ஞாயிறு, மார்ச் 27, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்கு உதவி செய்யும் நிதி விபரங்கள்

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையைத் தொடர்ந்து இணைய நண்பர்கள் பலர் நன்கொடை அளிக்க முன்வந்தார்கள்.

வரும் வியாழக்கிழமை (மார்ச் 31, 2011) ஜெகதாபட்டிணம் போய் பணத்தை ராஜா முகமது குடும்பத்திடம் சேர்ப்பதாகத் திட்டமிட்டிருக்கிறோம். சேர்ந்து கொள்ள விருப்பமுடையவர்கள் தொலைபேசியில் அழைத்தால் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். (9884070556)

இன்னும் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் 30ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இது வரை திரட்டப்பட்ட பண விபரம்.

1. தமிழ்சசி, அமெரிக்கா- 10,000

2. சாந்தாமணி, கத்தார் - 3,000

3. கார்த்திக், ஈரோடு - 1,000

4. மா சிவகுமார், வேலூர் - 1,000

5. பழனி, சென்னை - 500

6. பெயர் வெளியிட விரும்பாத நண்பர், சிங்கப்பூர் - 3,000

7. பெயரும் ஊரும் சொல்ல வேண்டாம் - 1,000

8. ஜெகதீசன், சிங்கப்பூர் - 5,000

9. ராம்குமார், சிங்கப்பூர் - 1,000

10. சுவனப்பிரியன் - 1,000

11. ரோசா வசந்த், சென்னை - 1,000

மொத்தம் 27,500 ரூபாய்கள்

வியாழன், மார்ச் 24, 2011

வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில்

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் போகும் வழியில் கிளைச் சாலையில் இருக்கிறது வெள்ளப்பள்ளம் கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் சென்ற ஆண்டு இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்தார்.

அங்கு போய் மீனவர்களுடன் பேச முயற்சித்த போது



இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அவர்களது தொழில், கடலில் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கினார்.

செல்லப்பன் கொல்லப்பட்ட அன்று இன்னொரு படகில் இலங்கை கடற்படையில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் முருகேசன் தனது அனுபவங்களை விவரிக்கிறார்.


புதன், மார்ச் 23, 2011

அய்யம்பட்டிணம் நாட்டுப் படகு மீனவர்கள்

நாட்டுப் படகு மீனவர்களுக்கும் பாதிப்பு உண்டு

ஜெகதாபட்டிணத்தை அடுத்த அய்யம்பட்டிணத்தில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர் குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

முதலில் இரண்டு இளைஞர்கள் இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கிய அனுபவங்களைப் பற்றி பேசினார்கள்.

  • தினமும் நடக்கின்றன
  • பொருட்களை பறித்து போய் விடுவார்கள் 
தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் பேசினார்
  • கடலுக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, 7 மைலுக்கு மேல் போக முடியவில்லை. 
  • எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் தொழிலே செய்ய முடியாது. 
  • சின்ன குளம் மாதிரிதான் இந்த கடல். 14, 15 மைல் தூரத்திலேயே அவங்க நேவி வருகிறார்கள்.
  • தொழில் பார்க்க ஆர்வம் இல்லாம போய் விட்டது.
  • பரவலை தொழில்தான் முக்கியம், பெரிய மீன் பிடிப்பது - வஞ்சிரம், சாளை பிடிப்பது
  • அந்தத் தொழிலுக்குப் போக முடியாமல் வலைகளை குவித்து வைத்து விட்டோம். 
  • தாக்குதல், உயிரிழப்பு இல்லை. அடிபிடி சண்டை போன மாசம் வரை நடந்தது

பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் மீனவர் - 25 ஆண்டுகள் அனுபவங்கள்
பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் கிராமத்தில் மீனவர் தனது 25 ஆண்டுகள் அனுபவத்தை விவரிக்கிறார்.

  • கச்சத்தீவுக்குப் போவது
  • இரு பக்க மீனவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது
  • இலங்கைத் தமிழர்கள் போராட்டம்
  • இலங்கைப் படை மீன்களைப் பறித்தல்
  • சுட ஆரம்பித்தார்கள் - கையில் காலில் சுட்டு விரட்டி அடித்தல்
  • 'இந்திய வேசை மக்களா ஓடுறா, ஸ்ரீலங்கா தண்ணி ஓடுறா'
  • போராட்டங்கள் அதிகமானதும் கொல்ல ஆரம்பிச்சிட்டான்
  • '25 ஆண்டுகளில் 1500 சம்பவங்களைப் பார்த்திருப்பேன்'

பாம்பன் கிராமத்தில் ஆர்வலர் - பன்னாட்டு நிறுவன நடவடிக்கைகள்

பாம்பன் தலைவருடன் உரையாடல்

பாம்பன் மீன்பிடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் சந்தித்த மதத்தலைவர். ஷெல் நிறுவனம் பாக் நீரிணையில் ஆரம்பிக்க இருக்கும் எண்ணைய் கண்டறியும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். மின்னஞ்சல் பயன்படுத்துகிறார்.

tnfisherman குழுமத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து மின்னஞ்சல் விபரங்களை கொடுத்தோம். 

செவ்வாய், மார்ச் 22, 2011

குண்டடிபட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருடன் உரையாடல்

குண்டடிபட்ட ராமேசுவரம் மீனவர்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் சந்தித்த மீனவர்.  மூன்று ஆண்டுகள் முன்பு குண்டடிபட்டு பிழைத்தவர். அன்று முதல் கடலுக்குப் போவதையே நிறுத்தி விட்டார். அவரது தம்பி, மகன் தொழில் செய்கிறார்கள்.

அவரது தோள்பட்டைக்கு அருகில் குண்டு துளைத்த காயத் தழும்பு இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குண்டை எடுத்திருக்கிறார்கள்.

'இந்திய நேவி நம்ம எல்லையை விட்டு தாண்டாது. அவங்க நம்ம எல்லைக்குள் வருவாங்க.'

'13 வயதில் தொழிலுக்குப் போக ஆரம்பித்தேன். 35 ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறேன். நிறைய அடி வாங்கியிருப்பேன். ஏன் அடிக்கிறே, எதுக்கு அடிக்கிறே என்றெல்லாம் கேட்க முடியாது. எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்ல முடியாது.'

'நம்ம எல்லையும் அவங்க எல்லையும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் குறைஞ்சது 100 கிலோமீட்டராவது இருக்கும். இங்க இருப்பதே 20 கிலோமீட்டர்தான் இருக்கும். இதில எல்லை எங்க போடுறது. இடம் இல்லை. இரண்டு நாடும் அடுத்தடுத்து இருக்கின்றன.' 

ஜெகதாபட்டிணம் மீனவர் ஒருவர்

கடலில் சந்திக்கும் தாக்குதல்கள்

'இப்பல்லாம் வந்து போட் நம்பரக் குறிச்சிட்டு போறாங்க. இப்பதான் 2 வாரமா பிரச்சனை இல்லை. ஏன் குறிக்கிறான்னு தெரியலை. நம்ம கரையிலேயே, இங்க வந்துர்ரானுங்க. நம்ம நேவி எப்பவும் வருவது கிடையாது.'

