புதன், பிப்ரவரி 27, 2008

ஒரு நாள் ஒரு கனவு

1. உணவுப் பொருட்களின் தரம்.
நம்ம ஊரிலும் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் குடிக்கும் தரத்திலான தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும். இங்கிலாந்து போயிருந்த போது குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் குளியலறையில் குழாயைத் திறந்து பிடித்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். அது போன்று தூய்மையான தண்ணீர் எல்லோரின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்

2. பள்ளிக் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் கிடைக்க வேண்டும். ஒரே மாதிரியான தரமான கல்வி சமூக அமைப்புகள், அரசு நிறுவனங்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத கல்வி கற்க வாய்ப்பு இருக்க வேண்டும்.

3. விவசாயிகளுக்கு விலை
வயலில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கேற்ப விவசாய விளைபொருட்களின் விலையும் ஏற வேண்டும். மிக நலிந்த பிரிவினருக்கும் மட்டும் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாதம் 50000 ரூபாய் சம்பாதிப்பவருக்கு அரிசி விலை கிலோ 200 ரூபாய்கள் இருந்தால் என்ன குறைந்து விடும்?

4. குப்பை
நகரங்களிலும் கிராமங்களிலும் குப்பைகளை சரிவரத் திரட்டி கையாளும் முறைகள் இருக்க வேண்டும். குப்பைகளை போட உயரமான தடுப்புகளுடன் கூடிய குப்பைத் தொட்டிகளும், அவற்றிலிருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை மக்க வைக்க பெரிய மதில் சூழ்ந்த மைதானங்களும் இருக்க வேண்டும். மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து எடுத்து கழுவி மறு சுழற்சிக்குப் பயன்படுத்தும் முறைகள் இருக்க வேண்டும்.

5. சுகாதாரம்
பொது இடங்களில் துப்புவது, குப்பை போடுவது போன்றவே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

6. பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பணி புரியும் வாய்ப்பும் முறைகளும் இருக்க வேண்டும். பேருந்து ஓட்டுதலிருந்து, கட்சிப் பதவிகள், அரசுப் பணிகளிலும், அமைச்சகத்திலும் பெண் ஒருவர் பதவியிலிருப்பது புருவத்தை உயர்த்துவதாக இல்லாமல் இயல்பாகிப் போய் விட வேண்டும்.

7. போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து வசதிகள் நகரங்களில் நிறைய இருக்க வேண்டும். நியாயமான கட்டணத்தில் வசதியான பயணத்துக்கு வண்டிகள் இயக்கப் பட வேண்டும். காற்று மண்டலத்தை அசுத்தப்படுத்தும் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது.

8. அரசியல்
அரசியலுக்கு வருவதைப் பெருமையாகக் கருதி எல்லாத் தரப்பினரும் அரசியலில் பணி புரிய வர வேண்டும்.

9. பாதுகாப்பு,
எந்த வீட்டுக்கும் பூட்டு போட வேண்டிய தேவையே இல்லை என்னும் நிலை இருக்க வேண்டும். அவரவர்க்குத் தேவையான பொருட்களை மட்டும் வீட்டுக்குள் வைத்திருந்தால் யார் வந்து திருடிச் செல்வார்கள்?

10. அறிவியல்
கல்விச் சாலைகளிலும் வணிக நிறுவனங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள் அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பல மொழிகளைக் கொண்டு இயங்கும் நாட்டில் எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழிபெயர்க்கும் வசதிகளும் தகவல் தொழில் நுட்ப வசதிகளும் பெருக வேண்டும்.

11. மதம்
மதம் மனிதர்களின் வீட்டுக்குள் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக் காரரை மாற்று மதத்தினர் அல்லது தன் மதத்தினர் என்று யாரும் அடையாளம் காண விளையக்கூடாது. கூட்டம் சேர்த்து பொது இடங்களில் இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது.

12. சாதி
சாதி அமைப்பினால் ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் தமது சாதி குறித்த அடையாளங்களை பதிவுகளை ஒதுக்கி விட வேண்டும் அடுத்த தலைமுறை தமது சாதி என்ன என்று தெரியாமலேயே வளர்க்கப்பட வேண்டும்.

