்படியே நடக்க வேண்டியதில்லை. ஆனால் மாற்றங்கள் தேவை என்று விரும்புகிறேன். இன்றைக்கு இருக்கும் அமைப்புகள் முற்றிலும் சரியும் கிடையாது. புதியதோர் உலகம் காண வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் அங்குலம் அங்குலமாக நகர வேண்டும்.

ஒரே நாளில் புரட்சி நடத்தி எல்லாவற்றையும் உடைத்து மாற்றி விடலாம் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்