'நாங்க ஒரு 30 வருஷமா தொழில் செய்றோம். அடிச்சு என்னென்னவோ பண்ணியிருக்கானுங்க. நாங்க நம்ம கரையில மீன் பிடிச்சுக்கிட்டிருந்தோம். 10 தடவை மாட்டியிருப்போம். தொழில விட முடியாது. கடல் இல்லைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை.'

'50,000 பொருள் எல்லாம் அறுத்து விட்டுருவானுங்க. கண்ணாடி எல்லாம் உடைச்சுவானுங்க.  ஆளுங்களை எல்லாம் அடி. நம்ம கரை அந்த கரை நமக்கு எப்படித் தெரியுது. கடல்ல வந்த அந்தக் கரை, நம்ம கரை என்று தெரியாதுல்ல. இலங்கைக் கடலா, தமிழ்க்கடலா என்று நமக்குத் தெரியாது.'

'தாக்கினதுக்கெல்லாம் பதிவே கிடையாது. அடி வாங்கிட்டு பேசாம இருக்க வேண்டியதுதான்.'

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் - மீன்பிடி தகவல்கள்

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணத்தில் மீனவர் தலைவரை சந்தித்துப் பேசியதின் அடுத்த பகுதி.

மீன்பிடி பிரச்சனைகள்

'இது ஒரு சிறிய கடல். ஆறு கால்வாய் மாதிரி உள்ளது. ராமேசுவரத்திலிருந்து கோடியக்கரை - 3000க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், 5000க்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் தொழில் செய்றாங்க. எல்லை தாண்டாம போய் மீன் பிடிக்கலாம் என்கிறது ரொம்ப கஷ்டம்'

'இலங்கையில இறால் நெட் கிடையாது. மேல மேய்கிற மீனை மட்டும்தான் பிடிக்கிறாங்க'.

'இரும்பு படகு, நவீன கருவிகள் வந்த பிறகு வெகு தூரம் போய் மீன் பிடிக்கிறாங்க.'

'விவசாயத்த எடுத்துக்கோங்க. மண் மழுங்கி போச்சு'

'கடல் வளம் குறைஞ்சதுக்கு இன்னொரு காரணம் இறால் பண்ணை போட்டது. கடற்கரை ஓரமா விளைநிலங்கள் எல்லாத்தையும் இறால் பண்ணையா மாத்திட்டாங்க. டீசல் 8 ரூபா விற்கும் போது இறால் 600 ரூபாக்கு வித்தது. இப்போ 400 ரூபாய்க்குத்தான் விற்கிறது'.

'எங்களால விசைப்படகு வைச்சு ஒண்ணும் பண்ண முடியலை. படகுக்கு இவ்வளவுன்னு கொடுத்து எடுத்துக்கிட்டா மாற்றுத் தொழிலுக்குப் போகத் தயாரா இருக்கோம். கடலுக்குப் போனா சுடுறான், அடிக்கிறான். கடல்ல போறதுக்கு இடம் இல்லை. சிறிய கடல், பெரிய மீன்பிடிப்பு. '

'கச்சத்தீவை மீட்டுத் தந்தாதான் தீர்வு. கச்சத்தீவிலிருந்து 4 நாட்டிக்கல் மைலுக்கு நமது எல்லை என்று ஆகி விடும். 22 நாட்டிக்கலா இருப்பது 28 நாட்டிக்கலா வரும். அது இருந்தா போதும்.'

'தாரை வார்த்துக் கொடுத்தாச்சு, நூத்துக்கணக்கான பேர் செத்தாச்சு. இதுக்கெல்லாம் காரணம் இலங்கை அரசாங்கம்தான். நம்ம அரசாங்கம் எதுவும் செய்றதில்ல. இப்பப் பேசறது எலக்சன் வரைக்கும்தான்.'

இழுவை படகுகள் பயன்படுத்துவதற்கும் மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீன்பிடி முறைகள், கடல் வளம் குறைதல் போன்ற பிரச்சனைகள், சமூகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளுக்கு (கார் ஓட்டினால் பூமி வெப்ப மயமாதல், இரசாயன உரம் போட்டால் விவசாய நிலம் பாழாவது) சமமானவை. அவற்றைப் பற்றி பேசுவது மீனவர்கள் மீதான தாக்குலைப் பற்றிய கவனத்தை திசை திருப்புவதே ஆகும். 

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் + கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள்

ஒலிக்கோப்பு

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணம் மீனவர்கள் தலைவரை அவரது வீட்டில் சந்தித்தோம். வீட்டின் முன்பு பல் துலக்கிக் கொண்டிருந்த அவர் பேசியதன் பதிவுகள்.

ரோசாவசந்த் முதலில் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து மீனவர் தலைவர் பேசுகிறார்.

'கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்தே இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் அவங்களோட கைகோர்த்து நிக்கிறாங்க. பிரபாகரன் இறந்த பிறகு ரொம்ப மோசமாயிருக்கு. அவர் இருக்கும் போது இந்த மாதிரி நடப்பது இல்லை.'

'எல்லை தாண்டி அந்த மீனவர்களும் வராங்க, நம்ம மீனவர்களும் போறாங்க, இல்லைன்னு சொல்லலை. ரொம்ப மோசமாக முறையில சித்தரவதை பண்றாங்க.'

'ஆரம்பத்தில போயிருக்கேன். எங்க படகில என்னையே வந்து ஐஸ் எல்லாம் ஆணுறுப்புற வைத்து சித்திரவதை படுத்தினான்'

ஒரு கட்டத்தில் இரு சக்கர வண்டியில் கடலோரக் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பேர் வந்து ஆங்கிலத்தில் 'any problem' என்று கேட்கிறார்கள்.

தொடர்ந்து ஆங்கிலத்தில், நாங்கள் அவர்களிடம் பேசியது பதிவாகியிருக்கிறது.

'அது நமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்டது. அது நமது தவறு. யாரும் எல்லை தாண்டக் கூடாது என்று ஒரு முடிவு செய்திருக்கிறோம்'.

'இலங்கை நேவி இந்திய எல்லைக்குள் வருவதற்கு எங்களுக்கு ஆதாரம் கிடைப்பதில்லை. 24 மணி நேரமும் கண்காணிப்பது சாத்தியமில்லை. எங்களுக்குத் தகவல் வந்தால் அதை மேலிடத்துக்கு அனுப்புவோம்.'

'தகவல்கள் எங்களுக்குச் சரிவர வந்து சேருவதில்லை. தமிழ் தெரிந்தவர்கள் இந்த பகுதியில் இல்லை. இது ஒரு பிரச்சனைதான். ரோந்து போகும் போது 3 பேர் போகிறோம். எங்களுக்கு தமிழ் தெரியாது என்பது தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு தடைதான்'

வியாழன், மார்ச் 10, 2011

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 6

தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

1. எல்லை தாண்டி போவது குறித்து:
'இந்திய வேசை மகன்களா, ஏண்டா எங்க தண்ணிக்கு வரீங்க, ஓடுங்க' என்று சொல்லி விரட்டுகிறார்கள் என்று இரண்டு மூன்று இடங்களில் கேட்கக் கிடைத்தது.