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//
வயலில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கேற்ப விவசாய விளைபொருட்களின் விலையும் ஏற வேண்டும். மிக நலிந்த பிரிவினருக்கும் மட்டும் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாதம் 50000 ரூபாய் சம்பாதிப்பவருக்கு அரிசி விலை கிலோ 200 ரூபாய்கள் இருந்தால் என்ன குறைந்து விடும்?
//

அப்ப விவசாயிகள் தங்கள் பொருளை அரசிடம் விற்காமல் சந்தையில் ஏலம் விடுவதே சிறந்தது. பொருளுக்கு ஏற்ற விலை அங்கே தான் கிடைக்கும்.


ஆட்டோமேட்டிக்காக அரிசி விலையும் மானியம் இல்லாமல் கிடைக்கும்.


அரசும் சந்தையில் ஏலத்தில் விவசாயப்பொருட்களை எடுக்கவேண்டியது தான். அதை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்கட்டும்.

பெயரில்லா சொன்னது…

//

எந்த வீட்டுக்கும் பூட்டு போட வேண்டிய தேவையே இல்லை என்னும் நிலை இருக்க வேண்டும். அவரவர்க்குத் தேவையான பொருட்களை மட்டும் வீட்டுக்குள் வைத்திருந்தால் யார் வந்து திருடிச் செல்வார்கள்?

//


நான் திருடுவேன். ஏனென்றால் எனக்குத் திருடுவது, அடுத்தவன் பொருளை களவாடி உபயோகிப்பது, மிகவும் பிடிக்கும்

பெயரில்லா சொன்னது…

//
சாதி அமைப்பினால் ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் தமது சாதி குறித்த அடையாளங்களை பதிவுகளை ஒதுக்கி விட வேண்டும் அடுத்த தலைமுறை தமது சாதி என்ன என்று தெரியாமலேயே வளர்க்கப்பட வேண்டும்.
//

ஒடுக்கப்பட்ட விரிவினரை மட்டும் ஏன் ஒதுக்குகிறீர்கள். அவர்களும் தங்கள் சாதி அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குத் தெரியாமலே வளர்க்கவேண்டியது தானே...அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் தங்கள் சாதி அடையாளத்தைத் தாங்கிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

இவற்றில் பல மேற்கத்திய,சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளில் நடைமுறையாய்த்தான் இருக்கின்றன.
நம்மால் ஏன் இயலவிலை?
நானும் ரொம்பவும் யோசித்து விட்டேன்,உருப்பட விடாத,கேடுகெட்ட தலைவர்களிடமிருந்தும்,கட்சிகளிடமிருந்தும்தான் அனைத்து சீர்கேடுகளும் ஆரம்பமாவதாகத் தோன்றுகிறது.
முறையான ஒரு விதயத்திற்குக் கூட விதிகளுக்குட்பட்டு அரசு இலாக்காக்களில் லஞ்சமளிக்காமல் ஒரு காரியமும் நடை பெற முடிவதாகக் காணோம் !!!!!!!
ஆக தவறு எங்கே இருக்கிறது????

வடுவூர் குமார் சொன்னது…

இந்த கனவெல்லாம் சரி தான்,இதில் பல, அடுத்து அல்லது இப்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கவேண்டும்.

நம் வரிப் (இந்திய மக்களின்)பணம் செலவு செய்யும் அதிகாரம் கொண்ட மக்களின் பிரதிநிதியாக இருப்பவர்களின் கொள்கையாக இருக்கவேண்டும்.

பள்ளிக்கு சேர்க்கும் விண்ணப்பத்தாளில் உள்ள மதத்தை எடுக்கட்டும்....கொஞ்ச நாளில் தனிமனிதனுக்கு தன்னால் மறந்து போய்விடும்.(மறக்கும்???)

