வியாழன், நவம்பர் 23, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 3

வலைப்பதிவுகள், நம்ம வீட்டில் கொலு வைத்திருப்பது போல.

பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும் (பொன்ஸ் பக்கங்கள்).

நமது படைப்புகளை கற்பனைகளை உருக்கொடுத்து அலங்கரித்து வைக்கிறோம். அதைப் பார்க்க யாரும் வரலாம் என்று பொதுவாக அறிவித்து விடுகிறோம். அது பற்றிய விபரங்கள் அறிந்த மக்கள் வருகிறார்கள். பெரும்பாலானோர் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமலேயே, தாம் யாரென்று வெளிப்படுத்தாமலேயே போய் விடுகிறார்கள். ஒரு சிலர் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

இந்தச் சமூகத்தில் நல்ல பண்பு, யாராவது நமது வலைபதிவுக்கு வந்து பின்னூட்டம் எழுதினால் அவருக்கு உடனேயே பதில் சொல்வது. நம் வீட்டுக்கு யாராவது வந்து நம்மிடம் பேசினால் பதில் சொல்லாமல் இருப்போமா?

இன்னும் ஒரு அடி தாண்டினால், நமது வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்கள் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு நாமும் போய் எதிர்மரியாதை செய்ய வேண்டும். அங்கிருக்கும் படைப்புகளைப் பார்த்து நமது கருத்துக்களை எழுத வேண்டும்.

பிரபலமாக எல்லோராலும் விரும்பப்படும் வலைப்பதிவர்கள் மேலே சொன்ன இரண்டையும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். (துளசி கோபால், கடல் கணேசன்).

ஒவ்வொரு வலைப்பதிவும் அதன் படைப்பாளியின் வீட்டு அறை போல. உங்களுக்குப் பிடித்திருந்தால் அடிக்கடி போகலாம். உங்கள் படைப்புகளை விரும்பும் பிறர் அடிக்கடி உங்கள் வீட்டுக்கு வருவார்கள். யாரும் யாருக்கும் உயர்வு கிடையாது. எழுதுவதற்கு நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் பதிகிறார்கள். படிப்பவருக்குக் கருத்து தோன்றினால் எழுதிப் போடுகிறார். இன்னும் உந்துதால் வந்து விட்டால், தனது பதிவில் ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார்.

இதில் என்ன அருமை என்றால் எல்லோருமே வாசகர்கள், படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசகர் கடிதம் எழுதுபவர்கள். பத்திரிகாசிரியர் என்றால் கொம்பு முளைத்திருக்கும், எழுத்தாளர் என்றால் தேவதைகள் போலச் சிறகுகள் இருக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் அவரளவில் படைப்பாளிகள்.

படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளைக் குறைக்கின்றன வலைப்பதிவுகள். முன்பெல்லாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஏஜென்டுகளை நம்பி இருப்பார்கள். இப்போது நேரடியாக ஏற்றுமதி நடக்கிறது. இடைத்தரகர்கள் மறைந்து போகும் மாயம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

4 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும் (பொன்ஸ் பக்கங்கள்).//

அச்சிச்சோ..

ஆவி அண்ணாச்சி சொன்னது…

//வாரத்துக்கு ஒரு தடவை //

பொன்ஸ்,
ஒரு வாரம் முழுக்க மாத்தாம வெச்சிருந்தீங்களே பாருங்க! இப்படி ஒரு அவப்பெயர் உங்களுக்கு அவசியமா?

தினமும்ல மாத்துவீங்க!

மா சிவகுமார் சொன்னது…

உங்களுடைய தொடர்புள்ள பதிவைப் படித்தேன் பொன்ஸ். நிறைய எழுத வேண்டும். நிறையும் வண்ணம் நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஆவி அண்ணாச்சி,

வணக்கம்.

அன்புடன்,

மா சிவகுமார்