கச்சத்தீவை அடிப்படையாக வைத்து தமது எல்லையை வரையறுத்துக் கொண்டு அந்தக் கோட்டை பாதுகாப்பதாக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.

'எங்களுக்கு எல்லை எங்க தெரிகிறது. இது ஒரு கடலே இல்லை, குளம் போலத்தான். படகில் ஏறி கொஞ்ச தூரம் போனா எல்லை என்றால், மீன்பிடித் தொழிலே செய்ய முடியாது.'

'எல்லை தாண்டிப் போனால் தாக்கப்படுவார்கள், அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்' என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா சொல்வது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்கிறார்கள் மீனவர்கள்.

'அவருக்குக் கடல் தெரியுமா, இங்க வந்து பார்த்திருக்காரா. நாட்டுக்கும் ராணுவத்துக்கு எல்லை இருக்கலாம், எங்களுக்கு  வலை வீசிய பிறகு நீரோட்டத்தோடு நகரும் வலை எல்லை தாண்டினால் நாங்க இழுத்துப் பிடிக்கவா முடியும்?' என்று கேட்கிறார்கள் மீனவர்கள்.

'சிலபேர் நல்லவங்களா இருக்காங்க, மத்தியான வேளையில தண்ணி போட்டு விட்டு வந்தாங்கன்னா கொடுமையா நடக்கிறாங்க' 

2. மீனவர்களுக்கிடையேயான சச்சரவுகள்

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் இரட்டை மடி வலை, சுருக்கு வலை மூலம் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை எதிர்க்கும் இலங்கை மீனவர்கள் தாக்குகிறார்கள் என்று இன்னொரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

இழுவை படகுகளில் இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு விசைப்படகில் கொக்கி முறையில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கண்ணாடி இழை படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் என்று தமிழ்நாட்டின் மற்ற தரப்பு மீனவர்களிடையேயும் எதிர்ப்பு இருக்கிறது.

இழுவை படகுகள் வேகமாக போகும் போது சிறிய மீனவர்களின் வலைகள் அறுபடுதல், இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பதால் அந்த இடத்தின் மீன்வளம் நிரந்தரமாக பாதிக்கப்படுதல் போன்றவை பரவலாக பேசப்படுகின்றன. இந்த முறையை நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதில் கணிசமான பகுதியினர் கண்ணாடி இழைப்படகில் அல்லது நாட்டுப் படகில் மீன்பிடிக்கப் போகிறவர்கள். மீனவர்களுக்கு இடையே (இரு கரைகளிலும்) இருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்குள் பேசித் தீர்க்கும் அளவில்தான் இருக்கின்றன.

மீனவர்களை தாக்குவது, துன்புறுத்துவது, மீன்களை பறி முதல் செய்வது, வலைகளை அறுத்து விடுவது, மீன்பிடிக் கருவிகளை கவர்ந்து செல்வது போன்ற இலங்கைப் படையின் நடவடிக்கைகளுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் தொடர்பில்லை என்றே நம்புகிறார்கள்.

3. 'தமிழர்கள் மீதான வெறுப்பை இந்திய மீனவர்கள் மீது காட்டுகிறார்கள்' என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருந்தவரை இது போன்ற நிகழ்வுகள் குறைவாக இருந்தன. 'நெருங்கி வரும் இலங்கைக் கடற்படை படகு ஒன்று தூரத்தில் விடுதலைப் புலிகளின் படகு வந்தால் ஓடிப் போய் விடுவார்கள்' என்றார் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் - எனது பார்வையில் - 5

நான்கு நாட்கள் பயணத்தில்
  • நாகப்பட்டினம், கீச்சாங்குப்பம், அக்கரைப் பேட்டை, நாகூர்
  • வெள்ளப்பள்ளம், புஷ்பவனம்
  • ஜெகதாபட்டிணம், ஐயம்பட்டிணம், கோட்டை பட்டிணம்
  • பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி 
பகுதி மீனவர்களிடம் பேசியதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 

1. சமீபத்தில் ஊடகங்களில் பேசப்பட்ட 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர குறைந்த அளவு தீவிரத்துடன் தாக்குதல்கள் நடந்தனவா? நடக்கின்றனவா?

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி  மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தினசரி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது என்று தெரிய வந்தது. ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, போராட்டங்களை நடத்தினாலும். போகப்போக இலங்கை கடற்படையுடனான நிகழ்வுகளை அன்றாட மீன்பிடி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து தொழிலை செய்து வருகிறார்கள்.  

25 ஆண்டு தொழில் அனுபவத்தில் ஒவ்வொரு மீனவரும் சில நூறு முறைகள் தாக்கதல்களை சந்தித்திருக்கிறார்கள். 


இந்த வரைபடத்தைப் பார்த்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கையுடனான கடற்பகுதி எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். 

வேதாரண்யத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான வளைகுடா கடற்கரையும் இலங்கையின் வடக்குப் பகுதிகளுடன் இணையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதி மீனவர்கள் கணிசமான அளவு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். 


நாகப்பட்டினத்தை ஒட்டிய பகுதி மீனவர்களில், வெகு தூரம் பயணிக்கும் விசைப்படகினர் அவ்வப்போது தாக்குதல்களை சந்திக்கிறார்கள். 

கடலில் நடந்த நிகழ்வுகளை காவல் துறையிடமோ, மீன்வளத் துறையிடமோ முறையிட்டால் 'நீங்க அந்தப் பக்கம் போயிருப்பீங்க, அதுதான் அடிச்சிருப்பாங்க' என்று பதிவு கூடச் செய்யாமல் நிராகரித்து விடுவதாகச் சொன்னார்கள். 

கொலை வழக்குகளுக்குக் கூட முறையான முதல் தகவல் அறிக்கை பதியவில்லையாம். காயமடைந்தவர்கள்,  வன்முறைக்கு உள்ளானவர்கள், மீன்களை அள்ளிச் சென்றது, வலைகளை அறுத்து நாசம் செய்தது,  மீன்பிடி கருவிகளை கவர்ந்து சென்றது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மீனவரின் செவி வழிச் செய்தியாகவே இருந்து வருகிறது. பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கூட எல்லா விபரங்களும் தெரியாமல் இருக்கின்றன.  

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 4

'ஜெகதா பட்டிணம், கோட்டை பட்டிணம் பகுதிக்கு நீங்கள் தவறாமல் போக வேண்டும். அந்தப் பகுதி மீனவர்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கும்மி தொலைபேசி சொன்னார். ஊரில் இருக்கும் தனது நண்பர்களுடன் பேசி ஒருங்கிணைப்புக்கும் ஏற்பாடு செய்தார்.

'ராமேசுவரத்தில்தான் பிரச்சனையே, நாகப்பட்டினம் போய் என்ன செய்யப் போறீங்க' என்று ஒரு அதட்டல் போட்ட பாலபாரதி ராமேசுவரத்தில் அவரது நண்பர்களிடம் பேசி பயண ஒருங்கிணைப்புக்கு ஆவன செய்தார்.

பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் save-tamils.org குழுவினர் ஏற்பாடு செய்திருந்த தகவல் தொழில் நுட்பத் துறையினரின் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். மீனவ பிரதிநிதிகள், தமிழ் இயக்க பேச்சாளர்கள் என்று பலர் பேசினார்கள். அதன் மூலம் பல தகவல்கள் தெரியக் கிடைத்தன.

30 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பது அவசியம். உயிரிழப்பு ஏற்பட்டதும் செய்தி வெளியிட்டு விட்டு அதன் பிறகு அடுத்த சூடான செய்திக்கு நகர்ந்து விடும் வெகுஜன ஊடகங்களும், சுயநல அரசியல் மட்டும் செய்யும் அரசியல் கட்சிகளும் இதைச் செய்யப் போவதில்லை. இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நாம் நினைத்தால் இந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்த கவன ஈர்ப்பை செய்ய முடியும்.

மீனவ கிராமங்களில் பயணம் செய்வதன் மூலம்
  • நிகழ்வுகளை நேரடியாகக் கேட்டு புரிந்து கொள்ளலாம். 
  • பதிவுகளை ஆவணமாக்கலாம். 
  • இணையத்தில் தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை  மீனவர்களுக்கு தெரிவிக்கலாம். 
பல ஆண்டுகளாக மீனவர் பிரச்சனை குறித்து எழுதிக் கொண்டிருக்கும் ரோசாவசந்த் உடனடியாக கலந்து கொள்வதாகச் சொல்லி விட்டார். வலைப்பதிவுகளில் புகழ் பெற்றிருக்கும் உண்மைத்தமிழனிடம் பேசி அவரும் கலந்து கொள்ள தயாரானார்.

இன்னும் பலர் கலந்து கொள்ள விரும்பினாலும் பணி நெருக்கடி, நேரமின்மை காரணமாக வர முடியாமல் போனது.

பயணத்தில் நேரடியாக கலந்து கொள்ள  முடியாவிட்டாலும், பயணச் செலவுகளுக்கு உதவி தேவைப்பட்டால் அதை தான் அளிப்பதாகச் சொல்லியிருந்தார் பலூன் மாமா. பயணத்தில் செலவு பகிர்ந்து கொள்வதாக ஏதாவது ஏற்பாடு செய்தால், ஒரு பங்கை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். 

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 3

2011 ஜனவரியில் மீனவர்கள் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் டுவிட்டரில் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்த போது மற்றவர்களுடன் நானும் எனது கருத்துக்களை எழுத முற்பட்டேன். இணையத்தில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியான செய்திகள், பதிவுகள்,  கட்டுரைகள் என்று நிறைய படிக்க ஆரம்பித்தேன்.

'30 ஆண்டுகளில், 539 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்' என்பது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

1. திட்டமிட்ட தாக்குதல்கள் என்றால் இத்தனை ஆண்டுகளில் 500 சொச்சம் முறை மட்டும்தான் தாக்கினார்களா? உயிரிழப்புகள் இல்லாமல் மற்ற வகையில் தாக்குதல்கள் எவ்வளவு நடந்தன, அவற்றைப் பற்றிய விபரங்கள் என்னென்ன?

2. தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

3. தமிழக மீனவர்கள் ஏதாவது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? அதற்கு பதிலடியாக தாக்குதல்கள் நடக்கின்றனவா?

4. மீனவர்களுக்கிடையே இருக்கும் பகையால் தாக்குதல்கள் நடக்கின்றனவா?

5. இத்தனை தீவிரமாக பிரச்சனை இருந்திருக்கும் போது இவ்வளவு காலம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

டுவிட்டரிலும் வலைப்பதிவுகளிலும் எழுதியதைத் தொடர்ந்து சென்னைக் கடற்கரையில் இணையப் பயனர்கள் கூடி அடுத்த நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்கள். கூட்டத்துக்குப் போக முடியாவிட்டாலும், பேசப்பட்ட விபரங்களையும் அடுத்த நடவடிக்கைகளையும் பற்றி தெரிந்தது.

இணையத்தில் எழுதுவதோடு நின்று விடாமல், இணையத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து களத்திலும் உணர்வுகளைக் காட்ட வேண்டும் என்று பலூன் மாமா வலியுறுத்தினார். குறுஞ்செய்திகள் மூலமாக, மனிதச் சங்கிலி மூலமாக மீனவர் பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வை பரவலாகக் கொண்டு சேர்க்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.

இவற்றை செய்வதற்கான தயாரிப்புகளும், தொடர்புகளும் இல்லை என்று தோன்றியது. அவை பற்றிய சிந்தனையிலேயே நாட்கள் நகர்ந்தன.

'சரி, டுவிட்டரில் எழுதி விட்டோம், சில நாட்கள் #tnfisherman டிரெண்டிங்கிலும் வந்து விட்டது. உயிர்க்கொலை நடக்கும் போது சத்தம் எழுப்பி விட்டு அத்தோடு மறந்து போய் விடும் பத்திரிகைகள், கட்சிகள் போலத்தானே நாமும் இருக்கிறோம். இதற்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும். பதிவர்கள் எல்லோரும் சேர்ந்த நாகப்பட்டினத்திற்குப் போய் ஆர்ப்பாட்டம் நடத்தவது போல திட்டமிடலாமா' என்று ஒரு நண்பர் தொலைபேசி சொன்னார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகை சிவா ஒருங்கிணைப்பில் உதவுவார் என்றும் ஆலோசனை சொன்னார். நாகை சிவாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டதும் அவர் தன்னால் ஆன உதவிகளை செய்வதாகச் சொன்னார். வெளி நாட்டில் இருக்கும் அவர் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஊருக்கு வருவதாகவும் சொன்னார். நாகப்பட்டினத்திலேயே வசிக்கும் அறுசுவை பாபுவிற்கு மடல் அனுப்பி அவரது உதவியை கேட்டார்.

'ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு கட்டமைப்போ, பெருமளவில் திரளும் பதிவர்களோ இருப்பார்களா? பத்தோடு பதினொன்றாக நாமும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திக் கலைவதால் என்ன பலன் இருக்கும்?  மீனவர்கள் பிரதிநிதிகள் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் என்ன ஆர்வம் காட்டுவார்கள்' என்ற குழப்பங்கள்.

இணையப் புலிகள், எழுத்து வித்தை கையில் இருக்கும் நாம் கடற்கரை கிராமங்களில் பயணித்து மீனவர்களை சந்தித்து நமது பதிவுகளை இணையத்தில் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று பட்டது. ஒளிப்படங்கள், காணொளிகள், வலைப்பதிவுகள் மூலம் நாம் திரட்டும் தகவல்களை ஆவணப்படுத்தலாம் என்று திட்டமிட்டோம்.

சிவா ஊரில் இருக்கும் நாட்களில் போனால் நல்லது என்று மார்ச் முதல் வார இறுதியில் 4 நாட்கள் பயணம் என்று திட்டமிட்டோம். நாகப்பட்டினத்தில் தொடங்கி கடற்கரையோரமாக ராமேசுவரம் வரை போய் வருவது என்று திட்டம்.

மீனவர் ராஜா முகமது

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையிலிருந்து

"ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார்.

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து, அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம். அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்."