இன்று தான் ஒரு சலனப்படம் பார்த்தேன்,போஸ்னியாவில் பல முஸ்லீம்கள் எப்படி நாட்டைவிட்டு துரத்தப்படுகிறார்கள் என்று காண்பித்தார்கள்.மத வெறி உலகெங்கும் பல முகங்களுடன் நம்மிடையே உலாவிக்கொண்டு இருக்கிறது.

ஏதோ ஒரு டாரென்ட் வலையில் Beirut to Bosnia என்று போட்டு தரவிரக்கி (1.3 ஜி பி) பாருங்கள்,இப்போது நாம் இருக்கும் இடம் சொர்க்கமாக இருக்கும்.இதை நிறுத்த அங்கு உள்ளவர்களுக்கே வழி தெரியவில்லையாம்.என்ன கொடுமை...... :-)

மா சிவகுமார் சொன்னது…

ஏழுமலை,

//அப்ப விவசாயிகள் தங்கள் பொருளை அரசிடம் விற்காமல் சந்தையில் ஏலம் விடுவதே சிறந்தது.//

ஏன், அரசாங்கம் விலை அதிகமாக வைத்தால் என்ன குறை?

//நான் திருடுவேன். ஏனென்றால் எனக்குத் திருடுவது, அடுத்தவன் பொருளை களவாடி உபயோகிப்பது, மிகவும் பிடிக்கும்//

உங்களைப் பார்த்து நாங்களெல்லாம் பரிதாபப்பட்டுக் கொள்வோம் :-)

//அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் தங்கள் சாதி அடையாளத்தைத் தாங்கிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க.//
அடையாளம் இருந்தால்தான் பல ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்க முடியும்!

அறிவன்,
//ஆக தவறு எங்கே இருக்கிறது????//

தவறு சமூக நம்பிக்கைகளில் தனிமனித ஒழுக்கங்களில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

வணக்கம் குமார்,

//பள்ளிக்கு சேர்க்கும் விண்ணப்பத்தாளில் உள்ள மதத்தை எடுக்கட்டும்....கொஞ்ச நாளில் தனிமனிதனுக்கு தன்னால் மறந்து போய்விடும்.//

அவ்வளவு சுலபமா நடந்துடுமா என்ன!

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
உங்களைப் பார்த்து நாங்களெல்லாம் பரிதாபப்பட்டுக் கொள்வோம் :-)
//

நீங்க எதைவேணா பட்டுக்குங்க, ஆன உங்க கனவுல வருகிற மாதிரி கதவுக்குப் பூட்டு எல்லாம் போடாமல் உட்டீங்கன்னாலே போதும்...

பெயரில்லா சொன்னது…

//
ஏன், அரசாங்கம் விலை அதிகமாக வைத்தால் என்ன குறை?
//

சந்தையில் பொருளின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசாங்கம் என்ன எந்தக் கொம்பனுக்கும் இல்லை. அது பொருளாதார அடிப்படைச் சட்டமான demand and supply பொருத்து அமைவது தான் fair game.

பெயரில்லா சொன்னது…

//

அடையாளம் இருந்தால்தான் பல ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்க முடியும்!

//


தோராயமாகச் சொல்லுங்கள், எத்துனை ஆண்டுகள் என்று ?


பின்னர், அவர்கள் மட்டும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அத்தனை ஆண்டுகள் தொங்கவேண்டுமா ?

வால்பையன் சொன்னது…

மக்கள் பணத்தில் மாநாடு போடாத கட்சி வேண்டும் எனக்கு.

50000 சம்பளம் வாங்கும் முதியவர்களை 5000 பென்சன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டு 5000 சம்பளத்தில் பத்து இளைஞர்களுக்கு வேலை வேண்டும் எனக்கு

//பள்ளிக்கு சேர்க்கும் விண்ணப்பத்தாளில் உள்ள மதத்தை எடுக்கட்டும்....கொஞ்ச நாளில் தனிமனிதனுக்கு தன்னால் மறந்து போய்விடும்.//