வீட்டின் உள்ளறையில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறார் ராஜா முகமது.  உள்ளே வரவேற்று அறைக்குள் அனுப்பும் போது 'ராத்திரி முழுக்க வலியில் தூங்கவேயில்லை' என்று சொல்கிறார் அவரது மனைவி.

அறைக்குள் கட்டிலுக்கு அருகில் நின்று பேசிய உரையாடலின் பதிவு

புதன், மார்ச் 09, 2011

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 2

2004ம் ஆண்டு கோடை விடுமுறையில் மே 15 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு கடற்கரையோரமாக நாகர்கோவில் வரை இரு சக்கர வண்டியில் ஒரு நண்பருடன் பயணித்தேன்.
  • சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் போய், மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் என்று முதல் நாள்.

  • அடுத்த நாள் காலையில் சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் போய்ச் சேர்ந்தோம். அன்று மாலையில் கோடிக்கரை காடு அதன் அருகிலுள்ள கடற்கரைக்குப் போய் வந்தோம்.

  • மூன்றாவது நாள் அதிராமபட்டிணம், சேதுபவசத்திரம், அம்மா பட்டிணம், கோட்டை பட்டிணம், ஜெகதாபட்டிணம், மீமிசல், தொண்டி, தேவிப் பட்டிணம் வழியாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தோம். இந்த சாலைகள் குண்டும் குழியாக உடலைக் குலுக்கி எடுத்தன.

  • நான்காவது நாள் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி வரை (சாலையில் மட்டும்) போய் விட்டு ராமநாதபுரம் வந்து தெற்கு நோக்கி பயணித்தோம். இருட்டிய பிறகும் பயணித்து தூத்துக்குடி போய் தங்கினோம்.

  • ஐந்தாவது நாள் திருச்செந்தூர், உவரி, கூடங்குளம், கன்னியாகுமரி போய் நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். 

இந்தப் பயணத்தில் வழியில்  மக்களுடன் உறவாடும் வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கடற்கரையோர கிராமங்கள்/நகரங்கள், சாலைகள், குளங்கள், தொழில்கள் என்று கண்ணால் கண்ட காட்சிகளும், சுவாசித்த கடல் மணமும் தமிழகக் கடற்கரை வாழ்க்கையின் ஒரு அறிமுகமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பயணத்துக்கு அது ஒரு தயாரிப்பாகக் கூட இருந்திருக்கிறது. 

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியின் போது நான் சென்னையிலிருந்து வேலூருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நான் போன பேருந்தில் பாத்திரங்களுடனும், மூட்டைகளுடனும் ஒரு அம்மா ஏறியிருந்தார். 'கடற்கரை எல்லாம் தண்ணி, சென்னை இன்னும் சாயங்காலத்துக்குள் மூழ்கி விடுமாம்' என்று அழுகையும் குழப்பமும் நிரம்பிய குரலில் சொன்னார். வேலூர் பேருந்து நிலையத்தில் தினமலர் நாளிதழின் சிறப்பு வெளியீட்டில் கடற்கரை எங்கும் நிகழ்ந்திருந்த இயற்கை சீற்றம் பற்றி எழுதியிருந்தார்கள். 

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 1

நான் பிறந்தது, 12ம் வகுப்பு வரை படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலில். எங்கள் மாவட்டத்தில் கடற்கரையும், மீனவர் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் நிறைந்திருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை

இருந்தாலும், எங்கள் வீட்டில் மீன் சமைப்பது இல்லாததால் மீன் வாங்குவது குறித்த செயல்பாடுகள் கூட இல்லாமலேயே வளர்ந்தேன். ஊருக்கு உறவினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் சமைக்கும் மீன்கள் சாப்பிட்டிருக்கிறேன். நான் மீன் சாப்பிடுவேன் என்று தெரிந்ததும் பக்கத்து வீட்டு அம்மா 'சாப்பிடுற பையனுக்கும் கொடுக்காம கெடுக்குறாங்க' என்று செல்லமாகத் திட்டி அனுப்பும் மீன் சாப்பிடுவது மட்டும் கொஞ்ச காலம் நடந்தது. கூனிப் பொடி என்ற மீனை அவர்கள் சமைத்து அனுப்பியதைச் சாப்பிட்டதில் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போக மீன் சாப்பிடுவது ஒரு முடிவுக்கு வந்தது.

கடற்கரை கிராமங்களிலிருந்து விலகியிருக்கும் நாகர்கோவில் நகரில் வசித்ததால், மீனவ நண்பர்கள் அதிகம் இருக்கவில்லை. 'கடற்கரை பசங்க முரடங்க' என்று எச்சரிக்கப்பட்டு பழக வாய்ப்பிருக்கக் கூடிய மற்ற இடங்களிலும் பயம் கலந்த மரியாதையுடன் ஒதுங்கி இருந்ததே நடந்தது.

கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு கடற்கரை என்பது மெரீனா, பெசன்ட் நகர் மனமகிழ்வு தளங்களாக போயிருக்கிறேன். நாட்டுநலப்பணித் திட்டத்தின் கீழ் பட்டினப் பாக்கம் போனது மீனவர் கிராமம் ஒன்றை முதன் முதலில் முறையாகப் பார்த்தது.

வேலையில் சேர்ந்து பிற இடங்களைப் பார்த்து விட்டு 2001ம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பிய பிறகு, கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் மீனவர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல் போய்ப் பார்த்திருக்கிறேன். 

செவ்வாய், மார்ச் 08, 2011

மீனவர்கள் தாக்குதல்கள் விபரப்பதிவு தளம்

நாகப்பட்டினம், ஜெகதாபட்டிணம், ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சிலருடன் பேசிய போது, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை காவல் துறையோ மீன்வளத் துறையோ முறையாகப் பதிவு செய்வதில்லை என்று பலர் சொன்னார்கள். 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு முறையான முதல் தகவல் அறிக்கை இல்லை என்பதும் தெரிய வந்தது.

(உயிர்க் கொலைகளைத் தவிர்த்து) நாள் தோறும்,
  • வலைகளை அறுத்தல்
  • மீன்களைத் தூக்கிக் கடலில் போடுதல்
  • அடித்தல்
  • உடல் ரீதியாக சித்தரவதை செய்தல்
  • மீன்பிடி கருவிகளை கவர்ந்த செல்லுதல்
போன்ற நிகழ்வுகள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன. இவை பதிவு செய்யப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடோ நியாயமோ கிடைக்காமல் போகிறது.

இதை நிவர்த்தி செய்ய, செல் பேசி மூலம் தகவல் சொல்லி விட்டால், அதை உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்வதாக திட்டமிட்டு, அதற்கான ஒரு தொலைபேசி எண்ணையும் ஏற்படுத்தினோம். இந்த எண்ணை சந்தித்த மீனவர்கள், பிரதிநிதிகளிடம் கொடுத்து பரவலாக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

8489681589 என்ற இந்த எண்ணுக்கு வரும் தகவல்களை http://tnmeenavar.blogspot.com/ என்ற வலைப்பதிவில் இடுகைகளாக வெளியிடுவதாக திட்டம்.