அவ்வளவு சுலபமா நடந்துடுமா என்ன!//

கொடுக்க முடியாது என்றே சொல்லிவிட்டேன்

வால்பையன்

கல்வெட்டு சொன்னது…

வடுவூர் குமார்..
//பள்ளிக்கு சேர்க்கும் விண்ணப்பத்தாளில் உள்ள மதத்தை எடுக்கட்டும்....கொஞ்ச நாளில் தனிமனிதனுக்கு தன்னால் மறந்து போய்விடும்.//
சிவா..
/// அவ்வளவு சுலபமா நடந்துடுமா என்ன! ///

**
மதமும் , சாதியும் அவர்களாகவே வேண்டி,வருந்தி வெளிப்படுத்திக் கொள்வது. யாரும் அவசியம் நிரப்ப வேண்டும் என்று சொல்லவில்லை.

பார்க்க:

சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html

ஜாதி என்ன? - பிரபு இராஜதுரை
http://marchoflaw.blogspot.com/2007/06/blog-post_16.html

// தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.//

****

அது என்ன மதம் மட்டும் வேண்டும் என்று சொல்றீங்க?
மதம் வீட்டுக்குள் இருக்கலாம் என்றால் சாதி சட்டைக்குள் இருக்கலாம் அல்லவா?

:-))

நீங்கள் மதம் மட்டும் போதும் சாதி வேண்டாம் என்ரு சொல்வதற்கு உள்ள நியாயங்களைப்போல , சாதிவ்ரும்பிகள் அவர்களுக்கான நியாயம் வைத்து இருக்கலாம்.

***

K.R.அதியமான் சொன்னது…

///7. போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து வசதிகள் நகரங்களில் நிறைய இருக்க வேண்டும். நியாயமான கட்டணத்தில் வசதியான பயணத்துக்கு வண்டிகள் இயக்கப் பட வேண்டும். காற்று மண்டலத்தை அசுத்தப்படுத்தும் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது.///

மாசி,

இதை ப‌ற்றி நாம் ஒரு போராட்ட‌ திட்ட‌ம் விவாதித்தோமே ? த‌னியார் பேருந்துக‌ளை
அனும‌திக்க‌ கோரி...
5000 பேருந்துக‌ள் தெவைப‌டும் சென்னையில், 3000 பேருந்துக‌ள்தாம்
உள்ள‌ன். (த‌க‌வ‌ல் : அமைச்ச‌ர் நேரு) ; த‌னியாரையும் அனும‌திக்க‌மாட்ட‌ர்க‌ள்.
பின் ?

மா சிவகுமார் சொன்னது…

கிளப்டோமேனியாக்,

//நீங்க எதைவேணா பட்டுக்குங்க, ஆன உங்க கனவுல வருகிற மாதிரி கதவுக்குப் பூட்டு எல்லாம் போடாமல் உட்டீங்கன்னாலே போதும்...//

நீங்கள் தேர்ந்தெடுத்த புனைபெயர் ஒரு மனநோய். தன்னை அறியாமலேயே கை வசம் இருக்கும் பொருளை பையில் போட்டுக் கொள்ளும் போக்கு.

ஒரு நாள் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி எதிரில் பொதுமருத்துவமனைக்கு முன்பிருக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். மருத்துவமனைக்கு முன்பு நடைபாதைக்கு அருகில் ஒரு மனிதர் முழு நிர்வாணமாக மலம் கழித்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் உடை உடுத்தியிருந்தார்கள். அவர்களும் காலையில் வீட்டில் காலைக் கடன்களை முடித்து விட்டு வந்திருப்பார்கள்.

காலைக்கடன்களை முடிப்பது இயற்கையின் தேவை. அதை மறைவில் மற்றவர்கள் கண்ணில் படாமல் செய்து கொள்ள வேண்டும் என்பது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறி.

அதற்கு மாறாக ஒருவர் நடக்க முடியுமா? அதைத்தான் அந்த மனிதர் செய்து கொண்டிருந்தார். அதற்காக சமூகப் பழக்கம் மாறி விடுமா, மாறி விடாது.

அது போல இருப்பதை எல்லாம் பொதுவில் வைக்கும் அறிவுத் தளம் உருவாகி விட்ட சமூகத்திலும் உங்களைப் போன்ற கிளப்டோமேனியாக்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் மீது பரிதாபப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து உதவி செய்வது வழக்கமாகப் போய் விடும்.

புரிகிறதா!

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஏழுமலை,

//சந்தையில் பொருளின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசாங்கம் என்ன எந்தக் கொம்பனுக்கும் இல்லை. அது பொருளாதார அடிப்படைச் சட்டமான demand and supply பொருத்து அமைவது தான் fair game.//
இப்போதே பல பொருட்களுக்கு அரசாங்கம் / சமூகம் விலை நிர்ணயிக்கிறது. அதை விட தேவை/கிடைத்தல் முறையில் விலை தீர்மானிக்கப்படுவது சிறப்பாக நடக்கிறது என்பது இன்றைய நிலைமை.

//தோராயமாகச் சொல்லுங்கள், எத்துனை ஆண்டுகள் என்று ?//
அதை அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 'எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பரிகாரம் கிடைத்து விட்டது. இனிமேல் அந்த அடையாளம் வேண்டாம்' என்று ஒருவர் தீர்மானித்து அதை உதறி விடலாம்.

வால்பையன்,

நடக்கும்.

கல்வெட்டு,

//நீங்கள் மதம் மட்டும் போதும் சாதி வேண்டாம் என்ரு சொல்வதற்கு உள்ள நியாயங்களைப்போல , சாதிவ்ரும்பிகள் அவர்களுக்கான நியாயம் வைத்து இருக்கலாம்.//

அப்படீன்னா, மதமும் வேண்டாம் :-)

அதியமான்,

//த‌னியார் பேருந்துக‌ளை அனும‌திக்க‌ கோரி... 5000 பேருந்துக‌ள் தெவைப‌டும் சென்னையில், 3000 ருந்துக‌ள்தாம் உள்ள‌ன். (த‌க‌வ‌ல் : அமைச்ச‌ர் நேரு) ; த‌னியாரையும் அனும‌திக்க‌மாட்ட‌ர்க‌ள்.ின் ?//

நீங்கள் செயல் திட்டம் வகுத்து செயல்பட ஆரம்பியுங்கள். மாற்றம் வரும்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
அதை அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 'எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பரிகாரம் கிடைத்து விட்டது. இனிமேல் அந்த அடையாளம் வேண்டாம்' என்று ஒருவர் தீர்மானித்து அதை உதறி விடலாம்.
//

இன்றிருக்கும் நிலையில் எந்தச் சாதியாவது அப்படிச் செய்யுமா ?


பார்ப்பானர்கள் கூட தங்களுக்கு என்று இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறார்கள்.


ஒவ்வொரு சாதியும் தாங்கள் எப்படியாவது மைனாரிட்டி என்று மாறிவிடவேண்டும் என்று போராடுகிரார்கள்.

குழுவுக்குச் சலுகை அளிக்கும் கொள்கைகள் இருக்கும் வரை மக்கள் குழுக்களாக அதை பயன்படுத்தத்தான் பார்ப்பார்கள். யாரும் முட்டாள்கள் இல்லை அதை வேண்டாம் என்று உதறித் தள்ளுவதற்கு. அத்தகய சலுகைகள் ஒழிக்கப்ப்பட்டால் குழுக்கள் (சாதிகள்) ஒழியும் ஏனென்றால் குழுக்கலால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றாகிவிடும்.

மா சிவகுமார் சொன்னது…

//இன்றிருக்கும் நிலையில் எந்தச் சாதியாவது அப்படிச் செய்யுமா ?//

இன்றைய நிலை மாறும் ஏழுமலை.

தனது குழந்தைகளுக்கு சாதியால் கிடைக்கும் பலன்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை எனக்குத் தெரியும். ஒன்று பத்தாகும், பத்து நூறாகும், நூறு கோடியாகும்.

தமக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடும் மற்ற சாதிக்காரர்களின் மனம் திருந்த ஆண்டவன்தான் அருள் பாலிக்க வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்