இந்த எண்ணில் வரும் தகவல்களைக் கேட்டு பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சலில் (masivakumar@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள். நாம் முறை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் அழைப்பவர்களிடம் பேசி தகவல் திரட்டுவதாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

ராமேசுவரம் குறிப்புகள் (4வது கடைசி நாள்)

மீனவர்கள் அதிகாலை கடலுக்குப் போகும் நேரத்தில் மீன்பிடித் துறைக்குப் போகலாம் என்று ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டுப் போனோம். அழைத்துப் போன திரு சேகர், 'நான் வந்தால் ஒழுங்கா பேச மாட்டாங்க' என்று வெளியில் நின்று விட, படகுகள் நிறுத்தப்பட்டிருந்த கரைக்குப் போனோம்.

ஒரு படகில் ஐஸ் கட்டிகளை ஏற்றி இன்னொரு படகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கரையில் நின்றபடி மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தவரை அணுகி பேச்சுக் கொடுத்தால், அவரே உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

2008ம் ஆண்டில் துப்பாக்கிச் சூடில் குண்டடிபட்டவராம். சொந்தமாக இரண்டு விசைப் படகுகள். தனது தம்பிகள் மகனுடன் கடலுக்குப் போயிருக்கிறார். சூழ்ந்து வந்த இலங்கைப் படையினர் துப்பாக்கியால் சுட இவருக்கு தோளுக்கருகில் குண்டு பாய்ந்திருக்கிறது (துளைத்த இடத்தின் வடுவைக் காட்டினார்). கூட இருந்தவர்கள் தப்பித்துக் கொள்ள, இவரது காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ராமேசுவரம், ராமநாதபுரம், மதுரை என்று மருத்துவனைகளுக்குப் போய் அறுவை சிகிச்சை செய்து நெஞ்சு பகுதிக்குள் இறங்கி விட்டிருந்த குண்டை நீக்கியிருக்கிறார்கள்.

தனது மீன்பிடி வாழ்க்கையில் பலமுறை அடிபட்டிருப்பதாகச் சொன்னார். புறங்காலில் அடிபட்ட காயத் தழும்புகளைக் காட்டினார். துப்பாக்கி காயத்துக்குப் பிறகு கடலுக்குப் போகும் அளவுக்கு உடல்நிலை தேறவில்லை என்று சொன்னார். இப்போது அவரது தம்பிகளும் மகனும்த்தான் படகை எடுத்துப் போகிறார்களாம்.

படகுக்குள் போய் ஓட்டுநர் அறைக்குள் உட்கார்ந்திருந்த அவரது தம்பியிடம் பேசினோம். அவரும் தனது அனுபவங்களைப் பேசினார். அதே படகில் வேலைக்கு போகும் இன்னொருவர், 'தினமும் கடலுக்குப் போகும் போது திரும்பி வந்தால் வகை என்றுதான் போகிறோம்'.

ராமேசுவரம் இலங்கைக்கு இடையேயான கடல்பகுதி மிகவும் குறுகியதாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்குப் புறப்பட்டாலே இந்தியக் கடல் எல்லையை தாண்டாமல் இருக்க முடிவதில்லையாம்.

மதிய வேளையில் மீனவர் நலனுக்காக உழைக்கும் தில்லைபாக்கியம் என்ற ஆர்வலர் பிரச்சனை குறித்த தனது பார்வைகளை விரிவாகப் பேசினார். ராமேசுவரம் பகுதியில் இலங்கை கடற்படையுடன் சந்திப்பு என்பது தினசரி நிகழ்வாக இருக்கிறது. அரசியல் தளத்தில் தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.

பிற்பகலில் தனுஷ்கோடி போகும் வழியில் இருக்கும் தாவுகாடு என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் சேகர். இங்கு வசிக்கும் 50-60 குடும்பங்கள், கரையோரமாக மீன் பிடிக்கும் சிறு மீனவர்கள். அரசாங்க சேவைகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

குறிப்பு:

நான் எழுதிய இடுகைகள், ரோசாவசந்த், உண்மைத் தமிழன், நான் மற்றும் பிரேம் ஆனந்த் போய் வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே.

சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள், ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்றவற்றை தொகுத்து அடுத்து வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து பயணத்தின் போது, கண்டவற்றையும் கற்றுக் கொண்டவற்றையும் ஒவ்வொருவரும் விளக்கமான பதிவுகளாக வெளியிடுகிறோம். 

ஞாயிறு, மார்ச் 06, 2011

ஜெகதாபட்டிணம், கோட்டைபட்டிணம் + ராமேஸ்வரத்தின் பாம்பன் (3வது நாள்)

காலை 7 மணிக்குப் புறப்பட்டு  இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு தாக்குதலில் உடல் முழுதும் தீக்காயமடைந்த மீனவர் ராஜ்மொகமது வீட்டுக்குப் போனோம்.

இன்னும் ஆறாத தீக்காயங்களுடன் படுக்கையில் இருந்தவரைப் போய்ப் பார்த்தோம். மூன்று பேர் படகில் போயிருக்கிறார்கள். சுற்றி வளைத்த படகுகளிலிருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியிருக்கிறார்கள். இவர் படகின் உரிமையாளர், கூட இருந்தவர்கள் வேலை செய்பவர்கள். இவர் மீது தீப்பிடித்து காயமடைந்திருக்கிறார்.

மருத்துவச் செலவுக்கு கொடுத்த உதவித் தொகையை விட இரண்டு மடங்கு செலவழித்து அதற்கு மேல் மருத்துவமனையில் தங்க முடியாமல் புண் குணமாகாமலேயே வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படுத்த படுக்கையாக இருக்கிறார். பார்க்கும் போது முழுவதும் குணமாகி தொழிலுக்குப் போக பல மாதங்கள் ஆகும் என்று படுகிறது. அது வரை அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும். என்ன செய்யலாம்?

இந்தியக் கடற்படை பாதுகாப்பு குழுவில் தமிழ் பேசும் வீரர்கள் குறைவு. மீனவர்கள் தமது பிரச்சனைகளைச் சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. ஆங்கிலம் அல்லது இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இவர்களிடம் தகவல் சேகரிக்க வருகிறார்கள்.
 

ஜெகதாபட்டிணம் மீனவர் சங்கத் தலைவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படையின் இரண்டு வீரர்கள் வந்து

'யூ ஹேவ் எனி பிராப்ளம்' என்று அந்த மீனவரைக் கேட்டார்கள்.

அவர் அவசர அவசரமாக 'நோ பிராப்ளம்' என்று சொல்லி விட்டார்.

தொடர்ந்து நாங்கள் கடற்படையினருடன் ஆங்கிலத்தில் பேசி விபரங்களைக் கேட்டோம்.


ஜெகதா பட்டிணத்தை அடுத்த மீனவர் கிராமத்துக்குப் போனோம். பெரும்பாலும் வள்ளங்களில் போய் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து வந்து குடியேறியவர்கள். இலங்கை படையின் தாக்குதலால் அவர்கள் வழக்கமாக செய்யும் தொழிலை ஒதுக்கி வைத்து விட்டு கரையோரமாகவே மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது.

தொடர்ந்து கோட்டைப்பட்டிணத்தின் மீன்பிடித் துறைக்குப் போனோம். பெருமளவு விசைப்படகுகள் தொழில் புரியும் கிராமம். இங்கு கடலோரக் காவற்படையின் விரைவுப் படகுகள் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். இவை பெரும்பாலும் கடலில் சுற்றுவது குறைவு என்று சொன்னார்கள்.

விசைப்படகு உரிமையாளர் ஒருவரிடம் பேசி விட்டுப் புறப்பட்டோம்.

மூன்றரை மணி நேர பேருந்து பயணத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். ராமேஸ்வரத்தில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் சேகர் வழிகாட்ட பாம்பன் கிராமத்தில் யோவான் என்ற மீனவரைச் சந்தித்தோம். அவர் 25 ஆண்டு கால அனுபவத்தில் இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகள், இந்தியக் கடற்படை, மீன் துறை, காவல் துறை இவர்களிடம் அவரது அனுபவத்தை விளக்கினார்.

அந்த ஊர் இசுலாமிய தலைவர் சைஃபுதீனைச் சந்தித்தோம். அவர் இணையத்தில் செயல்படுகிறார். அவரது மின்னஞ்சல் முகவரியை வாங்கிக் கொண்டு tnfisherman குழும மின்னஞ்சலைக் கொடுத்தோம்.

நாளை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சி மடம் மீனவர்களைச் சந்திக்கத் திட்டம்.

ஜெகதாபட்டிணத்தில் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது கும்மி. ராமேஸ்வரத்தில் பாலபாரதியின் நண்பர் ஜெரோம் எங்களை கையில் எடுத்துக் கொண்டார்.

மீனவர்கள் தாம் சந்திக்கும் தாக்குதல்களை உடனுக்குடன் பதிவு செய்து இணையத்தில் ஏற்ற ஒரு செல்பேசி எண் உருவாக்கி மீனவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். இதில் சொல்லப்படும் தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதாகத் திட்டம்.

வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் கிராமங்களில் 2வது நாள்

சனிக்கிழமை காலை 7 மணிக்கு நாகை சிவா, அறுசுவை பாபு, சுபாஷ் மூவருடன் வேதாரண்யம் திசையில் புறப்பட்டோம்.

கொல்லப்பட்ட பாண்டியன் என்ற மீனவரின் கிராமமான வெள்ளப்பள்ளத்துக்குப் போனோம். அந்த ஊர் பெரியவர் ஒருவர் பொதுவான தகவல்களை விளக்கினார்.

பாண்டியன் தாக்கப்பட்ட நேரத்தில் அவருடன் சென்ற மீனவர்களில் ஒருவரான முருகேசன், கடலுக்குப் போக புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தாக்கப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகளை விளக்கினார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் கடலுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்.

இந்த கிராமத்தில் சிறிய கண்ணாடி இழை படகுகளில் மீன்பிடிக்கச் செல்பவர்கள்தான் பெரும்பான்மை. மீன்கள் கரைக்கு வந்து விற்பனை நடக்கும் சந்தையையும் பார்த்து வந்தோம்.

புஷ்பவனம் கிராமத்துக்கு பயணித்தோம். கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட ஜெயகுமார் என்ற மீனவரின் கிராமம். ஊரில் மீனவர்களில் பெரும்பகுதியினர் மீன்பிடிக்கச் சென்று விட்டிருந்தனர். ஊரின் பஞ்சாயத்து தலைவர் நடந்ததை விளக்கினார். நாளிதழில் படித்த விபரங்கள் நெருங்கிய வலியுடன் சொல்லப்பட்டன.

அருகில் இருந்த கடலுக்குப் போகும் மீனவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த கிராமத்தில் பெரும்பான்மை மீனவர்கள் சிறிய படகுகளில் தொழிலுக்குப் போகிறவர்கள்,.

தொடர்ந்து வேதாரண்யத்துக்குக் வந்து, புறப்பட்டு போயிருந்த பட்டுக்கோட்டை பேருந்தைத் துரத்தி ஏற்றி விட்டு விட்டு விடைபெற்றார்கள் பாபு, சிவா மற்றும் சுபாஷ்.

இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பிறகு பட்டுக் கோட்டை வந்து சேர்ந்தோம். மங்களூரிலிருந்து தஞ்சாவூரில் இறங்கி பட்டுக் கோட்டை வந்து விட்ட பிரேம் ஆனந்துடன் சேர்ந்து நான்கு பேரும் பேருந்தில் கோட்டை பட்டிணத்துக்குப் புறப்பட்டோம்.

கோட்டைப் பட்டிணத்துக்கு வரும் போது இரவாகி விட்டதால், அந்த ஊரில் தாய்த் தமிழ் பள்ளி நடத்தும், உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்கும், தமிழ் உணர்வாளர் ராமநாதன் அவர்கள் பள்ளியிலேயே தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

சனி, மார்ச் 05, 2011

நாக பட்டினத்தில் ஒருநாள்

உண்மைத்தமிழன், ரோசாவசந்த், நான் மூவரும் அதிகாலை 4.30 மணிக்கு நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அறுசுவை பாபு வந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ஆறு மணி அளவில் , அதே வடக்கு மட விளாகத்தில் வசிக்கும் நாகை சிவா வந்து சேர்ந்து கொள்ள, அவர்கள் நண்பர் மரைன் எஞ்சினீயராக வேலை பார்க்கும் சுபாஷ் உடன், நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்து மீன்களை இறக்கும் இடத்துக்குப் போனோம்.

அந்த இரண்டு மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலின் பிரும்மாண்டத்தையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
  • கரையோரம் நெடுக நிறுத்தப் பட்டிருந்த படகுகள்
  • மீன்கள் இறக்கப் படுதல்
  • ஒரு படகுக்குள் இருக்கும் கட்டமைப்புகள், கருவிகள்,
  • மீன்களை விற்பனை செய்யும் ஏல முறை, 
  • பல வகையான மீன்கள்
    என்று விபரங்கள் மனதை நிறைத்தன
இழுவைப் படகு ஒன்றின் உரிமையாளர் திரு ராசேந்திரன், மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள திரு சின்னராசு ஆகியோரிடம் பேசி விபரங்களைப் புரிந்து கொண்டோம்.

பாபு வீட்டில் காலை உணவு, ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு, சிதம்பரத்திலிருந்து  நண்பர்கள் சரண், கார்த்திகேயன் மற்றும்     பைக்குகளில் வந்து சேர,  மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார் நாகை சிவா. அங்கு கரையோரமாக நின்றிருந்த ஃபைபர் போட் எனப்படும் சிறிய படகு உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் பேசினோம்.

இழுவைப் படகு உரிமையாளர்கள் சிலர் தொழிலில் சந்திக்கும் சவால்கள், இலங்கைப் பகுதிக்கு மீன் பிடிக்கப் போவது குறித்த நிலவரங்கள், இலங்கை கடற்படை தாக்குவதைக் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாபு வீட்டில் பலமான மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு எடுப்பவர்கள் ஒரு புறமும் விவாதங்களைத் தொடர்பவர்கள் இன்னொரு புறமுமாக ஓரிரு மணி நேரம் கழிந்தது.

டுவிட்டர் தகவல்களை இணையத்தில் பார்த்த காரைக்காலில் வசிக்கும் வசந்த் ஆதிமூலம் என்ற நண்பர் தொலைபேசி  தன்னால் முடிந்த அளவு பங்களிக்க விரும்புவதாகச் சொன்னார்.  அவர் காரைக்காலைச் சேர்ந்த மீனவ பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவ்ர்களுடன் பேசி தகவல்கள் பெற்றுக் கொண்டதாக மாலையில் தெரிவித்தார்.

மாலையில் நாகூர் மீனவர் குடியிருப்புக்குப் போய் சில மீனவர்களைச் சந்தித்தோம். அவர்கள் இலங்கைக் கடற்படையினர் மூலம் சந்திக்கும் அச்சுறுத்தல்களை விவரித்தார்கள்.

இன்று (சனிக்கிழமை, மார்ச் 5) வேதாரண்யம் நோக்கி போய் புஷ்பவனம் கிராமம் மற்றும் சில கிராமங்களுக்குப் போய் விட்டு மதியத்துக்குப் பிறகு ஜெகதா பட்டணம் / அம்மா பட்டணம் பகுதிகளுக்குப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.

மங்களூரிலிருந்து பிரேம் ஆனந்த் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் தொலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்.

பார்த்ததும் கேட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் பயண முடிவிற்குப் பிறகு விளக்கமான  பதிவுகளாகவும், தொகுக்கப்பட்ட காணொளிகளாகவும் வெளியிடப்படும்.

வியாழன், மார்ச் 03, 2011

நாகை / ராமேஸ்வரம் பயண நோக்கங்கள்

தமிழகத்து மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இருந்து வரும் அச்சுறுத்தல்களை நீக்க
  1. 30 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய, கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடர்ந்து தண்டனை அளிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு கொடுக்க வேண்டும்.
  3. கச்சத் தீவு மற்றும் சுற்றிய கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்க வேண்டும். 
மார்ச் 4, 5, 6, 7 தேதிகளில் தமிழ் இணையப் பயனர்கள் மீனவர்கள் கிராமங்களுக்குப் போய்
  1. மீனவர்களைச் சந்தித்து பிரச்சனை குறித்த விபரங்களை திரட்டி, வலைப்பதிவுகளாகவும், டுவீட்டுகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் இணையத்தில் வெளியிடுதல்.
  2. இணையத்தில் தமிழர்கள் மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை அம்மக்களுக்கு தெரியப்படுத்துதல்.
  3. ஆர்வமும் விருப்பமும் இருக்கும் மீனவ இளைஞர்களுக்கு இணையம், வலைப்பதிவு, டுவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பது. தமிழில் தட்டச்சவும் இணையத்தைப் பயன்படுத்தவும் அறிமுகம் செய்வது.
இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட இணையப் பயனர்கள் 9884070556 என்ற எண்ணில் தொடர்பு கொள்வும்.

அடுத்த நான்கு நாட்களில் டுவிட்டரிலும், வலைப்பதிவுகளிலும், ஃபேஸ்புக்கிலும், கூகுள் பஸ்சிலும் மீனவர் தாக்கப்படுவதைக் குறித்த தகவல்களை நம்மால் முடிந்த அளவுக்கு பரவலாக்குவோம்.

இதுவரை கலந்து கொள்வதாக உறுதி செய்திருப்பவர்கள் :
1. ரோசா வசந்த், சென்னை
2. உண்மைத் தமிழன், சென்னை
3. நாச்சியப்பா, சென்னை

4. நாகை சிவா, நாகப்பட்டினம்
5. பாபு, நாகப்பட்டினம்

6. அபி அப்பா, மாயவரம்
7. சாந்தப்பன், திருவாரூர்

8. டிபிசிடி, பெங்களூர்
9. பிரேம் ஆனந்த் (விருப்பம் தெரிவித்தார், தொடர்பு கொள்ளவில்லை)

10. சரண் மற்றும் அவரது 3 நண்பர்கள், சிதம்பரம்

செவ்வாய், மார்ச் 01, 2011

நாகை / ராமேஸ்வர பயண விபரங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

'நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.'

என்று தோன்றியது. (http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html)

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதை எதிர்த்து இணையத்தில் எழுந்த கண்டனக் குரல்கள் தொடர்ந்து இணையத்துக்கு வெளியிலும் செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்க நிகழ்வு.

மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு பல தளங்களில் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

1. பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்,  தேமுதிக கட்சியின் முன்னணித் தலைவர் (மாஃபா) பாண்டியராஜன் ஆகியோருடன் தொலைபேசியில்  மீனவர் பிரச்சனை குறித்து இணையத் தமிழர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கியிருக்கிறார் பத்ரி.

2. கும்மி, கவிராஜன் மற்றும் ரோசா வசந்த் சென்னை நொச்சிக் குப்பம் மீனவர் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

3. கும்மி, கவிராஜன், ரோசா வசந்த் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைச் சந்தித்துப் பேசினார்கள்.

4. கே ஆர் பி செந்தில் குமார், பத்ரி, கும்மி, அப்பாண்டே, ரமேஷ் எல்லோரும் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரையும் சந்தித்தார்கள்.

5. கும்மி, விந்தை மனிதன் மற்றும் KRP செந்தில் சிபிஐ தலைவர் C மகேந்திரனைச் சந்தித்தார்கள்.

6. கவிராஜனும், கும்மியும் மீனவர் பிரச்சனை தொடர்பான ஆவணங்களை சேகரித்து ஸ்கேன் செய்து அனுப்ப, பல நண்பர்கள் அவற்றை தட்டச்சு செய்து ஆவணமாக்கியிருக்கிறார்கள்.

இவற்றின் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு நேரில் சென்று மீனவர் கிராமங்களுக்குப் போய் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மார்ச் 4, 5 (வெள்ளி, சனி) தேதிகளில் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளிலும்,  மார்ச் 6, 7 (ஞாயிறு, திங்கள்) தேதிகளில் ராமேஸ்வரம் பகுதியிலும் பயணம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து ரோசா வசந்த், உண்மைத் தமிழன், மா சிவகுமார் (நான்) ஆகிய மூன்று பேரும் நான்கு நாட்களும் செல்கிறோம். வியாழக் கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்படுவதாக உத்தேசம்.

சாந்தப்பன்  திருவாரூரிலிருந்தும் அபி அப்பா மாயவரத்திலிருந்தும் நாகப்பட்டினம் வருகிறார்கள். நாகை சிவாவும் அறுசுவை பாபுவும் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைப்பைச் செய்கிறார்கள்.

ராமேஸ்வரம் பகுதியில் பாலபாரதி தனது நண்பர்கள் மூலம் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறார். மீனவர்களுடனான உரையாடல்களையும் காட்சிகளையும் ஆவணமாக்க வீடியோ கேமரா வாடகைக்கு எடுப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.  (மாற்றம் 2/3/2011 - நண்பர்களின் ஹேண்டி கேம் மூலம் எடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது)